நட்சத்திர விழிகளிலே வானவில் – 18 (2)

இப்போது அது போன்ற ஒரு சுதந்திரம் கிடைத்ததும் நந்தினிக்கு தலைகால் புரியாமல் போய்விட்டது. இந்த அளவுக்கதிகமான சந்தோஷமே அவளை பேராபத்தில் தள்ள நேரம் பார்த்தது.

அவளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பூரணியும் கோசலையும் தான் விழிபிதுங்கி நின்றனர்.

சொன்னபேச்சு கேட்காமல் இருந்தால் திரும்ப கோவிலுக்கு அழைத்துசென்று விடுவேன் என்ற விஜியின் மிரட்டல் கூட நந்தினியின் கண்ணீர் என்ற வலிமையான ஆயுதத்தால் தகர்ந்தது. எப்போதும் போல அவளே இதில் வெற்றியும் பெற்றாள்.

“ஐயோ கோவிலை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டோமோ? கால் வலிக்குது மித்ரா. கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்துட்டு போகலாம்…”  என்றார் பூரணி ஒரு மரத்தின் நிழலில் வந்தமர்ந்து.

கிராமத்து திருவிழா என்பதால் அதற்கே உரித்தான மண்மணம் மாறாமல் சிறு சிறு வளையல் கடைகளும், பஞ்சுமிட்டாய் கடைகளும் இன்னும் பலதரப்பட்ட கடைகள் நிறைய முளைத்திருந்தது. 

அத்தனையும் பார்க்கவேண்டுமென்பதுதான் நந்தினியின் எண்ணம். ஆனால் நடக்கக்கூடிய விஷயமா?

அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு சற்று தள்ளி இருந்த கரும்புச்சாறு கடை நந்தினியின் கண் பார்வைக்குள் சிக்கியது.

“அத்தை எனக்கு தாகமா இருக்கு. குடிக்க கரும்புச்சாறு வேணும். வாங்கித்தாங்க…” என்று கேட்டதும் கோசலைக்கு மூலையில் ஏழுமலையின் எச்சரிக்கை குரல் சத்தம் எழுப்பியது.

“அக்கா அவ கேட்டான்னு எதையாவது வாங்கி குடுக்காத. அப்பறம் உடம்புக்கு முடியாம படுத்துக்குவா. அதனால எதுவுமே வாங்கி தராத…” என்ற அவரது எச்சரிக்கையையும் மீறி நந்தினியின் கொஞ்சலில் வாங்கிக் கொடுக்கத்தான் ஆசைப்பட்டது அவர்களின் மனம்.

“சரி விஜி நீ அவளை கூட்டிட்டு போய் கேட்கிறதை வாங்கி கொடு…” என்று பணத்தை கொடுத்தார் பூரணி.

“அம்மா, அவ இங்கயே இருக்கட்டும் நான் போய் வாங்கிட்டு வரேன். அங்க வந்தா ஒரு இடத்துல நிக்க மாட்டா…” என நந்தினியை தடுக்க நினைக்க,

“ஏண்டா விஜி, என்னை வேணாம்னு சொல்ற? நீயும் எங்கப்பா போல செய்யறியே? இதுக்கு நான் அவர் கூடவே இருந்திருக்கலாம்…” என மூக்கை உறிஞ்சவும்,

“வந்து தொலை. ஆனா எங்கயாச்சும் என்னை விட்டு நகர்ந்த உன்னை தொலைச்சிடுவேன்…” என்று மிரட்டியே அழைத்துச்சென்றான்.

அவனோடு பேசிக்கொண்டே அவன் கைகோர்த்து நடந்தவள் கடையை நெருங்கியதும் தான் அதை பார்த்தாள். அங்கே சற்று தூரத்தில் ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பார்த்ததுமே போகவேண்டுமென்ற ஆவலில் விஜியை அழைக்கவும்,

“மித்து, அம்மாவையும் பெரியம்மாவையும் விட்டுட்டு போகவேண்டாம். இரு இதை குடிச்சுட்டு அவங்களுக்கும் வாங்கிட்டு அதுக்கு பின்னால கேட்டுட்டு போகலாம். அவசரபடாத…”

“போடா, சரியான ரூல்ஸ் ரங்கசாமி. எப்போபாரு என்னை ஏதாவது சொல்லிட்டே இரு…”என சலித்துக்கொண்டு ஜூஸை வாங்கி பருகியவள் கோசலைக்கும், பூரணிக்கும் வாங்க சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் பாப்கார்ன் வாங்க சென்றாள்.

ஜூஸை வாங்கிகொண்டு திரும்பியவனின் அருகில் நந்தினி இல்லாமல் போக ஒரு கணம் பதை பதைத்துவிட்டான். எங்கே போனாளோ என்று. பக்கத்து கடையில் அவளது குரல் கேட்டதும் தான் போன உயிர் திரும்பிற்று.

