நட்சத்திர விழிகளிலே வானவில் – 15 (1)

நட்சத்திர விழிகள் – 15

குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த நந்தினியை பார்த்தவன் போதும் அவளை குழப்பியது என்று நினைத்தான்.

“என்னோட நான்கு வயதில் தான் கௌரியை என் அம்மா கர்ப்பமா இருந்தாங்க. அப்போ இருந்தே அவளை நல்லா பார்த்துக்கணும். பிறக்கப்போற பாப்பாதான் நம்ம வீட்டோட இளவரசி அப்டின்னு சொல்லி சொல்லியே என் மனசுல பதியவச்சுட்டாங்க…”

“அப்போவே 5 மாதத்திலிருந்தே வயிற்றுக்குள் இருக்கும் பாப்பாகூட அம்மாவும் நானும் பேசிட்டே இருப்போம். குழந்தை பெண்ணாக தான் இருக்கும்னு உறுதியா நம்பினோம்…” என்றவனை விழியகலாமல் பார்த்தவாறு இருந்தவளை மெலிதாக அசைத்தவன் என்னவென கண்களாலே வினவ அதில் சுயம் பெற்றவள் மேலே சொல்லுமாறு அதேபோல  கண்களாலே கூறினாள்.

“ம்ம் தேறிட்ட போ…” எனவும் அவனை முறைத்து விட்டு திரும்பி படுக்க எத்தனிக்கவும் அவளை இழுத்து பிடித்தவன்,

“கோவம் மட்டும் எங்க இருந்துதான் வருமோ, சொல்றேன் தாயே சொல்றேன்…” என சரண்டர் ஆகவும் தன்னையே மெச்சிக்கொண்டு அவன் சொல்லபோகும் விஷயத்திற்காக ஆவாலாக காத்திருந்தாள்.

“ரொம்ப குட்டியா தேவதையாட்டம் கெளரி பிறந்தப்போ நான் தான் அவ பிறந்ததுமே கைல வாங்கினேன். என்னால சந்தோஷத்தை எப்டி வெளிக்காட்டுறதுன்னு கூட அப்போ எனக்கு தெரியலை. அவ வீட்டுக்கு வரவும் எங்க மொத்த நேரமும் கௌரியோடதான். கௌரிக்கு ஐந்து மாதம் இருக்கும் போது வேணி அத்தைக்கு கல்யாணம் ஆகிடுச்சு…” ஒவ்வொரு நிகழ்வுகளாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனது முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக்கொண்டே போனது.

“அவ முதல் பிறந்தநாளை பெரிய விழா மாதிரி விருந்து வச்சு கொண்டாடினோம். எப்போவுமே எதுக்குமே அழாம சமத்தா இருக்கும் கௌரியை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும். ஒரு இடத்துல நிக்காம குடுகுடுன்னு ஓடிட்டே இருப்பா. இங்க சொந்தக்காரங்க வீட்ல விசேஷம்னு வேணி அத்தையும் சுதர்சனம் மாமாவும் இங்கே வந்திருந்தாங்க. நெருங்கின சொந்தம்ன்றதால வீட்ல எல்லோருமே போய்ருந்தோம். அப்போ கௌரிக்கு ஒன்னே முக்கால் வயசு இருக்கும்….” என்றவனுக்கு தொண்டை அடைத்தது. இருந்தும் சமாளித்தவன்,

“விடியலிலேயே விசேஷ வீட்டுக்கு போய்ட்டதால அத்தை தலைவலிக்குதுன்னு வீட்டுக்கு கிளம்பினதும் நானும் அத்தையோட கிளம்பிட்டேன். என்னோடவே வரணும்னு அடம்பிடிச்ச கௌரியை அத்தை பார்த்துகொள்வதாக சொல்லி என்னையும் கூட்டிக்கிட்டு பாப்பாவையும் தூக்கிட்டு வந்துட்டாங்க…”

“வீட்டுக்கு வந்ததுமே ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு தூங்கிட்டோம். அங்கதான் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் தூங்கிருக்க கூடாது, நான் மட்டும் முழிச்சிருந்தா என் தங்கச்சியை, என் செல்ல கௌரியை நான் இழந்திருக்க மாட்டேன்…” என்று சொல்லிக்கொண்டே தலையில் அடித்துகொண்டு அழுதான்.

