நட்சத்திர விழிகளிலே வானவில் – 16 (1)

நட்சத்திர விழிகள் – 16

ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதானது ஒருவருக்கு வரமாகவும், இன்னொருவருக்கு சாபமாகவும் அமையவல்லது. சிலருக்கு முந்தய நாளின் ஏக்கங்களுக்கும், ஏமாற்றங்களுக்குமான விடியலாகவும் இருக்கும்.

தனக்கான விடியல் எத்தகையது என்று அறிய முடியாமல் ஒரு விதமான தவிப்போடு கண் விழித்தவனது பார்வையில் ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னை விடாமல் பற்றிக்கொண்டு தூங்கும் தன்  மனைவியை பார்த்தவன் மனம் வலித்தது.

அனைத்து துன்பத்திலிருந்தும் கணவனாக அவளுக்கு அரணாக இருந்து காக்க வேண்டிய தானே அவளது மொத்த வேதனைக்கும் காரணமாகிவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லாமல் கொன்றது.

இனி அவளை எந்த ஒரு தீங்கும் தீண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவனாக அவளது தலையை கோதியவன் முன் நெற்றியில் தன் இதழ்களை மெலிதாக ஒற்றிவிட்டு அவள் உறக்கம் கலையாமல் மெல்ல எழுந்துகொண்டான்.

குளித்து முடித்து கீழே வந்தவன் தோட்டத்தில் சிறிது நேரம் உலாவ சென்றான். இரவு நடந்த பேச்சுவார்த்தையாலும், சரியாக தூங்காததாலும் உடலும் மனமும் மிகவும் களைத்து போய் இருந்தது.

மீண்டும் உள்ளே சென்றவன் பாக்கியத்திடம் தனக்கும் நந்தினிக்குமான உணவை கொஞ்சம் தாமதமாக எடுத்துவர சொல்லிவிட்டு நந்தினிக்கு காய்ச்சல் குறைந்துவிட்ட தகவலையும் கூறிவிட்டு மீண்டும் மேலே சென்றுவிட்டான்.

மீண்டும் தன் உறக்கத்தை தொடர்ந்தவன் காலை உணவு வரவும் நந்தினியை எழுப்பி அவளுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தனர். மதிய உணவின் போது விஷ்ணுவின் அழைப்பில் தான் கண்விழித்தான் உதயா.

“ஐயோ இவனை எப்படி மறந்தோம்…” என்று தனக்குள் அலறினான். வேகமாக எழுந்த அவனது அசைவிலேயே கண்விழித்த நந்தினி,

“என்ன உன் ப்ரெண்டை காப்பாத்த போற போல?. நானா எதுவுமே பேசமாட்டேன். அவங்க என்னை பேசவைக்காத வரைக்கும் யாருக்கும் சேதாரமில்லை. இனி உன் சமத்து…” என்று நக்கலாக கூறிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது கேலியில் பல்லை கடித்த உதயா அறையை விட்டு கீழே செல்வதற்குள் விஷ்ணு தானாக மேலே வந்துவிட்டான். அரக்கபரக்க வெளியே வந்த உதயாவை பார்த்த விஷ்ணுவுக்கோ முகம் மலர்ந்துவிட்டது.

உதயாவை பேச கூட விடாமல், “ஏண்டா மச்சான், நான் தான் வரேன்ல அப்புறம் ஏண்டா என்னை வரவேற்க இப்டி வேகமா ஓடிவரணுமா? இதயெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லடா,. என்னைக்கா இருந்தாலும் நான் உன் ப்ரெண்ட் மச்சான்…” என்று சகட்டுமேனிக்கு தானே பேசி முடித்தவன் அப்போவும் உதயாவை கூர்ந்து கவனிக்காமல் விட்டது விஷ்ணுவின் கெட்ட நேரம் தானோ?

பேசிக்கொண்டே மெல்ல அறைக்குள் எட்டி நந்தினியை பார்த்தான். உள்ளுக்குள் ஒரு நிம்மதி உண்டாகிற்று. அவனது முக பாவங்களை கவனித்து கொண்டிருந்த உதயாவிற்கே பாவமாக போய்விட்டது. ஆனாலும் சட்டென ஒரு சுவாரஸ்யம் அவனது முகத்தில் குடிவர அடுத்து நடக்கவிருப்பதை அனுமானித்தவன் அதை காண ஆயத்தமானான்.

