நட்சத்திர விழிகளிலே வானவில் – 13 (1)

நட்சத்திர விழிகள் – 13

                உதயா வந்த கோலத்தை பார்த்த நாச்சியும், பாக்கியமும் பதறிவிட்டனர். வேணிக்கோ ஒன்றுமே புரியவில்லை.

என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே அவர்களை பின் தொடர்ந்து மாடிக்கு சென்றார்.

மேலே தன் அறைக்கு சென்று படுக்கையில் நந்தினியை கிடத்தியவன் பெருமாளுக்கு வழிவிட்டு தன்னவளின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான்.

“பிரபா நந்தினிக்கு என்னாச்சு?…” ஏன் இப்படி மயக்கமாக இருக்கா?..” என எத்தனை விதமாக கேட்டும் அவனிடமிருந்து பதிலில்லை. அசைவின்றி நந்தினியின் முகத்தையே வெறித்த வண்ணம் கல்லென சமைந்திருந்தான்.

உதயாவின் நிலையை பார்த்த வேணியின் மனமோ சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தாலும் வழக்கம் போல அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்  நடந்ததை தெரிந்துகொள்ள குறுகுறுத்தது.

“பெருமாளு என்னைய்யா நீயாவது சொல்லுவியா, மாட்டியா?…” என்று சற்று அழுத்தமாக கேட்டார் நாச்சி.

“பொறுங்க அத்தையம்மா. முதல்ல புள்ளையை கவனிச்சுக்கறேன். அப்றமா வந்து விளக்கமா சொல்றேன்..” என்று கூறிவிட்டு கையோடு அழைத்து வந்திருந்த நர்ஸிடம் தேவையானதை வாங்கி நந்தினிக்கு ட்ரிப்ஸ் போடவும் இன்னும் கலவரமாகிவிட்டனர் நாச்சியும், பாக்கியமும்.

போன இடத்தில் பிரசாத்தால் என்ன பிரச்சனையோ அதனால் தான் நந்தினிக்கு இப்படி ஆகினதோ, இல்லை வேறு எதுவுமா என குழம்பி தவித்தார் பாக்கியம்.

என்ன ஆட்டம் ஆடி நம்மை படுத்திவச்சதுக ரெண்டும். இத்தனை நாள் கவலைப்பட்டதுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்த்தாகிவிட்டது, நடந்ததை பின்னால் கேட்டு அறிந்துகொள்ளலாம்,  இப்போதைக்கு இது போதுமென்று அறையை விட்டு வெளியேறிவிட்டார் வேணி.

போனவர் நேராக வள்ளியிடம் கண்ஜாடை காட்டி பின்னால் அழைத்தவுடன் அவளும் வந்துவிட்டாள்.

“என்னங்கம்மா, கூப்பிட்டீங்க?…”  என்று இயல்பாகவே கேட்டாள்.

“உன்னை எதுக்கு கூப்பிடுவாங்க, நான் சொல்றதை கேட்கத்தான் கூப்பிட்டேன். இப்போ நான் சொல்றதை போல நீ செய்யணும்…” என்று மிடுக்காக அதிகாரத்துடன் கூறினார்.

அவரது அதிகாரம் கலந்த அலட்சியமான பேச்சில் வள்ளியின் கோவம் தூண்டப்பட, “என்னது நீங்க சொல்றதை கேட்கணுமா?, நான் அதுக்காக வரலை. பிரசாத் தம்பி சொல்றதை செய்யத்தான் வந்தேன்…” என்று கண்டிப்போடு கூறவும் கொதித்துவிட்டார் வேணி.

“உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்? வீட்டு வேலைக்கு வந்துட்டு என்னையே எடுத்தெறிஞ்சு பேசறியா?. நீ இங்க வேலை செய்யனும்னா நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும்…” என்று திமிராக சொன்னவரை இளப்பமாக பார்த்த வள்ளி,

“நீங்க எனக்கு எந்த ஆடரும் போட தேவையில்லை. என்னை இங்கே வேலைக்கு அனுப்பினது பிரசாத் தம்பி அவர்கிட்ட பேசிக்கோங்க. என் கிட்ட இந்த மிரட்டல் வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. அப்பறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்…” என்று சொன்னவள் திரும்பியும் பாராமல் விடுவிடுன சென்றுவிட்டாள்.

வள்ளியின் துணிச்சலில் விக்கித்துப்போய் நின்றிருந்த வேணி பின் சுதாரித்துக்கொண்டு, “ எவ்வளோ தைரியம் இருந்தா என் கிட்டே இப்படி பேசுவா?, இன்னைக்கு இவளுக்கு ஒரு முடிவு கட்டி இந்த வேணி யாருன்னு காண்பிக்கறேன்…” என சூளுரைத்துகொண்டே உடனடியாக பிரசாத்திற்கு போன் செய்தார். ரிங் போய் சிறிது நேரத்தில்,

“ம்ம் சொல்லுங்க என்ன விஷயம்…” என பிரசாத் கேட்டதும் தான் தாமதம் படபடவென கொட்டித்தீர்த்தார்.

