நட்சத்திர விழிகள் – 11
நந்தினியால் தானே உதயா தன்னை அவமதித்து பேசினான் என்ற எண்ணம் மேலோங்க அவள் மேல் கொண்ட வன்மம் இன்னும் அதிகரித்தது.
தனது செயலால் தான் இந்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே உணரவிரும்பாமலேயே தான் என்ற அகம்பாவத்தால் தன் சொந்தங்களை இழந்துகொண்டிருப்பதை அறியாமல் தன்னை தனிமைக்கு தாரைவார்க்க தயாரானார்.
நந்தினியை பகையாளியாக ஜென்ம விரோதியாக தானே உருவகப்படுத்திகொண்டு அதனால் உண்டான காழ்ப்புணர்ச்சியால் அவளை ஜெயிக்கும் மார்க்கத்தை தேடித்திரிந்தார்.
தன்னால் இனி எதுவும் செய்யமுடியாமல் போனாலும் அவருக்கு நந்தினியை எப்படியாவது தண்டித்தே ஆகவேண்டும் என்ற வெறி அவரை ஆட்டிபடைத்தது. அதற்கான வழி பிரசாத். அவனை சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்கவேண்டும் என்று நினைத்தவரால் உதயாவிற்கு தெரியாமல் எப்படி அவனை அணுகுவது என்ற வழி மட்டும் புலப்படவே இல்லை.
உதயா பேசிவிட்டு என்ற பின் இந்த ஒரு வாரமும் அனலாக தகித்துகொண்டிருந்த இதயத்தில் மேலும் நெருப்பை வளர்க்கும் விதமாய் தன் மகளின் எதிர்காலத்தை முடிவெடுக்கும் பொறுப்பையும் தட்டிப்பறித்ததுபோல் விஷ்ணுவை கொண்டுவந்து நிறுத்தியது இன்னமும் அவரை வெகுவாக சீண்டியது.
விஷ்ணுவை ஒருவாறாக மனம் ஏற்றாலும் அது நந்தினியின் கணவனது ஏற்பாடு என்று அவரது இதயம் மணிக்கொருதரம் உரைத்துகொண்டே இருந்தது.
இப்படியே பலவாறாக சிந்தித்து சிந்தித்து தலைவலியை உண்டாக்கி கொண்டவர் தன்னையறியாமல் தூங்க, அங்கே கோவிலில் உதயாவோ அடுத்து நடப்பவை அனைத்து நல்லதாகவே நடக்க வேண்டுமென்றும் தனது அத்தை நல்லவிதமாக மனம் திருந்தவேண்டுமென்றும் வேண்டிகொண்டான். அவனது வேண்டுதல் நிறைவேறுமா?
அனைவரும் பூஜை முடிந்து கிளம்ப ஆயத்தமானார்கள். விஷ்ணுவோ கௌரியிடம் பேச ஆனானப்பட்ட முயற்சிகள் எடுத்து அந்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகரமாக தோல்வியை தழுவினான். கெளரியிடம் பேச அவளை நெருங்கும் போதெல்லாம் அவளோ இவனை விட்டு விலகுவதிலேயே குறியாய் இருந்தாள்.
அவனது ஏமாற்றத்தை கண்டு சிரித்த உதயாவிடம் வந்து புகார் பட்டியல் வாசித்தான் விஷ்ணு.
“என்னடா நினச்சிட்டு இருக்கா உன் தங்கச்சி?… சொல்லி வை அவகிட்ட. என் லட்சியத்தை விட்டு அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கேன். இவ என்னடான்னா மனுஷன் என்ன பேச வரான்னு கூட தெரியாம பேயை கண்டதுபோல ஓட்டம் பிடிக்கிறதிலேயே குறியா இருக்கா!….” என சகட்டுமேனிக்கு பொரிந்து தள்ள,
“நீயும் உன் லட்சியமும். வேற வேலை இல்லை உனக்கு….” என்ற உதயாவின் அலட்சியத்தில் கடுப்பான விஷ்ணு,
“பேசுவடா, நீயேன் பேசமாட்ட?… நான் பாட்டுக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணனும், இல்லைனா விரும்புற பெண்ணை தூக்கிட்டு போய் தாலிகட்டனும்னு ஒரு இலக்கை வச்சு சுத்திட்டு இருந்தேன். அது இல்லாம போயி இப்போ உன் தங்கச்சி தான் எனக்குன்னு முடிவாகிருச்சு…” என பெருமூச்சு விட்டவன்,
“லவ் லுக் தான் இல்லை, அட்லீஸ்ட் சின்னதா நார்மல் லுக்காவது விடலாம்ல உன் தங்கச்சி. நான் என்ன கடத்திட்டா போயிடுவேன். ஒரு நிமிஷம் நின்னு பேசினா என்னவாம்?…” என முதலில் உதயாவை வசைபாடியவன் பின் புலம்ப ஆரம்பித்தான்.
