நட்சத்திர விழிகளிலே வானவில் – 13 (2)

“அங்க என்ன நடந்தது தனம்?…” என்ற கேள்வியில் சுதாரித்த தனம்,

“பாக்கியா நந்தினி இங்க வந்து நல்லாத்தான் பேசிட்டு இருந்தா. ஏதோ மேலே பூச்சியோ பல்லியோ என்னமோ விழுந்தது போல இருக்கவும் அலறி மயங்கி கீழே விழுந்துட்டா. கொஞ்சம் பயந்த சுபாவம். பிரபாவுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க?…” என்று பாக்கியத்தின் பதட்டத்திற்கு குறையாத பதட்டத்தோடு அடுக்கியவரிடம்,

“ஹாஸ்பிட்டலா? அவன் அங்கே போகமாட்டேன்னு வீட்டுக்கு வந்துட்டான் தனம்… பெருமாள் அண்ணா வந்து பார்த்துட்டு காய்ச்சல் இருக்குன்னு ட்ரிப்ஸ் போட்டுட்டு போய்ருக்காங்க. அவங்களும் சொல்லிப்பார்த்தாங்க. இவன் கேட்கலையே?…” என்று கவலையோடு குமுற தனத்திற்கு இன்னும் சந்தேகம் வலுத்துக்கொண்டே போனது. யோசனையில் இருந்தவரிடம்,

“பிரசாத் அங்க இல்லையா?…” என்று சற்று தயக்கத்தோடு பாக்கியம் கேட்கவும்,

“அவன் இல்லை பாக்கியம். எனக்கு தெரியாதா பிரபா பத்தி? நான் அவனை பிரபா, நந்தினி வரதுக்கு முன்னமே வெளியே அனுப்பிட்டேன்…” என கூறி அவருக்கு ஆறுதலாக சிறிதுநேரம் பேசிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

பாக்கியம் பேசி முடிக்கட்டுமென காத்திருந்த நாச்சி, “என்னம்மா பாக்கியா, தனம் என்ன சொன்னா?. பிரசாத்தால தான் எதுவும் பிரச்சினையா?…” என்று கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க அத்தை. நந்தினி மேல ஏதோ பூச்சி போல விழுந்திருக்கு. அதான் பயத்துல மயங்கிட்டா போல…” என்று தனம் கூறியவை அனைத்தையும் சொல்லி முடித்தவர் வேலையாக உள்ளே சென்று விட்டார்.

நாச்சிக்கோ நம்பவே முடியவில்லை. “பூச்சி விழுந்ததுக்கு எல்லாமா  பேச்சு மூச்சில்லாம காய்ச்சல் வர அளவுக்கு ஆகிருக்கும்? இதுல நிச்சயமா வேற ஏதோ ஒன்னு இருக்கு…” என்று எண்ணிக்கொண்டே மீண்டும் மேலே சென்றவர் உதயாவின் அறைக்குள் நுழைய போகையில் அங்கே கேட்ட பேச்சுக்குரலில் அப்படியே நின்றுவிட்டார்.

“ரொம்ப நன்றி சித்தி. நான் சொன்னதை போல வீட்ல சொன்னதுக்கு….”

“பிரசாத்தை நந்தினிக்கு முன்னாலேயே தெரியுமா பிரபா?…” என்ற  கூர்மையான கேள்வியில் சற்று ஆடித்தான் போய்விட்டான். இனி தன்னால் எதையும் மறைக்க முடியாதென்று உணர்ந்துகொண்டான்.

“சித்தி ப்ளீஸ். நானே அதை உங்ககிட்ட சொல்றேன். ஆனா இப்போ வேண்டாம் எனக்கு நந்தினி முக்கியம் அவ குணமாகட்டும்…”

“இல்லை. இப்போவே நீ சொல்லியாகனும்…”

“கண்டிப்பா சித்தி. உங்கக்கிட்ட நிச்சயம் மறைக்க மாட்டேன். ஆனா அதுக்கான நேரம் இது இல்லை. அப்பறம் நந்தினி அங்க ஏன் மயங்கி விழுந்தான்னு இங்க நம்ம வீட்ல மட்டுமில்லை, பிரசாத் ஊர்ல இருந்து வந்தாலும் நீங்க அவன்கிட்டயும் அதே பொய்யை சொல்லுங்க…” என்று கூறவும் பயம் கலந்த குழப்பத்தில்,

“பிரபா எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு. பிரசாத் ஏதோ பெருசா பண்ணியிருக்கான்னு மட்டும் நல்லா தெரியுது. என்னன்னு சொல்லிடு…” என்று குரல் நடுங்க கேட்டவரிடம் உங்கள் மகன் படுபாதகம் செய்யவிருந்தான் என்பதை எப்படி சொல்லுவான்?

