“அதான் சொல்றேன்ல. நேத்தே வாங்கி கட்டியாச்சு…”என்றான் மெல்ல அவனை வாயில் புறம் நகர்த்திக்கொண்டே.
“பாவி, கிராதகா, உருப்படுவியா நீ. ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஆறு மாசம் இந்த பக்கமே வந்திருக்க மாட்டேனே?…” என்று வாயில் வந்த வார்த்தைகளை கொண்டு வசைபாடியவனை இடைமறித்த உதயா,
“அப்போ கல்யாணம் வேண்டாமா? கௌரிக்கு வேற மாப்பிள்ளைதான் பார்க்கணுமோ?…” என்று வம்பிழுக்க இப்போது கழுத்தையே பிடித்துவிட்டான் விஷ்ணு.
“கொன்னுடுவேன் உன்னை. அந்த சவுரிக்கு என்னை மாதிரி மாப்பிள்ளை எவன்டா கிடைப்பான்? அவளுக்கு நான்தான். எனக்கு அவதான். இன்னொரு முறை பேச்சுக்கு கூட அப்டி சொல்லிப்பாரு, அப்போ இருக்கு உனக்கு…” என்று அவனை எச்சரிக்கவும் விஷ்ணுவை கட்டிக்கொண்டான் உதயா.
அறையின் வாயிலில் நடந்த அனைத்தையும் ஒரு வெறுமையுடன் பார்த்துக்கொண்டே இருந்தாள் நந்தினி. உதயா, விஷ்ணு இருவரும் வேறு பேசிக்கொண்டே கீழே இறங்கிச்செல்லவும் அயர்வோடு மீண்டும் படுத்துகொண்டாள்.
மனம் எங்கெங்கோ சுற்றி அலைந்து திரிந்து சரியாக ஒரு இடத்தில் வந்து நின்றது. என்னதான் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும் உதயாவின் செயலை ஜீரணிக்க முடியாமல் தவித்தாள்.
தனக்கு மட்டும் ஏன் இப்படி துயரங்கள் சுற்றி சுழன்றி அடிக்கின்றதோ என நொந்துகொண்டாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்களில் கண்ணீர் கரையுடைக்க இருந்த நேரம் அவள் மனம், “போதும் நந்தினி. அழுது அழுது இதுவரைக்கும் எதை சாதிச்ச? அழுகையை நிறுத்திட்டு ஆகவேண்டியதை பாரு…” என்று இடித்தது. விழியிலிருந்து நீர் வடிந்துவிடாமல் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்.
அன்றைக்கு மட்டும் தான் அருவியூர் போகாமல் இருந்திருந்தால், பிரசாத்தை பார்க்காமல் இருந்திருந்தால், அவசரப்பட்டு அவனோடு பிரச்சனை செய்யாமல் இருந்திருந்தால், அவனை கைநீட்டி அடிக்காமல் இருந்திருந்தால் என்று எத்தனையோ யோசித்தும் இப்போது அதனை எண்ணி பயனில்லை தான்.
பிரச்சனையின் ஆரம்பமே தான்தான் என்றாலும் உதயாவின் மேல் உள்ள மனத்தாங்கல் மட்டும் குறையவே இல்லை. அனைத்து பிரச்சனைகளையும் அழகாக கையாண்டிருக்க அவனால் முடிந்திருக்கும். ஆனால் தான் இருந்த நிலை அறிந்தும் ஒன்றும் செய்யாமல் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்ததை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்படியே தன் போக்கில் யோசித்து கொண்டிருந்தவளை “நந்தினி” என்ற நாச்சியின் அழைப்பு மீட்டது.
நாச்சி உள்ளே வரவும் மெல்ல எழுந்து அமர்ந்தவள் வழக்கம் போல தன் புன்னகை என்னும் முகமூடியை சிரமமில்லாமல் எடுத்து மாட்டிகொண்டாள். இரண்டரை வருட அனுபவம் ஆகிற்றே.
தன் மனக்கிலேசங்களை அப்போதைக்கு உள்ளேயே புதைத்து விட்டு அவரை பார்த்து பளிச்சென புன்னகைத்தாள்.
