நட்சத்திர விழிகளிலே வானவில் – 14 (1)

நட்சத்திர விழிகள் – 14

மாலை தன் இல்லத்திற்கு சாகவாசமாக வந்த பிரசாத் தனத்தின் மூலமாக பெரிய களேபரத்தை எதிர்பார்க்க அவரோ அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தார்.

“என்னம்மா உங்க பிள்ளையும் அவன் பொண்டாட்டியும் நல்லா கொட்டிக்கிட்டு கிளம்பிட்டாங்களா?…” என்று நக்கலாக கேட்டவனை பதில் எதுவும் பேசாது கொலைவெறியோடு பார்த்தார் தனம்.

அவரது பார்வையின் உக்கிரத்தை கண்டு உள்ளம் நடுங்கினாலும் அதை வெளிக்காட்டிகொல்லாமல் விட்டேற்றியாக இருப்பது போல நடந்துகொண்டான்.

“சீரெல்லாம் செஞ்சு சீராட்டி அனுப்பியாச்சா? கேட்டா பதில் சொல்லமாட்டீங்களோ?…” என்று விடாப்பிடியாக கேட்கவும்,

“இப்போ உனக்கு என்ன வேணும்?, வந்தாங்க சாப்ட்டாங்க கிளம்பிட்டாங்க. நான் என்ன செய்யணுமோ அதை செய்துட்டேன். போதுமா…” என்று சொல்லிவிட்டு மேலும் எதுவும் உளறிவிடுவோமோ என்ற அச்சம் தலை தூக்க உள்ளே சென்று மறைந்தார்.

உதயாவிற்கும் நந்தினிக்கும் பிரசாத்தால் இன்னும் எந்த பிரச்சனையும் வரவேண்டாம் என்று தான் பிரசாத்திடம் எதையும் கேட்காமலும் நந்தினியை பற்றி சொல்லாமலும் தவிர்த்தார்.

உதயாவின் பேச்சை மீறாமல் இருக்க நினைத்தார். எதுவாகினும் அது உதயாவின் மூலமாகவே நடந்ததை தெரிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணினார். அந்த அளவிற்கு தன் மகனின் மீதுதான நம்பகத்தன்மை நூலிழை அளவுகூட இல்லாமல் மொத்தமாக அற்றுபோய்விட்டது தனத்திற்கு.

தன் தாயை யோசனையாக பார்த்தவன் தன் அறைக்குள் நுழைந்ததும் தன் புகைப்படம் இருந்த இடம் வெறுமையாக இருந்ததை பார்த்தவன் வேண்டுமென்றே, “அம்மா…” என்று கத்தி அழைத்தான்.

அவனது அழைப்பிற்கான காரணம் தான் தெரியுமே தனத்திற்கு. “இன்னும் இவன் என்னவெல்லாம் கேட்பானோ?…” என எண்ணிக்கொண்டே,

“எதுக்காக இப்படி கூச்சல் போடற?…” என்று அவனின் மீது எரிந்து விழுந்தபடி வந்தார்.

“என் போட்டோ எங்கே?…” என்றான் துளைக்கும் பார்வையோடு.

“அது. நான்தான் அதுல ஏதோ ஒட்டியிருக்கிற மாதிரி இருக்குதேன்னு துடைக்க போனேன். கை தவறி கீழே விழுந்து உடைஞ்சு போச்சு…” என்று அவன் முகம் பார்க்காமல் பார்க்க பிடிக்காமல் வேகமாக ஒப்பித்துவிட்டு வெளியேற நினைக்க,

“கண்ணாடி ஃப்ரேம் தானே உடைஞ்சது. போட்டோவை குடுங்க நான் வேற போட்டுக்கறேன்…” என விடாகொண்டனாக கேட்டு கிடுக்கிபிடி போட்டு தன் தாய் ஏதாவது தன்னிடம் கேட்பாரா என்று அவருக்கு வாய்ப்புக்கொடுத்து பார்த்தான்.

“கண்ணாடி உடைஞ்சது வெளில எடுக்கும் போது கிழிஞ்சு போச்சு போதுமா?… இப்போது எனக்கு வேலையிருக்கு….” என்று வெளியேறியவரை பார்த்து இகழ்ச்சியாக நகைத்தவன்,

“டேய் பிரபா, இதாண்டா எனக்கு இன்னும் உன் மேல கோவம் அதிகமாகுது. எங்கம்மாக்கு கூட உனக்கு பின்னால தானே நான்னு நினைக்காங்க. உன் வார்த்தைக்காக என்கிட்டே உரிமையா சட்டையை பிடிச்சு என்னடா பண்ணினனு கேட்க கூட நீ தடை போட்டுட்டல்ல. நீ இன்னும் அனுபவிப்படா…” என்று கோவமாக கூறியவன் தன் ஆத்திரம் தீருமட்டும் சுவற்றில் ஓங்கி குத்திகொண்டான்.

