“அதில்லை மச்சி, உன் மாமனாரை சரிக்கட்ட உனக்கு எந்த ஹெல்ப்பும் வேணும்னாலும் தயங்காம கேளுடா. நான் நண்பேண்டா…” என மார்தட்ட,
“அப்டியா?… அப்போ ஏதாச்சும் கேட்கணுமே?…” என உதயா யோசிக்கும் பாவனைக்கு செல்ல அதை கண்ட விஷ்ணுவின் மனதில் அபாயமணி அடிக்க, “அவசர வேலை, அரைமணி நேரத்தில் வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு ஓட்டம் பிடித்தான்.
இவர்களின் பேச்சை ரசித்துகொண்டிருந்த விஜி, “பாவம் அண்ணா உங்க ப்ரெண்ட், ஏன் தான் இப்படி படுத்துறீங்களோ?…” என கேட்கவும்,
“நீ வேற அவன் சரியான எமகாதகன். என்னை இவ்வளோ நாளா ரொம்ப படுத்தினான். அதான் இப்போ நம்ம ரிவீட்..” என்று முறுவலோடு கூறினான்.
“ஏன் அண்ணா, நான் அவ்வளோ சொல்லியும் நீங்க ஏன் வீட்ல யார்கிட்டயும் நாங்க வரும் விவரத்தை சொல்லவில்லை. தப்பா ஏதாச்சும் நடந்திருந்தா?…” என தன் சந்தேகத்தை கேட்கவும்,
“அப்படி நடக்க வாய்ப்பே இல்லை விஜி. எனக்கு என் குடும்பத்தை பத்தி நல்லா தெரியும். அதனாலதான் வீட்ல சொல்லலை. போலியா எதுக்காக ஒரு விஷயத்தை நாம உருவாக்கணும். நம்மோட இயல்பிலேயே இருப்போமே. அதுமில்லாம உன் மாமா ஆசைபட்டதுபோல மகள் இங்க உண்மையிலேயே எப்படி இருக்கான்னு தெரிஞ்சுகிட்டாங்க. அது போதும்…” என கூறிய உதயாவை பார்த்தவனுக்கு அவன் மேல் இன்னும் பலமடங்கு மதிப்பு உண்டாகியது.
“அவர் எனக்கு மட்டும் தான் மாமாவா?..” என கேலியாக கூற,
“எனக்கொண்ணுமில்லை விஜி, அவரோட கோவம் குறையட்டுமேன்னு பார்த்தேன். நான் அவரை மாமான்னு கூப்பிடறேன். ஏற்கனவே அவருக்கு என்னை பார்த்தாலே காதுல புகை வருது. அப்புறம் மனுஷன் தசுபுசுன்னு மூச்சுவிட்டுட்டு புலம்பி தீர்ப்பார். தேவையா?…” என கூறி சிரிக்க அதில் விஜியும் இணைந்துகொண்டான்.
ஏழுமலைக்கு தன்னைத்தான் இருவரும் கிண்டல் செய்கிறார்களோ என்றொரு சந்தேகம். அவர்களையே குறுகுறுவென பார்க்க உதயா அவரை பார்த்து பளிச்சென சிரித்தான்.
உதயா புன்னகைத்ததும் அதிர்ச்சியாகி, “தனக்கு இது தேவையா?..” என்று சட்டென திரும்பிவிட்டார் ஏழுமலை.
அதை கண்டு இன்னும் பலமாக சிரித்தனர் உதயாவும், விஜியும்.
“சார்,…” என்று ஏழுமலை அழைக்கவும், யாரை என்று தெரியாமல் பார்த்தனர் கிருஷ்ணமூர்த்தி, சுதர்சனம், சங்கரன் மூவரும்.
ஏழுமலை அழைத்தது கிருஷ்ணமூர்த்தியை என்று பின் புரிந்ததும், “சம்பந்தி என்ன இது சார் அது இதுன்னு கூப்பிடறீங்க? சம்பந்தின்னு கூப்பிடுங்க. நாமதான் இப்போ ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிட்டோமே. அப்பறமும் ஏன் அந்நியமா நினைக்கறீங்க?, என்ன விஷயம் சம்பந்தி சொல்லுங்க?…” என்று சாந்தமாக பேசவும் ஏழுமலைக்கு பிரமிப்பாக இருந்தது. எப்படி பட்ட மனிதர்கள் இவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.
“அது வந்து சம்பந்தி. என் பொண்ணுக்கு நாங்க சீர்வரிசை செய்யணும்ல. உங்க அளவுக்கு இல்லாவிட்டாலும் எங்களால முடிஞ்சதை செய்யனும்னு நினைக்கிறோம். அதான்…” என்று ஏழுமலை இழுக்க,
“அதுக்கென்ன சம்பந்தி தாராளமா நீங்க விருப்பப்பட்டதை செய்யுங்க. நாங்க தடுக்கவே மாட்டோம். சீர் வாங்கிக்கறது உங்க பொண்ணோட உரிமை. அந்த உரிமையை யாரும் வேண்டாமென்று சொல்ல மாட்டோம்…” என்று பெருந்தன்மையாக கூறவும் நெகிழ்ச்சியோடு அவரது கையை பற்றிகொண்டார் ஏழுமலை. நேசமணிக்கும் பரம திருப்தியாகிவிட்டது அவர்களது குணநலன்கள்.