“காரணமில்லாம நான் சொல்லலை சித்தி, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. இப்போ எதையும் சொல்லகூடிய நிலையில நான் இல்லை. என் மனைவி சரியாகட்டும். அதற்கு பின்னால் வந்து நடந்ததை சொல்றேன். இப்போ வச்சுடறேன்…” என்று அவரது பதிலுக்கு காத்திராமல் மொபைலை அணைத்துவிட்டான்.

யாரிடம் சொல்லகூடாது என்று தனத்திடம் அத்தனை முறை சொன்னானோ அவனுக்கு உதயாவும், நந்தினியும் வந்ததிலிருந்து நந்தினி மயங்கி சரிந்தது வரைக்கும் விலாவரியாக விஷயம் தெரிவிக்கபட்டாகிவிட்டது.

வந்திருப்பது தன் வீடு என்றறிந்தால் நந்தினிக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்குமென்பதில் பிரசாத்திற்கும் ஓரளவு அனுமானம் தான். அதுமில்லாமல் தொலைபேசியில் உதயாவிடம் தனத்தின் பேச்சுவார்த்தையும் மிகுந்த அச்சத்தை குடுத்தது பிரசாத்திற்கு. தன் தாய் தன்னை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்? என்று மட்டுமே இப்போது கவலை கொண்டான்.

நாச்சியும் சப்தமில்லாமல் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டார். அவருக்கு ஓன்று மட்டும் புரிந்தது. பிரசாத்தால் நந்தினி ஏதோ ஒரு வகையில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறாள் என்று. அது என்னவென்று உதயா நந்தினியே சொன்னால் தான் உண்டு. எதுவாக இருப்பின் அது அவர்களின் வாயிலிருந்தே வரட்டும். நாமாக கேட்டு இன்னும் துன்பம் தரவேண்டாமென்று கீழே சென்றுவிட்டார்.

கிருஷ்ணமூர்த்தியும், சுதர்சனமும் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் வந்தபின் சொல்லிக்கொள்ளலாமென்று விட்டுவிட்டனர்.

நேரம் ஆக ஆக நந்தினிக்கு காய்ச்சல் வெகுவாக கூட ஆரம்பித்தது. அவளது உடல் அனலாக கொதிக்க ஆரம்பிக்கவும் பயந்துவிட்டான். பெருமாளுக்கு அழைக்கவும் உடனே வந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளித்துவிட்டு சென்றார்.

பசிக்க ஆரம்பிக்கவும் கீழே சென்று சாப்பிட மனமில்லாமல் நாச்சியை அழைத்து மேலே குடுத்துவிட்ட சொல்லவும் அவர்களுக்கே ஆச்சர்யம். சாப்பிட வைக்க போராடவேண்டுமோ என நினைத்தவர்களுக்கு இப்படி அதிர்ச்சி கொடுத்தால் பாவம் என்ன செய்வார்கள்?

வள்ளியிடம் சாப்பாட்டை கொடுத்தனுப்பிவிட்டு தாங்களும் சிறிது இடைவெளிவிட்டு சென்றனர். கதவை தட்டும் ஓசை கேட்டதும் உள்ளே வரசொன்னவன் யாரும் உள்ளே வராமல் போனதும் தானே எழுந்து சென்றான்.

புதிதாக ஒரு ஆளை பார்த்ததும் கேள்வியாய் புருவம் சுருக்கியவன்,

“யார் நீங்க?…” என்று கேட்டான். இதுதான் உதயா. வீட்டில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்களை மரியாதையாகவே அழைப்பான், அப்படியே நடத்துவான்.

“இங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கேனுங்க. பேரு வள்ளி. பாட்டியம்மாதான் சேர்த்தாங்க…” என்ற வள்ளியை பார்த்தவன்,

“ஓ!! அப்படியா?..” என்றவன் மேலும் ஏதோ கேட்க நினைக்க பாக்கியம் மேலே வந்துவிட்டார்.