அறைக்குள் உதயாவையும் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தவன், “நல்ல வேலைடா. இன்னும் தங்கச்சி நல்ல தூக்கத்துல இருக்குது. ஆமா காய்ச்சல் எப்டி இருக்கு?…” என்று கேட்டுவிட்டு ஹாயாக கையில் வைத்திருந்த பைலை சோபாவில் போட்டுவிட்டு தானும் தொப்பென அமர்ந்தான்.

“காய்ச்சல் குறைஞ்சிருச்சுடா. பரவாயில்லை…” என்றவனை ஆராயும் பார்வை பார்த்த விஷ்ணு,

“ஏண்டா மச்சான், நந்தினி பிரச்சனை ஏதும் பண்ணுச்சா? பிரசாத் பத்தி உன்க்கிட்ட கேட்டுச்சா?…” என மெல்ல நந்தினியையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தான் கேட்டுவைத்தான்.

அவனது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பார்த்த உதயா, “அடச்சீ, இப்டி பயந்து சாவுற. அவ தான் தூங்கறால. அப்புறம் என்னடா?…” என்று தலையில் அடித்துகொண்டான்.

“நீ ஏண்டா பேச மாட்ட? அன்னைக்கு அருவியூர்ல ஆனானப்பட்ட பிரசாத்துக்கே அந்த பேச்சு கிடைச்சது. அவனையே லெப்ட் & ரைட் வாங்கின சூரப்புலிடா என் தங்கச்சி. நீ வேற அன்னைக்கு அவனோட வீட்ல தங்கச்சி கோவத்தை பத்தி சொன்னதில இருந்து ஒரு பதட்டம் தான். என்கிட்டே ஏன் அண்ணா நீங்க கூட மறச்சுட்டீங்கன்னு கேட்ருமோன்னு…” என்று விஷ்ணு சொல்ல சொல்ல நந்தினியின் காதுகளில் அது அச்சு பிசகாமல் விழுந்து வைத்தது.

உதயாவிற்குதான் எங்கையாவது போய் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது. அவனும் விஷ்ணுவின் பேச்சை திசை திருப்ப பார்த்தான்.

“ப்ச். அதை விடு. பழசை எதுக்கு பேசிட்டு? வாடா நாம கீழே உட்கார்ந்து பேசுவோம்…” என்று அகற்ற பார்த்தான் உதயா.

“கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு? நந்தினி இங்க தனியா இருக்கா. ஏதாவது வேணும்னா பக்கத்துல இருக்க வேண்டாமா நீ? இங்கயே இருக்கலாம். இப்போ நான் கிளம்பிடுவேன்…” என்று நகராமல் சட்டமாக அமர்ந்துவிட்டவனை ஒன்றும் சொல்ல முடியாமல் விதி விட்ட வழி என்று விட்டுவிட்டான்.

மீண்டும் விட்ட இடத்திலிருந்தே ஆரம்பித்தான் விஷ்ணு.

“நீயும் வேற பிரசாத் வீட்ல வச்சு அடிவாங்கிருக்க. அங்க அதுவும் தனம் அத்தை முன்னாடியே. அவ்வளோ கோவம் இருக்கிறப்போ நான் சிக்கினா என்ன ஆகும்?…” என்று கண்கள் அகல கேட்டவனை பார்த்து சிரித்துவிட்டான்.

“மச்சான் ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா?…” என்று உத்தரவு கேட்டவனை வித்யாசமாக பார்த்த விஷ்ணு,

“என்ன சொல்ல போற? சொல்லேன். கேட்போம்…” என்று தோரணையாக பதிலளித்தான்.

“நீ அடிக்கடி சிங்கத்தோட முடியை சீப்பால வாரிவிடற. அது நல்லதில்லை…” என கூறிய உதயா விஷ்ணுவின் பின்னால் சற்று தூரத்தில் படுக்கையில் படுத்தவாறு அவர்களது சம்பாஷணையை கேட்டுகொண்டிருந்த நந்தினி சத்தமில்லாமல் மெல்ல எழுந்தமர்ந்ததை பார்த்துவிட்டான்.

அதை கவனிக்காமல், “யாருக்குடா நல்லதில்லை…” என்று இன்னும் அதே ஜம்பத்தோடு கேட்டவனை பரிதாபமாக பார்த்த உதயா,

“எனக்குத்தாண்டா நல்லதில்லை. எனக்கேதான்…” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

“இன்னைக்கு என்னடா ஆச்சு உனக்கு?…” என விஷ்ணு கேட்டதும் முதல்நாள் நடந்ததை நினைத்து பார்த்தான் உதயா.