எந்த நேரத்தில் கடத்திக்கொண்டு போய்விடுவேனா என்று கேட்டுவைத்தானோ அதுபோல அவளை கடத்தும் நிலை பின்னாளில் ஏற்படும் என்பது அறியவில்லை.
“அதெல்லாம் உன் சாமர்த்தியம் மச்சி. என் தங்கச்சியை பேச வைக்கிறதுக்கெல்லாம் நீ ரெக்கமன்ட் பண்ண சொல்ற உன்னையெல்லாம் என்னதான் செய்ய?. கிளம்பலாம் டைம் ஆச்சு….” என்று கழண்டுகொள்ள விஷ்ணு கௌரியிடம் எப்படி நெருங்குவது என யோசிக்க ஆரம்பித்தான்.
ட்ரைவரிடம் காரை எடுத்துவர கூறிவிட்டு பூஜை தட்டுகளில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துவைக்க உதவிகொண்டிருந்தான்.
காரை எடுக்க சென்ற ட்ரைவர் போனவேகத்திலேயே திரும்பி வர என்னவென விசாரித்தவனின் முகமோ இறுகிவிட்டது. ட்ரைவரை வீட்டிற்கு கிளம்புமாறு அனுப்பிவிட்டு, அனைவரையும் கிளம்பி தான் சொன்ன பின் கோவிலின் வாசலுக்கு வந்து நிற்குமாறு சொல்லி பின் தானே கார் எடுத்துவர சென்றான்.
காரை நெருங்கியவன் காரின் முன் இருந்த பைக்கை பார்த்ததுமே பதற்றம் தொற்றிகொண்டது. அவன் நினைத்தது போல அது பிரசாத் பைக். அதுவும் பைக் நிறுத்தியிருந்த விதத்திலேயே வேண்டுமென்றே பைக்கை நிறுத்திருப்பது தெளிவாக புரிந்தது.
சுற்றி பார்த்தவனது பார்வை வட்டத்தில் பிரசாத் படாததால் பைக்கை நகர்த்திவைக்க முயல, “டேய் பிரபா, எவ்வளோ தைரியம் இருந்தா என் பைக் மேல கை வைக்க போவ?…” என்று ஓங்கி குரல் கொடுத்தவாறே அவன் முன் தோன்றினான் பிரசாத் உதயாவை முறைத்துக்கொண்டே.
பிரசாத்தை பார்த்த உதயாவுக்கோ தூக்கிவாரிப்போட்டது. எங்கே நந்தினி பிரசாத்தை பார்த்துவிடுவாளோ என அஞ்சி தவிக்க ஆரம்பித்தான்.
அவனோடு சண்டையிட இது நேரமில்லை என புரிந்தவன், “பிரசாத் உன் பைக்கை எடு. எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க. நாம அப்பறமா பேசலாம்… என சமாதானமாக பேச,
“இதோ பாருடா புலி பதுங்குது?…”என உதயாவை சீண்டியவன்,
“என்ன பொண்டாட்டியோட வந்திருக்கியா? எங்க கூப்பிட்டு அறிமுகப்படுத்தேன். நானும் பார்த்துட்டு நாலு நல்ல வார்த்தை பேசிட்டு போயிடறேன்…” என வம்பிழுக்க உதயாவின் ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியது. பல்லை கடித்துக்கொண்டு பொறுமை காக்க,
அப்போதும் பிரசாத் விடாமல், “என்ன சார் ரொம்ப டென்ஷன் ஆகுறது போல தெரியுது? இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேண்டா. இன்னைக்கு அவளை பார்த்துட்டு நான் யாருன்னும் உனக்கு என்ன முறையாகனும்னும் சொல்லிட்டுத்தான் போவேன்…” என எள்ளலாக பேச உதயா பாய்ந்து அவனது சட்டைக்காலரை கொத்தாக பற்றினான்.
