இவர்களது கண்ணாம்பூச்சி ஆட்டத்தினை கண்ட குடும்பத்தினருக்கு நல்லது நடந்தால் போதுமென்று அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க சென்றுவிட்டனர்.
வேணிக்கோ இன்றைய நிகழ்வுகளில் தாக்கம் ரணமாய் எரிந்து ஆறாமல் இருக்க இப்போது உதயா, நந்தினி என இருவரது விழிகளின் பாஷையை ஓரளவு யூகித்தவரின் உள்ளத்தின் கனல் அணையாமல் இன்னும் நெருப்பை வளர்த்துக்கொண்டிருந்தது.
இருந்தாலும் எதுவுமே முகத்தில் காட்டிகொள்ளாமல் இதயத்தின் ஆழத்தில் மறைத்தாலும் அவரால் முடியவில்லை. பிரசாத்தை உடனடியாக சந்திக்க துடிக்க ஆரம்பித்தது. அதற்கான வழிகளை தேடியவர் அதற்கான வழி புலப்பட்டும் குறையாத கொந்தளிப்போடு தன் அறைக்கு சென்று மறைந்தார்.
அனைவரும் சென்றதும் ஹாலே நிசப்தமாக இருக்க நகத்தை கடித்தபடி மாடி நோக்கி தன் அறையை நிமிர்ந்து பார்த்தவள் தயக்கத்தோடு அங்கேயே அங்குமிங்கும் அலைபாய்ந்த விழிகளோடு நடந்துகொண்டிருந்தாள்.
பின்னாலிலிருந்து யாரோ தன்னை தூக்கவும் பயத்தில் அலற,
“ஏய்!! அடங்குமா. விட்டா கத்தி ஊரை கூட்டிடுவ போல?…” என்று அசால்ட்டாக சொன்னான் உதயா.
“கீழே இறக்கி விடுங்க முதல்ல. ஏன் இப்டிலாம் பண்றீங்க?…” என கூறி இறங்க நினைத்தாலும் முடியவில்லை.
“நீயா வருவன்னு பார்த்தேன். வரலை. அதான் நானும் சும்மா பேச்சுக்காக மட்டும் உன்னை தூக்கிட்டு போகனுமான்னு ஒவ்வொரு தடவையும் கேட்கல. நிஜமாதான் கேட்டேன். நீயும் அதை கண்டுக்கவே இல்லை. அதான் எதுக்கு பர்மிஷன் கேட்கனும்னு தூக்கிட்டேன். எப்டி?…” என்று பெருமை பேச அவளது பொறுமை பறந்தது.
திமிறிக்கொண்டு இறங்க முற்பட அதை செயல்படுத்த விடாமல் தங்களது அறைக்கு சென்று தானே இறக்கிவிடவும் தான் அவளால் தரையில் நிற்க முடிந்தது. ஆனாலும் இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏனோ முச்சுமுட்டியது அந்த அறைக்குள்.
“இங்க பாரு உங்கப்பாம்மா சம்மதம் கிடைக்கவும் தான் நம்மோட வாழ்க்கையை துவங்கணும்னு நினச்சேன். அது கிடைச்சிருச்சு…” என்று கூலாக கூறிவிட்டு அவளை நெருங்க முயல அவளோ அவனை முறைத்துகொண்டு,
“அப்போ என் சம்மதம் முக்கியம்னு தோணலையா?…” என கெத்தாக கேட்டவளின் கழுத்தை வளைத்தவன்,
“உன் சம்மதம் கிடச்சுதான் ரொம்ப நாளாச்சே? இன்னொரு முறை வாங்கனுமா என்ன?…” என்று அவளை நன்கு அறிந்தவனாக கூறவும் பிடிபட்டவளாக முழித்தவள் அவனது விழிவீச்சிலிருந்து தப்ப அவனது தோள்களிலேயே தன் முகத்தை மறைத்தவளை சிறு புன்னைகையோடு தனக்குள் புதைத்துக்கொண்டான்.
காதலையே ஆராவரமில்லாமல் வெளிப்படுத்திக்கொண்டவர்களுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச இடைவெளியும் தயக்கங்கள் தகர்த்து சருகாய் உதிர்ந்து அவர்களின் தாம்பத்திய வாழ்விற்கு வழிவிட்டது. அழகான இல்லற வாழ்க்கையில் இருமனம் ஒப்பி இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து பயணிக்க தொடங்கினர்.
விடியலில் பூஜையறைக்கு வந்து விளக்கேற்றிய நந்தினியின் சிவந்த முகத்தில் இருந்த பரவசமும் மிச்சமிருந்த நாணத்தையும் காணாமல் கண்ட நாச்சிக்கும், பாக்கியத்திற்க்கும் இனி பிரச்சனைகள் தங்களை அண்டாது என்றெண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திகொண்டனர்.
