அவர் பேச பேச அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றிருந்தவள் மீன்களின் உயிர் போராட்டத்தை பார்த்து தன்னை சுதாரித்துகொண்டு உடனடியாக அடுக்களைக்குள் நுழைந்து பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்து மீன்களை அள்ளி தண்ணீரில் போட்டு அதன் உயிர்காத்தாள்.
அவள் கண்களிலிருந்து கண்ணீரும், கையிலிருந்து ரத்தமும் சொட்டியத்தையும், வேதனையில் அவள் முகம் சுருங்கியதையும் ஒருவித குரூரத்தோடு ரசித்தவர் உதயா வரும் அரவம் கேட்டு அங்கிருந்து நொடிபொழுதில் மறைந்தார்.
ஓடிக்கொண்டிருந்த காட்சியை நிறுத்திய உதயா அவரையே கண்கள் சிவக்க வெறித்துகொண்டிருந்தான்.
தான் செய்த வேலையால் உதயா நந்தினியை கடிந்துகொள்வான், அவர்களுக்குள் பெரிதாக பிரச்சனை இல்லாவிட்டாலும் லேசாக மனவருத்தமாவது வரவேண்டும் என்று எதிர்பார்த்தார், அது நடக்காமல் அச்செயலின் பலன் தன்னை நோக்கி திரும்பியதைதான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
கௌரிக்கு பரிசாய் கொடுத்த அந்த ஹேண்டிகேமரா வேணியின் கழுத்துக்கு பாசகயிறாக மாறியிருந்தது. சர்ப்ரைஸ் என்று சொன்ன கெளரி தன் சிறுபிள்ளைத்தனத்தால் அந்த கேமராவை யாரும் பார்க்காத வண்ணம் மறைத்து வைத்து அன்றைய நிகழ்வுகளை படம்பிடிக்க எண்ண அது வேணிக்கே ஆபத்தாய் போய் முடிந்தது.
அவரது போதாதகாலம் அந்த கேமரா மீன்தொட்டியின் நேரெதிராக வைக்கபட்டிருந்ததால் நடந்தவற்றை அழகாய் தன்னுள் விழுங்கிகொண்டது.
அதுவரை அமைதிகாத்தவர் இதற்குமேல் எந்த முகமூடியும் தனக்கு தேவையில்லை என்று திண்ணக்கமாக நிமிர்ந்து நின்றார். தன் அத்தையின் இந்த பிம்பம் உதயா சற்றும் எதிர்பார்க்காதது.
“இப்போ என்ன பிரபா? ஆமா. அந்த நந்தினி காயபட்டதுக்கு நான் தான் காரணம், இப்போ என்ன செய்ய போற அதுக்கு?…” என்று எகத்தாளமாக பேசியவரை கண்டு கொதித்தெழுந்த ஆத்திரத்தை கட்டுக்குள் வைத்து, “இது கோபம் கொள்ளவேண்டிய நேரம் அல்ல…” என்று தன்னை நிதானித்துகொண்டான்.
“ஏன் அத்தை அவ என்னோட மனைவி. உங்களுக்கு மகளை போல…” என்று பேசிகொண்டிருந்தவன் அந்த வார்த்தையை முடிக்கும் முன் காளியவதாரம் எடுத்தார்.
“யாரை யாரோட இணைக்கூட்டுற? என் பொண்ணும், இங்க ஒண்ட வந்திருக்கிறவளும் ஒண்ணா? என் பொண்ணு வாழவேண்டிய வாழ்க்கையை தட்டிப்பறிச்சவளோட சேர்த்து வைச்சு பேசினா நான் மனுஷியா இருக்கமாட்டேன்…”என்றார் தான் மனித உருவிலிருந்து எப்போதோ ராட்சசியாகிவிட்டதை உணராமலே.
எப்போது நந்தினிக்காக அத்தை என்றும் பாராமல் தன்னையே எடுத்தெறிந்து பேசினானோ அந்த நிமிடத்திலிருந்து உதயா தன் அண்ணன் மகன் என்ற எண்ணத்திற்கும், அவன் மேல் வைத்திருந்த பாசத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து அவன் நந்தினியின் கணவன் மட்டுமே என்ற எண்ணத்தை தன் மனதினுள் ஆழமாக விதைத்துகொண்டார். பழியுணர்ச்சியால் அவரது மனம் நிலைபிரண்டது. அது அசுரவேகத்தில் அதளபாதாளத்திற்கு அவரை அழைத்துசென்றது.
