சிற்றுண்டி எடுத்து வந்த பாக்கியமும் கௌரியும் அவர் செல்வதை பார்த்துக்கொண்டே வந்து கொண்டு வந்ததை மேஜையில் பரப்பிவிட்டு ஒரு பெருமூச்சோடு அமர்ந்தனர்.
கெளரி, “ஏன் லக்ஷ்மிம்மா? இந்த வேணிம்மா ஏன் இப்டி இருக்காங்க? வரவர அவங்க போக்கும் பேச்சும் எனக்கு பிடிக்கவே இல்லை…” என சொல்லவும் கௌரியை அதட்டினார் பாக்கியம்.
“அவங்க உன்னோட அம்மா, வயசுல பெரியவங்க இல்லையா?, இனி அப்டிலாம் பேசக்கூடாது. புரியுதா?…” என்று சிறிது கண்டிப்பு கலந்த அன்பான குரலில் கூறினார்.
சிறிது நேரத்தில் தேனீர் எடுத்து வந்த வள்ளி அனைவருக்கும் கொடுத்துவிட்டு வேணிக்கு எடுத்து செல்லும் போது நாச்சி தடுத்தார்.
“வேண்டாம்மா வள்ளி. அவ ரொம்ப கோவத்துல இருக்கா, ஏதாவது சொல்லிட போறா…” எனவும் மிதமான புன்னகையை சிந்திவிட்டு,
“அதனால என்னங்க பாட்டிம்மா?, பரவாயில்லை…” என கூறி மேலே சென்றாள்.
“பாரு லட்சுமி, இந்த புள்ளையை போய் வாய்க்கு வந்தபடி பேசறாளே இந்த வேணி. என்னைக்குதான் நல்லபுத்தி வருமோ?…” என வருத்தமாக கூறினார்.
மேலே சென்ற வள்ளி வேணியின் அறைக்கதவை தட்டவும் சிறிது நொடிகளில் படாரென திறந்தார். வள்ளியை பார்த்ததும் இன்னும் உஷ்ணம் ஏறியது அவருக்கு. கையில் வைத்திருந்த தேனீரை பார்த்தவர்,
“இப்போ இதுக்கு ஒண்ணுதான் குறைச்சல்? எடுத்துட்டு போய்டு, இல்லை கண்டபடி பேசிடுவேன்…” என கடித்து குதறாத குறையாக பேசிவிட்டு கதவை அடைக்க எத்தனிக்க அவரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் வள்ளி.
வள்ளியின் திடீர் செயலில் ஸ்தம்பித்து நின்றதோ ஒரு நிமிடமே. கோவத்தில் கண்கள் சிவப்பேற, “என்ன தைரியம் உனக்கு? என் அனுமதி இல்லாம என்னோட ரூம்க்குள்ள வர அளவுக்கு நீ துணிஞ்சிட்டியா? இப்போவே உன்னை வேலையை விட்டு தூக்கறேன் பாரு…” என சூளுரைத்தவரை பார்த்து சிரித்த வள்ளியை எரித்துவிடுவது போல பார்த்தார் வேணி.
“போ, போய் சொல்லித்தான் பாரேன். அடுத்த நிமிஷம் நீயும் இந்த வீட்ல இருக்க மாட்ட…” என்று வள்ளி மிரட்டிய மிரட்டலில் வேணிதான் மிரண்டு போனார்.
“இப்போவே நான் போய் சொல்லுவேன். நான் ஏன் இந்த வீட்டுக்கு வந்தேன்? யார் என்னை இங்க வரவழைச்சது? எதுக்காக வந்தேன்னு. சொல்லவா?…”என்று நிதானமாக கேட்டதும் வேண்டாம் என்பது போல மறுப்பாக தானாகவே தலையை ஆட்டினார்.
“ம்ம் அந்த பயம் இருக்கட்டும். சும்மா சும்மா என்கிட்ட வந்து அதை செய், இதை செய்ன்னு என்னை உயிரெடுத்த அவ்வளோதான். உனக்கு குடுக்குற டீ, காபில பேதி மருத்தை கலந்து குடுக்க எனக்கு எவ்வளோ நேரம் ஆகும்னு நினைக்க? ஜாக்கிரதை…” என கூறிவிட்டு மெதுவாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
அவள் சென்றதும் பேயறைந்தது போல இருந்த வேணி உடனே போனில் பிரசாத்தை தொடர்புகொள்ள முயன்று அழைக்க அவனோ அவரது அழைப்பை நிராகரித்து விட்டான். மொத்தமும் முடிந்தது போல தோன்றியது வேணிக்கு.
