“எல்லோரோட போனையும் ஆப் பண்ணி வாங்கி வச்சுட்டு அப்பறமா சொல்றாரு மித்ராவை பார்க்க போறோம்னு. அவ அங்க எப்டி இருக்கான்னு நேர்ல போய் தெரிஞ்சுக்கணும். அவங்க கிட்ட தகவல் சொல்லாம போகணும். முன்னாலே சொல்லிட்டா என் பொண்ணு அங்க எப்டி இருக்கா என்ற உண்மையை என்னால தெரிஞ்சுக்க முடியாது. நீங்க யாரும் சொல்லிடகூடாதுன்னுதான் போனை வாங்கி வச்சிட்டேன்னு சொல்றாரு….” என சொல்லி முடிக்கவும் உதயாவிடம் இருந்து வெடிச்சிரிப்பு கிளம்பியது.
எவ்வளவுதான் கட்டுபடுத்த நினைத்தாலும் அவனால் சிரிப்பை கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. இவன் சிரிப்பதை கேட்ட விஜிக்கோ சுவத்தில் முட்டிகொள்ளலாம் போல இருந்தது.
“அண்ணா போதும் சிரிச்சது, அப்பாதான் ஒரு டீ குடிச்சிட்டு போவோம்னு சொல்லி இங்க வழில ஒரு கடையில நிப்பாட்டிட்டு உங்க கிட்ட தகவல் சொல்ல சொன்னாங்க. அதுக்கும் சும்மா இருந்தாரா அந்த மனுஷன் யாருக்கு போன் எதுக்கு போன் அப்டின்னு உயிரை எடுத்திட்டு இருக்கார்…” என்று விஜி சொல்ல சொல்ல உதயாவிற்கு சிரிப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.
“நான் என் ப்ரெண்ட் கிட்ட இன்னைக்கு க்ளாஸ்க்கு வரலைன்ற விஷயத்தை சொல்லிட்டு வரேன்னு பொய் சொல்லி உங்களுக்கு கால் பண்ணியிருக்கேன். அப்பா மாமாவை ஏதேதோ பேசி சமாளிச்சிட்டு அந்த பக்கம் கூட்டிட்டு போயிருக்காங்க….” என ஏழுமலையை எண்ணி உதயாவிடம் புகைந்தான்.
“ஹா ஹா ஹா ஹா, போதும் விஜி என்னால முடியலை…” என வயிற்றை பிடித்துகொண்டு சிரிக்க,
“அண்ணா!!! அவர் உங்க மேல சந்தேகப்படறார்னு சொல்றேன், உங்களுக்கு சிரிப்பா?…” என கடுப்பானான்.
தன் மேலும் தன் குடும்பத்தார் மேலும் சந்தேகப்படும் மாமனாரின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து கோவம் கொள்ளாமல் அவரது இடத்தில் இருந்து யோசித்து பார்த்தான். அவர் நினைப்பதிலும் தவறில்லையே. அதையே விஜியிடம் சொல்லவும் இன்னும் அதிகமாக கடுப்பாகிவிட்டான் விஜி.
“இங்க பாரு விஜி, தன் பெண்ணிற்கு தானே வரன் பார்த்து அமைத்துகொடுக்கும் இடங்களிலேயே ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை பெண்ணை பெற்றவங்க சந்திக்கிறாங்க. அப்படி இருக்கும் போது எங்க கல்யாணம் நடந்து சூழ்நிலையில உங்க மாமா சந்தேகபடுவதில் எனக்கு எந்த தவறும் இல்லைன்னுதான் தோணுது….” என கூறவும்,
“என்னமோ பண்ணுங்க. ரொம்ப நேரம் என்னால பேசமுடியாது. முதல்ல நாங்க வரும் விஷயத்தை வீட்ல சொல்லிடுங்க. நான், அப்பா, அம்மா, மாமா, அத்தை, அப்புறம் கோசலை பெரியம்மா ஐந்து பேர் தான் வரோம்….” என்றான் விஜி. கோசலையின் பெயரை கேட்டதுமே உதயாவிற்கு அவர்களை பார்க்கும் ஆவல் இன்னும் அதிகரித்தது.
“எதுக்கு வீட்ல சொல்லணும். அதெல்லாம் வேண்டாம். உன் மாமாவோட நம்பிக்கையை நாம உடைக்க வேண்டாம் விஜி. அவர் விருப்பப்பட்டது போலவே இங்க வந்து நந்தினி எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்கட்டும். என் கிட்ட சொன்னதை நீ மறந்திரு. நானும் வீட்ல யார்கிட்டயும் சொல்லமாட்டேன். சீக்கிரமா வந்து சேருங்க…” என்று சொல்லிட்டு போனை அணைத்துவிட்டான்.