“தம்பி பிரசாத்து, இந்த வேலைக்காரி வள்ளி இருக்காளே. இவ சரியில்லை. சொன்னதை எதுவுமே கேட்கிறதில்லை. உன் அத்தையையே மரியாதை இல்லாமல் எதிர்த்து பேசிட்டாப்பா….” என்று வள்ளி கூறாததையும் எடுத்துக்கூட்டி சொல்லி மூட்டிவிட்டார்.

வேணியை அறியாதவனா பிரசாத்?

“நீங்க பேசினதுக்குத்தான் பதில் பேசியிருப்பா. அதை விடுங்க. பிரபா, நந்தினி விஷயத்துல இனி உங்களுக்கு எதுவும் வேலை இல்லை. அதுவுமில்லாமல் கொஞ்சநாள் அங்க வள்ளி நல்லவிதமா இருக்கட்டும். கெளரி கல்யாணம் முடியவும் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்…” என்று சாவாகாசமாக கூறியவனை இழுத்துவைத்து நாலு அப்பு அப்பினால் என்னவென்றுதான் தோன்றியது. அதை செய்துவிடத்தான் முடியுமா வேணியால்?

ஆனாலும் இதை அப்படியே விட மனவில்லாமல் பிரசாத்தை தன் வழிக்கு கொண்டுவர முயன்றார். “இப்படி சொன்னா நல்லாவா இருக்கு பிரசாத்து. அத்தை என்ன சொல்றேனா?…” என்றவரை இடைமறித்தவன்,

“நீங்க ஒண்ணும் சொல்லவேண்டாம். நான் நினைக்கிறதும், சொல்றதும் தான் இனி அங்க நடக்கும். நடக்கணும். உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க. மீறி நீங்களா எதுவும் செய்யனும்னோ, வள்ளிக்கிட்ட நீங்க பேசி அவளை உங்களுக்கு அடிபணிய வைக்கனும்னோ நினைச்சீங்கன்னா விளைவு விபரீதமா போய்டும். இதுக்கும் மேல என்னை பேசவைக்காதீங்க. புரியும்னு நினைக்கேன்…” என சற்று கடுமையாக கூறியவன் வேணியின் அமைதியில் பின் தானாகவே,

“இங்க பாருங்க, ஏற்கனவே கவலையில இருக்கும் போது அவனுக்கு பிரச்சனை குடுத்தா பத்தோட பதினொன்னா அதுக்கும் சேர்த்து கவலைப்பட்டு முடிச்சிடுவாங்க. அப்படி நடக்கக்கூடாது. ஒன்னு முடிஞ்சா அடுத்து என்னனு நினச்சு பயப்படனும். அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் சரி. அதை நான் பார்த்துப்பேன். நான் சொன்னது போல கெளரி கல்யாணம் நல்லபடியா முடியட்டும். நீங்க வள்ளியை தொந்தரவு செய்யாதீங்க…” என கட்டளையான குரலில் கூறி முடித்து உடனே தொலைபேசி தொடர்பையும் துண்டித்துவிட்டான்.

உடனே வள்ளிக்கு தொடர்பு கொண்டவன் மறுமுனை எடுக்கப்பட்டதும், “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே?…” என்ற கேள்விக்கு,

“இருக்கு…” என்றாள் வள்ளி.

“பத்திரம், முக்கியமா அந்த வேணிக்கிட்ட கொஞ்சம் அதிகமான எச்சரிக்கையோடே இரு. இன்னைக்கு பேசினதை போலவே பேசு. கிட்ட நெருங்க விடாம எட்டவே வச்சிரு. அதுதான் நமக்கு நல்லது…” எனவும்,

“ம்ம் சரிங்க தம்பி…” என்றாள்.

“அங்க என்ன நடந்தாலும் எனக்கு தெரியனும். அந்த பிரபா சரியான கூர்புத்திக்காரன். கவனம். இப்போ வைக்கிறேன்…” என எச்சரிக்கை செய்துவிட்டு தன் வேலையில் மூழ்கிபோனான்.

பிரசாத்தின் பேச்சை அசைபோட்டவரே அடுக்களை பக்கம் வந்த வேணி வள்ளியை பார்க்க அவளோ இவரை கண்டு காணாதவாறு வேலையில் ஆழ்ந்துவிட்டாள். வள்ளியை மனதுக்குள் வசைபாடியபடியே மாடியை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்துகொண்டார் வேணி.