—————————————————

காய்ச்சல் அதிகரித்ததில் தானும் துவண்டு உதயாவையும் சேர்த்து படுத்தி வைத்தாள் அவனின் மனைவி. மூன்று நாட்கள் கடந்தும்  கண் விழிக்காமல் அவ்வப்போது மயக்கத்திலேயே அரற்றினாள்.

தான் அருகிலில்லாத போது ஏதாவது பிதற்றுவதும் தன்  கையணைப்பிற்கு கொண்டுவந்ததும் அமைதியாக துயில்வதுமாக இருக்கும் தன்னவளை கண்டவன் மனம் நினைவிலாத போதுகூட தன் அருகாமையை எதிர்பார்ப்பவள் சுயநினைவு வந்தபோது இதை போல உணருவாளா? என எண்ணினான்.

அவன் மனசாட்சியோ, “ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் பேராசை. மவனே எதுக்கும் தயாரா இருந்துக்கோ?…” என்ற எச்சரித்தது.

விஷ்ணு, விஜியை மொபைலில் அழைத்து பிரசாத் வீட்டில் நடந்தது அனைத்தையும் விவரமாக சொல்லியவன் நந்தினி வீட்டில் மற்றவர்களிடம் கொடைக்கானல் போய்விட்டு வந்ததால் நந்தினிக்கு பனி ஒத்துக்கொள்ளாமல் வந்த காய்ச்சல் என்று மட்டுமே சொல்லிவைத்தான்.

நேரில் வந்து பார்க்கிறோம் என்ற ஏழுமலையிடம் ஏதேதோ காரணம் கூறி இப்போது வேண்டாம் என சமாளித்து வைத்தான்.

பெருமாளும் தினமும் காலை மாலை என இரு வேலை வந்து பார்த்துவிட்டுத்தான் செல்வார். முதல் இரண்டுநாள் அனலாக கொதித்த காய்ச்சல் பின் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட தொடங்கியது.

முன்புபோல இல்லாமல் தன்  குடும்பத்தாரையும் நந்தினியை கவனித்துக்கொள்ள அனுமதித்தவன், தானும் உடனிருந்தான். கௌரியோடு அங்கேயே அரட்டையடித்தான். விஷ்ணுவோடு கார்மெண்ட்ஸ் சம்பந்தமான வேலைகளை கவனித்தான்.

நந்தினி எழுந்ததும் தன் இயல்பு வாழ்க்கை எந்தளவிற்கு பாதிக்கப்படுமோ? என தெரியவில்லை. எதுவாகினும் தன்னை சரியாக நிலைபடுத்திகொண்டால் தான் அவளையும் சமாளித்து தானும் இந்த சூழலிலிருந்து வெளிவரமுடியும் என்று எண்ணினான். அதனால் முடிந்தளவிற்கு தன்னை எதற்கும் தயாராக வைத்துகொண்டான்.

பகலிலெல்லாம் எப்படி வழக்கம் போல பொழுது கழிந்ததோ, இரவில் அதற்கு நேர்மாறாக மிகுந்த அவஸ்தையோடு கழிந்தது. அதுவும் முதல் நாள் மட்டுமே அந்த சிரமம். கடந்த நான்கு நாளாக கிடைத்த மனைவியின் நெருக்கம் அவளோடு தான் கழித்த அற்புத நொடிகள் அனைத்தும் நினைவில் வந்து மனதில் எழுந்து அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தன.

நினைவின்றி கிடக்கும் மனைவியை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய இயலாதுதான், ஆனால் அவ்வாறு செய்தால் அது தன் மனைவிக்கு தான் இழைக்கும் பெரும் அநீதியாக கருதினான்.

தன்னை கட்டுக்குள் வைப்பதென்பது அவனுக்கு ஓரளவு எளிதாகவே இருந்தது. அவள் மேல் கொண்ட காதலால் அது சாத்தியமாகிற்று.

வேணி ஏதோ நானும் பார்த்தேன் பெயருக்கு அவ்வப்போது நந்தினியை பார்த்துவிட்டு வந்தாலும் நாச்சி, பாக்கியம் காதில் விழுமாறு,

“பெருசா ஊர்ல இல்லாத புள்ளையை கட்டிட்டு வந்தது போல என்னென்ன பவிசு பண்ணினான். அது என்னடான்னா வந்ததிலிருந்தே நோயாளியாகத்தான் இருக்கு. ஆவூனா பொசுக்கு பொசுக்குன்னு உடம்புக்கு முடியாம படுத்துக்கிது…” என்று யாரிடமோ பேசுவது போல குத்தலாக கூறி சுதர்சனத்திடம் நன்றாகவே வாங்கிக்கட்டிகொண்டார்.

