நட்சத்திர விழிகளிலே வானவில் – 13 (3)

“ம்ம் நான் நல்ல இருக்கேன் அத்தை…” என்று கூறிவிட்டு, “சரிதானா?..” என்பது போல தன்னவனின் முகத்தை பார்க்க அவன் மெலிதாக முறுவலித்தான். அவன் கவலை அவனுக்கு. “இதெல்லாம் நல்லா தான் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்கபோகுதோ?…” என்று ஆயாசமாக நினைத்துக்கொண்டான்.

நந்தினி பாக்கியம் கொடுத்துவிட்டதாக சொல்லி பலகாரங்களை கொடுக்கவும் மகிழ்வோடு அதை வாங்கிக்கொண்டார்.

ஆரத்தி வரவும் இருவருக்கும் எடுத்து முடித்து உள்ளே அழைத்துசென்றார். வீட்டினுள் நுழைய நுழைய உதயாவின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

“உள்ளே வாம்மா, இங்கே உட்கார். குடுக்க ஏதாவது எடுத்திட்டு வரேன்…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் தனம்.

“என்னாச்சுங்க? ஏதோ போல இருக்கீங்க?…” என்ற மனைவியின் கேள்வியில் தன்னை மீட்டவன்,

“ஒண்ணுமில்லைடா, ஒரு வேலை அப்டியே பெண்டிங்ல இருக்கு. அதை பத்திதான் யோசிச்சுட்டு இருக்கேன்…” என்று சமாளித்தான்.

“ஓ, அப்போ நாம சீக்கிரம் கிளம்பிடலாம் தானே. வீட்டுக்கு போனதும்  நீங்க அதை பாருங்க. சரியா?…” என்று வழி கூறியவளை கண்ணகலாமல் பார்த்தவன் தனம் வரும் அரவம் கேட்டு வேறு திசை பார்த்தான்.

குடிக்க மோர் எடுத்து வந்தவர் இருவரது கைகளிலும் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

வாயிலை தீண்டி தீண்டி மீண்டு வந்துகொண்டிருந்தன உதயாவின் விழிகள். அதன் தவிப்பை அறிய முடியாதவர் இல்லை தனம். பிரசாத்தை எண்ணி தான் அந்த வாட்டம் என்று புரிந்தாலும் அதற்கு அவசியமில்லாத போது ஏன் இந்த தவிப்பு? என்பது தான் தனத்திற்கு புரியாத புதிராக இருந்தது. மலர்ச்சியில்லாத உதயாவின் முகம் அவருக்கு குழப்பத்தையே விளைவித்தது.

தனத்தின் எண்ணம் பிரசாத் தான் இங்கே இல்லையே? பின் எதற்காக இந்த கவலை? என்று நினைத்தார்.

பிரசாத் இல்லாமல் போனால் மட்டுமா போதுமா? நிஜம் இல்லை என்றால் என்ன? நிழல்(புகைப்படம்) கூடவா இருக்காது அவனது வீட்டில்? அதை நந்தினி பார்த்துவிட்டால் என்ன செய்வது? என்று தான் பரிதவித்துக்கொண்டிருந்தான் உதயா. அவன் நல்ல நேரம் ஹாலில் புகைப்படங்கள் ஏதுமின்றி சில ஓவியங்கள் மட்டுமே சுவரை அலங்கரித்து கொண்டிருந்தன.

அவனை வெளியேற்றவே தயக்கம் காட்டிய உதயாவால் இதை தனத்திடம் சொல்லமுடியவில்லை. அதன் பின் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தன்னால் முடியாது. சொல்லவும் தனக்கு துளியும் விருப்பமில்லை என்பது தான் உண்மை. தங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த விஷயம் அம்பலமாவதை தவிர்க்கவே எண்ணினான். நந்தினிக்காக மட்டுமில்லை, பிரசாத்திற்காகவும்.

பிரசாத்தின் செயல் தனத்திற்கு தெரிந்தால் தாங்கமாட்டார். அதுமட்டுமில்லாமல் தனத்தின் முன்னால் பிரசாத் குற்றவாளியாக நிற்கவேண்டுமென்ற எண்ணமெல்லாம் உதயாவிடம் இல்லை. ஆனால் தங்களை விட்டு விலகி முக்கியமாக நந்தினியின் மீதுள்ள வன்மத்தை மறந்து தங்கள் வாழ்க்கையில் இருந்து விலகினாலே அவனுக்கு போதுமேன்று தான் இருந்தது. ஆனால் அந்த வம்பன் அப்படியே விட்டுவிடுவானா? என்று நினைக்க நினைக்க உதயாவிற்கு மலைப்பாக இருந்தது. இவ்வாறே தனக்குள்ளேயே யோசனையில் உழன்று கொண்டிருந்தான்.