அவனது கண்ணீர் சொல்லியது கௌரியின் மேல் கொண்ட அன்பானது எத்தகைய விலைமதிப்பில்லாதது என்று. அவனின் இன்னொரு பரிமாணத்தை கண்டவள் திகைப்பின் உச்சத்தில் இருந்தாள். அவனது கண்ணீரும், பாதியில் நிறுத்திய விஷயமும், அவன் சொல்ல வந்ததன் பொருளும் நந்தினியை உலுக்கியது.

அவனாக ஓயும் வரை அவனுக்கு ஆறுதலாக அவனது கரத்தினுள் தன் கரத்தை நுழைத்தவள் மெல்ல மெல்ல இன்னொரு கரத்தால் வருடிவிட்டாள். சிறிதுநேரத்தில் தானே அமைதியாகி பேச ஆரம்பித்தவனது குரலில் வெறுமை மட்டுமே குடியிருந்தது.

“தூக்கத்தில் கட்டிலிலிருந்து உருண்டு விழுந்துவிடுவாள் என்று தரையில் மெத்தையை விரித்து தான் படுப்போம். தூங்கி எழுந்த நான் நந்தினியை காணாமல் அத்தையிடம் போய் கேட்டால் அவருக்கும் தெரியவில்லை. விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்த அம்மாவும் அப்பாவும் உடைந்தேவிட்டனர். கௌரியை காணாமல் அத்தனை பேரும் தேடி தேடி களைத்து போனோம்…”

“யாரேனும் கடத்தியிருப்பார்களோ என்ற அனுமானத்திற்கு கூட வரமுடியவில்லை. ஏனா இங்க யாருமே உள்ளே அவ்வளவு சுலபமா வந்திட முடியாது. காலை பன்னிரெண்டு மணியிலிருந்து சாயங்காலம் வரைக்கும் தேடி தேடி களைச்சுப்போய் போலீசில் புகார் கொடுக்க நினைக்கும் போதுதான் முதல் நாள் வாங்கிப்போன முக்கியமான பத்திரத்தை கொடுக்க கணக்குப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந்தாங்க…” என்று நிறுத்தியவன்,

“அந்த சின்ன அறையை எதற்காக பூட்டி வச்சிருக்கீங்கன்னு கேட்டியே?…” விட்டத்தை வெறித்துக்கொண்டு நந்தினியை பார்க்காமல் கேட்டதும் அவளுக்கு எதுவோ புரியத்தொடங்கியது.

ஐயோவென அவளது உள்ளம் அலறித்துடித்தது. “சின்னஞ்சிறு பிஞ்சு அந்த அறையில்…” அதற்கு மேல் யோசிக்க கூட முடியவில்லை. நினைக்க நினைக்க கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. இதுக்கு மேல் சொல்லவேண்டாமென கூற வாய் எழும்பவே இல்லை. அவன் சொல்ல போவதை கேட்கும் திராணியற்று அதை தடுக்கும் வகையறியாது விக்கித்துபோய் அமர்ந்திருந்தாள்.

தன் மனைவியை முகத்தை கூட பார்க்காமல் அவளது மன போராட்டாத்தை உணராமல் தொடங்கினான்.

“அந்த அறையில் அப்போது பணம், பத்திரம், நகைகளை எல்லாம் பரம்பரை பரம்பரையாக பராமரிக்கும் அறையாக உபயோகித்து கொண்டிருந்தோம். பத்திரத்தை வாங்கி வைக்க பாட்டிதான் அந்த அறையை திறந்து உள்ளே போனாங்க. அங்க……. அங்க…… என்னோட  கெளரி…………” என்றவனுக்கு மேல பேச வார்த்தை வரவில்லை. அவனது துக்கத்தை பொறுக்காமல் தன்னோடு சாய்த்துகொண்டவள் அன்னையென மாறி அவனை மடிதாங்கினாள்.