“பூப்போல இருந்துக்கிட்டு அந்த மிதி மிதிச்சாலே, நமக்கு ஏன் கோவமே வரலை?…” என்ற சிந்தனைக்குள் விழுந்தவனை உலுக்கிய விஷ்ணு,

“மச்சான் மந்திரிச்சு விட்ட மாதிரியே இருக்கியே?, சத்தியமா நீ நல்லா தான இருக்க?…” என்று சற்றே கலவரத்தோடு கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் பார்வையை நந்தினியின் புறம் திருப்பினான் உதயா. அவனை தொடர்ந்து விஷ்ணுவும் திரும்பி பார்த்தான். அங்கே நந்தினி இருவரையும் உறுத்து விழித்தபடி அமர்ந்திருந்தாள்.

“அய்யய்யோ வசமா சிக்கிட்டேனோ? ஏண்டா முதல்லையே சொல்லலை நீ?…” என்று உதயாவை பார்த்து குதி குதியென குதிக்க அவன் கண்டுகொள்ளாமல் பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டு,

“அதுக்கு ஏண்டா தலைக்கு நெருப்பு வச்சது போல தவிக்கிட்டு இருக்க? அதைவிடு, அவ கிட்ட போய் நல்லா இருக்கியான்னு கேட்டுட்டு உடனே கிளம்புற வழியை பாரு. இல்லனா தொலஞ்ச நீ…” என மெல்லிய குரலில் தப்பிக்க வழி செய்தான்.

உடனே விஷ்ணுவின் மனதில் ஒரு கணம் தன் நண்பனை நினைத்து “அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே…” என்று பேக்ரவுண்ட் மியூஸிக் கேட்டது. ஆனாலும் இவனை நம்பாதே என்று மூளை மறுபுறம் எடுத்துரைத்தது.

உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், உடலை ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டு நந்தினியின் அருகே சென்றான். அவனை தொடர்ந்து உதயாவும்.

தொண்டையை செருமியவன், “தங்கச்சி நல்லா இருக்கியாமா? இப்போ காய்ச்சல் போய்டுச்சா?…” என்று மிக பவ்யமாக கேட்டான்.பதில் சொல்லாமல் இன்னும் அவனை முறைத்தவண்ணம் இருக்கவும் அதை பார்த்து அரண்டவன்,

“மச்சான் வேலை இருக்குடா நான் கிளம்பறேன்…” என்று பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தான்.

“கொஞ்சம் நில்லுங்க…” என்று குரலை உயர்த்தி நந்தினி அழைக்கவும் சென்ற வேகத்தில் திரும்பிய விஷ்ணு,

“சத்தியமா சொல்றேன் நந்தினிமா. அண்ணன் உன்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லலாம்னு தான் நினச்சேன். இந்த ராஸ்கல் உன் புருஷன் தான் வேண்டாம்னு தடுத்துட்டான். நீயே அவன் கிட்ட கேளு…” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்.

“அப்போ தங்கச்சின்னு சொல்றதெல்லாம் சும்மா தான்னு புரிஞ்சு போச்சு. நீங்க தாராளமா உங்களோட ப்ரெண்ட் சொல்றபடியே இருங்க. நான் உங்க கிட்ட எந்த விளக்கமும் கேட்கலையே?…” என்று ஒட்டாத தன்மையில் பேசியவளை பரிதாபமாக பார்த்தவன்,

“என்னடா மச்சான் தங்கச்சி இப்டி பேசுது?…” என்றான் மெல்ல உதயாவின் காதில் கிசுகிசுத்து.

“எனக்கும் முதல்ல அப்டித்தாண்டா இருந்துச்சு. நந்து நேத்து பேசும் போது…” என அவனை போல பேசியவனிடம்,

“ம்ம். அப்பறம்?…” என்றான் கதை கேட்கும் பாவனையில். அதில் கடுப்பான உதயா,

“அப்புறம் என்ன தானா பழகிருச்சு…” என்று அசால்ட்டாக கூறவும் விஷ்ணு எரிச்சலோடு,

“என்னடா சொல்ற? பழகிருச்சுனா?…”

error: Content is protected !!