இனி தான் நினைத்தது எதுவுமே அவர்கள் மூலம் நிறைவேறாது என தெளிவாக புரிந்துகொண்டார். கெளரி கல்யாணம் மட்டும் முடியட்டும் அதன் பின்னால மொத்தமாக எல்லோருக்குமே முடிவு கட்டிடலாம் என்ற தீர்மானத்திற்கு வந்த பின் தான் அவரால் அமைதியடைய முடிந்தது.
வள்ளி கீழே இறங்கி வருவதை பார்த்த நாச்சி, “என்னமா ஏதாவது சத்தம் போட்டாளா?…” என பரிதாபமாக கேட்டதும்,
“அதெல்லாம் இல்லைங்க பாட்டிம்மா. அவங்களும் என்னோட முதலாளியம்மா தானே. அவங்க பேசினா நான் பொறுத்துக்க மாட்டேனா? நீங்க வருத்தபடாதீங்க பாட்டிமா…” என கூறிவிட்டு மேலும் அங்கே நின்றால் இன்னும் எதுவும் கேட்பாரோ என நினைத்து அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
“இந்த வள்ளி எவ்வளோ நல்ல புள்ளையா இருக்கா தானே பாக்கியம்?…” என நாச்சி தன் மருமகளிடம் கூறவும் அனைவரும் அதை ஆமோதித்தனர்.
உதயா பாக்கியத்தின் புறம் திரும்பி, “ஏன்ம்மா நான் கூப்பிடும் போது எதுவும் முக்கியமான வேலையாவா இருந்தீங்க?…” என கேட்டதும்,
“ஆமாம் பிரபா. நம்ம கெளரி கல்யாணத்துக்கு இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட இல்லைல. அவளுக்கு குடுத்துவிட என்னென்ன துணிமணி இப்போ இருக்கு, என்னவெல்லாம் புதுசா எடுக்கணும்ன்னு பார்த்திட்டு இருந்தோம். வேறொன்னும் இல்லை…” என்றார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின் முடிவெடுத்தவனாக நாச்சியிடம் பேசிக்கொண்டிருந்த நந்தினியை ஊன்றி கவனித்துக் கொண்டே,
“ம்ம் . ஓகேம்மா. நீங்க போய் பாருங்க. நானும் தனம் சித்தி வீட்டு வரைக்கும் போய்ட்டு வரேன். மதியமே வர சொல்லிருந்தாங்க…” என்றவனின் பார்வை மட்டும் நந்தினியிடமே நிலைத்திருந்தது.
அவளின் முகபாவனைகளை பார்த்தவனுக்கு எதுவுமே வித்யாசமாக தோன்றவில்லை. “என்னடா இது, அங்க போறேன்னு சொன்னா குறஞ்சபட்சம் ஒரு முறைப்பாவது இருக்கும்னு பார்த்தேன். கோவத்தை கூட காட்டாமல் சாதாரணமாக இருக்கிறாளே?…” என நினைத்துகொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்த நாச்சி,
“என்னைய்யா ராசா? இன்னேரமா போற? தனம் எதுக்காக வர சொன்னா?…” என குறுகுறுவென அவனையே பார்த்தார் நாச்சி. அவனும் தனமும் பேசியதை கேட்டவராகிற்றே.
முதலில் தடுமாறியவன், “அன்னைக்கு நந்தினி திடீர்னு மயங்கிட்டதால சித்தி எடுத்து வச்சிருந்த சீர் எதையும் வாங்காம வந்திட்டோம்னு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். அதான் வந்து வாங்கிட்டு போக சொன்னாங்க. நந்துவையும் வர சொன்னாங்க. நான்தான் இன்னொரு முறை பார்த்துக்கலாமேன்னு சொல்லிட்டேன்…” என சொல்லி முடித்து கிளம்புவதாக சொல்லிக்கொண்டு நந்தினியை தன் கண்ணசைவில் வெளியே வர சொல்லி தான் முன்னால் சென்றான்.
நாச்சி நந்தினியின் முகத்தை ஆராய்ந்தார். அவளின் இயல்பான பாவனையில் தனக்குள் குழம்பியவர் நடப்பது நடக்கட்டும் என விட்டுவிட்டார்.
உதயாவை பின் தொடர்ந்து நந்தினியும் எழுந்து செல்லவும் பாக்கியத்தோடு தானும் கௌரியின் அறைக்குள் நுழைந்துவிட்டார் நாச்சி.