அடுத்த மூன்றுநாட்களுக்கு நந்தினியோடு கொடைக்கானல் சென்றுவிட்டு அன்று காலை தான் வந்தவனிடத்தில் நாச்சியும் கிருஷ்ணமூர்த்தியும் தனம் வீட்டிற்கு சென்று வருமாறு கூறியதும் உதயாவிற்கு தூக்கிவாரிபோட்டது.
இன்னைக்கு நேரமே சரியில்லையே. தனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்காக சோதனை? என்று தனக்குள் புலம்பியவனை அழைத்த கிருஷ்ணமூர்த்தி,
“என்ன பிரபா யோசனை?, தனம் உங்களை விருந்துக்கு வரசொல்லி நாளாச்சுப்பா. போகாம இருந்தா நல்லா இருக்குமா?…” என்று கேட்க,
“இல்லைப்பா கார்மெண்ட்ஸ் ல வேலைகள் நிறைய இருக்குதே?, அதையெல்லாம் முடிச்சிட்டு மெதுவா போகட்டுமா?…” என்று இழுத்தான்.
அங்கே போனால் பிரசாத்தை நந்தினி பார்க்க நேரிடும். அதன் பின்னால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வருமோ? என்று இதிலிருந்து தப்பும் மார்க்கம் கிடைக்குமா என்று மனம் துரிதகதியில் தேடத்தொடங்கியது.
அவனது நினைப்பிற்கு வாய்ப்பளிக்காமல் இடைபுகுந்த நாச்சி,
“அங்க ஆயிரம் வேலை தினத்திற்கும் தான் இருக்குது. அதுக்குன்னு ஆகவேண்டிய காரியத்தை பார்க்காம தள்ளியா போடமுடியும்? அதை பார்த்துக்கத்தான் விஷ்ணுவும், உன் மாமாவும் இருக்காங்களே? நீ இன்னைக்கு போய்தான் ஆகணும். நான் போய் உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லி கிளம்ப சொல்றேன்…” என்று தன் அறை நோக்கி நகர்ந்த நச்சியை நிறுத்தி தானே அவளிடம் சொல்லி அழைத்துச்செல்வதாக உறுதியளித்துவிட்டு மாடிக்கு சென்று மறைந்தான்.
அறைக்குள் நுழைந்தவன் நந்தினி குளியலறையில் இருப்பதை உறுதிபடுத்திவிட்டு பால்கனிக்கு நகர்ந்தவன் மொபைலை எடுத்து தனத்திற்கு அழைத்து விட்டு அவரது குரலுக்காக காத்திருந்தான்.
“சொல்லுப்பா பிரபா, ஊர்ல இருந்து வந்துட்டியா?..” என்று வாஞ்சையாக கேட்ட தனத்தின் குரலில்,
“நான் நல்லா இருக்கேன் சித்தி, நீங்க எப்டி இருக்கீங்க?..” என்று அன்போடு கேட்டான்.
“எனக்கென்னப்பா இருக்கேன், அதை விடு நீயும் என் மருமகளும் வீட்டுக்கு எப்போ வருவீங்க?…” என்று கேட்டதும்,
“ம்ம் அப்பா சொன்னாங்க சித்தி. இன்னைக்கே வரோம். ஆனா பிரசாத்?…” என்று இழுக்க,
“நீ கவலைபடாம வா. மதிய சாப்பாட்டுக்கே வந்திருங்க. நீங்க வரும் போது அவன் இருக்கமாட்டான்…” என்று சற்று சத்தமாக சொன்னவரது குரலிலேயே அவரது அருகில் பிரசாத் இருக்கிறான் என்பது தெளிவாகியது உதயாவிற்கு.
“சாரி சித்தி…” என்று குற்ற உணர்வோடு கூறி மன்னிப்பை வேண்ட,
“ச்சே ச்சே அதெல்லாம் சொல்லாதே பிரபா, எனக்கு தெரியாத. அதை விடு நீயும் நந்தினியும் புறப்பட்டு வாங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டு பிரசாத்தை பார்க்க அவனோ புரிந்தாற்போல கசந்த முறுவலோடு வெளியே கிளம்பிச்சென்றான்.
வார்த்தையால் சொல்லாமல் தன் பார்வையிலேயே புரிந்துகொண்டு வெளியேறிய மகனை பார்த்த தனத்திற்க்கோ உள்ளமெல்லாம் வலித்தது. இது அவனாக ஏற்படுத்திக்கொண்டதுதானே. மகனது மனவாட்டம் புரியாதவரா? ஆனாலும் வேறு வழியில்லையே.
உதயா வரும் போது இவன் பிரச்சனை ஏதும் செய்து வம்பிழுத்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் தனம் நினைத்தார். அதனால் தான் உதயா தயங்கினான் என்றும் தவறாக எண்ணினார். அவருக்கு தெரியாதது தன் மனைவிக்காகத்தான் உதயா தயங்கினான் என்பது. பிரசாத்தால் எத்தகைய ஆபத்தை நந்தினி சந்தித்தாள், அவனால் எவ்வாறு பாதிக்கபட்டாள் என்று அறிந்தால் தனத்தின் மனநிலை எவ்வாறு மாறுபடும், தன் மகனை மன்னிப்பாரா?