தன்னவளில் இடுப்பை கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தவன் தன் மனபாரம் தீருமட்டும் அழுது முடித்தவன் அவள் மடியிலிருந்தே மீண்டும் தொடங்கியவனை தடுத்தவள்,

“வேண்டாம், நீங்க தூங்குங்க. இன்னொரு நாளைக்கு பேசிக்கலாமே?…” என்று கெஞ்சலுடன் கூற அதை மறுத்து,

“இன்னைக்கே பேசிடறேன் நந்து. இன்னொருநாள் என்னால இதை சொல்லமுடியாது. முடிச்சிடலாம். எல்லா பிரச்சனைகளையும் இன்னைக்கே பேசி தீர்த்திடலாம்…”

“எப்படி அந்த அறைக்குள்ள அவ போனா? எப்போ போனான்னே தெரியலை. அம்மாக்கு அவளை பார்த்ததுமே அவங்களுக்கு தெரிஞ்சுபோச்சு. கெளரி எங்களை விட்டு போய்விட்டாள் என்று. என்ன ஆச்சுன்னு என்னோட அந்த வயசுல எனக்கு ஓரளவுக்கு புரிந்தது…” எனும் போதே சிறுவனாக அவனது வேதனை எப்படி பட்டதாக இருக்குமென அவளால் உணர முடிந்தது.

“உன் கெளரி நம்மை விட்டு போய்ட்டாடான்னு பாட்டி சொன்னதும் என்னால பேச முடியலை. கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்த என்னால ஒரு வார்த்தை கூட பேச முடியலை. கௌரின்னு கத்தனும்னு நினைச்சா குரல்வளை எல்லாம் ரொம்ப வலிக்கும்….” என்றவனது குரலில் அன்றைய தாக்கம் சிறிதளவும் குறைவில்லாமல் இன்றைக்கும் இருந்தது.

அவளை விட்டு விலகி எழுந்தமர்ந்தவனை ஏனென்று கேள்வியாக பார்க்க கண்களாலே சமாதானம் செய்தவன் மீண்டும் கட்டிலில் சாய்ந்தமர்ந்துகொண்டான்.

“எல்லாம் முடிஞ்சது. யாரலையுமே அவ்வளோ சீக்கிரமா துக்கத்தில இருந்து வெளிவர முடியலை. கௌரியோட இழப்பால அம்மா பித்து பிடிச்சவங்க மாதிரி ஆகிட்டாங்க. பாட்டிதான் எல்லோரையும் தேத்தி கொண்டுவந்தாங்க. அப்போதான் எனக்கு பேச்சு வரலைன்ற விஷயத்தை எல்லோருமே கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சாங்க. அடுத்த இடியா? என்று எல்லோருமே நொருங்கி போய்ட்டாங்க. டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் கூட எடுத்துக்கிட்டேன். ஆனா பேசவே முடியலை என்னால…”

“என்னால பேச முடியலையேன்ற வேதனையை விட கெளரி என்னோட இல்லைன்ற நிதர்சனம் என்னை ரொம்பவே பாதிச்சது. கெளரி எப்படி அந்த அறைக்குள்ள போனான்னு விசாரிச்சும் அதுக்காண விடை மட்டும் கிடைக்கவே இல்லை. நாச்சி பாட்டியோ நான் முதல் நாள் பத்திரம் எடுக்க அந்த அறையை திறந்துட்டு சரியாக மூடலையோன்னு ஒரே புலம்பல்…”

“அதனால யாரையுமே குற்றம் சொல்ல முடியாத சூழ்நிலை. வேணி அத்தை தான் நடந்தது நடந்து போச்சு இனியும் அதை பத்தி பேசினா மட்டும் நம்ம கெளரி கிடச்சிடுவாளா இதோட இதை முடிங்க. இல்லைனா அண்ணிக்கும் நம்மளுக்கும் நினச்சு நினச்சு வருத்தமும் வேதனையும் தான் மிஞ்சும்னு சொல்லி தைரியம் சொன்னாங்க…”