அவனை எதிர்க்க அப்போது வேணி மலைக்கவும் இல்லை, இன்று அவரை எப்படியும் அடக்கிவிடவேண்டும் என்று உதயா எதற்கும் சளைக்கவும் இல்லை.
“யார்க்கிட்ட யாரை பத்தி பேசறோம்னு யோசிச்சு பேசுங்க அத்தை. என் மனைவியை பத்தி இதுக்குமேல எதாச்சும் பேசினா பின்னால பெரிய விளைவை நீங்க சந்திக்க வேண்டி வரும்…” என்று அதுவரை பொறுமைக்காத்து வந்ததை விடுத்து உதயாவும் பதிலுக்கு எகிறியவன்,
“கெளரி என் தங்கைன்னு சொல்லியும் நீங்க இது போல பைத்தியக்காரத்தனமா செய்றது நல்லா இல்லை அத்தை. நீங்க நினைக்கிறது ஒரு போதும் நடக்க வாய்ப்பில்லை…” என்றான்.
“நான் நினச்சது நடக்காதுன்னு எப்போ நந்தினியை நீ இங்க கூட்டிட்டு வந்தாயோ அப்போவே தெரிந்துபோச்சு. அதுக்குமேல என் மகளை இந்த வீட்டு மருமகளா ஆக்கணும்னு நினைக்க கூட நான் விரும்பலை. ஆனா அதுக்காக நான் நந்தினியை வெளியே அனுப்பவும் நினைக்கவில்லை…” என கூற அவரை யோசனையாக பார்த்தவன் அவர் மனதில் இருப்பது தானே வெளியில் வரட்டும் என ஊடே பேசாமல் அமைதியாக நின்றான்.
“அந்த நந்தினி இங்கதான் இருக்கணும். என்னோட நிம்மதியை பறிச்ச அவளை நான் கொஞ்சம் கொஞ்சமா நிம்மதியிழக்க வைப்பேன். ஏண்டா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தோம் என அவ துடிக்கனும். அதுதான் என் ஆசை. அவசரப்பட்டு அவளை வெளியேத்தி அதை கெடுத்துக்க மாட்டேன். அவ வடிக்கும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் எனக்கு அமைதியை தரப்போகுது…. என கண்களில் கயமை மின்ன சொல்லவும் உதயா ஆடிப்போய்விட்டான்.
“ஏன் அத்தை உங்களுக்கு இந்த எண்ணம்? நந்தினி வேதனை பட்டா நான் மட்டும் நிம்மதியா இருப்பேன்னு நினைக்கீங்களா?. எனக்காக உங்க குணத்தை கொஞ்சம் மாத்துங்க அத்தை…” என தனக்காகவாவது தன் அத்தை தவறை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்று சிறு நம்பிக்கையை வைத்துக்கொண்டு கேட்க அதையும் உடைத்து தூள் தூள் ஆக்கிவிட்டார் வேணி.
“நீ யோசித்தாயா, நம் அத்தைக்காக என்று. நான் மட்டும் ஏன் யோசிக்கணும். என்னோட ஏமாற்றத்துக்கு முக்கிய காரணமே நீதானே. நந்தினி வருத்தபட்டா நீயும் கவலைப்படுவன்னு நல்லா தெரியுமே, அது கூட தெரியாத குழந்தையா நான்….” என்றவர்,
“என்னோட சந்தோஷத்துக்கு சமாதி கட்டின நீயும், என் மகள் வாழ்க்கையை தட்டிப்பறிச்ச அந்த நந்தினியும் நல்லா அனுபவிப்பீங்க. என்னை அலட்சியப்படுத்தின எல்லோருக்கும் இந்த வேணி யாருன்னு காட்டுறேன்…” என சூளுரைத்தவரை கண்டு வெகுண்டுவிட்டான். இனி பொறுமையாக இருந்து பயனில்லை என்று உணர்ந்தவனாக,
“யார் வாழ்க்கையை யார் தட்டிப்பறிச்சது? இது என் நந்தினிக்கான வாழ்க்கை. அதனாலதான் நானும் அவளும் பிரிந்தப்போ கூட காலம் எங்களை சேர்த்துவச்சது. அவளுக்கு நான் தான், எனக்கு அவதான்னு எப்போவு முடிச்சுபோட்டிருக்கு, அதனாலதான் எங்கயோ இருந்த நாங்க ரெண்டுபேரும் இந்த பந்தத்தில இணைந்திருகோம். நீங்களா எதனாலும் கற்பனை செய்திட்டு உளறாதீங்க…” என்று சீறினான்.
