நட்சத்திர விழிகள் – 12
விஷ்ணுவின் திடீர் செய்கையில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் விழித்தாள் கௌரி.
“உங்களுக்கென்ன ஆச்சு?…” என உள்ளூர உருவான படபடப்பை மறைக்க படாதபாடுபட்டவாறே கேட்கவும்,
“அதான் சொன்னேனே காதலிக்கலாம் அப்டின்னு…” என்றான் கூலாக.
“என்ன விளையாடுறீங்களா? அதான் கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்கள்ள. அப்றம் என்னவாம்?…” என்று கூறினாள்.
இன்னும் அவன் மண்டியிட்டு பூவை கௌரியை நோக்கி நீட்டிய நிலையிலேயே இருக்க அதை யாராவது பார்த்தால் என்னவாகும் என கலவரபட்டாள். அவனோ அதுபற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.
“நான் இப்போதானே உன் கிட்ட சொன்னேன், லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும்னு. கல்யாணம் முடிவு பண்ணினா காதலிக்க கூடாதுன்னு எவன் சொன்னான்?…” என்று எகிற,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கிளம்புங்க யாராவது வந்திரப்போறாங்க…” என அவனை அனுப்புவதிலேயே குறியாய் இருக்க,
“ஏய் சவுரி, கொஞ்சமாவது இரக்கம் இருக்கா உனக்கு? எவ்வளோ நேரம் இப்டி மண்டி போட்டுட்டு இருக்கேன். டக்குன்னு மாமா ஐ லவ் யூ அப்டின்னு பளிச்சுன்னு சொல்லிட்டு நான் குடுக்குற இந்த ரேடியோவை காதோரம் சொருகு பார்ப்போம்…” என்றவனை நன்றாக முறைத்தாள்.
“இப்டிலாம் ரொமான்ஸ் லுக் விட்டா அப்புறம் மாமா கண்ட்ரோல்ல இருக்கமாட்டேன். அப்புறம் நடக்கும் சம்பவம் எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது…”
“என்னது, என்ன சொன்னீங்க?…” என கெளரி குதிக்க,
“ம்ம். சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன். ஏற்கனவே சரி நமக்கு அரேஞ்ச்டு மேரேஜ் தான்னு மனசை தேத்திட்டேன். ஆனாலும் லவ் பண்ணனும்னு ஆசை இன்னமும் மனசுலையே சுத்திட்டு இருக்கு. நாமா பார்க்கிற பொண்ணை பண்ணாதான் லவ்வா? நமக்கு பார்த்திருக்கிற பொண்ணையும் காதலிக்கலாமேன்னு இப்போ தோணுது…” என ஆவலே வடிவாக கேட்டவனை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க அவ்விடம் விட்டு அகல நினைத்தாள்.
விஷ்ணுவோ வழிவிட்டால் தானே?
“சவுரி இப்போ ஓகே சொல்லபோறியா இல்லையா?…” என்று மிரட்டும் தொனியில் கேட்கவும் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்த கெளரி,
“சொல்ல முடியாது. இல்லைன்னா என்ன பண்ணுவீங்க?…” என்று தெனாவெட்டாக கேட்கும்,
“அங்க உன் அண்ணன் அலும்பு தாங்கலை. நீயெல்லாம் அவனுக்கு தங்கச்சியா? சின்ன கேப் கிடச்சா கூட சந்துல சிந்து பாடிட்டு இருக்கான் உன் பாசமலர். நீ என்னடான்னா இன்னும் பப்பரமிட்டாயை சப்பிட்டு இருக்க. எல்லாம் என் நேரம்….” என்று புலம்பியவன் வானத்தை பார்த்து,
“போச்சு, போச்சு எல்லாம் போச்சு. டேய் விஷ்ணு இனி உன் லைப் அவ்வளோதாண்டா…” என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர எத்தனிக்க அவனை தடுத்தாள் கெளரி.
அவனது ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் தான் அவனை நிறுத்தினாள். அதன் பின் அவனிடம் பேச நாவெழாமல் அங்குமிங்கும் பார்த்தவளை கண்டவனுக்கோ சிரிப்பு தாளவில்லை. அவளே பேசட்டுமென்று முகத்தை இன்னும் அப்பாவியாக வைத்துக்கொண்டு நின்றான்.
