அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த முடிவை கூற ஜோசியர் தலை நிமிர்த்தியதும் இருக்கையின் நுனியில் வந்தமர்ந்த விஷ்ணுவிடம்,
உதயா, “அடச்சீ!!! ஒழுங்கா உட்காரு. உன்னை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப ஆடர் வாங்க போறமாதிரி ஆக்ட் பண்ணுற? தாங்க முடியலைடா. அடங்கு…” என்று கூறவும் சரியாக அமர்ந்து இளித்தான்.
ஜோசியர் விஷ்ணு கெளரி இருவருக்கும் பொருத்தங்கள் சரியாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் ஒரு சுபமுகூர்த்தம் இருப்பதாகவும் அந்த நாளில் திருமணத்தை வைத்துகொண்டால் மிக நல்லதெனவும் கூறி சடுதியில் விஷ்ணுவின் விரோதியாக அவதாரமெடுத்தார்.
அனைவரும் ஜோசியர் குறித்த நாளிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளலாமென முடிவெடுத்தனர்.
தன் தகப்பனை கண்ட விஷ்ணு “புள்ளைக்கு ஏழு கழுதை வயசுக்கு மேல வயசாகுதே சட்டுபுட்டுன்னு பத்து பதினஞ்சு நாளுக்குள்ள நல்ல நாளா பார்த்து கல்யாணத்தை பண்ணி சீக்கிரம் பேரன், பேத்தியை பார்த்தோமா, அதை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்பி அழைச்சுட்டு வந்தோமான்னு இல்லாம இங்கே இவங்க சொல்றதுக்கெல்லாம் நல்லா தஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டிவைக்காங்களே?…” என முணுமுணுக்க அது சரியாக உதயாவின் காதில் விழுந்துவைத்தது.
“மச்சான்…” என அழைத்து விஷ்ணுவின் கண்ணீர் வராத கண்களை துடைத்து விட்டு,
“புரியுது மச்சான் புரியுது. கல்யாணத்தை இவ்வளோ சீக்கிரமா வைக்கிறாங்கன்னுதானே நீ வருத்தபடர? நான் வேணும்னா…” என்ற வாக்கியத்தை உதயா முடிக்க கூட இல்லை அவசரமாக அவனது வாயை தான் கரங்களால் அடைத்த விஷ்ணு,
“போதும் ராசா, இன்னைக்கு இந்த அளவு போதும். இதுக்குமேல தாங்கமாட்டான் இந்த விஷ்ணு. எனக்குன்னு வந்து சேர்ந்திருக்குதுங்க பாரு…” என தன் போக்கில் பிதற்றிக்கொண்டிருந்தான்.
நிச்சயதார்த்தம் திருமணத்திற்கு முதல்நாள் வைத்து கொள்வதாக ஒருமனதாக தீர்மானிக்க பட்டது. ஒருவழியாக அனைத்தும் பேசிமுடித்து ஜோசியர் கிளம்பிவிட மற்ற விஷயங்களை தங்களுக்கு ஆலோசிக்க தொடங்கினர்.
தங்களின் கருத்துக்களை அனைவரின் முன் ஒவ்வொருவரும் எடுத்துரைக்க அதில் நந்தினியின் குடும்பத்தினரையும் உள் இழுத்துகொண்டனர். ஏழுமலையிடமும் நேசமணியிடமும் எப்படி செய்யலாம் என அவர்களது எண்ணங்களையும் கேட்டு அவர்களுக்குண்டான மரியாதையை சரியாக செய்தனர் உதயா குடும்பத்தினர்.
அவர்களது உரிமைப்பேச்சிலும், தங்களை வேறாக எண்ணாமல் அவர்களின் குடும்பத்தில் மிக இலகுவாக இணைத்துக்கொண்ட பாங்கிலும் ஏழுமலையின் மனதில் இருந்த நூலிழை சுணக்கமும் காணாமல் போய் முகமே மலர்ந்துவிட்டது.
அனைத்தும் பேசி முடித்து மாலை நெருங்கியதும் ஏழுமலை குடும்பத்தினர் கிளம்ப ஆயத்தமானார்கள்.
“நாங்க கிளம்பறோம் சம்பந்தி. இப்போவே கிளம்பினாத்தான் நைட் வீட்டுக்கு போக சரியா இருக்கும்….” என்று ஏழுமலை கூறவும் கிருஷ்ணமூர்த்தியோ அதை மறுத்து,
இல்லை சம்பந்தி இங்க இரண்டுநாள் தங்கி எங்க எல்லோரோடும் சேர்ந்து இருந்துட்டு போகலாமே?…” என்று கேட்டார்.
