“எல்லோருக்குமே அதே எண்ணம் போல. அவ்வளோ சந்தோஷம். நான் பேசினதுல இரட்டிப்பு சந்தோஷம். வேணி அத்தை என்ன சொல்லுவாங்களோன்னு அவங்க முகத்தை பார்த்தேன். அவங்களும் ஆமாடா கண்ணா உன்னோட கௌரிதான். இவளையும் நீ தான் பத்தரமா பார்த்துக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. என் கௌரியே எனக்கு திரும்ப கிடச்சுட்டா. இப்போ வரைக்கும் அவ என் கெளரி, என் தங்கை கௌரியாக தான் இருக்கா…” என்று முடித்து மெலிதாக புன்னகைத்தான்.
வேணியை நினைத்து பிரமிப்பாக இருந்தது. இவ்வளோ நல்லவங்களா? பின்ன ஏன் அப்படியெல்லாம் பேசினாங்க? என்று எண்ணம் வந்து நிற்கவும் அதை தன்னவனிடத்தில் கேட்டும் விட்டாள்.
“எப்படி பேசினாங்க? என்று அவனும் திரும்ப கேட்கவும் தான் உரைத்தது தான் அதை பற்றி தன் கணவனிடத்தில் எதுவுமே சொல்லவில்லை என்று.
அவளது மௌனத்திற்கான காரணத்தை அறிந்தவனோ சிறு மர்மபுன்னகையோடு லேப்டாப்பை எடுத்து வந்து அந்த வீடியோவை ஓடவிட்டான். அதை பார்த்ததுமே நந்தினிக்கு கண்கள் இரண்டும் தெறித்துவிடும் அளவிற்கு உறுத்து விழித்தாள்.
உதயாவின் துளைக்கும் கண்களை உணர்ந்தவள் போல வாயை திறவாமல் லேப்டாப்பையே வெறிக்க பார்த்தாள்.
“இப்போ கூட நீயா என் கிட்ட சொல்லமாட்ட? அப்டித்தானே?…” என்று சற்று காரம் ஏறிய குரலில் கேட்கவும்,
“அதான் உனக்கே தெரிஞ்சிருக்கே. தெரிஞ்சும் இதையும் என் கிட்ட இருந்து நீ தான் மறச்சிருக்க?…” என்று முறைத்துகொண்டு வேதாளம் முருங்கை மரம் ஏற எத்தனிக்க அவளது துணைவன் தான் பாவம் பதறிவிட்டான்.
“நீயா சொல்லுவன்னு நினச்சேண்டா. அன்னைக்கே அத்தையை போய் கண்டிச்சும் வச்சுட்டேன்…” என்று அன்றைய நிகழ்வுகளை சொல்லவும் தான் இத்தனை நாளாக வேணி அமைதியாக இருந்ததன் காரணம் நந்தினிக்கு விளங்கியது.
“எனக்கு ஒரு சந்தேகம்?…” எனவும்,
“கேளுமா. உனக்கு அது வரலைனாதான் எனக்கு நீ என் பொண்டாட்டியானே சந்தேகம் வரும்…” என்றவனது முதுகில் ஒரு அடி விழுந்தது.
“என்ன நீ? சும்மா சும்மா என்னை அடிச்சுட்டே இருக்க? அப்போ என்னடான்னா உதைக்க? இப்போ அடிக்க. இன்னைக்கு நேரமே சரியில்லை. இந்த விஷ்ணு பையன் முகத்தில்தான் முழிச்சேன். விடியவும் வரட்டும் அவன். வச்சுக்கறேன் கச்சேரியை…” என்று இல்லாத விஷ்ணுவை வம்பிழுக்க சூளுரைத்தான் அவனது உயிர் நண்பன்.
“ஆமாமா வரட்டும் அவங்க. நாளைக்கு நானும் கொஞ்சம் பேசவேண்டியது இருக்கு அவங்கக்கிட்ட. அவங்க கூட அந்த பொறுக்கி ராஸ்கல் பத்தி என் கிட்ட இருந்து மறைச்சுட்டாங்கள்ள…” என்று கோவமாக கூறவும்,
“வேண்டாம்டா. அவனை விட்டுடு. நான் தாங்கிப்பேன். அவன் தாங்கமாட்டான். கொஞ்ச நாள்ல நம்ம வீட்டு மாப்பிள்ளையா வேற ஆக போறான்…”என கெஞ்சியவனை சட்டை செய்யாமல்,
“தன் மகளையே தாரை வார்த்து கொடுக்கும் அளவிற்கு இவ்வளோ நல்ல வேணி சித்தி எதனால கௌரியை…” என்று வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறினாள்.
தன்னாலேயே அப்படி நினைக்க முடியவில்லையே. இதை கேட்ட உதயாவிற்கு எவ்வளோ வலித்திருக்கும் என்று எண்ணினாள். அன்றைக்குத்தான் வேணியின் உள்மன எண்ணம் வெளிப்பட்டதாக நந்தினி நினைத்துக்கொண்டிருந்தது. இது தன் கணவனுக்கு ஜீரணிக்கமுடியாத வேதனையை தந்திருக்கும் என்று அவனுக்காக வருந்தினாள்.