“போன குழந்தையை நினைச்சுக்கிட்டு இருந்தா நம்ம பிரபாவை யார் பார்த்துப்பா? இருக்கிற பிள்ளையை நாம நல்லபடியா கவனிக்க வேண்டாமா? அப்டின்னு எல்லோரயும் அந்த வருத்தத்திலிருந்து வெளியேற்ற அவங்க மனசை திசை திருப்பி என்னை கவனிக்க வச்சாங்க. அத்தை சொல்றதும் நியாயமாக தோணவும், முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டுமென என்னை பார்க்க ஆரம்பிச்சாங்க…”

அதுக்கு “பின்னால அந்த ரூம்ல இருந்த திங்க்ஸ் எல்லாத்தையுமே வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்க. யாருமே போகமாட்டாங்க. அந்த ரூம்க்கு. பாட்டி தான் வாரம் ஒருநாள் மட்டும் வேலையாளை வச்சு சுத்தம் செய்து விளக்கு மட்டும் ஏத்தி வச்சிட்டு வருவாங்க. நாங்க யாருமே அந்த பக்கம் போகமாட்டோம். முக்கியமா அம்மா…”

“அடுத்த ஒரு வருஷம் எப்டி போச்சுன்னே தெரியலை. பேசுவாங்க, சாப்பிடுவாங்க, ஆனா எதிலேயும் உயிர்ப்பிருக்காது. அப்போதான் வேணி அத்தை கெளரி திதியன்னைக்கு வந்திருந்தாங்க. என் அத்தைக்கு நானும் கௌரியும்னா உயிர். வந்த மறுநாளே என்ன நினச்சாங்களோ? என்னை கட்டிபிடிச்சுட்டு கெளரி வரபோறாடா பிரபா…”

“நம்ம கெளரி நம்மை விட்டு எங்கயும் போகலைன்னு சொல்லி ரொம்ப சந்தோஷபட்டாங்க. அம்மா முகத்தை அன்னைக்கு பார்க்கணுமே. ஆனாலும் அத்தை வயித்தில பிறக்கிற குழந்தை அவங்களுக்கு எப்டி சொந்தமாக முடியும். அந்த விஷயத்தை அப்டியே விட்டுட்டாங்க. என்னோட கவலையே பாதி உயிரை குடிச்சிருச்சு அம்மாவை. அப்பா வீட்டுக்கு வந்ததுமே ஏதாவது பேச்சுக்குடுத்துட்டே இருப்பாங்க. அப்டியாச்சும் என்னால பேச முடியுதான்னு. மொத்த முடும்பமும் அவ்வளோ பாடுபட்டாங்க…”

அப்போது அவர்கள் அடைந்த வேதனைக்கு இப்போது தன்னால் ஏதும் நிவாரணம் அளிக்க முடியுமா என்ற யோசனைக்குள்ளானாள். தற்போது தன்னால் அவர்களுக்கு தரமுடிந்தது நிம்மதியும் அன்பும் மட்டுமே என்று எண்ணியவள் அதை காலம் முழுவதும் குறையாமல் தரவேண்டுமென்று உடனே உறுதி எடுத்துகொண்டாள்.

“வேணி அத்தைக்கு குழந்தை பிறந்ததும் எல்லோருமே பார்க்க போனோம். அப்டியே அச்சு அசல் கௌரியேதான். எல்லோருக்குமே ஆச்சர்யம். நாங்க போனதுமே குழந்தையை தூக்கி அம்மா கையில குடுக்க சொன்னாங்க அத்தை. எனக்கு உடம்பெல்லாம் ஏதோ பண்ணுச்சு ஆசையா அந்த குழந்தையை அம்மாக்கிட்ட இருந்து வாங்கினேன். அவளோட ஸ்பரிசம் என்னை என் கௌரிக்கிட்ட உணர்ந்தது போலவே ஏதோ ஒரு உள்ளுணர்வு, வாய்விட்டு கதறனும் போல கண்ணீரா வந்துச்சு. நான் பேசினேன் அப்போ. கெளரி அம்மா நம்ம கௌரின்னு…”

error: Content is protected !!