நட்சத்திர விழிகளிலே வானவில் – 2 (3)

நந்தினிக்கோ, “இப்போ இதை சொல்லியிருக்க கூடாதோ!” ன்னு கையை பிசைந்தபடி அமைதியாகிவிட்டாள்.

அதுவரை இருந்த சுமூகமான சூழ்நிலை சூனியத்தை சூடிகொண்டது போல இருண்டு விட்டது.

ஊரை நெருங்க இன்னும் ஒருமணிநேரமே அவகாசமென்னும் நிலையில் அமைதியை கலைக்கும் பொருட்டு மதிவாணன் பேச்சை ஆரம்பித்தான்.

“அண்ணி!” என்றழைத்தவனை பார்த்து  “சொல்லுங்க அண்ணா!” என்றாள்.

உதய்க்கோ தலையில் அடித்துகொள்ளலாம் போல ஆகிட்டது.

“அவன்தான் அண்ணின்னு சொல்றான், நீ என்னடான்னா திரும்ப அண்ணான்னு சொல்லிவைக்கற. உங்களை என்னதான் செய்ய?” என்றான்.

“இல்லைங்க நான் அண்ணான்னே கூப்பிடறேன். என்னை விட பெரியவங்க தானே?” என்று அதோடு முடித்துவிடும் நோக்கில்.

அவனோ விட்டால் தானே, “நீ என்னடா சொல்ற?” என்றான் மதியை நோக்கி.

“அதான் சொல்லிட்டாங்களே பெரியவங்கன்னு அதுக்கு மேல நான் என்ன சொல்ல?” என்றான் பெருமூச்சுடன் வார்த்தைகளில் இருந்த சுணக்கம் முகத்தில் இல்லாமல் சந்தோசம் மட்டுமே.

“தங்கச்சி”……

“சொல்லுங்கண்ணா”…… என்றாள்.

“இப்படி அமைதியா வராம ஏதாச்சும் பேசிட்டே வாங்க. இல்லைனா தூக்கம் வரும், தூங்கிட்டா காரை எங்கேயும் விட்டுடுவேன் தூக்கத்துல, அதனால  பேசிட்டே வாங்க!”… என்றான் அவளை பேசவைக்க.

“என்னதூஊஊஊஊஊ???????” நெஞ்சில் கையை வைத்துகொண்டு என்று அலறியே விட்டாள்.

“டேய் நீ அடிதான் வாங்க போற, பேசாம வா. எதுக்கு இப்டி பயம் காட்டுற?” எனவும் நக்கலான சிரிப்பை கண்ணாடி மூலம் உதய்க்கு சிந்தியவன் அவனது ஒற்றை விரல் மிரட்டலை அசால்டாக அந்தபுறம் தள்ளினான்.

“நான் பேசலைனா நீங்க பேசுங்க, இல்லைனா இப்டிதான்!” என்றான் வாயை மட்டும் அசைத்து. 

தண்ணீர் எடுத்துகொடுத்து, “குடி. அவன் விளையாட்டுக்குத்தான் சொன்னான். நீ பயப்படாத!” என்று தைரியமூட்டினான்.

அந்த கனிவில் மீண்டும் பெற்றோர் ஞாபகம் தலைதூக்க அமைதியாக கண்ணை மூடியபடி வந்தவளை ஜன்னல் வழியாக வந்த தென்றல் நித்திரையில் தள்ளியது.

————————————————————————————

உதய் பிரபாகரனின் ஊருக்கு போவதற்குள் மித்ராவை பற்றி……………….

மித்ரா நந்தினி மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஏழுமலை சந்திரா தம்பதிகளின் மகள். மிகச்சிறிய அளவில் சொந்தமாக காய்கறி தோட்டம் ஏழுமலைக்கு. தரமான காய்கறிகளை இயற்கையான முறையில் விளைவித்து மொத்த விலைக்கு வியாபாரம் செய்துவருபவர். இருப்பது கிராமமாதலால் மகளை கல்லூரிக்கு படிக்க வைக்காமல் இதுவே போதுமென்னும் எண்ணத்தில் இருந்துவிட்டவர். சந்திரா அமைதியான சுபாவம் கொண்டவர். மகளை பாசமாக வளர்த்தாலும் அதே நேரம் மிகுந்த கண்டிப்போடும் வளர்த்தனர்.

தனது மகளது வாழ்வு அவளது மனம் போல மட்டுமல்லாது தங்களது விருப்பமாகவும் இருக்க வேண்டும் என்று அனுதினமும் பிராத்தித்து கொண்டிருந்த ஏழுமலை அவளது திருமணம் இருமுறை நடந்த போதும் செய்வதறியாத சூழ்நிலையில் தன்னை நிறுத்திய கடவுளை இப்போது நிந்தித்துகொண்டிருக்கின்றார்.

ஊரை நெருங்க நெருங்க உதயின் மனமோ, “அங்கே என்ன காத்திருக்குமோ?..” என்று சிந்தித்தபடியே வந்தது.

அவளையறியாமல் உறங்கியவளை பார்க்க பார்க்க இரக்கம் மட்டுமே சுரந்தது. ஆம்  வெறும் இரக்கமே.

இந்த வயதில் அவளது வயதுக்கு மீறிய அதிர்ச்சிகளையும் சங்கடங்களையும் கொடுத்த ஆண்டவனை சபித்தபடியே இனி அடுத்து செய்யவேண்டியதையும் யோசிக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க கவலையோடு வெளியே வெறிக்க ஆரம்பித்தான்.