அவனின் மனப்போராட்டங்களை முகத்தின் சோர்வு காட்டிகொடுக்க அதை பார்த்த தனம் நந்தினியிடம் அவளிடம் பேச்சு கொடுத்தவாறே உதயாவின் பக்கம் திரும்பியவர் தங்களின் பேச்சில் அவனையும் உள்ளே இழுக்க ஆரம்பித்தார்.

“பிரபா இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல் தயாராகிடும், நீ நந்தினியை கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காண்பி…” என்றார். அப்படியாவது அவனது மனநிலை மாறிவிடும் என்று நினைத்து. அவரது எண்ணத்திற்கு நேர்மாறாக,

அதை அவசரமாக மறுத்து, “இல்லை சித்தி, கொஞ்சம் டயர்டா இருக்கு. இன்னொரு முறை காண்பிக்கறேன்…” என்று வரவழைத்துகொண்ட அலுப்பான குரலில் கூறினான்.

“சரி நீ இரு நான் காண்பிக்கறேன்…” என்றவர்,

“நீ வாடாம்மா…” என்று அழைத்துகொண்டார். அவரோடு எழுந்தவளை கை பிடித்து நிறுத்தியவனை ஏனென்று கேள்வியாய் பார்க்க,

“இல்லை!! இரு அப்பறமா சாப்பிட்டதும் பார்க்கலாம். நானே அழைச்சிட்டு போறேன்…” என்று கூறி கைகளில் அழுத்தம் கொடுத்து கண்களால் அமரச்சொல்லவும் சரியென்று அவளும் சம்மதித்து அவ்விடமே அமர்ந்துவிட்டாள்.

தனம் உள்ளே வேலையெல்லாம் ஆகிவிட்டதா என பார்க்க சென்றுவிட்டதும் தனது மொபைலை எடுத்தவன் அதில் உள்ள சிலவற்றை காட்டிக்கொண்டே வேறெங்கும் அவளது கவனம் போகாத வண்ணம் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தான்.

சில நிமிடத்தில் திரும்பி வந்த  தனம் இருவரையும் பூஜையறைக்கு வருமாறு கூறவும் வேறு வழியின்றி நந்தினியை அழைத்துகொண்டு அவரை பின்தொடர்ந்து சென்றான்.

வீட்டில் கொஞ்சம் உள்ளடங்கி இருந்த பூஜையறைக்கு சென்றதும்,

“நந்தினி விளக்கேத்தும்மா…” என்றதும் இவர்கள் வீட்டில் தான் ஏன் விளக்கேற்ற வேண்டும்? என்று குழப்பமாக உதயாவை பார்த்தாள். அவன் தலையசைத்ததும் மறுக்காமல் விளக்கை ஏற்றி தெய்வங்களை வணங்கி முடித்ததும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளுமாறு கொடுத்தார் தனம்.

அதை மறுத்த உதயா, “சித்தி நீங்களே வச்சுவிடுங்க. இதுல என்ன தயக்கம் உங்களுக்கு?…” என்று அவரையே நந்தினியின் நெற்றியில் குங்குமமிட செய்தான்.

இருவரும் காலில் விழுந்து ஆசி வாங்கியதும் அவர்கள் இருவருக்குமான துணிகளும் நகைபெட்டியும் அடங்கிய தாம்பாளத்தை கையில் ஏந்தியவர் அதை வாங்கிக்கொள்ளுமாறு பணித்தார். என்ன சொல்வானோ என்று உதயாவை பார்க்க விளைந்த நந்தினியிடம்,

“இதுக்கும் உன் புருஷன் கிட்ட பர்மிஷன் கேட்ட அப்பறமா இருக்கு உனக்கு?…” என்று செல்லமாக மிரட்டி தாம்பாளத்தை வாங்க சொல்லவும் சிரித்தபடி வாங்க எத்தனித்தவளின் கரங்கள் அப்படியே நின்றது.

எதிர் அறையிலிருந்து ஒரு பக்கமாக சாற்றி வைக்கபட்டிருந்த கதவின் வழியாக யாரோ ஒரு உருவம் தன்னை பார்ப்பது போல இருக்கவும் தனத்தை தாண்டி எட்டி பார்த்தவளின் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது.