“வாங்க பாட்டி…” என அழைத்தவளை நெருங்கிய நாச்சி,
“இப்போ உடம்புக்கு பரவாயில்லையா தாயி?. எப்படி வாடிப்போய் இருக்க? சின்னபுள்ளையாட்டம் பூச்சிபொட்டுக்கு எல்லாமா பயப்படறது. அதுவும் காய்ச்சல் வர அளவுக்கு?…” என வாஞ்சையாக கேட்டார்.
அவர் கேட்டதிலிருந்தே அங்கே நடந்த எதுவுமே அவருக்கு தெரியவில்லை என யூகித்தவள் அதுவும் நல்லதிற்குதான். எதற்கு தேவையில்லாமல் அவர்களையும் கஷ்டபடுத்தவேண்டாம் என்று விட்டுவிட்டாள்.
“இப்போ நல்லா இருக்கேன் பாட்டி. சரியாகிருச்சு போல. எல்லோரையும் ரொம்ப சிரமப்படுத்திட்டேனா?…” என்று உண்மையான வருத்தத்தோடு கேட்டவளிடம்,
“அட, என்னடாம்மா இப்டி சொல்லிட்ட? தனம் வீட்டுக்கு போய்ட்டு பிரசாத்தால எந்த பிரச்சனையும் இல்லாம நீங்க திரும்ப வரும் போது நல்லபடியா வரணும்னு நாங்கலாம் வேண்டாத சாமி இல்லை. ஆனா நீ வந்த கோலம் பார்த்து உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு நாங்க ரொம்ப தவிச்சு போய்ட்டோம்மா. இந்த பிரபா பையன் முகத்தில சிரிப்பே இல்லாம போச்சு. இப்போதான் அவனுக்கு நிம்மதியே…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே கௌரியும், பாக்கியமும் வந்துவிட்டார்கள்.
நாச்சியின் பேச்சில் தனத்தின் பெயரை கேட்டதும் முதலில் இறுகியவள், பிரசாத்தால் பிரச்சனை வருமென்று எதை வைத்து சொல்லுகிறார் என குழம்பினாள். என்னதான் நடக்கிறது இந்த இரண்டு குடும்பத்திற்குள் என்று யோசித்ததில் தலைவலித்தது. பின் அவர்களின் மீது தன் கவனத்தை திருப்பினாள்.
அனைவரும் விசாரித்து விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக வேணி வந்து பார்த்துவிட்டு போய்விட்டார்.
வள்ளியிடம் சொல்லி நந்தினிக்கு உணவை எடுத்துவர செய்து அவளுக்கு கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கும் படி சொல்லி அனைவரும் இடத்தை காலி செய்தனர்.
வள்ளி உணவெடுத்து செல்லும் போதே வேணி அவளை வழிமறித்து சாப்பாட்டில் உப்பு, காரத்தை அதிகமாக போட்டு எடுத்து செல்ல சொல்ல, “உங்க வேலையை பாருங்க..” என்று மூக்குடைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
வேணியோ, “தன் எண்ணப்படி கையாள் கிடைத்தும் தன் சொல்லை ஏற்று நடக்காமல் திமிராய் இருக்கிறாளே? இந்த பிரச்சனைக்காக பிரசாத்திடம் அணுகியது தவறோ?…” என்று வெறுப்போடு எண்ணினார்.
“இருக்கட்டும். என்னையா எடுத்தெறிஞ்சு பேசுது இந்த வேலைக்கார நாய். தான் நினைத்தது மட்டும் நிறைவேறட்டும்.அத்தனை பழியையும் வள்ளி, பிரசாத் மேல போட்டுட்டு நாம தப்பிச்சிடலாம்…” என்று தவறாக கணக்கிட்டுக்கொண்டார்.
சாப்பாட்டை கொடுத்துவிட்டு கீழே இறங்கிய வள்ளி அடுத்த நிமிடம் பிரசாத்திற்கு நந்தினிக்கு காய்ச்சல் சரியான தகவலை சொல்லிவிட்டு வேணியிடம் பேசியதையும் சொல்லி முடித்து தன் வேலையை தொடர்ந்தாள்.
சிறிது நேரத்திலேயே டாக்டர் பெருமாள் உதயாவோடு வந்து சேர்ந்தார். அவளது உடல் நலன் பற்றி விசாரித்தவர் அவளுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதித்து விட்டு சில வைட்டமின்ஸ் மாத்திரைகளை தவறாமல் சாப்பிட சொன்னவர் சிறிது பேசிகொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டார். அவரை அனுப்பிவிட்டு வந்து நந்தினியின் அருகில் அமர்ந்தான் உதயா.