“அவ மட்டும் குறுக்கே வரலைனா என் பொண்ணுதானே இந்த வீட்டு மருமக…” ஆத்திரம் தணியாமல் மேலும் பேச அவரது வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவனோ அருவருப்பில் முகம் சுளித்தான்.
“இப்படி பேச உங்களுக்கு வெட்கமாயில்லை, இந்த வீட்ல மகளாய் எனக்கு தங்கையாக இருக்கிறவளை போய்!… ச்சே அசிங்கமா இருக்கு உங்க நினைப்பே, உங்க கிட்ட ஏற்கனவே சொன்னதுதான். கெளரி என்னோட தங்கை…” என்று முடிப்பதற்குள்,
“அவள் என்ன உன் கூட பிறந்தவளா?…உன் ரத்தமா?…..என் வயிற்றில் பிறந்தவள் உனக்கு எப்படி தங்கையாக முடியும்?…” என குத்தீட்டியாய் வார்த்தைகள் வந்து உதயாவின் இதயத்தை பதம் பார்க்க அவனோ நொறுங்கிபோனான்.
உடைந்துபோய் நின்றவனை இளக்காரமாக பார்த்து இகழ்ச்சியாய் நகைத்தவர் அவன் அசந்த நேரத்தை பயன்படுத்தி அந்த ப்ளேயரில் இருந்த மெமரிகார்டை கைப்பற்றிகொண்டு எள்ளலாக சிரித்தார்.
அவரது கயமைத்தனத்தை கண்கூடாக கண்டவன் இவர் இனி எந்த எல்லைக்கும் போக தயங்கமாட்டார் என எண்ணி தன்னால் முடிந்த அளவிற்கு அவரது ஆட்டத்திற்கு அணை போடவென முடிவெடுத்தான். சமயோசிதமாக பேச ஆரம்பித்தான்.
“என்னங்கத்தை நீங்க, உங்க முட்டாள்தனத்திற்கு ஒரு அளவே இல்லாம போச்சு, மெமரிகார்டை கொண்டுவந்தவன் அதை காப்பி பண்ணாமலா எடுத்து வந்திருப்பேன்?…” என சொல்லவும் வேணியின் முகம் இருண்டது.
உதயா இப்படியும் செய்திருப்பான் என்று நம்ப முடியாத அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த மெமரிகார்டை நழுவவிட்டார். கீழே விழுந்த ஆதாரத்தை நொடியும் தாமதிக்காமல் எடுத்து வைத்துக்கொண்டு ஏளனமாக அவரை பார்த்தான்.
வேணிக்கு புரிந்துவிட்டது. அவன் வேண்டுமென்றே பதிவு செய்துவிட்டேன் என்று பொய்யுரைத்திருக்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. கையில் கிடைத்ததை நழுவவிட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்தவருக்கு ஒரு குருட்டு நம்பிக்கை.
குடும்ப ஒற்றுமையை நினைத்து அதை யாருக்கும் காட்டமாட்டான் என வேணி எண்ண அவரது எண்ணத்தை அடுத்து நொடியே தீயிலிட்டு கொளுத்தினான்.
“இதை காட்டமாட்டேன்னு மட்டும் நினச்சிடாதீங்க, இனி ஒரு முறை எங்க வாழ்க்கைக்கு குறுக்கே வரணும், நந்தினிக்கு இடஞ்சல் தரணும்னு நினச்சீங்க கண்டிப்பா எல்லோரையும் வச்சு இதை காண்பிப்பேன்….” என அழுத்தமான குரலில் கூற அந்த குரலே சொன்னதை செய்வான் என்றது.
“இது எல்லோருக்கும் தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சுட்டு பேசு. சும்மா உளறாத….” என்றவரது குரலில் லேசாக பதட்டம் எட்டிப்பார்த்தது.
இது தானே, இந்த பதட்டம் தானே வேண்டும் அவனுக்கும். சரியாகத்தான் தாக்கியிருக்கிறோம் என நினைத்து அடுத்த காயை நகர்த்தினான்.