அருகே போய் அது உண்மைதானா என்று ஊர்ஜிதபடுத்த மனதின்  ஆழத்தில் ஏதோ ஒரு உணர்வு உந்தி அவளை தள்ளியது அந்த அறைக்குள். தனம் கொடுத்த தட்டை வாங்காமல் அவரை தாண்டிக்கொண்டு அந்த அறையை நோக்கி போகவும் தான் உறைத்தது உதயாவிற்கு.

நந்தினியின் பார்வை போன திசையை பார்த்தவனுக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

மேலும் அவளை அங்கே செல்லவிடாமல், “நந்து நில்லுடா, எங்க போற? வா வீட்டுக்கு போகலாம்…” என்று அழைத்து அவளை அங்கிருந்து இழுக்க அவனின் கையை உருவிக்கொண்டு வேகமான எட்டுக்களோடு அறையை அடைந்து முழுவதுமாக கதவை திறந்தாள். அங்கிருந்த கொஞ்சம் பெரிதான புகைப்படத்தில் பிரசாத் மிதப்பாக பார்த்துக்கொண்டிருந்தான்.

அது நந்தினியை எள்ளலாக பார்ப்பது போலவே இருந்தது அவளுக்கு. தனதிற்கோ ஒன்றுமே புரியவில்லை. தாம்பாளத்தை அங்கேயே வைத்தவர் நந்தினியை பின் தொடர்ந்து சென்றார்.

பிரசாத்தின் அறைக்குள் நந்தினி நுழைந்ததும் அவனது புகைப்படத்தின் அருகே வந்ததும் அவளின் பின்னால் வந்து நின்றவர், “என்னம்மா நந்தினி, இது என் பிள்ளை பிரசாத். பிரபாவுக்கு தம்பி வேணும். உனக்கு தெரியாதில்லை. இன்னொரு முறை அறிமுகபடுத்தறேன்….” என்று சம்பர்தாயமாக கூறியவர் நந்தினியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் முன்னால் வந்து அவளை பார்த்தவரின் முகம் அதிர்ச்சியாகிவிட்டது.

உதயாவோ நந்தினியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். “வாடா போகலாம், நம்ம வீட்டுக்கு போகலாம்…” என்று மன்றாடியவனின் குரல் அவளது செவிகளை எட்டினால் தானே?

நேரம் ஆக ஆக கண்களில் சிவப்பேற திடீரென ஆவேசம் வந்தவளை போல அந்த புகைப்படத்தை படு வேகமாக கழட்டியவள் ஆவேசம் தணியுமட்டும் சுவற்றில் அடி அடியென அடித்தாள். கண்ணாடியால் ஆனா புகைபடம் சில்லுசில்லாக நொறுங்கி உள்ளிருந்த பிரசாத் உருவம் நிறைந்த காகிதம் வெளியில் வந்து விழுந்தது. அதை சுக்குநூறாக வெறி வந்தவள் போல கிழித்தெறிந்தவள் காலில் போட்டு மிதித்தாள்.

தனம் மிரண்டே போய்விட்டார். இவ்வளவு நேரம் சாதுவாக அன்பாக பேசிகொண்டிருந்த பெண்ணிற்கு என்னவாகிற்று? அவள் ஏன் பிரசாத்தை பார்த்ததும் இவ்வாறு நடந்துகொள்ளவேணும் என்று தனக்கும் மறுகியவர் உதயாவை கேள்வியாக பார்க்க அவனானால்  நந்தினியை தவிர வேறெதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

“நந்தினி…” என்று முடிந்தளவிற்கு குரலை உயர்த்தி சப்தமிட்டு அவளை பிடித்து உலுக்க சுயத்திற்கு வந்தவள் கிழிந்து கிடந்த பிரசாத்தின் படத்தை கண்டுவிட்டு உதயாவின் மீது எரிக்கும் பார்வையொன்றை பார்த்தவள், 

“ஏண்டா!!! அப்போ உனக்கு இவன் சொந்தக்காரனா?…” என்று அழுத்தமாக ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்ற வலியோடு கேட்டதும் மொத்தமாக உடைந்துவிட்டான். மனைவி தன்னை மரியாதை இல்லாமல் பேசினதையெல்லாம் ஒருபுறம் தள்ளியவன் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு,

“இல்லைடா நந்து, நான் சொல்றதை கொஞ்சம் கேளு. ப்ளீஸ்…” என்று அவளை நெருங்க,

“கிட்ட வந்த உன்னை கொன்னுடுவேண்டா ராஸ்கல். உன்னை எவ்வளவு நம்பினேன். எல்லாத்துக்கும் சேர்த்து என்னை மொத்தமா சாகடிச்சிட்டியே….” என்று காளியாய் மாறி காட்டுத்தனமாக கத்தினாள். தலையில் அடித்துகொண்டு அழுதவள் வார்த்தையால் தன் கணவனை துடிக்க வைத்தாள்.