கிருஷ்ணமூர்த்தி சொன்னதில் தனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்பதுபோல அமைதியாக புன்னகையோடே இருந்தான் உதயா.
விஜிக்குத்தான் கோவம் பொத்துக்கொண்டு வந்தது. வரும் வழியில் அங்கே என் பொண்ணு எப்படி இருக்கிறாள் என்று பார்த்து அது தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே சீர்வரிசை கொடுப்பேன். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று தாம்தூம் என்று குதித்துக்கொண்டே வந்தவர் இங்கே பேசியதை பார்த்தும் செம கடுப்பாகிவிட்டான்.
பழைய விஷயங்கள் எதுவும் பேசாமல் தங்களை பற்றியும் பொதுவான சில விஷயங்கள் பற்றியும் பேசிகொண்டவர்கள் கௌரியின் கல்யாணத்தில் வந்து முடித்தனர். அனைவரும் பேச்சு மும்மரத்தில் சாப்பாட்டை மறந்திருக்க கௌரிதான் அனைவரையும் சாப்பிட அழைத்துவந்தாள்.
விஷ்ணுவை தவிர அனைவரும் வந்தமர்ந்துவிட அவனை காணமல் கௌரியால் சாப்பிட முடியவில்லை. இது என்ன வகையான அவஸ்த்தை என புரியாமல் தவித்தாள். இதுவரைக்கும் இப்படி தான் தவித்ததில்லையே என்று குழம்பினாள்.
அவளை அதிகம் காக்க வைக்காமல் வந்த விஷ்ணுவை பார்த்ததும் கௌரிக்கு முகம் தெளிந்தது. விஷ்ணு வரும் போதே கௌரியை பார்த்துக்கொண்டே தான் வந்தான்.
முதலில் அவளது குழம்பிய முகமும் பின் தன்னை கண்ட நொடியில் ஒளிர்ந்ததை எண்ணி, “ஆஹா!!!, சவுரிக்கு பலப் எரிஞ்சிடுச்சு போல…” என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டான். அவனது பார்வையை கண்டவள் தலையை சாப்பாட்டு இலைக்குள் புதைத்துகொண்டாள்.
கௌரிக்கு இது தன் அண்ணனுக்காக ஒத்துக்கொண்ட கல்யாணம் என்ற நினைப்பு மாறி விஷ்ணுவை பிடித்ததனால் தான் தான் ஒத்துக்கொண்டிருக்கிறோமோ என்ற சிந்தனை வந்து ஒட்டிக்கொண்டது. அந்த எண்ணம் அவளுக்கு ஒரு வகையில் சந்தோஷத்தை அளித்தது.
திடுமென ஏற்பாடு செய்த திருமணத்தால் வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டாலும் அதுவரை அலைபாய்ந்து கொண்டிருந்த விஷ்ணுவின் இதயம் அவனுக்கான கௌரியின் தேடலில் அவளிடத்தில் நிலையாக நின்றது.
அனைவரும் விருந்துண்டு முடித்து ஆசுவாசமாக வந்தமர்ந்தனர். பெண்கள் ஒருபுறமும் ஆண்கள் ஒருபுறமுமாக பிரிந்தமர்ந்தனர்.
ஏழுமலைக்கு தன் மகள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பது பெரும் உவகை தந்தாலும் ஏனோ உதயாவிடம் பேச மனம் முரண்டியது. மற்றவர்களிடம் நிறைவாக மகிழ்வோடு பேசியவர் தன் மருமகனிடத்தில் பேச மட்டும் சுணக்கம் காட்டினார்.
அதை சம்பந்தி வீட்டினர் பெரிதுபடுத்தாமல் இருந்ததே பெரியவிஷயமாக பட்டது. அதற்காக வேணும் சீக்கிரம் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
கோசலையோடு பேசிகொண்டிருந்த நந்தினியின் பார்வை அவ்வப்போது உதயாவை தொட்டு தொட்டு மீண்டது. அவளது பார்வையை உணர்ந்தவன் அங்கிருந்து நழுவி நந்தினியின் கண்களை விட்டு மறைந்தான்.
அவனை காணாது தேடிய நந்தினி கோசலையின் பேச்சை கவனிக்கவே இல்லை. தன் பேச்சில் கவனமில்லாமல் இருந்த நந்தினியின் அலைபாயும் கண்களை கண்டவர்,
“யேய் மித்து, நான் பேசறதை கூட கண்டுக்காம உனக்கு என்ன அங்க பார்வை?….” என அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினார்.
