சாப்பிட அழைக்க கெளரி வர அவளோடு வாயாடியபடி கீழே செல்லவும் அனைவருமே மேஜையில் நந்தினிக்காக காத்திருந்தனர். கிருஷ்ண மூர்த்தியும், சுதர்சனமும் நலம் விசாரித்துவிட்டு தைரியமாக இருக்க அறிவுரை வேறு செய்தனர்.
உதயாவுக்கோ, “இவ ஊருக்கே சொல்லுவா. இவளுக்கு இப்டி மாத்தி மாத்தி தைரியம் சொல்லுறாங்களே? ஒருத்தராச்சும் எனக்கு சொல்றாங்களா? உன் பொண்டாட்டிக்கிட்ட தைரியமா இருன்னு. உதயா நீ குடுத்து வச்சது அவ்வளோ தாண்டா…” என பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.
அனைவரோடும் அமர்ந்து சாப்பிட்டவள் கௌரியோடு சிறிது நேரம் செலவிட்டுவிட்டு அதன் பின் தங்கள் அறைக்கு சென்றாள்.
விஷ்ணுவோடு போனில் கம்பெனி விஷயமாக பேசிகொண்டிருந்தவன் நந்தினியின் வருகையை கண்டதும் அவளை தூங்க சொல்லிவிட்டு லேப்டாப்போடு சோபாவில் அமர்ந்துவிட்டான்.
சிறிது நேரத்தை விரட்டி தள்ளியவள் மெல்ல எழுந்து உதயாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளின் அருகாமையிலும் கூட தன் காரியத்தில் கண்ணாக இருந்தான் அவள் கணவன்.
“கொஞ்சமாவது என்னனு கேட்கிறானா பாரு…” என நொடித்து கொண்டவள், “கொஞ்சம் பேசணும்…” என அவனை திசைதிருப்ப,
“ஒரு அரைமணி நேரம்டா. இதை முடிச்சுட்டு வரேன். நாளையில இருந்து ஆபிஸ் போகணும்ல…” என கூறிவிட்டு தன் தலையை மடிக்கணினியில் புதைத்துக்கொண்டான்.
அரைமணிநேரம் முடியும் முன்னரே வேலையை முடித்துவிட்டு அவளை பார்த்தால் பேப்பரில் எதையோ வரைந்து கொண்டிருந்தாள். ஒருகணம் அதை யோசனையோடு பார்த்தவன் கட்டிலில் வந்து அமர்ந்தான்.
“பேசலாமாடா?…” என கேட்டதும் அதை அப்படியே வைத்துவிட்டு தானும் எழுந்து வந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள். பேச ஆரம்பிக்கும் முன்,
“நானே சொல்றேனே?…” என அவளை தடுத்து விட்டு பிரசாத் வீட்டில் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான்.
“அவங்க மன்னிப்பு கேட்கும் போது கூட தடுத்து ஒரு வார்த்தை கூடவா பேசாம இருந்தான் அந்த ராஸ்கல்?…” என்று கோவமாக கேட்டாள்.
இல்லை என்று தலையசைக்கவும் கோவத்தில் மேலும் எதுவும் பேசிவிடுவோமோ என்று அமைதிக்காத்தாள். தனத்தின் மீது உள்ள கோவம் முற்றிலும் வடிந்தது போல இருந்தது நந்தினிக்கு.
சிறிதுநேரம் அந்த அறையே நிசப்தமாக இருந்தது. அவரவர் நினைவில் சுழன்றவர்களில் உதயா தான் முதலில் சுதாரித்தான்.
தனக்கு தேவையான டேப்லேட்ஸ் எடுத்து கொடுத்து போட வைத்தவனை பார்த்துக்கொண்டே இருந்தவள்,
“நான் உங்க ஒன்னு கேட்கணும்…”
“கேளேன், என்ன பர்மிஷன் எல்லாம்?…” எனவும்,
“எனக்கு…….. எனக்கு அருவியூர்ல எடுத்த போட்டோவை பார்க்கணும்…” என கேட்டவளை சிறு அதிர்வோடு நோக்கினான்.
“இப்போ எதுக்கு அதெல்லாம்?. டேப்லெட் போட்டாச்சுல தூங்கு காலையில பேசிக்கலாம்…” என சொல்லவுமே கோவத்தில் வெடித்தாள்.