“யாருக்குடா பயம்னு சொன்ன? நந்தினிக்காக பார்க்கிறேன். உன்னால அவ அனுபவிச்சதெல்லாம் போதும். அவ உன்னை பார்க்க வேண்டாம்னு நினைச்சுதான் அமைதியா போறேன். இல்லைனா இந்த இடத்திலேயே உன்னை….” என அவனை அடித்து துவம்சம் செய்துவிட நினைக்க கிருஷ்ணமூர்த்தி உதயா சென்று நேரமாகிவிட்டதே என அவனை தேடி வர உதயா பிரசாத் இருவரும் இருந்த நிலையை பார்த்து அதிர்ந்துவிட்டார்.
வேகமாக அவர்களை நெருங்கியவர், “பிரபா விடு அவனை. என்ன காரியம் செய்யற?…” என உதயாவின் பிடியிலிருந்து பிரசாத்தை விடுவித்தவர்,
“என்னப்பா பிரசாத்?…” என்று அவனை நெருங்க முயல அதுவரை உதயாவோடு கோவமாக சண்டையிட்டு கொண்டிருந்தவனது முகத்தில் கிருஷ்ணமூர்த்தியை கண்டதும் சொல்லொண்ணா வலி வந்து ஒட்டிக்கொள்ள அவரை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
வெறுப்பு மொத்தத்தையும் கண்களில் தேக்கி, “டேய் பிரபா, சொல்லிவை உன் அப்பாக்கிட்ட என் பக்கம் வரவேண்டாம்னு. அவரால்தான், அவரால்தான் நான் இப்படி ஆகிட்டேன். மீறி என் பக்கம் வந்தார்ன்னா அப்புறம் நடக்கிறதே வேற…” என்று மூர்க்கமாக சீறிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு அசுரவேகத்தில் பறந்தான்.
அவன் செல்லவும் தான் உதயாவால் சீராக மூச்சுவிட முடிந்தது. நல்லவேளை நந்தினியின் கண்களில் பிரசாத் படவில்லை என நிம்மதி கொண்டான்.
பிரசாத்தின் உதாசீனத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனம் நத்தையாக சுருங்கியது. தந்தையின் வேதனை பொறுக்காமல் அவரை தன்னோடு அனைத்து சமாதனபடுத்தினான்.
“விடுங்கப்பா, அவன் இன்னைக்கு நேத்தா இப்டி இருக்கான். பிரசாத் இப்படி நம்மை அசிங்கபடுத்தி வம்பிளுக்கிறது நமக்கென்ன புதுசா? அவனா எப்போ நம்மை புரிஞ்சிக்கிட்டு வரணுமோ அப்போ வரட்டும். நாம கிளம்பலாம். எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க…” என்று அவரை அழைத்துகொண்டு காரை கிளப்பினான். அவனுக்கு முன்னாலே விஷ்ணு காரில் காத்துகொண்டிருந்தான்.
கோவில் வாசலுக்கு அனைவரும் வரவும் விஷ்ணு வண்டியில் அவனது பெற்றோரும் சுதர்சனமும் ஏறிகொண்டனர். விஷ்ணுவோ கெளரி தன்னோடு வருவாள் என நினைக்க அவளோ இவன் இருப்பதையே சட்டைசெய்யாமல் தங்கள் வண்டியில் ஏற முனைப்பாக இருந்தாள்.
விஷ்ணு முகம் போன போக்கை கண்ட உதயா நாச்சியிடம் காதில் ஏதோ கிசுகிசுக்க, நாச்சி புரிந்துகொண்டவராக புன்னகைத்து தான் பார்த்துகொள்வதாக சொன்னவர்,
“இந்தா புள்ள கெளரி, நீ விஷ்ணு தம்பி வண்டியில முன்னால போ….” எனவும் விஷ்ணுவுக்கோ கொண்டாட்டமாக போனது.
நாச்சியின் பேச்சை கேட்டு அதிர்ந்த கெளரி மாட்டேன் என்று தலையசைத்து விட்டு உதயாவின் அருகில் ஏறி அமர்ந்துவிட்டதும் விஷ்ணுவின் முகம் வாடிவிட்டது. அவனை கண்ட உதயா விஷ்ணுவிடம் அமைதியாக இருக்குமாறு சைகை காண்பித்து கிளம்ப சொன்னான்.