“மித்ரா…” என பல்லை கடித்துகொண்டு அழுத்தமாக அழைத்தான். அவனது கோவத்தை காற்றில் பறக்கவிட்டவள்,

“டேய், விஜி, இந்த ரெண்டு பாக்கெட்க்கு காசு குடுத்துட்டு இன்னும் ரெண்டு வாங்கிட்டு வா. நான் முன்னால போறேன்…” என்று அவன் கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் சிட்டாக பறந்துவிட்டாள்.

கூட்டத்தில் துழாவியவன் அவள் தன் தாயை நோக்கிதான் செல்கிறாள் என அறிந்துகொண்டு இன்னும் இரண்டு பாக்கெட்டை வாங்கிகொண்டு பணத்தை கொடுத்துவிட்டு  நகர்ந்தான்.

குடுகுடுவென ஓடிவந்த நந்தினி யார் மீதோ மோதி கீழே தடுமாறி விழுந்தாள். கையில் வைத்திருந்த பாப்கார்ன் பாக்கெட்டை நழுவ விட்டதும் அந்த பாக்கெட்டையும் எடுத்து தனக்கும் எழும்ப கரம் நீட்டியவனை பார்த்து,

“சாரி அண்ணா. பார்க்காம மோதிட்டேன். ஹெல்ப் பண்ணினதுக்கு தேங்க்ஸ்…”

“பரவாயில்லை. நானும் தான் கவனிக்கலை….” என்றான் அவன்.

“அப்போ நான் சொன்ன சாரி வாபஸ். ஏனா நீங்களும் என்னை போல பராக்கு பார்த்துட்டே வந்து தானே இடிச்சிட்டீங்க. நீங்க கவனமா வந்திருந்தா நான் கீழே விழுந்திருக்க மாட்டேன் தானே? அப்போ நான் எதுக்கு தேவையில்லாமல் சாரி கேட்கணும்? தப்பு உங்க பக்கம் தான்…” என படபடவென கூறி அவனை திகைக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

“என்னடா மச்சான் இப்டி ஷாக் குடுத்துட்டு போகுது அந்த பொண்ணு?…” என கேட்டதும் தான் திகைப்பிலிருந்து விடுபட்டவன் மீண்டும் அவள் சென்ற திசையை பார்த்தான். பட்டுப்பாவாடை சட்டையில் இரட்டை ஜடை அங்குமிங்கும் துள்ளியபடி அவள் ஓடிய ஓட்டத்திற்கு ஏதுவாக ஆட நடக்காமல் பறந்துகொண்டிருந்தாள் நந்தினி.

“டேய் கணேஷ், அந்த பொண்ணுக்கு என்னா வாய் பாரேன்? சரியான குள்ளகத்தரிக்காக்கு பாவாடை சட்டை போட்டு விட்ருக்காங்க. கால் தரையில நிக்குதா பாரேன்…” என்று சிரித்துக்கொண்டே வந்தவழி திரும்பி நடந்தான் உதயா. உதய் பிரபாகரன்.

தன் கல்லூரி நண்பனின் அழைப்பின் பேரில் அவ்வூருக்கு வந்திருந்தான். அவனோடு விஷ்ணுவும்.

“பிரபா பிரசாத்தும் இங்க வந்திருக்கான். தெரியுமா?…” என உதயாவின் காதில் முணுமுணுத்தான் விஷ்ணு.

ஒரு நொடி புருவத்தை சுருக்கியவன் பின் இயல்பாக, “விடுடா, அவனுக்கு வேற வேலை இல்லை. நான் என்ன செய்யறேன். எங்க போறேன்னு நோட்டம் விட்டுட்டே இருக்கிறதை புல் டைம் ஜாப் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டான். நமக்கு செலவே இல்லாம ஒரு பாடிகார்ட். அப்டி நெனச்சுப்போம்…” என்று கூறி விஷ்ணுவோடு சிரித்தான். 

பின் கணேஷின் புறம் திரும்பி, “கணேஷ் எங்க உன் தம்பியை காணோம்?…” என கேட்டவனிடம் கணேஷ் பதில் சொல்லும் முன் வந்து சேர்ந்தான் சிவா. கணேஷின் தம்பி.

“இந்தா வந்துட்டான்ல உன் லவ்வர். ஏண்டா சிவா நீ இந்த பொம்பளை புள்ளைங்களை எல்லாம் லவ் பண்ண மாட்டியா? காதலியை பார்த்தது போல பிரபாவை அப்படி பரவசமா பார்க்கற? என்னா ஒரு லவ் லுக் விடற. அவனா நீ?…” என சிவாவை வம்பிழுத்தான் விஷ்ணு.