“ஐயோ!!! அண்ணா, அண்ணா போனை வச்சிடாதீங்க !..” என சொல்லிய நேரம் ஏழுமலை விஜியை நோக்கி வருவதை பார்த்தவன் இந்த மனுஷனை நம்ப முடியாது என்று வேறு நம்பரை அழுத்திவிட்டு போனை அந்த இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்துவிட்டான்.
நேசமணி மகனை பார்த்து என்னவாகிற்று என சைகையில் கேட்க தலையெழுத்து என்று நெற்றியை கோடிட்டு காண்பித்துவிட்டு காரில் ஏறி அமைந்துவிட்டான். அவர்கள் அனைவரையும் தனக்குள் அடக்கிகொண்ட அந்த வாகனம் குறிஞ்சியூரை நோக்கி கிளம்பியது.
விஜியிடம் பேசிவிட்டு வந்த உதயா எதுவுமே நடவாதது போல அமர்ந்துகொண்டான். அவனுக்குமே சிறிது படபடப்பாகத்தான் இருந்தது. எதுவாக இருந்தாலும் நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும் என்று பிராத்தித்துக்கொள்ள மட்டும் செய்தான்.
நந்தினியை பார்க்கவேண்டுமென்ற உள்ளம் முரண்ட அடுக்களை நோக்கி ஜூஸ் வேண்டுமென்று ஒரு குரல் கொடுத்தான். அவன் எண்ணத்தை பொய்க்கவிடாமல் தானே பழச்சாறு ஏந்திக்கொண்டு வந்தாள் உதயாவின் மனையாள்.
வந்தவளிடம் ஒரு வார்த்தைகூட பேசவிடாமல் விஷ்ணு ஓடிப்போய் அந்த தட்டினை வாங்கிக்கொண்டு,
“நீ போம்மா தங்கச்சி, உனக்கு உள்ள எவ்வளோ வேலை இருக்கும். கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உன் புருஷனுக்கு. வேலை செய்யவிடாம தொந்தரவு பண்ணிட்டு. இதை நான் கொடுத்திடறேன்….” என நல்லபிள்ளையாட்டம் அவளை அனுப்பிவைத்துவிட்டு உதயாவை பார்த்து பழிப்பு காட்டினான்.
அனைவரின் முன்னால் எதுவும் பேசமுடியாமல் முறைக்க மட்டுமே முடிந்தது உதயாவால். அங்கே மேலும் அமரமுடியாமல் எழுந்து பின்னால் இருந்த தோட்டத்தின் பக்கம் சென்றுவிட்டான்.
நந்தினி வீட்டினர் வர இன்னும் அரைமணிநேரமே எஞ்சியிருந்தது. சொல்லமுடியாத சஞ்சலம் அவனை ஆட்டிப்படைத்தது. அன்றைக்கு அவர்களிடத்தில் தான் மரியாதையில்லாமல் நடந்துவிட்டு வந்தது கொஞ்சமே உறுத்தல் உண்டாகியதில் உதயாவின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அவனது தவிப்பின் தாகம் தீர்க்க நந்தினியே தோட்டத்தில் காட்சி தந்தாள்.
கறிவேப்பில்லை பறிக்க வந்தவளின் கண்களில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த உதயா தென்பட்டான். அவனது முகத்திலிருந்த வாட்டத்தை கண்டு அவனருகே சென்றவள்,
“என்னாச்சுங்க? முகமெல்லாம் வாடியிருக்கு?…” என கேட்டது தான் தாமதம். மனைவியின் மதிமுகத்தை கண்ட உதயாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல ஜொலித்தது.
அவளை பார்த்து புன்னகைத்தவன், “ம்ம் பின்ன நீ என்னை கண்டுக்காம போனா வேற எப்படி இருப்பேன்…” என்று தன் கைகளை அவளது தோளில் மாலையாக போட்டபடி கேட்கவும்,
“நான் என்ன பண்ணேன்?…” என்று கேட்டு தெரியாமல் விழிக்க,
“ஜூஸ் கேட்டது நான் தானே?.. நீ என்னடான்னா அதை விஷ்ணு கையில குடுத்துட்டு போய்ட்ட?..” என குற்றம் சாட்ட,
“நான் எங்க குடுத்தேன்?.. அண்ணா தான் கொண்டுவரும் போதே பாதியில வந்து வாங்கிட்டு போய்ட்டாங்க…” தவறு தன் மேல் இல்லை என்று தன்னை நியாயப்படுத்தினாள்.
