விளையாட்டை கைவிட்டவன், “ஏண்டா இப்படி செய்யற?. இப்போ தூங்கு. எதுவாகினும் காலையில பேசிக்கலாம். மணியை பாரு இரண்டரை தான் ஆகுது…” என்று அவளை ஆசுவாசபடுத்த அருகில் வர அவனை தவிர்க்க வீறுகொண்டு எழுந்து நின்றவள்,
“ஏண்டா பொண்ணுங்கனா உங்களுக்கெல்லாம் கிள்ளுகீரையா? அவ்வளோ இளப்பமாவா போய்ட்டோம். உங்க இஷ்டத்துக்கு ஆட்டிவைக்க?…” என்று ஆங்காரமாக கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென பேந்த பேந்த விழித்தான்.
“சத்திய சோதனைடா உதயா உனக்கு. ஜாமத்துல ஒரு பொண்டாட்டி புருஷனை பார்த்து கேட்கிற கேள்வியா இது?…” என்று தன்னை நொந்தவன் அவளுக்கு பதில் சொல்ல வாயை திறந்தான்.
“ஏய், ஏதாவது பேசின, உன்னை என்ன செய்வேனே தெரியாதுடா…” என்று அவனது வாய்க்கு பூட்டுபோட்டவள் தன்னிலை மறந்து இன்னும் கண்ணீரோடு கத்திக்கொண்டே இருந்தாள். வெகுநேரமாக நின்றவனுக்கோ கால்கள் வலிக்க அங்கிருந்த நாற்காலியை நிராசையோடு பார்த்தான்.
“உட்கார்ந்தா அதுக்கும் சேர்த்து ஏதாவது சொல்லிவிடுவாளோ?…”
என்றஞ்சி தன்னை சமாளித்துகொண்டு நின்றான்.
“அவன் உன் தம்பியாமே. உன் சித்தி சொல்றாங்க. இதை போல இன்னும் எத்தனை விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சு வச்சிருக்கையோ?…”
“அவன் எந்த பிரச்சனையிலும் மாட்டிடகூடாதுன்னுதானே அங்க வச்சு அவசர அவசரமா எனக்கு என்னோட சம்மதம் கூட இல்லாம தாலிகட்டின நீ?. ஆக என்னை காப்பாத்தறதா சொல்லி எங்க வீட்டாளுகளை ஏமாத்திட்டு உன் தம்பியை காப்பாத்திருக்க…” என்று குற்றம் சாட்ட,
“இல்லைடா, நான் உன் முன்னால தானே அவன் கிட்ட பேசினேன். நீயும் தானே அவனோட கைப்பிடியில இருந்த…” என்று விருப்பமே இல்லாமல் வேறு வழியின்றி அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தினான்.
“அவன் அடிச்சானே என்னை. அதனால நான் எதையும் கேட்க முடியாத நிலையில இருந்தேனே….” என்றவள் அழுதவாறே ஞாபகம் வந்தவளாக,
“அவன் அடிக்கும் போது கூட நீ சும்மா வேடிக்கை தானே பார்த்த. அப்போ என்னை நீ காப்பாத்திருக்க வேண்டியதுதானே. அவ்வளோ வலிச்சது எனக்கு…” என்று அன்றைய தன் வலிக்கு இன்று உதயாவை ஒரு வழியாக்கினாள். இப்படி சம்பந்தமில்லாமல் விதண்டாவாதம் செய்பவளிடம் என்ன பேசுவதென்று அவனுக்கோ முழி பிதுங்கியது.
“இப்போ எதுக்காக அந்த விஷயத்தையே பேசிட்டு இருக்க நந்துமா. பழசை பேசாதன்னு சொன்னா கேளேன்?…” அவளை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தளவு முயற்சி செய்து பார்த்தான்.
இப்போதுதான் காய்ச்சல் கொஞ்சம் குறைந்து உடல்நிலை சரியாக ஆரம்பித்திருக்கிறது. அதை கெடுத்து மறுபடியும் எதுவுமாகிவிடுமோ என மனம் கலங்கியது. ஆனால் தன் மீதான தன் கணவனது அக்கறையை பற்றி அக்கறை கொள்ள வேண்டியவளோ அசட்டையாக அவன் மீது அம்பெய்துவதிலேயே குறியாக இருந்தாள்.
இதற்கு பயந்துதான் அத்தனை பேர் போராடியும் ஹாஸ்பிட்டலில் தங்கவேண்டாமென்று தான் எடுத்த முடிவு சரிதான். எவ்வளோ கூச்சலிட்டாலும் தன் அறையை விட்டு எந்த சப்தமும் வெளியேறாதென்றுதான் நந்தினியை வீட்டில் வைத்தே பார்த்துக்கொள்ள எடுத்த தன்னை தானே அவசரமாக மெச்சிக்கொண்டான்.