அப்போதுதான் இன்னொன்றும் நினைவிற்கு வந்தது. வரவேற்பின் போதும் தங்கை என்று அறிமுகப்படலத்தில் சொல்லியதற்கு கோவப்பட்டதும் நினைவில் வந்து அப்போ ஏற்கனவே இதை பத்தி வீட்டில் நிச்சயம் பேச்சுவார்த்தை நடந்திருக்கணுமே என்று கண்டுபிடித்தது அவளது துப்பறியும் மூளை.
இரண்டரை வருடங்களாக செயல்படாமல் இருந்த அந்த மூளை இன்றுதான் செயல்பட்டிருக்கிறது. அது எதனால் என்று என்னும் போதே முகம் இருண்டுவிட்டது நந்தினிக்கு.
மனைவியின் கசங்கிய முகத்தை பார்த்தவன்,
“என்னடா ஆச்சு?…” என வினவவும், “ஒன்றுமில்லை…” என்று தலையசைத்தாள். அவளின் உணர்வுகளை புரிந்தவனாக,
“வேணி அத்தையோட மாற்றத்துக்கான காரணம் தானே உனக்கு தெரியனும்?…” எனவும் மறுக்க நினைத்தவளின் தலை தாமாகவே அவனது கேள்விக்கான பதிலை ஆமாமென ஆமோதித்தது.
“சொல்றேன், அதுக்கு முன்னால நீ போய் முகம் கழுவிட்டு வா. மணி மூன்றரை ஆகிடுச்சு. நான் போய் சூடா சாப்பிட எதாச்சும் எடுத்துட்டு வரேன். இவ்வளோ நேரம் நடந்த போராட்டத்துல பசிக்குது…” என கூறிவிட்டு அவளின் மறுப்பை மறுத்துவிட்டு கீழே சென்று மறைந்தான்.
அடுக்களைக்குள் நுழைந்தவன் வேகமாக அடுப்பில் பாலை காய வைத்துவிட்டு, இன்னொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்தான். ஒரு வெங்காயத்தை எடுத்து மிக வேகமாக பொடியாக நறுக்கியவன் அதனோடு மல்லித்தழை, பச்சைமிளகாய் அனைத்தையும் நறுக்கி முட்டையில் உப்பு சேர்த்து கலந்து அந்த கலவையில் ரொட்டித்துண்டுகளை தோய்த்தெடுத்து தோசைக்கல்லில் மடமடவென போட்டெடுத்தான்.
அதை அழகாக தட்டில் அடுக்கியவன் அதன் மேலே மிளகுத்தூளை பரவலாக தூவிவிட்டு தங்களுக்கான பாலையும் எடுத்து மேலே சென்றான்.
“இந்நேரம் என்ன சாப்பாடு வேண்டிக்கிடக்கு?. சொல்ல சொல்ல கேட்காம போனான்ல எனக்கொண்ணும் வேண்டாம்…” என்று முறுக்கிக்கொண்டு அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தவளுக்கு அவன் வருமுன்னே எடுத்துவந்த துரித உணவின் வாசனை வந்தடைந்து இல்லாத பசியை கிளப்பியது.
உள்ளே வந்தவன், “ஹேய் என்னடா? நீ போய் ப்ரெஷ் ஆகிட்டுவா. சூடு ஆறும் முன்னே சாப்பிடலாம்…” என்று கிளப்பியவாறே கொண்டுவந்த தட்டுக்களை சிறிய அளவிலான மேஜையில் அடுக்கி வைத்ததை பார்த்ததுமே வயிற்றுக்குள் இருந்த பசியரக்கி கயமுயகயமுய வென கத்தத்தொடங்கினாள்.
“ப்ச் பசிக்கலைன்னு சொன்னா கேட்கிறதே இல்லை. சரி உங்களுக்காக வேணும்னா சாப்பிடறேன்…” என்று பந்தாவாக கூறிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவள் சென்ற வேகத்தில் திரும்பி வந்தாள்.
இந்த மூன்று நாட்களும் காய்ச்சலின் வேகத்தில் அரைமயக்கத்தில் இருந்தவளுக்கு வெறும் பாலும், கஞ்சியும், ரசம் சாதம் மட்டுமே அவளுக்குள் அனுப்பபட்டிருந்தது. நாக்கிற்கு ருசியாக சாப்பிட அதுவரைக்கும் நினைக்காதவளுக்கு கண் முன்னே தெரிந்த உணவை கண்டதும் பசிக்க தொடங்கியது.
“காரம் லேசாதாண்டா போட்டிருக்கேன். உனக்கு இப்போ அதிகமா காரம் சேர்க்க கூடாதுல அதான்…” என தனக்காக அக்கறையாக செய்து கொண்டு வந்தவனை ஒருகணமே கண்கள் நிரம்ப காதலோடு நோக்கினாள். அது எல்லாம் பொய்யோ என்னும் அளவிற்கு மறுகணம் அவள் முகம் சாதாரணமானது.