“அதற்கென்ன? இன்னொரு முறை வந்து தங்கிட்டா போச்சு. ஊருக்கு போய்ட்டு ஒரு நல்ல நாளா பார்த்து மாப்பிள்ளையையும் பொண்ணையும் மறுவீட்டுக்கு அழைக்கவரோம்…”என கூறிக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றவர் நந்தினியிடம் வந்து சொல்லிக்கொள்ளும் போது உடைந்துவிட்டார்.
மகள் கலங்குவதை பொறுக்காமல் தன்னை தேற்றிக்கொண்டு, “கிளம்பறோம் மித்தும்மா. உடம்பை கவனிச்சுக்கோ. இங்க பதவிசா நடந்துக்கணும் என்ன? அப்பா போய்ட்டு வரேன்…” என கூறிவிட்டு நகர்ந்தவரின் முன் வந்து நின்றான் உதயா.
வழிமறித்து நின்றவனை பார்த்தவர் எதற்கென புரியாமல், “மாப்பிள்ளை…” என்று அவரை அறியாமலே அழைத்தும் விட்டார். அந்த ஒற்றை வார்த்தையில் ஏழுமலையின் மனதில் உதயா மேல் உள்ள வருத்தம் மறைந்து இருவரும் சுமூகமாகி விட்டதில் அனைவருக்குமே நிறைவை தந்தது.
“இருங்க மாமா…” என்றவன் கௌரியிடம் ஏதோ கிசிகிசுக்க கௌரியும் உள்ளே சென்றவள் திரும்பி வரும் போது கையில் அட்சதை பூவும் விபூதி குங்குமமும் நிறைந்த ட்ரேயை எடுத்து வந்தாள்.
தம்பதி சமேதரராக ஏழுமலை சந்திராவை நிற்கவைத்து நந்தினியோடு அவர்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் வாங்கினான் உதயா. இச்செயலில் ஏழுமலையின் மனதில் உதயாவின் மேல் மதிப்பை கூட்டியது.
நெகிழ்வோடு ஆசிர்வதித்தவர், கண்களை துடைத்துக்கொண்டதும்,
‘என்ன மாமா சும்மா பூவை போட்டு ஆசிர்வாதம் பண்ணினா போதுமா?, பதினாறு பெற்று பெருவாழ்வு வாழணும்னு வாழ்த்தாட்டிலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் பதினாறுல ஆறாவது பெத்துக்கோங்கன்னு வாழ்த்தலாமில்ல…” என்று தன் மாமனாரை பார்த்து கண் சிமிட்டி கூறி அவரை வாயடைக்க வைத்தான்.
முதலில் திகைத்தாலும் அவனது சகஜமான உரையாடலில் தானும் கலந்துகொண்டார்.
“ஏன் மாப்பிள்ளை ஆறு மட்டும்?. பதினாறும் சேர்த்து சொன்னாலும் வேண்டாம்னா சொல்லுவீங்களா?…” என மருமகனுக்கேற்ற மாமனார் என்று நிரூபித்தார். ஏழுமலையின் கேலியில் நந்தினி குடும்பத்தாருக்கு தலையே சுற்றிவிட்டது. பேசியது ஏழுமலையா என்ற சந்தேகமும் பிறக்க தங்களை கிள்ளி நடந்தது உண்மையா என்று உடனடியாக உணர்ந்துகொள்ள விழைந்தனர்.
விஷ்ணுக்கோ, “ஆரம்பிச்சுட்டான். இவன் வெறும் கையாலேயே சிக்ஸர் அடிக்கிறவன். கையில மட்டையை குடுத்து அடிக்க சொன்னா இனியும் சும்மா இருப்பானா?…” என்று ஒரு பெருமூச்சோடு கெளரி பக்கம் பார்த்தால் அவளோ தன் அண்ணனை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாள்.
“உனக்கு குடுத்துவச்சது அவ்வளோதாண்டா விஷ்ணு…” என்று தானும் கௌரியின் வேலையை பார்க்க தொடங்கினான். வேடிக்கை பார்க்கும் வேலை.
ஏழுமலை சாதாரணமாக இவ்வாறு பேசுபவரல்ல. இன்றைய நிகழ்வுகளும், புகுந்த வீட்டில் மகளின் மணவாழ்வு அளித்த நிம்மதியும் என்ற ஏகாந்தமான மனநிலை அவரின் இயல்பையே மாற்றி மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரை திக்குமுக்காட வைத்துக்கொண்டிருந்தது.
ஏழுமலை தம்பதியினரை தொடர்ந்து நேசமணி, பூரணி கோசலை என அனைவரிடமும் ஆசி வாங்கியவன் கோசலையிடம், “நீங்க சொன்னதை அன்னைக்கே கேட்டிருக்கலாமோன்னு தோணும்மா. இரண்டரை வருஷம் வீணாப்போச்சு..” என்று பெருமூச்சுவிட்டவனை பார்த்து நகைத்தவர்,
“அதனால என்னப்பா, நீங்க ரெண்டுபேரும் சேர்ந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்..” என்று அகமகிழ்ந்து சொன்னவரை கண்டு புன்னகைத்தான்.