உதயாவின் சட்டையை பிடித்து உலுக்கிக்கொண்டே, “அவன் உன்னோட தம்பி தானே? அவனை காப்பாத்ததான் நீ என்னை பலிகடாவாக்கினையா?, சொல்லுடா?, எல்லோரும் சேர்ந்து எனக்கு குழி பறிச்சுட்டீங்கள்ள? முன்னாடியே ஏண்டா என் கிட்ட சொல்லலை நீ?…” என்று ஏகவசனத்தில் குற்றம் சாட்டியபடி தன்னவனை தன் பூங்கரங்களால் முடிந்தமட்டும் தாக்கியவள் அவன் மீதே மயங்கிச்சரிந்தாள்.

அவள் அவ்வளவு அடித்தும் கண்ணீரோடு அனைத்தையும் அமைதியாக வாங்கிக்கொண்ட உதயாவை பார்த்த தனத்தின் இதயத்துடிப்போ  இயல்புக்கு மேலாக தப்பி துடித்தது. என்ன நடந்திருக்கும், என்ன நடந்திருக்கும் என்று மூளையோ கேள்விக்கான விடையை தேடி அலைபாய்ந்தது.

நந்தினி மயங்கியதுமே அவளை ஹாலிற்கு தூக்கி வந்தவன், “சித்தி தண்ணி கொண்டுவாங்க…” என்று கூறிவிட்டு அவளை எழுப்பினான். அதற்குள் அவள் மூர்ச்சையாகிவிட்டிருந்தாள்.

உடனடியாக தண்ணீரை  தெளித்தும் மயக்கம் தெளியாமல் போகவும் இன்னும் பயந்துவிட்டான். தனம் அருகில் இருக்கிறாரே என்று கிஞ்சித்தும் கவலையின்றி தன் இதழ்களை அவளது இதழ்களில் பொருத்தி மூச்சினை அவளுக்குள் செலுத்தி முதலுதவி அளித்ததற்கு சிறிதும் பலனின்றி போனது.

நேரத்தை கடத்தாமல் உடனே அவளை அள்ளிக்கொண்டவன் காரை நோக்கி செல்லும் போதே, “சித்தி வீட்ல கேட்டாங்கன்னா நந்தினி பூச்சி எதையோ பார்த்து பயந்துட்டான்னு மட்டும் சொல்லுங்க. ஏதாவது சொல்லி சமாளிங்க. ப்ளீஸ் தயவு செய்து வேறு எதுவுமே சொல்லிடாதீங்க. உங்களுக்கு புண்ணியமாக போகும் சித்தி…” என்று கண்ணீரோடு வேண்டிகொண்டவன் நந்தினியை உள்ளே கிடத்தி தானும் கிளம்பிவிட்டான்.

வந்ததிலிருந்து உதயா தவித்ததற்கான காரணம் இப்போது தெளிவாக விளங்கிவிட்டது தனத்திற்கு.

உடனடியாக பெருமாளை அழைத்தவன், “அங்கிள் நீங்க உடனே வீட்டிற்கு வரணும். முடியுமா?…” இவனது பேச்சில் இருந்த பதட்டத்தை உணர்ந்த பெருமாள்,

“என்னவாகிற்று பிரபா? யாருக்கு என்ன பிரச்சனை?…” என்றார்.

“நந்தினிக்கு தான் அங்கிள். மயக்கமாகிட்டா. பேச்சுமூச்சில்லாம இருக்கா. நாங்க தனம் சித்தி வீட்ல இருந்து புறப்படறோம். நீங்க அதுக்குள்ளே வீட்டுக்கு வந்திடுங்க…” எனவும்,

“நீ ஹாஸ்பிட்டலுக்கு வாயேன், அதை தாண்டித்தானே போகணும்…” என்று அழைக்க அதை மறுத்தவன்,

“நீங்க வீட்டுக்கு வரமுடியுமா? முடியாதா? …” என்றவனது தீவிரத்தில் யோசனைக்குள்ளான டாக்டர் பெருமாள் உடனடியாக வர சம்மதமும் தெரிவித்தார்.

error: Content is protected !!