“டேய் அடங்க மாட்டியா நீ? பேசாம இருடா…” என்று விஷ்ணுவை அடக்கிய உதயா சிவாவோடு பேசிக்கொண்டே வேறு புறம் நகர அவர்களை பின்தொடர்ந்து கணேஷும், விஷ்ணுவும் சென்றனர்.

சிவாவுக்கு உதயாவின் மேல் அப்படி ஒரு மரியாதை. சிவாவின் ரோல்மாடல் உதய் பிரபாகரன். அதனால் எப்போதுமே விஷ்ணு அவனை கேலி செய்துகொண்டே இருப்பான். அதற்கும் சளைக்காமல் புன்னகையை மட்டுமே பதிலளிப்பான் சிவா. உதயா என்ன சொன்னாலும் ஏனென்று கேட்காமல் அதை செய்து முடித்து விட்டுத்தான் மறு வேலையே.

இப்போதும் அவனின் படிப்பு சம்பந்தமாக பேசவே திருவிழாவை ஒட்டி வந்திருக்கிறான் உதயா.

விஜியை பின்னால் விட்டுவிட்டு நந்தினி மட்டும் வந்ததில் கலவரமடைந்த கோசலையும், பூரணியும்,

“மித்ரா என்னம்மா நீ மட்டும் வந்திருக்க? விஜி எங்க? உன்னை விட்டு எங்க போனான்?…” என கோவமாக கேள்விகளை அடுக்கினார்கள்.

“ஐயோ அத்தைங்களா, கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசுங்க. உட்காருங்க இப்படி. ஜூஸ் வாங்கிட்டு இப்போ வந்திருவான். நான் தான் முன்னால ஓடி வந்துட்டேன்…” என பெரும் சாதனை செய்தது போல பேசியவளை பரிதாபமாக பார்த்தனர் இருவரும்.

“அறிவிருக்கா உனக்கு. எத்தனை தடவை சொல்றேன். நிதானமா இரு. மெதுவா நடன்னு. சொல்ற பேச்சை கேட்கிறதே இல்லை. உன்னை உங்கப்பா பூட்டி வைக்கிறது சரிதான்…” என வந்த வேகத்திலேயே சகட்டுமேனிக்கு கத்தினான் விஜி.

“எதுக்குடா புள்ளையை போட்டு இப்டி திட்டுற?…” என பூரணி விஜியை பிடித்து இழுக்க,

“சும்மா இருங்கம்மா வேகமா ஒடி வந்து எதிரே வந்த ஒருத்தன் மேல இடிச்சுட்டா. அதோடு நகர்ந்தாளா? அதுவும் இல்லை. என்னமோ பேசிட்டு ஓடிட்டா, அவன் பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்கான். என்ன சொல்லிட்டு வந்தாளோ?…” என்று விஜி சொல்ல இவளை என்னதான் செய்வது, பேசாமல் கோவிலுக்கு போய்விடலாமா என்று கோசலையும் பூரணியும் சிந்தனை வயப்பட அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,

“விஜி அந்த ஜூஸை குடேன், பாப்கார்ன் சாப்ட்டதுல தொண்டைல சிக்குது. சீக்கிரமா தா…” என்று அவனை அவசரபடுத்த விஜிக்கு சத்தியமாக கோவத்தை எப்படி அடக்கவென்றே தெரியவில்லை.

“கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு? கேட்டும் குடுக்காம நிக்கிற?. எனக்கு ஒண்ணுனா அந்த ஹிட்லர்க்கு நீதான் பதில் சொல்லணும். அதனால தான் உன்னை காப்பாத்த இந்த ஜூஸை கேட்கிறேன்…” என்று அவனின் கையில் இருந்த ஜூஸை பிடுங்காத குறையாக வாங்கி குடித்துவிட்டு,

“அத்தை வாங்க ஆத்துக்கு போவோம். கொஞ்சம் நேரம் கால் நனைச்சிட்டு வரலாம்…” என்று கேட்டதுதான் தாமதம் மூவருக்கும் கிலியாகிவிட்டது. இதுக்கு மேலையுமா? என்று உள்ளுக்குள்ளே கதறினர்.

“வாங்கத்தை போகலாம்…” என்று பூரணியை இழுத்துக்கொண்டே சென்று விட்டாள். அவளை கடிந்துகொள்ளவும் முடியாமல் அவளோடு செல்லவும் முடியாமல் தத்தளித்தனர். ஒன்று மட்டும் தெரிந்தது. நந்தினியால் ஏழுமலையிடம் மூவரும் இன்றைக்கு சேர்ந்து வாங்கி கட்டிக்கொள்ள போவது உறுதியாகிவிட்டது.

error: Content is protected !!