“சாப்ட்டீங்களா?…” என்று அமைதியாக கேட்டாள் நந்தினி.
“ம்ம். கீழேயே சாப்ட்டேன். நீ வேணும்னா கொஞ்ச நேரம் தூங்கேன்…” என்றவனை கூர்ந்து நோக்கியவள்,
“உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி குடுக்கிறதுக்கு முன்னாலேயே விளையாட்டுக்கு கூட கௌரியை விஷ்ணு அண்ணா விட்டுக்குடுக்காம பேசறாரே?…” என்றவளது குரலில் என்ன இருந்தது என உணரும் முன்னே,
“நீ அவங்க ப்ரெண்ட் தானே. உனக்கு ஏன் அந்த புத்தி இல்லாம போச்சு?…” என்று படாரென கேட்கவும் அதிர்ந்துவிட்டான்.
“எதற்கும், எதற்கும் முடிச்சு போட்டு பேசற நந்தினி? அவன் விஷயம் வேற நம்ம பிரச்சனை வேறடா. புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கியே?…”என தன் மனம் நொந்து கேட்டான்.
“நான் என்ன சம்பந்தம் இல்லாமலா பேசறேன்? இத்தனைக்கும் நீ எனக்கு தாலிக்கட்டி விட்டுட்டு போய்ட்ட. அதை நான் கேட்க கூடாதா? என்னை கூட்டிட்டு வர சொல்லி உன் வீட்டாளுங்க சொன்னா உடனே நீ வீட்டை விட்டு வெளில போய்டுவ. நான் கேள்வி கேட்டாலும் திரும்பும் அதையே தானே செய்வ. அப்டிதானே?…” என மூக்கை உறிஞ்சிக்கொண்டு கேட்டவளை பார்க்க மனம் வலித்தது.
இப்படியெல்லாம் தனக்குள்ளே யோசித்து தேவையற்ற விஷயங்களுக்கு முடிச்சு போட்டு தன்னையே வருத்திக் கொள்கிறாளே என மனதிற்குள் அழ மட்டுமே முடிந்தது.
இவன் அவளை அமைதியாக பார்க்க அவளோ கண்களில் போர் முழக்கத்தோடு அவனை நோக்க இருவரையும் திசை திருப்பியது உதயாவின் போன் கால் சத்தம். அதில் மிளிர்ந்த தனத்தின் பெயரை பார்க்கவுமே உதறல் எடுத்தது அவனுக்கு.
அவனது முகத்தில் திடீரென ஒட்டிக்கொண்ட பதட்டத்தை கண்டவள் கேள்வியாக அவனை பார்த்து, “போன் அடிச்சா எடுக்க வேண்டியது தானே? ஏன் என் முகத்தையும் போனையும் மாத்தி மாத்தி பார்த்துட்டு இருக்க?…” என சொல்லவும் போன் காலை கட் செய்ய போனவன் பதட்டத்தில் அட்டென் செய்துவிட்டான்.
தலையில் அடித்துக்கொண்டு போனை காதுக்கு கொடுத்துவிட்டு எழுந்தவன் நந்தினியின் முறைப்பில் மீண்டும் அங்கேயே அமர்ந்தான்.
“சொல்லுங்க சித்தி…” என கூறியதுதான் தாமதம் நந்தினியின் முகத்தில் ரௌத்திரம் வந்தமர்ந்தது. அதை பார்த்ததும் அய்யோவென்று ஆனது உதயாவிற்கு.
“பிரபா நந்தினி இப்போ எப்டி இருக்கா? காய்ச்சல் விட்டுடுச்சா?…”
“ம்ம் விட்டுடுச்சு சித்தி. ஆனாலும் கொஞ்சம் வீக்கா இருக்கா…”
“காய்ச்சல் வந்த உடம்பில்லையா. அப்படிதான் இருக்கும், நல்லா சாப்பிட சொல்லு…” என்றவர்,
“வீட்டுக்கு எப்போ வருவா பிரபா?…”என கேட்டார்.
“வீட்டுக்கு…” என்று நந்தினியை பார்த்துக்கொண்டே இழுத்தவன்,
“வரேன் சித்தி…” என்று மெதுவான குரலில் கூறினாலும் நந்தினிக்கு எட்டத்தான் செய்தது.