“சரி சரி கிளம்பலாம் நேரமாச்சு…” என்று விஜி துரிதப்படுத்த அவனை முறைத்த நந்தினி தன் தாயோடு வாசலுக்கு சென்றாள். உடன் அவள் கணவனும்.
சந்திராவின் முகத்தை பார்த்தே அவரது எண்ணவோட்டத்தை புரிந்தவனாக, “நந்தினியை நான் பார்த்துப்பேன் அத்தை. கவலைபடாமல் போய்ட்டு வாங்க. நாங்களும் சீக்கிரமே மீனாட்சிபுரம் வருவோம்…” என்று நந்தினியை தோளோடு அணைத்துக்கொண்டே அவன் கூறிய மருமகனை மெச்சாமல் இருக்கமுடியவில்லை.
“புரிந்துகொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. நாங்க கிளம்பறோம்…”என்று கரம் கூப்பி விடைபெற்று அனைவரும் கிளம்பிவிட்டனர்.
அவர்களது வாகனம் பார்வையிலிருந்து அகலும் வரையில் கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டே இருந்தாள் நந்தினி. இனி தன குடும்பத்தினரை எப்போது தன வீட்டிற்கு செல்வோம், அனைரையும் பார்ப்போமென்னும் ஏக்கம் முழுவது விழிகளில் நிரம்பி ததும்பியது.
அவளது உணர்வுகள் புரிந்தது போல அவளை அணைத்திருந்த தன் கைகள் அவளது தோள்களில் ஆறுதலளிக்கும் விதமாக அழுத்தம் கொடுத்தது. அவளது கண்களில் நிறையவிருந்த கண்ணீர் கண்டதும் இனியும் தாமதித்தால் டேமை திறந்துவிடுவாள் என்றெண்ணி அவளை திசைதிருப்பும் விதமாக தன் மனையாளை பின்னால் இருந்து அணைத்தவன்,
“அப்புறம்..” என்று கழுத்துவளைவில் குறுகுறுக்க,
அவனது நெருக்கத்தில் தன்னை மீட்டெடுத்தவள், “ஐயோ என்ன இது வாசல்ல, யாராச்சும் பார்க்க போறாங்க…” என்று பதறி விலகபார்த்தாள்.
“ம்ஹூம் யாரும் பார்க்க வாய்ப்பே இல்லை மேடம்…” என்று விடாமல் பேசினான்.
லேசாக இருள் கவிழ தொடங்கிய அந்த மாலை பொழுதில் ஆள் அரவமில்லாத போர்டிக்கோவின் அருகில் அவன் சொன்னது போல யாரும் பார்க்க முடியாதுதான். ஆனாலும் அவனிடமிருந்து விலகி நின்றவள் அவனை முறைக்க முயன்று அவனது பார்வையில் விழிகளை தாழ்த்திக்கொண்டு உள்ளே செல்ல திரும்ப,
“அப்புறம் என்னனு கேட்டதுக்கு பதிலே சொல்லலையே?..” என்று அவளை விட்டு விலகி நின்றாலும் அவனது பார்வை நந்தினியை தழுவியபடியே இருந்தது.
மெல்ல சுதாரித்தவள், “என்ன கேள்வி இது?. அப்புறம் என்ன சாப்பிட்டு தூங்கனும். அவ்வளவுதான்…” என்று வேகமாக கூறியவள் உதயா வேறேதும் சொல்லும் முன் சென்றுவிடலாம் என நினைக்க அவளை வழிமறித்தவன்,
“நினைப்புத்தான். தூங்குவியோ?, ம்ம் பார்க்கலாம்…” என்று குறும்போடு கூறிவிட்டு அவளை முந்திக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான் உல்லாசமான மனநிலையோடு.
நந்தினிக்குத்தான் கால்கள் நகர மறுத்து அவ்விடத்திலேயே வேரூன்றி போய்விட்டது. சிறிதுநேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு உள்ளே சென்றால் அவனது பார்வை வீச்சு அவள் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்தன. இதனால் நகரும் ஒவ்வொரு கணமும் நந்தினிக்கு அவஸ்தையை கொடுத்தது என்றால் மிகையல்ல. ஆனாலும் அதை அவளது மனம் விரும்பத்தான் செய்தது.
சிறிது நேரத்திலேயே விஷ்ணு குடும்பத்தினரும் இரவு உணவை முடித்துகொண்டு புறப்பட்டுவிட்டனர். இரவு நெருங்க நெருங்க நந்தினிக்கு திண்டாட்டமாகவும் உதயாவிற்கு கொண்டாட்டமாகவும் போய்விட்டது.