“ஏன் நீ மட்டும் அதை எடுத்துவச்சு நினச்ச நேரம் பார்த்துக்கலாம், நான் பார்க்க கூடாதா?…” என்று பொரிந்தவள்,
“நேத்து சரியாவே பார்க்கலை. அதான் இப்போ பார்க்க தோணுது. ஏன் காண்பிக்க மாட்டீங்களோ?…” என முறைத்துக்கொண்டே முடித்தாள்.
“மாட்டேன்னு சொன்னா மட்டும் கேட்டுடவா போற?…” என முணங்கிவிட்டு லேப்டாப்பை எடுத்து வந்து ஆன் செய்து போட்டோவை காண்பித்தான்.
போட்டோவை பார்த்ததும் லேப்டாப்பை தன் மடியில் வாங்கி வைத்து கொண்டவள் விழியகலாமல் அதையே பார்த்து கொண்டிருந்தாள். சட்டென அவன் புறம் திரும்பி,
“நம்ம முதல் சந்திப்பு ஏண்டா இப்படி ஆகிடுச்சு? நீயும் நானும் முதல்முதல்ல நல்லவிதமா பிரச்சனையோடு இல்லாம பார்த்திருந்தா இந்த கஷ்டம் நமக்கு தேவையா? ரெண்டு தடவை கல்யாணம் நடந்தும் ஒன்னு கூட எல்லோரும் நினச்சு ரசிச்சு சந்தோஷப்படுற மாதிரி ஏன் இல்லாம போச்சு?…” என கூறிவிட்டு அதற்கு மேல் தாங்கமாட்டாமல் விம்மி வெடித்தழுதாள்.
அவளை தன்னோடு தாங்கியவனின் எண்ணமும் அவ்வாறே சிந்தித்தது போல அவனது கண்களும் கண்ணீரை சிந்தியது.
“யார் குடுத்த சாபமோ தெரியவில்லை. இப்படி தங்கள் வாழ்க்கையை அலைகழிக்கிறதே. இன்னும் அதை நினைத்து எத்தனை நாள் வேதனை பட்டு கண்ணீர் சிந்த போகிறோமோ?…” என்றஞ்சினான்.
இருவரது நினைவும் வலியோடு தங்கள் முதல் சந்திப்பை நோக்கி ஒரேசேர பயணப்பட்டது.
—————————————————-
“வாங்க ஏழுமலை, எப்படி இருக்கீங்க? போன வருஷம் கும்பாபிஷேகத்திற்கு வந்தவங்க அடுத்து திருவிழாவுக்கு தான் வருவீங்கன்னு பார்த்தேன். அதுக்குள்ளே இடையில வந்திருக்கீங்களே?…” என்று ஏழுமலையை நன்கு அறிந்த அந்த கோவில் பூசாரி நலம் விசாரித்தார்.
முதல் நாள் இரவே அவருக்கு தொடர்பு கொண்டு குடும்பத்தோடு அனைவரும் வரும் தகவலை போனில் ஏழுமலை தெரிவித்ததால் விடியற்காலையிலேயே வந்து கோவிலை கழுவி சுத்தம் செய்து பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார் பூசாரி.
அந்த விடியற்காலையில் ஏழுமலையின் குடும்பம் மட்டுமல்லாது கூடவே நேசமணி குடும்பமும், கோசலையும் உடன் வந்திருந்தனர் குலதெய்வத்தை தரிசிக்க.
“அது ஒன்னுமில்லைங்க சாமி, என் பொண்ணு மித்ரா. ப்ளஸ் டூ பாஸ் பண்ணிருக்கா. அதுவும் நல்ல மார்க். அதான் குலதெய்வம் கோவிலுக்கு வந்து பூஜை போட்டுட்டு போகலாம்னு வீட்டம்மா பிரியப்படாங்க…” என்றவர்,
“அதுமட்டுமில்லாம என் பொண்ணு நினச்ச படியே நல்ல காலேஜ்ல விருப்பப்பட்ட பாட பிரிவுல சீட் கிடைக்கனும்னு அவ கையாலையே பொங்கல் வச்சு வேண்டிக்கலாம்னு சொல்லிருந்தா. அதனால இன்னைக்கு நல்லநாளுன்றதால தள்ளிப்போட வேண்டாமேன்னு எல்லோரும் கிளம்பி வந்துட்டோம்…” என கூறியவர் பொங்கல் வைப்பதற்கான வேலையை ஏற்பாடுகளை செய்தார்.
அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்து படையலிட்டு முடிக்கவும் நந்தினியின் பெயரில் பூஜை நடத்தி திருப்தியாக சாமி கும்பிட்டு விட்டு காலை நேர உணவையும் எடுத்து வந்திருந்ததால் அங்கேயே உண்டுவிட்டு கிளம்ப ஆயத்தமாகினர்.
பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துகொண்டிருந்தவர்களை நெருங்கிய பூசாரி, “அப்புறம் ஏழுமலை, நானும் கிளம்பறேன்…” எனவும்,
“என்ன சாமி அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க? மணி எட்டரை தானே ஆகுது?…” என்று கேட்டார்.
“இங்க பக்கத்துல அருவியூர்னு ஒரு சின்ன கிராமம் இருக்கு. இன்னைக்கு ஊர் திருவிழா. பூஜைக்கு அங்க வர சொல்லிருக்காங்க. நீங்க வர போறதா நேத்து நைட் போன் பண்ணி சொன்னதால தான் பையனை அங்கே அனுப்பிட்டு நான் இங்க வந்தேன். இல்லைன்னா காலையிலயே நேர அங்க போய்ருப்பேன்…”
“ஓ அப்டியா?…” என்றவரை சிறிது யோசனையாக பார்த்த பூசாரி,
“உங்களுக்கு நேரமிருந்தா நீங்களும் வேணும்னா வாங்களேன். நல்ல சக்தி வாய்ந்த சாமி. அங்க வந்து வேண்டினா நினச்சது நடக்கும்னு ஒரு ஐதீகம். உங்க பொண்ணுக்காக அங்க வேண்டுங்க. இன்னொரு முறை நீங்க இதுக்குன்னு எடுத்தேறியா வர போறீங்க?…” என்று கேட்கவும் நந்தினியும், விஜியும் போகவேண்டுமென பிடிவாதம் பிடித்தனர்.
சந்திராவும், “அதான் பிள்ளைங்க ஆசைபடறாங்களே? நாமளும் போயிட்டுத்தான் வருவோமே?. அடுத்து நமக்கு இப்டி ஒண்ணா வர எப்போ வாய்ப்பு கிடைக்குமோ?…” எனவும் மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல பார்த்தனர் ஏழுமலையை.
ஒரு நிமிடம் சிந்தித்தவர், “சரி போகலாம். சாமி நீங்களும் எங்க கூடவே வேன்ல வந்திருங்களேன். ஒண்ணா போய்டலாம், எங்களுக்கும் வழி தெரியாதுல…” என்று அவரிடம் கேட்டார்.
“ரொம்ப நன்றி ஏழுமலை. அதுக்கென்ன தாராளமா வரேன். இங்க இருந்து முக்கால் மணி நேரம் தான். பஸ் பிடிச்சு போகணுமேன்னு நினச்சேன். நல்லதா போச்சு…” என கூறிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தார்.
அனைவரும் ஏற ஏழுமலை நந்தினியை அழைத்து, “இங்க பாரு மித்ரா, அங்க போய் கையை காலை வச்சிட்டு ஒரு இடத்துல அடங்கி நடக்கணும். ஓவரா ஆடின அவ்வளோ தான் புரிஞ்சதா?…” என மிரட்டவும்,
“ம்ம். எங்கயும் ஓட மாட்டேன்ப்பா. நீங்க சொல்றதை கேட்டு விஜி கூடவே இருப்பேன்…” என்று அப்பாவியாக அவனையும் கோர்த்து விட்டாள். அப்போதானே அவனையும் இழுத்துகொண்டு சுத்தலாம். கேட்டால் விஜிதான் கூட்டிட்டு போனான்ன்னு அவனை மாட்டிவிடலாம் என எண்ணிக்கொண்டே.
அவள் நினைத்ததை போலவே ஏழுமலை அடுத்து விஜியை அழைத்தார். “இங்க பாரு விஜி. அந்த ஊர் நமக்கு புதுசு. இவளை கண்காணிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு புரியுதா?…” என அவனிடமும் அழுந்த கூறிவிட்டு,
“ம்ம் உள்ளே ஏறுங்க…” என்று விஜிக்கு நந்தினியை முறைக்க கூட அவகாசம் கொடுக்காமல் வேனிற்குள் தள்ளினார் இருவரையும். விஜியோ நந்தினியை மனதிற்குள் கருவிக்கொண்டே கோவமாக வந்தான்.
அனைவரையும் சுமந்த அந்த வேன் அருவியூரை நோக்கி சென்றது. அங்கே விதி அவர்களுக்காக காத்திருப்பதை அறியாமல்….