“இந்த பொண்ணை என்ன பண்ண?, எப்படி இவளுக்கான நல்ல எதிர்காலத்தை அமைத்துகொடுக்க?..” என்று இவனது நினைப்பு மொத்தமும் அவளுக்கான வருங்காலத்தை பற்றிய மட்டுமே.

எத்தனை யோசித்தும் அவன் போக வேண்டிய பாதைக்கான எந்த வெளிச்சமும் கிட்டவில்லை.

இது அவனுக்கு அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? 

“இப்போதைக்கு ஒன்னும் யோசிக்கவேண்டாம், நடக்கிறது நடக்கட்டும்!.” என்று முடிவை காலத்தின் கையில் திணித்துவிட்டு யோசிப்பதை கைவிட்டான்.

கைகடிகாரத்தை பார்க்க அது மாலை 4 மணி என காட்டியது. ஊரை நெருங்க இன்னும் அரைமணிநேரமே இருக்க,

“மதி!…”

“சொல்லுங்கண்ணே சொல்லுங்க!…” என்றான் நகைத்துக்கொண்டே.

“போதும்டா, ஓவரா பண்ணாத!…” என்றான் உள்ளுக்குள் புகைந்துகொண்டே. 

“நானா?,,,, என்னண்ணா பண்ணினேன்?…” என்றான் அப்பாவியாக.

“ஸ்யப்பா, கொஞ்சம் காரை ஏதாச்சும் கடையில நிறுத்து காபி குடிச்சிட்டு போலாம்!…”

“ஓ, இப்போவே நிறுத்தறேன்!…” என்றபடி வரும் வழியில் ஒரு கடையின் முன்பு நிறுத்தி இறங்கியவனை,

“நான் இங்கயே இருக்கேன். நீ போய் வாங்கிவா!…” என்று பணித்துவிட்டு நந்தினியை எழுப்பினான். 

அவளோ, “ம்ஹூம், அசைவேனா….” என்று அடித்துபோட்டதுபோல நல்ல தூக்கத்தில் இருந்தவளை பாவமாக பார்த்துவிட்டு தூங்கட்டுமென விட்டுவிட்டான்.

மதி கொண்டு வந்த காபியை இருவரும் குடித்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.

“யாரிடம் என்ன பேசணும்?, என ஒத்திகை பார்த்துகொண்டிருந்தவனது கவனத்தை ஒலிபெருக்கியின் மூலம் வந்த பாடல் திசை திருப்பியது.

அவனது ஊரின் எல்லைக்குள் நுழையவும், “அப்படியும் இருக்குமோ?…” என புருவ மத்தியில் முடிச்சுகள் விழ பாதையின் இருமருங்கிலும் கவனிக்கலானான்.

அவனது பார்வை வட்டத்துக்குள் விழுந்ததை கண்டு “சரிதான்!..” என்று தலையை பிடித்துகொண்டு கடுப்போடு மதியை பார்த்தவனது விழியில் விழுந்ததென்னவோ அடக்கமுடியா சிரிப்பை அடக்கி வாயை விட்டு வெளியே வராமல் தடுக்க பிரம்மப்ரயத்தனம் செய்துகொண்டிருந்தான்.

ஆனால் தப்பி தவறி கூட மதி உதய் பிரபாகரனை ஏறிட்டு பார்க்க முயலவில்லை.

காதை கிழிக்கும் சத்தத்தில் துயிலெழுந்தவள் இருபக்கங்களிலும் மைக்செட் பாடிகொண்டிருக்க தோரணங்கள் சீரியல் பல்புகள் என அலங்காரத்துடன் காணப்பட்ட ஊரை கண்டு,

“இதுதான் உங்க ஊரா?…” என்றாள்.

ஆமாம் என்ற தலையசைப்பை மட்டுமே அவனிடமிருந்து பதிலாக வாங்கிகொண்டவள் அதோடு விடாமல்,

“உங்க ஊர்ல ஏதும் விசேஷமா? திருவிழாவா?..” என்றாள் மறுபடியும்.

அவளை பார்த்து என்னத்தை சொல்லவென விழித்தான்.

“இந்த ஊர் பேரென்ன?…” மீண்டும்.

“ஏன் உங்கப்பா உன்கிட்ட சொல்லலையா?…” என்றான்.

தலையை குனிந்தவாறு இல்லையென சொன்னவளிடம்,

“குறிஞ்சியூர்!….”

“ஓ!…” என திரும்பி ஜன்னல் புறம் வேடிக்கை பார்த்தவாறு வந்தவளை கவலையோடு நோக்கினான்.

“இந்த பொண்ணு எப்படி தான் சமாளிக்க போகுதோ?…” என.

அவளோ கிராமமும் அல்லாத நகரத்தோடும் ஒப்பிட முடியாத ஊரினை மெலிதான நடுக்கத்தோடு அளந்தபடி இருந்தாள்.

உதய் பிரபாகரனின் வீட்டில் என்ன நடக்குமோ என பயந்தபடி வந்தவளை கனிவுடன் நோக்கி,

“ஏன் பயப்படற? நான் தான் இருக்கேன்ல, அப்புறம் என்ன?…” என்றான்.

ஆனாலும் ஏதோ ஒரு புரியாத உணர்வின் பிடியில் சிக்கிகொண்டதுபோல தவித்தவளை  “என்ன சொல்லி சமாதானப்படுத்துவது? …” என புரியாமல் அமைதிகாத்தான்.

“அண்ணா வீடு வந்தாச்சு!…” என்றபடி மதி உதய் பிரபாகரனின் வீட்டு கேட்டிற்குள் காரை நுழைக்கவுமே பயத்தில் வேர்க்க விறுவிறுக்க கண்ணை இறுக மூடிகொண்டாள் நந்தினி.

error: Content is protected !!