வாசலுக்கு சென்றவன் திரும்பி பார்க்கையில் நந்தினி மட்டுமே தன்னை நோக்கி வருவதை கண்டு உள்ளே எட்டிப்பார்த்தால் ஹாலில் யாரும் இல்லை. ஒரு நிம்மதி பெருமூச்சோடு நந்தினியை பார்த்தான்.
“எதுக்கு கூப்பிட்டீங்க?…” என்ற அவளின் கேள்வியில் ஆழந்த பார்வையொன்றை அவள் மீது செலுத்திவிட்டு,
“நான் தனம் சித்தி வீட்டுக்கு போய்ட்டு வரேன்…”
“ம்ம். போய்ட்டுவாங்க. நான் வேண்டாம்னு சொல்லவே இல்லையே?…” என்றாள் கூலாக. “இவளை புரிஞ்சுக்கவே முடியலையே…” என குமைந்தவன்,
“ப்ச், நந்து. அவங்க எதுக்கு வர சொல்லிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு?…” என்றான் சலிப்பான குரலில்.
“ம்ம். நீங்க அவங்களோட பேசினதை வச்சே ஓரளவுக்கு தெரிஞ்சுக்கிட்டேன்…”
“அருவியூர்ல நடந்ததை பத்தி தெரிஞ்சுக்க கூப்பிடறாங்கன்னு தெரிஞ்சும் உன்னால எப்படி அமைதியா இருக்க முடியுது?…” என திரும்ப வளைத்து வளைத்து கேள்வி கேட்டதில் சலிப்பான நந்தினி,
“அதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுற?, உன்கிட்ட கேட்டாங்கன்னா சொல்லு…” என மிக சாதாரணமாக கூறவும் கொதித்து விட்டான்.
“ஏய். அப்போ நான் சொல்றதை பத்தி உனக்கு ஒண்ணுமே இல்லை அப்டி தானே?…” என்று கோவத்தில் அவளின் தோளை பற்றி உலுக்கவும் அந்த வலியிலும் முகம் மாறாமல் அவனின் விழிகளுக்குள் ஊடுருவியவள்,
“எனக்கு உதய் பிரபாகரனை பத்தி எதுவுமே தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை….” என நிதானமாக கூறியதில் புரியாமல் விழித்தவனை பார்த்து,
“ஆனா என் புருஷனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். என்னை, என் மனசை அறிந்தவனும், புரிந்தவனும் இந்த உலகத்துல என் புருஷனை தவிர வேற யாருமே கிடையாதுன்னு நம்பறேன். அவன் பொண்டாட்டி விஷயத்துல எதை செய்யணும், எதை செய்ய கூடாதுன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். இதுக்கு மேலையும் என் கிட்ட வந்து இப்படி கேட்கலாமா மிஸ்டர் மரமண்டை?…”என்றவளின் நகைப்பில் முதலில் திகைத்தவன் பின் அவள் கூறியதன் பொருளுணர்ந்து தானும் அவளோடு சிரிப்பில் கலந்துகொண்டான்.
நிம்மதியாக அவளின் தோள் வளைவில் கைபோட்டு அணைத்தவன் தன் பைக்கை நோக்கி அவளோடு மெதுவாக நடந்தவாறே, “ம்ம் புருஷனையே மரமண்டை சொல்றியா? சரியான வாலு. எனக்கு இப்போதாண்டா ரிலாக்ஸா இருக்கு குட்டிம்மா. தனம் சித்தி முதல்ல கொஞ்சம் கோவப்படுவாங்கதான். ஆனாலும் இதை சொல்லாம தள்ளிப்போட மனசு வரலை…” என கூறியவனை பார்த்து மெலிதாக முறுவலித்தாள்.
“உங்களுக்கு என்ன தோணுதோ அதன் படியே செய்ங்க. எனக்கு சம்மதமே. போய்ட்டு சீக்கிரமா வாங்க. அப்பறம் அங்க…” என்று பிரசாத்தை நினைத்து கலக்கமுற்றவளாய் உதயாவை ஏறிட்டாள். அவளின் முகவாட்டத்திலேயே புரிந்துகொண்டவன்,
“ஒண்ணும் பயப்படாதே. நான் பார்த்துக்கறேன். சீக்கிரமே வந்திடறேன். சரியா?…” என கூறிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தவன்,
“உள்ளே போடா. பனி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. உனக்கு இப்போ சேராதுல…” என அவளை உள்ளே அனுப்பியவன் நந்தினி செல்லும் வரைக்கும் இருந்து பார்த்துவிட்டு தான் கிளம்பினான்.