“ம்க்கும்…” என தொண்டை செருமியவள், “இங்க பாருங்க, நீங்க வந்து என்னமேன்னமோ பேசறீங்க? எனக்கு இப்டிலாம் பேசவராது. ஆனாலும்…” என இழுக்க,
“ஆனாலும் என்ன சொல்லு சவுரி சொல்லு…” என அவளை ஊக்குவித்தான்.
அவள் மேல் தனக்குண்டான காதலுக்கு சற்றும் குறைவில்லாத காதலோடான தேடலை அவள் கண்கள் பிரதிபலித்தாலும் அது அவளிடமிருந்து வாய்மொழியில் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பினை எங்கே பொய்த்துபோக செய்துவிடுவாளோ என்றஞ்சினான்.
இவ்வாறு அவன் யோசிக்க வார்த்தைகளில் தான் புரியவைக்கவேண்டுமா? உணர்ந்தால் போதாதா? தன் கண்களே காட்டிகொடுத்ததே என்று கெளரி எண்ணினாள்.
அவனை முறைத்துக்கொண்டே, “ஆனாலும் உங்களை போல சட்டுன்னு இப்டி சொல்ல வராது. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. என் மனசு உங்களை விரும்பறதா தான் தோணுது. அதை இப்டி பொட்டுல அடிச்சது போல சட்டுன்னு சொல்ல வராது. எனக்கும் வெக்கம், கூச்சம் இதெல்லாம் இருக்குமில்லயா?…” என இன்னும் இடுப்பில் இருக்கும் கையை எடுக்காமல் அவனை நேருக்கு நேர் பார்த்து முறைத்துக்கொண்டே எல்லாம் சொல்லிகொண்டே சொல்ல வராது என்று கூறினாள் கெளரி.
விஷ்ணுவிற்கோ கெளரிக்கு தன்னை பிடிச்சிருக்கு, விரும்பறேன் என்றதை கேட்டு ஆகாசத்தில் மிதந்தாலும், கூச்சம், வெக்கம் பற்றி சிறிதும் கூச்சப்படாமல் சொன்ன கௌரியை பார்த்து சிரிப்பை அடக்க வழி தெரியாமல் கடகடவென சிரித்துவிட்டான்.
அவனது நகைப்பு இன்னும் கௌரியை கோபத்திற்குள்ளாக்கியது. தான் அப்படி என்ன சொல்லிட்டோம்னு சிரிக்கிறான்? விரும்பறதா சொல்றது அவ்வளோ கேலிக்குரிய விஷயமா? என தனக்குள் பொருமியவள் அவனிடம் என்னவென்று கேட்டும் விட்டாள்.
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்டி கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறீங்க?….” என கோவத்தோடு கேட்கவும்,
“அதில்லை சவுரி பொண்ணுங்கன்னா இப்டி முறைச்சுட்டே தான் வெக்கப்படுவாங்களா? அதுவும் இந்த ஊர்ல?…” என இன்னும் கேலியாக முறுவலித்தவாறே கேட்கவும்,
அவ்வளவு தான் மலையேறியே விட்டாள் கெளரி. “ஓஓஹோ!!! அப்டி எத்தனை பொண்ணு சார் உங்க கிட்ட வந்து வெட்கப்பட்டு பார்த்திருக்கீங்க?…” என கிடுக்கிபிடி போட்டாள் கெளரி.
அவளது எதிர்க்கேள்வியில் நொந்தே விட்டான். பேந்த பேந்த விழித்தவன் அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அலறிவிட்டான்.