“நான் நல்லா யோசிச்சுதான் சொல்றேன், எனக்கு என் குடும்பம் முக்கியம். என்னோட எதிர்காலம் முக்கியம். நான் நந்தினியோட சந்தோஷமா வாழனும். குடும்ப ஒற்றுமை அப்டி இப்டின்னு உங்களை இங்க வச்சுட்டு என்னால ஒவ்வொரு நாளும் எதிர்த்து போராட்டிட்டு இருந்தா காலம் முழுசும் அப்படியே போயிடும். அப்புறம் எங்க நான் நிம்மதியா வாழ?…” என பேசியவனை அதிர்ச்சியோடு பார்த்தார். அவரது முகத்தை கண்டுகொள்ளாமல்,
“அதனால உங்களுக்கு ஒரே ஒரு சான்ஸ் தரேன். உங்களோட இந்த சாக்கடை புத்தியை ஓரங்கட்டிவச்சிட்டு அமைதியா இருந்தீங்கன்னா உங்களுக்கு நல்லது, இல்லைனா….” என சற்று நிறுத்திவிட்டு அவரை பார்த்து,
“உங்களுக்கே தெரியும் கெளரி இந்த வீடியோவை பார்த்தா உங்களை அம்மான்னு சொல்லுவாளா?, மாமாவை பத்தி சொல்லவே வேண்டாம். அப்பாவும், அம்மாவும் பாட்டிக்கும் தெரிஞ்சா என்னாகும்?. உங்க பின்னால யாருமே வரமாட்டாங்க. இந்த வீட்டை விட்டு வெளியேறி உங்க வீட்டுல தனிமரமா நீங்க நிக்கணும்….” என்றான் உறுதியான குரலில்.
“அப்போ இதை தெரிஞ்சு எல்லோரும் வருத்தபடுவாங்க, குடும்பம் உடைந்து போகும்னு அப்டின்னு உனக்கு அக்கறையே இல்லையா? உன் வாழ்க்கை மட்டும் தான் முக்கியமா?…” என்று வேணி தன் கடைசி அம்பை எறிந்து பார்த்தார்.
“ஓ நீங்க மட்டும் அண்ணன் மகன் அப்படின்ற பாசமே இல்லாம என்னோட நிம்மதியை என்னோட வாழ்க்கையை நாசம் பண்ண பார்ப்பீங்க. ஆனா நான் மட்டும் எதுக்காக அக்கறை படனும்ன்னு எதிர்பார்க்கறீங்க? வருத்தபடுவாங்கன்னு நீங்க பன்ற அக்கரமத்தை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்க சொல்றீங்களா? இவ்வளோ பேசுற உங்களுக்கு எங்கமேல இருந்த அந்த அக்கறை எங்க போச்சு?…” என திருப்பி கேட்டவன்,
“அப்புறம் என்ன சொன்னீங்க?… குடும்பம் உடையுமா? அப்படி வேற நினைப்பா உங்களுக்கு?… அது இந்த ஜென்மத்துல நடக்காது. நீங்கதான் தனிபட்டு போவீங்க. நீங்களே உங்க சந்தோஷம் தான் முக்கியம்னு நினைக்கும் போது நாங்களும் அப்படி நினைக்கிறதில எந்த தப்பும் இல்லை. என்ன ஒன்னு, இந்த விஷயம் தெரிஞ்சு கொஞ்ச நாள் வருத்தபடுவாங்க. அப்புறம் நீங்க ஒரு ஆள் இருக்கிறதையே மறந்திடுவாங்க….” என்று சொல்லவும் சர்வமும் அடங்கியது அவருக்குள்.
உண்மைதான் இது தெரிந்தால் அனைவரும் தன்னை வெறுத்துவிடுவார்கள் என்பது அப்பட்டமான உண்மை. அப்படி ஒன்று நிகழ்ந்துவிட்டால் தன் நிலை என்னவாகும்? என நினைக்க நினைக்க அவருள் பயபந்து உருண்டு அவரை நிலைகுலைய செய்தது. இதைத்தானே உதயாவும் எதிர்பார்த்தான்.
“புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். பார்ப்போம். நான் என்ன முடிவு எடுக்கனும்றது நாளையிலிருந்து நீங்க நடந்துகொள்ளும் முறையை வச்சுதான். என்னை சுயநலக்காரனா நீங்க தாராளமா நினச்சுக்கோங்க. இனிமே அப்படித்தான் இருப்பேன். உங்களை போல ஆட்கள் கிட்ட நல்லபேர் எடுக்கும் அளவுக்கு நான் தியாகி கிடையாது. அதுக்கான அவசியமும் இல்லை….” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டான்.
வேணிதான் நிலையில்லாமல் தடுமாறினார். உதயா சொன்னதை செய்துவிட்டால் தான் எங்கே போவது என்று. தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாதோ? என குழம்பியவருக்கு முகத்தில் சட்டென வெளிச்சம் பரவ,
“தன்னால் தானே முடியாது. பிரசாத் இருக்கானே!…” என்ற எண்ணம் தோன்ற எப்போது அவனை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்ட பின் தான் நிம்மதியானார். .