அழுது அழுது சோர்ந்திருந்தவளை பார்க்க பாவமாக வேறு இருந்தது. ஆனாலும் நிற்காமல் கரகரவென்று கண்களிலிருந்து கொட்டிய கண்ணீரை பார்க்க பார்க்க கோவம் மட்டுப்படுவேனா என்றது.
மேலும் வாயை திறந்து திட்டுவதற்குள் மதிவாணன் காப்பாற்றினான்.
“அண்ணா ரெண்டுபேரும் சாப்ட்டிருக்க மாட்டீங்க தானே? பாருங்க மணி ஆச்சு வாங்க போய் சாப்பிடலாம்!” என்றான்.
“ம்ம் காப்பாத்தி விடறீங்கலாக்கும்? என்னடா இது? எப்போ இருந்து?” என்று மெலிதாக புன்னகைத்தபடி மதிவாணனை கேட்டான்.
“சரி, வரலைனா நீங்க கார்லயே இருங்க. எனக்கு பசிக்குதுப்பா, இந்த ரெஸ்ட்டாரென்ட்ல சாப்பாடு சூப்பரா இருக்கும். நான் போய் சாப்ட்டு வரேன்!” என்று விட்டு கிளம்பியே விட்டான்.
இதுக்கும் மேல சும்மா இருந்தா சரியில்லை என்று காரிலிருந்து இறங்கி அவளையும் இறங்க சொன்னான்.
“வா சாப்பிடலாம்!” அதோடு நிறுத்தாமல், “அழுகவாச்சும் தெம்பு வேணும்ல, இருக்கிற எனர்ஜி எல்லாம் அழுகையில கண்ணீரா போயிட்டு இருக்கு பார். சாப்ட்டு வந்து அழு!” என்றானே பார்க்கலாம்.
“எனக்கு பசிக்கலை!” சாப்பிட கூப்பிடுற லட்சணத்தை பார் என்று மனதினுள் எண்ணி பல்லை கடித்தவாறே.
“அதனால?”
“நீங்க போய் சாப்பிடுங்க!” என்றால் தலையை கவிழ்ந்தவாறே.
பதில் ஒன்றும் வராமலிருக்க நிமிர்ந்து பார்த்தவள் அவன் அங்கேயே லேசா குனிந்தவாறே அவளையே பார்த்துகொண்டிருந்தான்.
“ஏன் இப்டி பார்க்கறீங்க?..” என கேட்கவும், “நீ சாப்பிட வரலைனா இப்டி உன்னை பார்த்துட்டே தான் இருப்பேன், உனக்கு ஓகே தானே?…” என கேட்கவும் அவனது மனமோ, “அடடா இதுவும் நல்லாத்தான்யா இருக்கு பார்த்துட்டே இருந்தா எப்டி இருக்கும்?..” என்ற சிந்தனைக்கு கடிவாளமிட்டு அவளை வைத்த கண் வாங்காமல் தீவிரமாக பார்க்க ஆரம்பிக்கவும் நந்தினி அரண்டுவிட்டாள்.
இது வேலைக்காகாது என நினைத்தவள் வேறு வழியில்லாமல் இறங்கி அவனுடன் உள்ளே சென்றாள். இவளை மணகோலத்தில் கண்ட அனைவரும் தங்களுக்குள்ளேயே தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர்.
அதை கண்டு நின்ற இடத்திலேயே நந்தினியின் அழுகையானது அவள் மேல் கருணை கொண்டு நான் கண்ணுக்குள்ள வரவா? என்று அனுமதி கேட்டுகொண்டிருக்கும் போதே உதய் பிரபாகரன் வந்தான்.
அழுகை அலறியடித்துகொண்டு ஓடியே விட்டது. இவன் இருக்கும் இடத்தில நானா? என்று.
“என்ன இங்கயே நின்னுட்டு இருக்க? வா” என்றவனை பின்தொடர்ந்து சென்றாள்.
ஆடர் செய்த உணவு வகைகள் வரிசைகட்டி வரவும் அவளுக்கும் பரிமாறி தனக்கும் வைத்துகொண்டான்.
“எப்படி சாப்பாட்டை பார்வையிலேயே சாப்ட்டு முடிச்சிடலாம்னு ப்ளானா? சாப்பிடு முதல்ல!”
“ம்ம்!”
“ம்ம் சொன்னா மட்டும் சாப்பாட்டுல கையை வைக்கிறியா? இல்லை ஊட்டிவிடனும்னு நினைக்கிறியா?”
“இல்லை இல்லை நானே சாப்ட்டுப்பேன்!” என்று வேக வேகமாக சாப்பிட தொடங்கினாள்.
“ம்ம் அது!” என்று தன்னை மெச்சிகொண்டான் கெத்தாக.
சுற்றிளும் பார்வையை ஓடவிட்டவளை கவனித்து, “ என்ன தேடுற?” என்றான்
“இல்லை அவங்களை காணோம்?”
“இவங்களை?”
“நம்ம கூட வந்தாங்களே? கார்ல?”
“ட்ரைவர்!” என்றவளை முறைத்து
“அவன் ட்ரைவர் இல்லை உனக்கு அண்ணா போல, புரியுதா?” என்றான்.
“ம்ம், அண்ணா காணோமே?”
“அவன் சாப்ட்டுட்டு இருப்பான். நீ முதல்ல சாப்பிடு!” அதோடு முடித்துகொண்டான்.