நாச்சியோ கௌரியை திட்டிக்கொண்டே விஷ்ணுவோடு சென்றுவிட்டார்.
கிருஷ்ணமூர்த்தி காரை எடுக்க அவரருகில் முன்னிருக்கையில் பாக்கியம் அமர்ந்திருந்தார். பின்னால் உதயா நடுவில் இருக்க கௌரியும் நந்தினியும் இருபுறமும் அமர்ந்திருந்தனர்.
கார் கிளம்பவும் கௌரிக்கு மெலிதான உறக்கம் பிடித்துக்கொள்ள உதயாவின் தோள்களில் தலைசாய்ந்து கொண்டாள். அவளது தலையை வாஞ்சையாக வருடியவனின் மனம் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுத்த திருப்தியில் நிறைந்திருந்தது.
வீடு வந்து சேர்ந்தவர்கள் திருமணம் முடிவு செய்திருப்பதால் அன்றைக்கு மதிய விருந்து தயார் செய்ய ஆரம்பித்தனர். வேணி அனைவரும் வரும் அரவம் கேட்டும் வெளியே எட்டிபார்க்கவே இல்லை. சுதர்சனம் வந்து பார்க்கும் போது தூங்குவது போல பாவனை செய்யவும் அவரும் எதுவும் சொல்லாமல் ஒரு பெருமூச்சோடு வெளியேறிவிட்டார்.
பெண்கள் அனைவரும் சமையலறையை குத்தகைக்கு எடுக்க, ஆண்கள் பேச்சு சுவாரசியத்தில் ஈடுபட்டனர். நந்தினியை பார்க்க அங்கும் இங்குமாக நடைபயின்று கொண்டிருந்தவனை இழுத்துபிடித்து தன்னருகில் அமர்த்திகொண்டான் விஷ்ணு.
“மவனே நானே இங்க மண்டை காஞ்சுபோய் இருக்கேன், நீ பன்ற ரொமான்ஸை பார்த்து தீஞ்சுவேற போகனுமாக்கும். எங்கயும் நகராத. உன்னை விடமாட்டேன்…” என பிடித்துவைத்துகொண்டான்.
உதயாவின் போன் ஒலித்ததும் அவர்களிடமிருந்து அகன்றவன் புதிய நம்பராக இருப்பதை கண்டவன் யோசனையோடே மொபைலை ஆன்செய்து காதுக்கு கொடுத்தான்.
“ஹலோ அண்ணா, நான் விஜி பேசறேன்…” எனவும்,
“என்ன விஜி இது புது நம்பரா இருக்கு?..”
“அதை ஏன் அண்ணா கேட்கறீங்க?. உங்க மாமனார் எல்லோர் போனையும் ஆப் பண்ணி வாங்கி வச்சிட்டார். நான் இப்போ டெலிபோன் பூத்ல இருந்து பேசறேன்….” என சலிப்பு கலந்த எரிச்சலோடு கூறவும்,
“உன் போனை வச்சு என்ன செய்ய போறாராம்?…அவர் எதுக்காக வாங்கணும்?…” என புரியாமல் கேட்க,
“இப்போ நாங்க எல்லோரும் உங்க வீட்டுக்கு இன்னும் ஒன்றரைமணி நேரத்தில வந்து சேர்ந்திடுவோம் அண்ணா….” என விஜி கூறவும் அதிர்ச்சியிலும் சந்தோஷத்திலும் உதயாவுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“எவ்வளோ சந்தோஷமான விஷயம்?….இதை ஏண்டா முன்னகூடியே சொல்லலை….” என கடிந்துகொள்ளவும்,
“ரொம்ப சந்தோஷம் தான் போங்க. காலாங்கத்தால எழுப்பி ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்னு கிளம்ப சொன்னாரு. என்னனு கேட்டா ஒரு விவரமும் சொல்லலை. அதுக்குமேலையும் கேட்டு அவரை டென்ஷன் பண்ண வேண்டாம்னு கிளம்பி வந்தோம். வாடகைக்கு கார் அரேஞ் பண்ணினது கூட தெரியலை எங்களுக்கு…” என சொல்லிகொண்டிருக்க அவன் பேசி முடிக்கட்டுமென அமைதிகாத்தான் உதயா. விஜி சொல்லவருவது என்னவென ஓரளவிற்கு யூகித்துதான் இருந்தான்.