“அவனுக்கு கெளரி அவன் கூட பேசலையாம். அதனால என்னை உன் கூட பேசவிடாம பழிவாங்குறானாம் அந்த ராஸ்கல்…” என்று சொல்வதை கேட்ட நந்தினி சிரிக்கவும் அந்த புன்னகையில் தன் சஞ்சலங்கள் அனைத்தும் மாயமாவதை உணர்ந்தான்.
பேச்சு சுவாரசியத்தில் வந்த வேலையே மறந்து அவனோடு ஒன்றிவிட்டாள் நந்தினி. இருவரும் சுற்றுபுறம் மறந்து தங்கள் உலகத்திலேயே இருக்க, நந்தினி வந்து வெகுநேரம் ஆகிவிட்டதென தேடிவந்த கெளரி அவர்களது தனிமையை கலைக்க விரும்பாமல் தானே இலையை பறித்துகொண்டு சென்றுவிட்டாள். அவர்களுக்கு கெளரி வந்ததும் தெரியவில்லை. சென்றதும் தெரியவில்லை.
“நந்துமா, நீ சிரிக்கிறப்போ வானத்தில் சிறகில்லாமல் பறப்பது போல ஒரு உணர்வு….” என்று பிதற்றியவன்,
“அப்பப்போ மாமாவை வந்து கவனிச்சுக்கோ, இல்லைனா நான் தான் கவனிப்பேன் காலையில் கவனித்தது போல!…” என்று கன்னம் கிள்ளவும் தான் அவளுக்கு தான் உரைத்தது. தான் வந்து வெகுநேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவள், “அச்சோ…” என்று வேகமாக திரும்புகையில் கையை பிடித்து இழுத்து நிறுத்தி,
“எங்க ஓடுற? எப்போ பாரு தப்பிச்சுட்டே இருக்க, இன்னைக்கு எப்டி தப்பிக்கிறன்னு நானும் பார்த்திடறேன்…” என்றான் நந்தினியை விடாமல்,
“நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சுங்க, உள்ள எல்லோரும் தேடப்போறாங்க. கையை விடுங்க…” என அவனின் பிடியிலிருந்து விடுபட முயன்றாள்.
“ஓ!!! அப்போ வா சேர்ந்தே போகலாம்…” என்று அவளது தோளில் கை போட்டு அழைத்து செல்ல நந்தினியும் எதுவும் சொல்லாமல் அவனோடு இசைந்து நடந்தாள்,
“தன் தோள் மீது கை போடாமல் தள்ளிவாங்க என்று சொன்னால் மட்டும் கேட்டுவிட போகிறானா? அதற்கும் ஏதாவது சொல்லுவான்…” என மனதிற்குள் அவனை கோவமில்லாமல் கோவித்துக்கொண்டே.
உதயாவோடு பேசி சிரித்தபடி வீட்டினுள் நுழைந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த தன் குடும்பத்தவர்களை கண்டு ஒரு நிமிடம் அசைவற்று நின்றுவிட்டாள்.
நடப்பவற்றை நம்ப இயலாமல் இது பிரம்மையாக இருந்துவிட்டால் என்ற பயத்துடன் வெறித்த கண்களோடு பார்த்தபடி நின்றிருக்க, சந்திராவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல், “மித்ரா கண்ணு…” என்றபடி ஓடி சென்று அணைத்துக்கொண்டார்.
நிஜம்தான். தன் தாய் தன்னை அணைத்திருப்பது நிஜம்தான் என்று உணர்ந்தவள் தானும் அவரை இறுக்கி கட்டிக்கொண்டாள்.
பூரணியும் கோசலையும் எழுந்து வந்து அவர்களது சந்தோஷக்கண்ணீரில் கலந்து கொண்டனர். ஆனந்தத்தில் பேச வார்த்தை வராமல் தவித்த நந்தினியை அழைத்துகொண்டு ஏழுமலையின் அருகில் சென்றனர்.
“அப்பா!…” என அவரை அணைத்து கொண்டவளுக்கு அதற்குமேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகளை தன் அருகிலேயே அமரவைத்துக்கொண்டார் ஏழுமலை.