காரில் ஏறி அமர்ந்ததும், “என்னடா மதி? வேலை முடிஞ்சதா?” என்றான் நக்கலாக.
“என்னண்ணே இப்படி கேட்டுட்டீங்க? முடியாம இருக்குமா? அதெல்லாம் எப்போவோ முடிஞ்சாச்சு!” என்றான் வாய்க்கொள்ளா சிரிப்போடு.
“அதானே நீ யாரு?” என்றான் உதயா கடுப்போடு.
“உங்களுக்கு தெரியாதாண்ணே?” என்றான் மதி சிரிப்போடு.
ஏதோ சொல்ல வாயெடுக்கும் பொழுதில் மொபைலின் சத்தம் உதயாவை திசைதிருப்பியது. “அய்யோ!..” என அலறிய மனதை அடக்கி பேச ஆயத்தமானான்.
“சொல்லு நாச்சி!”
“ராசா, எங்கயா போய்ட்ட? நேத்துல இருந்து காணுமே?” என்றார் நாச்சி.
“ம்ம், பார்லிமென்ட்டுக்கு!” என்றான்.
“அப்படியா? போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா ராசா?”
“நாச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?????????””” என்று பல்லை கடித்தான்.
“என்னையா பல்லுகில்லு வலிக்கிதாயா?, இந்த கடி கடிக்கிற?” என்றார் நாச்சி கிளுக்கி சிரித்தபடி.
“என்ன கிண்டலா?…”
“என்னைய்யா ராசா அப்டி கேட்டுப்புட்ட?…..”
“வேற எப்படி கேட்க?”
“நீ என்ன கேட்க நினைக்கிறியோ அதை கேளுயா உடனே சொல்றேன்!…..”
“நான் ஒண்ணுமே நினைக்கலை!……”
“நீயா கேட்குற வரைக்கும் சொல்லமாட்டேனே?…”
“நீ சொல்லவே வேண்டாம்!….”
“ஹம்ம், சொல்லிடலாம்னு பார்த்தேன்? நீதான் கேட்கவே மாட்டேன்னு சொல்றியே?….”
“இப்போ உனக்கு என்னதான் வேணும்? அதான் தேவையானது தெரிஞ்சிருச்சுல போனை வை அங்கதான வந்திட்டு இருக்கோம். அதுக்குள்ளே என்னவாம்? திருப்பி கூப்பிட்ட அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது?” கடுப்புடன் போனை அணைத்துவிட்டு பெருமூச்சோடு திரும்பி நந்தினியை பார்த்தான்.
திறந்தவாய் மூடாமல் அவனையே பார்த்துகொண்டிருந்தவளை புருவங்களை உயர்த்தி என்னவென்றான் பார்வையிலேயே!……..
“ஒண்ணுமில்லை!” என்பதுபோல தலையாட்டியவளை பார்த்து தோளை குலுக்கி விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தி அவள் புறம் திரும்பியவன், “ஆமா நான் அப்போவே கேட்கனும்னு நினச்சேன்?” – கேள்விகளை கேட்க ஆரம்பித்தான் அவளை சகஜமாக்கும் பொருட்டு.
“என் கூட பேசினது யாருன்னு கேட்க மாட்டியா?.” என்றான் அவளை குறுகுறுவென பார்வையிட்டபடி.
“எப்படி கேட்க?….” என்று நினைத்தவளால் கேட்கத்தான் முடியவில்லை.
அவனோ விடாமல்” கேட்க தோணலையா?..” என்றான்.
‘சரி கேட்டுத்தான் பார்ப்போம்’, என்று கேட்க ஆயத்தமானவளை, “யார்ன்னு ஊருக்கு போனதும் நீயே தெரிஞ்சுப்ப!..”என்றான்.
ஒரு நிமிடம் ங்கே என விழித்தவள் கடுப்போடு தலையை ஜன்னல் பக்கம் திருப்பிகொண்டாள்.
அவளது முகத்தை பார்த்து எண்ணத்தை அறிந்தவன் வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“நந்தினி!…”
“என்ன?” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“ஏன்? ஒரு வார்த்தைக்கு மேல பேசமாட்டியோ?” லேசாக எட்டிப்பார்த்த கேலியுடன்.
“அப்படியெல்லாம் இல்லைங்க!”
“ம்ம். கோர்ஸ் முடிச்சுட்டியா?”
“ஓ! முடிச்சுட்டேன்!”
“ஆமா, எதுக்காக ப்யுடிஷியன் கோர்ஸ் எடுத்த?”
“தெரியலை தோணுச்சு அதான்!”
“வேற என்ன தெரியும் உனக்கு?”
“படம் வரைவேன் ஓரளவுக்கு, அவ்வளோதான்!” என்று முடித்தவளை விடாமல், “அப்போ இன்னைக்கு உனக்கு நீயேதான் மேக்கப் போட்டுகிட்டயா?” என்றான் வம்பாக.
“இல்லியே, மாப்பிள்ளை வீட்டாளுங்க தான் கூட்டிட்டு வந்தவங்க தான் போட்டுவிட்டாங்க!” என்றாள் எதார்த்தமான குரலில் மிக சாதாரணமாக.
ஆனால் அதை கேட்டவனுக்கோ அப்படியில்லை என்பது அவனது முகத்தை வைத்தே தெரிந்துவிட்டது.