“சவுரி!!! அம்மா தாயே நீ ஆளை விடு, கல்யாண பேச்சு ஆரம்பிச்ச அன்னைக்கே அமர்க்களமா? இப்போ நீ பண்ண பாரு இதுதான் வெட்கம், கூச்சம் ஒத்துக்கறேன். தெரியாத்தனமா கேட்டுட்டேன்…” என்று கூறி விட்டு அகன்றவனை,
“நில்லுங்க…”
“எதுக்கு?. திருப்பி எனக்கு பல்ப் குடுக்கவா? எதுல ஒற்றுமையா இருக்கணுமோ அதுல இல்லை, ஆனா என்னை ரிவிட் அடிக்கிறதுல அண்ணனும் தங்கச்சியும் ஒண்ணு…” என்று சலித்தவனிடம்,
“உங்களோட அந்த ரேடியோவை குடுத்துட்டு போங்க…” என்று கறாராக கேட்டவளை பார்த்து எங்கேயாவது போய் முட்டிகொண்டால் என்னவென்றுதான் தோன்றியது. அவனது முகபாவனைகளை கவனித்தவண்ணம் அவனது கையிலிருந்த செம்பருத்திப்பூவை வாங்கி தலையில் சூட்டியவள் அவனை பார்த்து,
“சொன்னால் மட்டும் தான் காதலா? சரியான மங்குனி மாக்கான். போடா ட்யுப்லைட்…” என வெட்கத்தோடு கூறிவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.
அவள் முதலில் சொன்னால் தான் காதலா என்றதையும் அதை சொல்லும் போது அவளது முகத்தில் தவழ்ந்த நாணத்தையும் ரசித்தவன் நொடியில் அதை விட்டுவிட்டு தன்னை ட்யுப்லைட் என்று சொல்லிவிட்டாளே என பரிதாபமாக நொந்தேவிட்டான். இப்போவே இப்படி திட்டுபவள் திருமணத்திற்கு பின் என்னவெல்லாம் பேசுவாளோ? என்ற திகிலோடு சிக்காமலா போய்விடுவாள் என்றெண்ணி கொண்டே உள்ளே சென்றுவிட்டான்.
விஷ்ணுவை எதிர்க்கொண்ட உதயா வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல்,
“என்னடா மச்சான், கூவமா இருக்க போல?…”என கோவத்தை கூவமாக்கி நக்கலடிக்க,
“உன் தங்கச்சி பேசினதை கேட்டா கூவமா இல்லாம கங்கையும் காவேரியுமாவா இருப்பாங்க?..” என திருப்பி நக்கல் கலந்து கடுப்படிக்க,
“கங்கா, காவேரியா? யார்ரா அது?. கெளரி, இங்க வா…” என வினையமாக கேட்டு அழைத்தவனை பார்த்த விஷ்ணு அவ்வளவுதான் அழுதுவிடுபவன் போல ஆகிவிட்டான்.
“டேய் அடப்பாவி, சத்தியமா சொல்றேண்டா நீயும் உன் தங்கச்சியும் நல்லா வந்துட்டீங்க. கல்யாணத்துக்கு முன்னமே டைவர்ஸா?…” என்று புலம்பிக்கொண்டே இருக்கையில் அமரவும் திருமணத்திற்கு நாள் குறிக்க குடும்ப ஜோசியர் வரவும் சரியாக இருந்தது.
அவருக்கு நந்தினி வீட்டினரை அறிமுகபடுத்தி விட்டு விஷ்ணு, கெளரி ஜாதகம் கொடுக்கப்பட்டதும் தன் வேலையில் ஆழ்ந்தார் ஜோசியர்.
விஷ்ணுவிற்கோ இருப்புக்கொள்ளவில்லை. என்ன சொல்லுவாறோ என அவன் தவித்த தவிப்பில் அவனது இருதயம் எகிறிக்குதித்து வெளியே வரப்பார்த்தது.
அனைவரும் விஷ்ணுவை பார்த்து நமுட்டுசிரிப்பொன்றை பரிமாறிகொண்டனர். அந்த அளவிற்கு விஷ்ணுவின் முகம் அப்படி காட்டிகொடுத்தது.
காலையில் அந்த குதி குதித்தோமே கல்யாணம் வேண்டாமென. இப்போது இந்த திருமணத்தில் எதுவும் தவறாகிவிட கூடாதென தத்தளிப்பதென்ன? என தன்னையே ஆச்சர்யமாக உணர்ந்தான் விஷ்ணு.