இத்தனை வருட உள்ளக்கொதிப்பை அவன் மீது முழுவதுமாக வாரியிறைத்து அவனை துவம்சம் செய்து விட எண்ணினாள் போலும். விஜியின் போதனைகளோ, தன் வீட்டினரின் அறிவுரைகளோ அனைத்துமே மறைந்து இப்போதைய உதயாவின் துரோகம் மட்டுமே அவளை ஆங்காரியாக்கியது. அவளுக்காக, அவளின் நலனுக்காக என்றெண்ணி எண்ணி மறைத்து வைத்ததை அவள் துரோகமென்றே எண்ணினாள்.
கோவத்திலும், ஆத்திரத்திலும் அவன் மீதான நேசமும், காதலும் மனத்தின் ஆழத்திற்கு அமிழ்த்தப்பட்டு அதுவரை அடக்கியிருந்த ஆக்ரோஷம் வேகமாக மேலெழும்பி வெடித்து சிதறி அக்கினியை கக்கியது.
அவளது அறியாமையாலும், திமிரான பேச்சாலும் அவனுள்ளும் சிறிதுசிறிதாக கோவம் ஏற துவங்கியது. இப்படி சொல்ல வருவதை புரிந்துகொள்ள மறுக்கிறாளே என்ற ஆயாசத்தில் சற்று எரிச்சலான குரலில்,
“உனக்குத்தான் நடந்ததெல்லாம் தெரியுமே நந்தினி. உன்னை அந்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்றத்தானே நான் உன் கழுத்தில தாலியை கட்டினேன்….” என்றவன் அந்நாளின் ஞாபகத்தில் பின்னந்தலையை அழுந்த தேய்த்தவன்,
“நான் மட்டும் வராம இருந்திருந்தா அங்கே உனக்கு என்ன நடந்திருக்கும்னு இப்போ நினச்சா கூட எனக்கு பதறுது. அவன் பேரை சொன்னா கூட நீ பயப்படறன்னுதானே நான் சொல்லாம இருந்தேன். இதெல்லாம் விட்டுட்டு கொஞ்சம் கூட அறிவில்லாம உன் இஷ்டத்துக்கு உளறிட்டே போற?…” என்று தானும் கோவத்தில் வார்த்தைகளை சிதறவிட்டான்.
தன்னுடைய வேதனையும், ஆதங்கமும் அவனுக்கு உளறலாக போனதை எண்ணி வெதும்பினாள். தன்னோட கண்ணீர் கேலிகுறியதாக போய்விட்டதோ என்ற எண்ணத்தில் அவளது விழிகள் இன்னும் விடாது கண்ணீரை சொறிந்தன. தனக்கா அறிவில்லை? என்று தனக்குள் உழன்றவள், தன் மீது தவறில்லாததுபோல உதயா பேச பேச இன்னும் ஆவேசம் கூடத்தான் செய்தது. அவளின் இத்தனை நாள் போராட்டம் அவனை வலிக்க வலிக்க துடிக்கவைக்க சொன்னது.
“போதும் நிறுத்து. என்ன நடந்திருக்கும்ன்னு சொல்ற? அப்டியே ஏதாவதுனா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்…” என்று இன்னும் கூச்சலில் குரலை உயர்த்தினாள்.
அவளது வார்த்தை சொன்ன செய்தியில், “ஏய்…” என்று சுட்டுவிரலை நீட்டி அவளை உக்கிரமாக எச்சரித்தவன் அவளது அதிர்ந்த முகத்தை கண்டு நாற்காலியில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டான்.
அவனது முகபாவங்களை பார்த்தவள் ஒருநிமிடம் அமைதியாகி பின் ஆழ்ந்த குரலில் பேசத்தொடங்கினாள். அதில் வேதனை, அவமானம், கழிவிரக்கம், தாழ்வுமனப்பான்மை, விரக்தி என அனைத்தும் கலந்து வார்த்தைகளாக வெளிவந்து உதயாவின் காலடியில் நந்தினியின் கண்ணீரோடு சிந்தியது.
“நான் என்னை சொன்னா உனக்கேண்டா கோவம் வருது? அந்த ஊர்ல எல்லோர் முன்னாடியும் தாலியை கட்டிட்டு அடுத்த அரைமணி நேரத்துக்குள்ள நீபாட்டுக்கு எங்க அப்பாக்கிட்ட என்னை ஒப்படைச்சிட்டு, உன்னை ரொம்ப நல்லவனாட்டம் காட்டிக்க உங்க பொண்ணு வாழ்க்கையில நுழைய மாட்டேன்னு வாக்கு குடுத்துட்டு போய்ட்ட. ஆனா நான் அதனால எவ்வளோ கஷ்டத்தை அனுபவிச்சேன்னு உனக்கு தெரியுமா?…”
இத்தனை நாள் ஆழ்மனதில் அடைபட்டிருந்த குமுறல்களை மடைதிறந்த வெள்ளெமென அவனை நோக்கி வந்த வார்த்தை பாய்ச்சலில் பிரமித்து போய்விட்டான். இத்தனை நாள் அவளது அமைதிக்கும் சில சமயங்களில் கொண்ட மௌனத்திற்கும் பின்னால் இப்படி ஒரு வலி இருப்பதை அறிந்து அதை களையமுடியாமல் கையாலாகாதவனாக திகைப்பில் அமர்ந்திருந்தான்.