நந்தினியை ஆராய்ந்து கொண்டிருந்த டாக்டர் பெருமாள்,

“பிரபா, நந்தினிக்கு காய்ச்சல் வேற இருக்குப்பா. நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்…”  என கூறியவரிடம் எதுவும் வேண்டாம் என்று தலையை மட்டும் அசைத்தவனது பார்வை மட்டும் நந்தினியை விட்டு விலகவே இல்லை. பிடிவாதமான அவனது செய்கையில் நாச்சியும் பாக்கியமும் திகைத்துத்தான் போயினர்.

என்னவென கேட்கலாமென்றால் அவனது முகம் இறுகிப்போய் இருந்தது. செய்வதறியாது பெருமாளோ பார்க்க அவரோ வெளியேற சமிஞ்சை காட்டினார்.

உதயாவின் தோளை தட்டிகொடுத்தவர், “பிரபா காய்ச்சல் அதிகமான எந்நேரமானாலும் என்னை கூப்பிடு, உடனே வரேன். நர்ஸ் வேணும்னா இங்கே இருக்க சொல்லவா?..” என கேட்க மறுப்பாக தலையசைத்தவன்,

“அதெல்லாம் வேண்டாம் அங்கிள், நான் பார்த்துப்பேன். தேவைனா உங்களை கூப்பிடறேன். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வந்துட்டு போங்க ப்ளீஸ்…” என்று இறைஞ்சும் குரலில் கேட்க,

“இதெல்லாம் நீ சொல்லனுமா பிரபா. கண்டிப்பா வரேன். ஹாஸ்பிட்டல் வரணும்னு உனக்கே தோணுச்சுனா நீ அங்க கிளம்பிட்டு எனக்கும் தகவல் சொல்லிடு. இப்போ நான் கிளம்பறேன்..” என்று விடைபெற்று வெளியே வந்தவரை எதிர்க்கொண்ட நாச்சி,

“என்னைய்யா பெருமாளு? என்னவாச்சு நந்தினிக்கு, ஏன் இப்டி இருக்கு?…” என்று படபடப்பாக கேட்டார்.

“எனக்கும் தெரியலைங்க அத்தையம்மா. க்ளினிக்ல இருக்கும் போது போன் பண்ணினான் பிரபா. அவசரமா வீட்டுக்கு வாங்க. நந்தினி திடீர்னு மயக்கமாகிட்டா. பேச்சுமூச்சே இல்லை. நீங்க உடனே வீட்டுக்கு வாங்க. நானும் தனம் சித்தி வீட்ல இருந்து வந்துட்டு இருக்கேன்னு சொன்னான். அதான் நானும் கிளம்பிட்டேன்…” என்று முடிக்க,

“ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ருக்கலாமே, ஏன் அண்ணா? என கேட்ட பாக்கியத்திடம்,

“நானும் அதை சொன்னேன்மா, எங்க கேட்டான் உன் பிள்ளை. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வரமுடியவே முடியாதுன்னு மறுத்துட்டான். அதுமில்லாம வீட்டுக்கு உங்களால வரமுடியுமா? முடியாதான்னு கேட்கிறான். நான் என்ன பண்ண சொல்லு?…” என்று சொன்னவரிடம் பதில் சொல்ல முடியாமல் மேலும் குழம்பினர் இருவரும்.

பின் யோசனையாக, “அவன் ஏதோ ஒரு சொல்ல முடியாத அழுத்தத்துல இருக்கான்னு தோணுது அத்தையம்மா. இப்போ பிரபா கிட்ட எதுவுமே கேட்காதீங்க. நந்தினிக்கு முதல்ல குணமாகட்டும். பின்னால மெதுவா பேசிக்கலாம். நான் அப்பறமா வந்து பார்க்கிறேன்…” என்ற டாக்டர் பெருமாள் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

மீண்டுமொருமுறை உதயாவின் அறையை எட்டி பார்த்துவிட்டு வெளியேறி இருவரும் கீழே வந்தனர்.

“சந்தோஷமா போனவுக இப்படியா திரும்பி வரணும்?. அங்கே என்ன நடந்துச்சோ?…” என்று அங்கலாய்த்துக்கொண்டே இருக்கையில் அமரவும் பாக்கியம் வேகமாக தொலைபேசியின் அருகே சென்றவர் தனத்தின் எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தார். மறுமுனையில் தொலைபேசியை எடுத்ததும் தனம் என்ற பாக்கியத்தின் குரலை கேட்டதும்,

“நந்தினி எப்படி இருக்கா பாக்கியா?…” என்று பதட்டமான குரலில் கேட்டார். அவருக்குத்தான் தெரியுமே இந்த தொலைபேசி எண்ணிற்கு நாச்சியார் குடும்பத்தவர்கள் மட்டுமே அழைப்பார்கள் என்று. அதனால் தான் பிரசாத் அதை எடுக்கவோ உபயோகிக்கவோ கூட மாட்டான்.

error: Content is protected !!