இங்கே உதயாவும் நந்தினியும் காலை உணவை முடித்துக்கொண்டு பிரசாத் இல்லத்திற்கு கிளம்பினார்கள்.
நந்தினி எங்கே யார் வீட்டிற்கு போகிறோமென்று கேட்டதற்கு, நெருங்கிய சொந்தம், தனக்கு சித்தி என்று மட்டும் கூறியவன் வேறெதுவுமே கூறவில்லை.
கிளம்பும் போதே பாக்கியமும் நாச்சியும் பலகாரங்கள் அடங்கிய சில பாத்திரங்களை கொடுத்து தனத்திடம் கொடுத்துவிட்டு பொறுமையாக இருந்து பேசிவிட்டு வருமாறு சொல்லவும் தனம் யாரென்று பாக்கியத்திடம் கேட்டாள்.
“தனம் எனக்கு சகோதரி முறை வேணும் நந்தும்மா. சில காரணத்தால பிரிந்து இருக்க வேண்டியதாகிவிட்டது…” என்று பெருமூச்சு விட,
பிரசாத் பத்தி எதுவும் சொல்லிவிடுவார்களோ என்றஞ்சி அவர்களின் பேச்சை துண்டித்து வேறுதிசைக்கு திருப்பினான்.
“நானும் நந்தினியும் கோவிலுக்கு போய்ட்டு தனம் சித்தி வீட்டுக்கு போறோம்…” என்று சொல்லிவிட்டு மேலும் பேச்சை வளர்க்காமல் நந்தினியோடு வாசலுக்கு விரைந்து விட்டான்.
“பிரசாத் நந்தினி முன்னால ஏதும் பிரச்சனை பண்ணிடுவானோன்னு பிரபா கவலைப்படறான் போல அத்தை. அவன் முகமே ஒரு மாதிரி வாட்டமா இருக்கே?..” என்று பாக்கியம் நாச்சியிடம் வருந்த,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாக்கியா. நீ கவலைபடாதே. தனத்திற்கு தெரியாததா?. எல்லாம் அவ பார்த்துப்பா. இப்படியெல்லாம் நினச்சு போகாம இருக்கமுடியுமா?…” என்று பாக்கியத்தை சமாதானபடுத்திவிட்டாலும் கிருஷ்ணமூர்த்தியின் முகமும் அதைதான் எண்ணிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர் ஒன்றும் செய்ய இயலாமல் பூஜையறைக்கு சென்றுவிட்டார்.
போனவர்கள் போகும் போது இருந்த சந்தோஷத்தோடே திரும்பி வரவேண்டுமென்று பிராத்தனை மட்டுமே செய்ய முடிந்தது.
இவர்கள் அனைவரும் யாரால் பிரச்சனை வரும் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்களோ இவர்களின் சஞ்சலத்திற்கு சொந்தக்காரன் தங்கள் இல்லத்திலேயே நுழைய ஆகவேண்டிய காரியங்களை வெற்றியோடு முடித்துவிட்ட திருப்தியில் அவ்வூரிலேயே இல்லை என்பதை அறியாமல் போய்விட்டனர்.
உதயா தம்பதியினர் வெளியே சென்ற சிறிதுநேரத்தில் பிரசாத்தின் ஏற்பாட்டால் வள்ளி என்னும் பெண் கௌரியின் கல்யாண வேலைக்கு உதவியாக இருப்பாள் என்ற போர்வையில் வேணியின் சொல்லுக்காக நாச்சியால் வேலைக்கு அமர்த்தபட்டாள்.
இனி வேணியின் எண்ணங்களுக்கு பிரசாத்தின் கட்டளையின் பெயரில் செயல் வடிவம் கொடுக்க வந்துவிட்டாள்.
உதயா நந்தினியின் நிம்மதிக்காக பெரிய பள்ளத்தை பறித்து தக்க சமையத்தில் அதில் அவர்களை தள்ள திட்டம் தீட்டினார் வேணி. அதற்கு பிரசாத்தும் ஒத்துழைப்பு தர இனி தான் நினைத்ததெல்லாம் நிறைவேறிவிடும் என்ற இறுமாப்போடு வள்ளியை பார்த்து சிரித்தார். விதியும் சிரித்தது.
பிரசாத் வீட்டிற்கு சென்ற உதயா திரும்பி வரும்போது முகம் முழுவதும் பதட்டத்தோடு கைகளில் மூச்சுப்பேச்சில்லாமல் இருக்கும் நந்தினியை ஏந்தியவாறே வீட்டினுள் நுழைந்தான். அவன் பின்னே டாக்டர் பெருமாள்சாமியும்.