“ஒவ்வொரு நொடியும் என் மனசுக்குள்ளயே அணுஅணுவா சித்ரவதை அனுபவிச்சேன். நீயும் சரி எங்கப்பாவும் சரி என்னை பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா? இல்லையே. என்னோட விருப்பம் இல்லாமலே, நான் சுயநினைவிலேயே இல்லாதப்போ என்னை உன் மனைவியாக்கின….”
“கல்யாணம் எப்டி வேணும்னானும் நடந்திருக்கட்டும். ஆனா கட்டின பொண்டாட்டியை கடைசி வரைக்கும் காப்பாத்தனும்னு தோணலையே உனக்கு. உடனே எங்கப்பா வந்து பேசினதும் காப்பாத்தத்தான் செஞ்சேன். உங்க பொண்ணு எப்போவும் உங்க பொண்ணுதான். உங்க விருப்பம் போல வேற நல்ல பையனா கட்டிவைங்கன்னு சொன்னியே? அதை சொல்ல நீ யாருடா? நான் எக்கேடு கெட்டு போனா உனக்கென்ன?…” என படபடவென பேசிவிட்டு சிறிது மூச்சுவாங்கியவள் மீண்டும்,
“உன்னை சொல்லி என்ன செய்ய? பெத்த அப்பாவே நான் என்ன நினைக்கிறேன், என்ன மனநிலையில இருக்கிறேன்னு என்னிடம் கேட்கலையே? என்னோட வாழ்க்கையை ஆளாளுக்கு அவங்கவங்க இஷ்டத்துக்கு காலில போட்டு மிதிச்சீங்களே. என்னோட மனசை யாருமே மதிக்கலையே…” என மீண்டும் நந்தினி அழுகையில் கரைய உதயா அப்போதுதான் வாயை திறந்தான்.
“அப்போ அன்னைக்கு நான் கூப்பிட்டிருந்தா வந்திருப்பியா?…” என்று வம்பாக கேட்டு மீண்டும் தன் தலைக்கு தானே தீ வைத்துகொண்டான்.
“கடமையை தட்டிகழிச்சுட்டு கேள்வி வேற கேட்பியா நீ? அருவியூர் விட்டு கிளம்பும் வரைக்கும் என்னால எதையுமே உணரவோ, யோசிக்கவோ முடியலை. எங்க வீட்டுக்கு போற வழியிலேயே உள்ள கோவில்ல எங்கப்பா நீ கட்டின தாலியை கழட்டி கேட்டாங்க பாரு. அப்போ தாண்டா எனக்கு உணர்வே வந்துச்சு. தாலியை கெட்டியா பிடிச்சிட்டு கால்ல விழுந்து அழுதேண்டா. அது சரியா தப்பான்னு கூட எனக்கு தெரியலை. நான் ஏன் அப்படி செய்தேன்னும் புரியலை. ஆனா அதை கழட்டி தூக்கி எறிய எனக்கு மனசு வரலை. அதை எங்கப்பா கேட்கலையே. தாலியை கழட்டி போட்டுட்டா ஊருக்கு போகலாம். இல்லைனா பொணமாத்தான் ஊருக்குள்ள போவேன்னு சொல்லிட்டாங்கடா…” என்று கதறவும் அதற்குமேல் தள்ளியிருக்காமல் அருகே சென்று எதிலிருந்தோ காப்பவன் போல இறுக்கி அணைத்துகொண்டான்.
அவள் பட்ட கஷ்டத்தை, அனுபவித்த வேதனையை கேட்க கூட தன்னால் முடியவில்லையே. அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? என்று மருகினான்.
“வேற வழியில்லாமல் நானும் கழட்டி கோசலை அத்தை கையில குடுத்தேன். அத்தை அதை வெளில போய் போடுறதுபோல போய்ட்டு திரும்ப ஊருக்கு வரவும் பத்ரமா என் கையில குடுத்துட்டாங்க. என்னோட இந்த செயலில் உன் மேல காதல்ன்னு துளியுமில்லை…”
“ஆமா நான் உன்னை எதிர்பார்த்தேன் தான். நீ என்னை கூட்டிட்டு போக எப்டியும் வருவன்னு நான் எதிர்பார்க்கத்தான் செஞ்சேன். ஏதோ ஒரு நம்பிக்கை. அதை மட்டுமே கையில பிடிச்சுட்டு காத்திருந்தேன்…” என்று மனைவியவள் கூற கூற அவனது மனதில் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாக உருவானது.
தன் மீது காதலில்லாவிட்டாலும் தன்னை இந்த அளவிற்கு தேடியது உதயாவிற்கு ஒரு பக்கம் மனத்தின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழுந்த மகிழ்ச்சியும், மறுபுறம் மிக ஆழமான ரண வேதனையும் மாறி மாறி படையெடுத்து இரண்டும் ஒன்றான சூறாவளியாய் ஒரே சேர தாக்கி அவனை அலைக்கழித்தது.