“என்னப்பா பிரபா?…” எனவும்,

“இல்லைம்மா இவங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க, அதான் விசாரிச்சிட்டு இருந்தேன்…” என்று கூறவும்,

“ஆமாம் பிரபா. நம்ம வேணி வீட்ல வேலை பார்க்கிறவங்களோட சொந்தம் போல. வேலை கேட்டிருக்காங்க. அதான் நமக்கும் இப்போதைக்கு ஒத்தாசைக்கு ஆள் வேணும்னு வேணிதான் வர சொல்லிருக்கா….” எனவும் உதயாவிற்கு மெலிதாக சந்தேகம் கூட முளைவிட்டது. அதை மேலும் சிந்திக்க விடாமல் பாக்கியத்தின் குரல் இடையிட்டது.

“நீ போய் சாப்பிடு பிரபா. நான் வேற ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?…” என்று கேட்டவரிடம் போதுமென மறுத்துவிட்டு அவரை அனுப்பிவிட்டு உள்ளே வந்துவிட்டான்.

நந்தினிக்கு எதிர்ப்புறமாக நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தவன்,

“ஹேய் வாயாடி, என்னடா இது நாம இப்படி காய்ச்சல்ல படுத்திருக்கிறோம். இவன் நல்லா கொட்டிக்கறானேன்னு பார்க்கிறியா?…” என்று அசைவில்லாமல் படுத்திருந்த நந்தினியிடம் பேசியவன்,

“நான் நினைக்கிறது சரினா நீ திரும்ப எழுந்துகொள்ளும் போது நான் உன்னை முதன் முதலா பார்த்தபோது இருந்த நந்தினியை திரும்ப பார்ப்பேன்னு நினைக்கிறேன். அப்படி நீ வந்தா உன்னை நான் சமாளிக்கனுமே?, அதுக்கு தெம்பு வேண்டாமா?, அதான் கொட்டிக்கறேன்….” என்று அவளை பார்த்துக்கொண்டே ருசியறியாமல் பசிக்காக மட்டுமே வேகமாக சாப்பிட்டு முடித்தான்.

சாப்பிட்ட பாத்திரம் அனைத்தையும் எடுத்து வெளியே வள்ளியை அழைத்து கொடுத்துவிட்டு தன்னை தொந்தரவு செய்யவேண்டாமென்று சொல்லியனுப்பியவன்  இன்னொரு நாற்காலியை எடுத்துப்போட்டு  அதில் காலை நீட்டியவாறு அமர்ந்தவன் மனமோ தனம் வீட்டில் நடந்த நிகழ்வை அசைபோட தொடங்கியது.

கோவிலுக்கு போய்விட்டு தனத்தின் வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அவனோடு சலசலத்தபடியே வந்தாள் நந்தினி.

வீட்டை நெருங்க நெருங்க இன்னும் உதயாவை பயம் கொஞ்சம் கொஞ்சமாக கவ்வ தொடங்கியது. எங்கே பிரசாத் வெளியில் செல்வதுபோல போய்விட்டு வேணுமென்றே திரும்பி வந்து நந்தினி முன்னால் நின்றுவிடுவானோ என எண்ணி கலங்கினான்.

வந்தாகிற்று பிரசாத்தின் வீட்டிற்கு. தோப்பின் நடுவிலிருந்த அந்த வீட்டை பார்த்ததுமே நந்தினி குதூகலித்து விட்டாள்.

“எவ்வளோ அழகா இருக்குதுல இந்த வீடு…” என்றவாறே அங்குமிங்கும் பார்வையை ஓட்டியபடி உதயாவோடு இணைந்து நடந்தாள்.

ரம்யமான அந்த சூழலை ரசித்தபடி அவனவள் வந்தால், தன்னை இந்நிலைக்கு நிறுத்திய அந்த சூழலை சபித்தபடி அவளவன் வந்தான்.

இருவரது வருகையை பார்த்த தனத்திற்கோ சந்தோஷம் தாளவில்லை.

“வாங்க, வாங்க. வாப்பா பிரபா, வாம்மா நந்தினி…” என அழைத்துக்கொண்டே வந்தவர்,

வேலையாளை அழைத்து ஆரத்தி கரைத்து எடுத்துவர சொல்லிவிட்டு நந்தினியை நெருங்கி அவளது முகத்தை வழித்து நெட்டிமுறித்தார்.

“எப்டி இருக்கீங்க சித்தி?..” என்று குரலில் சுரத்தே இல்லாமல் முகத்தில் புன்னகையை வழிய ஒட்டிவைத்து கேட்டவனை பார்த்து,

“எனக்கென்ன பிரபா இருக்கேன். நீ எப்டி இருக்க? நந்தினி நல்லா இருக்கியாம்மா?…” என்றார்.

error: Content is protected !!