“நந்தினிக்கு சரியானதும் சொல்றேன்னு சொல்லியிருக்க, எனக்கு விஷயம் தெரியனும்…” என்று தவிப்பும், அதட்டலும் சரிவிகிதத்தில் கலந்த குரலில் கேட்டவரிடம் இன்னும் இரண்டு நாளில் வருவதாக ஒப்புக்கொண்டான்.
நந்தினியிடம் பேசவேண்டும் என கூறியதும் தூக்கிவாரி போட்டது உதயாவிற்கு. அவள் தூங்குவதாக சொல்லி சமாளித்து போனை அனைத்து வைத்தவன் அடுத்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானான்.
பிரசாத்தின் தாய் என்பதால் தனத்தின் மீதும் அப்படி ஒரு கோவம் எழுந்தது. அவர் மட்டும் தன் பிள்ளையை கண்டித்து வளர்த்திருந்தால் பிரசாத் தன்னிடம் அவ்வாறு கேவலமாக நடந்திருக்க மாட்டான் தானே என்று எண்ணினாள்.
“அந்த பொறுக்கிக்கும், உனக்கும் என்ன தகராறு?…” என்று நேரடியாக கேட்டாள்.
“முதல்ல அவனை பொறுக்கின்னு சொல்றதை நிறுத்து…” என்றவன் வேணியை மரியாதையில்லாமல் பேசியதற்கு கண்டிக்கும் போதே சீறினாள். இப்போதும் எதுவும் சொல்லுவாளோ என பார்த்தால் பதிலே சொல்லாமல் முறைப்பதிலேயே இருந்தாள்.
“ஏன் உன் தம்பியை சொன்னா உனக்கு கோவம் வருதாக்கும்? பாசம். ம்ம். பாசம். அந்த பாசம் தானே உன்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கு. இப்படி பட்ட ரொம்ப ஒழுக்கமான ஒரு தம்பி இருக்கிறதால தானே என் கிட்ட அவனை பத்தி சொல்லாம மறைச்சுட்ட?…” என்று தம்பியில் ஒரு அழுத்தம் கொடுத்து குற்றக்குறியை அவன் புறமாக திருப்பினாள்.
“என் தம்பிதான் யாரு இல்லைன்னு சொன்னா?…” என்று பதிலுக்கு அவனும் கோபமாக எகிறினான்.
பொறுமையாக பேசவேண்டுமேன்றுதான் அவனும் நினைத்தான். ஆனால் பொறுமையின் எல்லையை சோதிக்கும் அளவிற்கு தன் மனைவி செல்கிறாளே என மனம் குமைந்தவன் தன் அதட்டலில் பயந்திருப்பாளோ என அவளை சமாதானபடுத்த வேண்டுமே என்று திரும்பி பார்த்தான்.
அவளா அசருவாள்? அசையாமல் தன்னவனின் கடுமையில் அஞ்சாமல் அவனை விழி எடுக்காமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளின் தீர்க்கத்தில் இவன்தான் நொந்துவிட்டான்.
“பிரசாத்க்கும் எனக்கும் பிரச்சனை கிடையாதுடா. எங்கப்பாக்கும் அவனுக்கும் தான் பிரச்சனை…”என்றவனை புரியாமல் பார்த்தாள்.
ஏன் எதற்கு என கேள்வி கேட்பாள் என்று பார்த்தான். அவளோ வாயை திறந்தாள் தானே. நீயே சொல்லு என்பது போல இருந்தாள்.
“கதை சொல்லியே உன் காலம் போய்டும்டா உதயா…” என்று தனக்குள் அலுத்துக்கொண்டவன்,
“எங்கப்பாவும், பிரசாத் அப்பா தணிக்காச்சலம் சித்தப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அதைவிட உடன்பிறவா சகோதரர்கள்னு கூட சொல்லலாம். சித்தப்பாக்கிட்ட கேட்காம, அவங்களை கலந்துக்காம அப்பா எதுவுமே செய்ய மாட்டாங்க. தனம் சித்தியும் முக்கால்வாசி இங்கதான் இருப்பாங்க. நீ நம்ப மாட்ட. நானும் பிரசாத்தும் கூட அவ்வளோ ஒற்றுமையா இருப்போம்…” எனும் போது நந்தினியின் முகத்தில் ஒரு நொடி ஆச்சர்யம் வந்து சென்றது.