“அச்சோ!! அத்தை கிள்ளாத, சும்மா தான் பார்த்தேன், பேச விஷயம் கிடைக்காம நீதான் சொன்னதயே திருப்பி சொல்ற…” என கூறவும்,
“அடிப்பாவி, நான் சொன்னதை சொல்றேனா? என்ன சேட்டை? உனக்கு உதை வேணுமா?..” என்றவரிடம்,
“ம்ம்… உதய் தான் வேணும்…” என தன் கணவனை கண்களால் தேடிக்கொண்டே தன்னையறியாமல் சொல்ல,
“ஐயாம் ஆல்வேய்ஸ் யுவர்ஸ் ஒன்லி நந்துக்குட்டி…” என்றான் உதயா நந்தினியின் பின்னால் இருந்து. அவனது குரலை கேட்டவள் பதறி எழுந்தாள். அவளை நகர விடாமல் கோசலை கைபிடித்து அமர்த்திக்கொண்டார் பலத்த சிரிப்போடு.
கோசலை மட்டுமல்ல அங்கிருந்த பெண்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். சற்று தள்ளியிருந்த ஆண்களுக்கும் என்னவென விஷயம் புரியாமல் இருந்தாலும் அந்த சிரிப்பினில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டனர்.
நந்தினிக்கு வெட்கமாகிவிட்டது. இப்படி அனைவரின் முன்னால் மாட்டிக்கொண்டோமே என்று.
மெல்ல விழி உயர்த்தி உதயாவை நோக்க இன்று புதிதாக அவன் கண்கள் பேசிய ஜாலத்தில் அவள் நாணத்தோடு மனம் மயங்கினாள் என்றால் இவன் மனைவியின் நாணத்திலேயே மயங்கினான்.
விஷ்ணு, “இவன் எப்போ அந்த பக்கம் போனான், சின்ன கேப் கூட விடமாட்டிக்கிறானே. இவனை…” என கடுப்போடு அவனை அழைக்க செல்ல கெளரி பின்புறம் செல்வதை பார்த்தவன் தாமதிக்காமல் தலைதெறிக்க அவள் பின் ஓடினான். இன்றைக்கு எப்படியும் பேசிவிடவேண்டுமென்று.
தன் பின்னால் யாரோ ஓடிவரும் அரவம் சட்டென கேட்டு திரும்ப அவள் திரும்புவதை எதிர்பார்க்காத விஷ்ணு ஓடிவந்த வேகத்தில் அவளை முட்டிக்கொண்டு நின்றான்.
எதிர்பாராத இந்த நிகழ்வில் அதிர்ச்சியான கெளரி அவனை பிடித்து தள்ள பிடிமானமில்லாமல் கீழே விழுந்தவன்,
“யே சவுரி!,,, புருஷனை இப்படிதான் தூக்கிப்போட்டு மிதிக்கனும்னு அதுக்குள்ளே யாராச்சும் சொல்லி குடுத்துட்டாங்களா உனக்கு?…” என வழக்கம் போல வம்பாக கேட்டுவிட்டு கையை நீட்டினான்.
அவனது இயல்பான பேச்சில் தானும் “ஏன் நீங்களா எழுந்துக்க மாட்டீங்களோ?..” என்று கேட்கவும்,
“நீதானே தள்ளிவிட்ட. அப்போ நீயே கை குடுத்து தூக்கிவிடு. இல்லைனா யார் வந்து சொன்னாலும் எழுந்துக்கவே மாட்டேன்….” என படுத்தவாறே கால்மேல் கால் போட்டு அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் கைபிடித்து தூக்கிவிட்டாள்.
“விஷ்ணு டக்குன்னு ஒரு ரொமான்ஸ் லுக் விட்டு தொலை. மூஞ்சியை இப்படி வச்சுக்காதே…” என்று உடனடியாக அவனது மனம் மூளைக்கு செய்தியனுப்பியது. அதை செயல்படுத்துவதற்கு முன்,
“எதுக்காக பின்னால இப்படி வந்தீங்க?…” என கௌரியிடமிருந்து கேள்வி வரவும், “இங்க பாரு சவுரி…” இப்போது அவன் கூப்பிட்ட சவுரியில் கௌரிக்கு கோவமே எழும்பவில்லை.
“எனக்கு லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கனும்னு ஆசை. அதுமட்டுமில்லை அந்த மேரேஜ் கூட ஓடிப்போய் பண்ணிக்கணும். ஆனா உன் அண்ணா என்னடான்னா அந்த ஆசையில பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டான். அதனால…” என இழுக்கவும் எங்கே விஷ்ணுவிற்கு தன்னை பிடிக்குதா பிடிக்கலையா என்ற மெல்லிய சந்தேகம் உருவானதும் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.
“கல்யாணத்துக்கு முன்னால நாம லவ் பண்ணலாமா?…” எனவும் கௌரிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றாள்.
அதை பயன்படுத்தி அங்கிருந்த செம்பருத்தி பூவொன்றை பறித்தவன் அவள் முன் மண்டியிட்டு, “சவுரி ஐ லவ் யூ…” என்றான்.