இருவரும் வேகமாக சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் அவ்விடத்தில் மௌனம் மட்டுமே குடிகொண்டிருந்தது. அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கையலம்பி விட்டு வந்தமர்ந்தான்.
“ம்ம் சொல்லுங்க…” என்று உதயாவை ஊக்கினாள். இவளோ நல்ல மனம் கொண்ட வேணியின் மாற்றத்திற்கான காரணத்தை பற்றி அவசியம் தெரியவேண்டி இருந்தது நந்தினிக்கு.
“என்ன சொல்ல? நல்லவங்க நல்லவங்களா வாழ சிலர் அனுமதிக்கிறதில்லை. ஊருக்குள்ள அடுத்த வீட்டு வம்பிற்கென அலையும் சிலபேரால தான் அத்தை இப்டி ஆகிட்டாங்க. வார்த்தையில் தேன் தடவி பேச்சின் வழியாக அவர்கள் அறியாமலேயே இதயத்தில் நஞ்சை கலப்பது சிலருக்கு பொழுதுபோக்காகவே இருக்கு. சூழ்ச்சி புத்தியோடு சுயநல ஒட்டுண்ணிகளாக உருமாறி அடுத்த வீட்டு நிம்மதியையும் சந்தோஷத்தையும் உறிஞ்சி குடிச்சு வளரும் சில ஜந்துக்களில் ஒருத்திதான் சுந்தரி…”
“அத்தை அவ்வளோ நல்லவங்க. முன்னலாம் தெளிவாதான் இருந்தாங்க. அவங்க வீட்டு பக்கத்துல இருந்த சுந்தரியோட உபயம் தான் இது. சில்லறை உதவிக்காக அத்தைக்கிட்ட அடிக்கடி பேசி ரொம்பவே ராசியாகிட்டாங்க. அந்த பொம்பளை தான் எனக்கும் கௌரிக்கும் கல்யாண பேச்சை ஆரம்பிச்சிருக்காங்க…” என்று சொல்லும் போதே அவனது முகம் அருவருப்பில் சுருங்கியது.
“ஏன்? உங்க அத்தைக்கு எங்க போச்சு புத்தி? நீங்களும் கௌரியும் எப்படி வளர்ந்தீங்கன்னு கண்கூடா பார்த்தவங்க தானே? அவங்கதானே உங்கக்கிட்ட வந்து கெளரியே பிறக்க போறான்னு சொல்லிருக்காங்க. அந்த பொம்பளைக்கு தான் அறிவில்லாம போச்சுனா உங்க அத்தைக்குமா இல்லை?…” என்று சற்று சூடாகவே கேட்டாள்.
அவளது ஆவேசத்தில் அதிர்ந்தவன், “என்னதான் இருந்தாலும் அவங்க என்னோட அத்தை. அதுக்குமேல வயசுல பெரியவங்க. புரியும்னு நினைக்கேன்…” என்று அவனும் அழுத்தமாக கூறவும் சீற ஆரம்பித்தாள்.
“வயசுல பெரியவங்க பன்ற காரியத்தையா அவங்க செய்திருக்காங்க. நான் ஒண்ணும் தப்பா சொல்லலை. உன்னை பேசினதுபோல மரியாதை இல்லாமலும் பேசலை. அறிவில்லைன்னு சொன்னதுல என்ன குறஞ்சுபோச்சு உனக்கு? புத்தி இருக்கிறவங்க செய்ற செயலா அவங்க செய்யுறதும், நடந்துக்கறதும்?…” என படபடவென பொரிந்தவளிடம் எவ்வாறு விளக்கி புரியவைப்பது என்று தவித்தான் உதயா.
சொந்த பந்தத்துக்குள்ளே அள்ளி எறியப்படும் வார்த்தைகள் கல்லில் வடித்த சிலை போல. காலத்திற்கும் மாறாது என்று உணர்ந்தவனுக்கு அதை தன் மனைவிக்கு உணர்த்த வழியில்லாமல் போய்விட்டது.
சந்தனமுல்லையென வாசம் வீசிக்கொண்டிருந்தவளை முள்ளில் தூக்கி எறிந்துவிட்டோமோ என்று மனம் குமைந்தான். மேலும் ஏதேனும் பேசினால் மறுபடியும் குதிப்பாள், பின்னால் கொஞ்சம் மெல்லமாக மாற்றிக்கொள்ளலாம் என்று தன்னை தேற்றிக்கொண்டான்.
இன்னும் கண்களில் அனலை நிரப்பிக்கொண்டு தன்னை நோக்கியவாறே அமர்ந்திருந்த மனைவியை பார்த்தவன், “வேணும்டா உதயா நல்லா வேணும். வாங்கு. இன்னும் நிறைய வாங்க வேண்டியிருக்கு. மனசை தேத்திக்கோ. இனிமே எல்லாமே அப்டிதான்…” என்று தனக்குதானே கூறிக்கொண்டான்.