அதற்கும் சேர்த்து அவரது மனம் பொருமத்தான் செய்தது. திட்டும் போது ஒன்றுமறியாதவர் போல அமைதி காத்தவர் மனதிற்குள், “திட்டுங்க திட்டுங்க, எவ்வளோ நாள் திட்டுவீங்க. இதுக்கும் சேர்த்து அவளுக்குத்தான் மொத்தமாக கிடைக்கும்…” என்று கறுவிக்கொண்டார்.

அதன் பின் அமைதியாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டாலும்  அவரது வாய் சும்மா இருக்கவில்லை. அவரது முணுமுணுப்பையும், ஆறுதல் சொல்றேன் பேர்வழி என்று குத்திக்காட்டி பேசுவதையும் அங்கே யாராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

உதயா காதிற்கு போகாமல் மட்டுமே பார்த்துக்கொண்டனர். வள்ளி பார்வையாளராக இருந்து கொண்டே நடப்பது அனைத்தையும் பிரசாத்திற்கு தெரிவித்துக்கொண்டே இருந்தாள்.

நான்காம் நாள் ஜாமத்தில் தன்னவனின் மார்பில் துஞ்சியிருந்தவள் குளிருக்கு இதமாக அவனிடம் இன்னும் ஒண்ட, “தூங்குடா குட்டிம்மா…” என்று மெல்லிய குரலில் கூறி அளவாக தன்னுள் அடக்கிக்கொண்டான்.

அவனது இறுக்கமான அணைப்பில் மிஞ்சியிருந்த தூக்கமும் மொத்தமாக கலைய அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து மென்மையாக முறுவலித்து மீண்டும் அவன் நெஞ்சத்தில் தலைசாய்க்க போனவளுக்கு அப்போதுதான் பிரசாத் வீட்டில் நடந்தது ஞாபக அடுக்கிலிருந்து கண் முன்னால் முதலில் வந்து நிற்க மின்சாரம் தாக்கியதுபோல் உடல் தூக்கிப்போட்டது.

நடுக்கத்தோடு அவனிடமிருந்து விலக நினைத்தவளால் அதை செயல்படுத்த முடியவில்லை. தன்னவளிடம் அசைவை உணர்ந்தவன் குளிருக்கு நடுங்குகிறாள் என்று எண்ணி இன்னும் இறுக்கியவன், “இன்னும் விடியலைடா. தூங்கு மெதுவா எழுந்துக்கலாம்…” என்று தட்டிகொடுக்க,

“எல்லாமே செய்துட்டு ஒண்ணும் தெரியாதவனாட்டம் எப்படி தூங்கறான் பாரு ராஸ்கல். இவனை…” என்று நினைக்க நினைக்க ஆவேசம் கூடியது நந்தினிக்கு. தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி தன் கணவனென்றும் பாராமல் கையும் காலையும் கொண்டு ஓங்கி உதைத்து கீழே தள்ளினாள். அவளுள் இருந்த அடங்காத ஆற்றாமை அவ்வாறு செய்ய தூண்டியது.

தூங்கிவிடுவாள் என்று கொஞ்சம் இலகுவாக அசந்திருந்தான். அதனால் நந்தினியின் ஆவேசமான திடீர் தாக்குதலில் கட்டிலிலிருந்து சற்று தூரத்தில் தள்ளிப்போய் கீழே விழுந்து கிடந்தவனுக்கு அப்போதுதான் சுதாரிப்பே வந்தது.

கண்ணை கசக்கிக்கொண்டு என்ன நடந்ததென? யூகிக்கும் முன் அவனது தலையணை அவன் மீது பறந்து வந்து விழவும் வேகமாக எழுந்து பார்த்தான்.

தலைவிரிகோலமாக அளவுக்கதிகமான உஷ்ணத்தோடு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பத்திரகாளியாய் முறைத்துக்கொண்டிருந்தாள்.

“ஆஹா தெளிஞ்சுபோச்சுடா உதயா. உஷாராகிக்கோ. சமாளி, சமாளி…” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டவன், 

இளித்துக்கொண்டே, “என்னடா செல்லக்குட்டி, இவ்வளோ சீக்கிரமா முழிச்சுட்ட?..” என்று மிக சகஜமாக கேட்டு இன்னும் அவளை வெறுப்பின் உச்சத்திற்கு அழைத்துசென்றான்.

அவனது கேள்வியும், இயல்பாக தன்னருகில் அமர வந்ததயும் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை நந்தினியால். நெருக்கமாக அமர்ந்தவனை மீண்டும் கீழே தள்ளிவிட்டவள் அவனை குதறிவிடும்  நோக்கத்தில் பார்த்தாள்.

அவன் மீது காதல் கொண்ட அவன் மனைவியின் மனது கூட அப்போது உதயாவிற்கு உதவ முன்வரவில்லை.

error: Content is protected !!