உதயா வந்து அனைவரையும் வரவேற்றான். திருமணத்தன்று மூணாவது மனிதன் போல மாமியாரை அத்தை என்று அழைக்காமல் அந்த வார்த்தையை தவிர்த்தவன் இன்று அனைவரையும் வார்த்தைக்கு வார்த்தை அத்தை, பெரியம்மா, சித்தி சித்தப்பா என முறை சொல்லி அழைத்தான் ஏழுமலையை தவிர. அனைவரும் இன்முகத்தோடு பேசினாலும் ஏழுமலை அவனை முறைத்த வண்ணமே இருந்தார்.
“வாங்க…” என்று உதயா பேசினாலும் உர்ர்ர்ர்ர் என்ற முகத்தோடு தலையை மட்டும் அசைத்துவிட்டு தன் மகள் புறம் திரும்பிவிட்டார். புன்னகையோடு உதயா நகர்ந்துவிட்டான்.
அதை பார்த்த நாச்சிக்கு சிறிது வருத்தம் கூட உண்டாகியது. பாக்கியத்திடமும் தேவகியிடமும் பொருமினார். பாக்கியம், “அத்தை நம்ம வீட்டு பையன் செய்தது அப்படி. அதனால அவருக்கு கோவம் இருப்பது சகஜம் தான். போக போக சரியாகிடும்…” என்று சமாதானப்படுத்தினார்..
வேணி கூட அவர்களிடத்தில் எந்தவிதமான துவேஷத்தையும் காட்டாமல் கனிவாகவே பேசியது உதயாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மனம் மாறினால் சந்தோஷம் தான் என்று நிம்மதியானான். வேணி இனி மாறிவிடுவார் என்று சிறு நம்பிக்கை கூட எழுந்தது.
வேணியின் சாமர்த்தியம் அது. இனி நந்தினிக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் அது தன்னால் தான் நேர்ந்தது என்று ஒருவருக்கும் சந்தேகம் வராமலிருக்கவே அவ்வாறு நாடகமாடினார் என்பது பாவம் உதயாவிற்கு தெரியவில்லை.
நந்தினி வீட்டினருக்கு சந்தோஷம் தாளவில்லை. தன் மகள் சரியான இடத்தில் தான் வாழ வந்திருக்கிறாள். வசதியான இடம் எப்படி இருக்குமோ? என பயந்தவர்களுக்கு உதயாவின் பெற்றோர் உறவினர்கள் என அனைவரும் தன்மையாக பேசவும் மனதிற்குள் நிம்மதி உண்டாகியது.
அனைத்திற்கும் மேல் உதயா நந்தினியின் நெருக்கத்திலேயும் நந்தினியின் முகத்தில் ஜொலித்த நிறைவையும் பார்த்தே அவர்களுக்கு குளிர்ந்துவிட்டது.
உதயா வரும் முன்னரே தன் குடும்பத்தார் அறிமுகப்படலத்தை நிகழ்த்தியிருந்ததில் தான் அறிமுகபடுத்த வேண்டிய அவசியமில்லையென்று பெருத்த நிம்மதிகொண்டான்.
உதயாவிடம் ஏழுமலையின் ஒதுக்கம் அனைவரின் கருத்திலும் பட்டது. விஷ்ணுவோ,
“ஏண்டா மச்சான், உன் மாமனார் ரொம்ப பாசக்காரர் போல?… உன்னை பார்க்கிற பார்வையிலேயே அன்பு பொங்கு பொங்குன்னு பொங்கி பொழியுதே? அப்டினா கல்யாணத்துல அவர்கிட்ட அவ்வளோ பேசியிருக்க நீ. எல்லாத்துக்கும் சேர்த்து வாங்குவன்னு நினைக்கிறேன்…” என கேலியாக கூறவும் அவனை பார்த்து தெய்வீகமாக சிரித்தான் உதயா. அவனின் சிரிப்பை பார்த்ததுமே மனதிற்குள் அலறினான் விஷ்ணு.
“அய்யயோ அவசரப்பட்டு டெவிலுக்கு டெலகிராம் குடுத்துட்டேனே?, ஆப்பை தேடிப்போய் ஆஜராகிறதே எனக்கு வேலையா போச்சு, இவன் வேற சனியனிக்கு சப்ஸ்டியூட்டா வேலைபார்க்க கிளம்பிருவானே? விஷ்ணு செல்லம் உன் பாடு திண்டாட்டம் தான். சமாளிடா விஷ்ணு…” என தனக்குதானே சொல்லிகொண்டவன் உதயாவை பார்த்து ஈஈஈ என இளித்தான்.
“என்னடா? காது வரைக்கும் வாய் நீளுது? சகிக்கலை…”