நட்சத்திர விழிகளிலே வானவில் – 2 (1)

நட்சத்திர விழிகள் – 2

               “திடீர்னு வந்து கல்யாணத்தை நிறுத்துவான்னு நாங்க நினைச்சுகூட பார்க்கலை பிரசாத் சார்….” என கல்யாண மண்டபத்தில் உதயா ஆடிய ருத்ரதாண்டவத்தை பார்த்து அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோமென ஓடிவந்த மாப்பிளை குணா மற்றும் அவனோடு திருமணத்தில் கலந்துகொள்ள வந்த நான்கைந்து பேர் பிரசாத் முன் கூறிகொண்டிருந்தனர்.

“என்ன சார் நீங்க தானா வந்து பொண்ணை கட்டிக்க சொல்லிட்டு, இப்டி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?…”

குணா சரியான பணப்பேய். குணாவை பற்றிய தகவலை நண்பனிடமிருந்து அறிந்தவன் நந்தினியின் முகவரியையும் புகைப்படத்தையும் கொடுத்து தான் சொல்லியபடி அங்கே போய் பேசி பெண் கேட்க ஏற்பாடு செய்த பிரசாத் தன் காரியத்தை அவர்களின் மூலம் சாதித்துக்கொள்ள தீட்டிய திட்டம் தான் இந்த திருமண ஏற்பாடு.

பிரசாத்தின் வலையில் அழகாக சிக்கினர் நந்தினி குடும்பத்தார். மகளின் எதிர்கால வாழ்வை பற்றிய கவலையில் இருந்த ஏழுமலையிடம் பெண் கேட்டு நின்ற குணா அந்நேரத்தில் அவருக்கு இரட்சகனாகவே தெரிந்தால் அது மிகையல்ல.

படிப்பு, உத்தியோகத்தையும், வருமானத்தையும், பேசும் வார்த்தைகளையும் மட்டும் நம்பி பெண்ணை கட்டிகொடுக்க நினைக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரைக்கும் குணா போன்ற சுயநல பிசாசுகள் பணத்திற்காக ஏமாற்றத்தான் செய்வார்கள். 

ஏழுமலையை அதிகமாக யோசிக்கவே விடாமல் இருந்தது குணாவை சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள். அவர்களின் சாகசத்தில் உற்றாரின் பேச்சையும் கேளாமல் அவசரமாக மகளுக்கு திருமணம் அதுவும் நல்ல இடத்தில் தானே விரும்பி வந்து கேட்கின்றனரே என நினைத்து கண்ணைமூடிக்கொண்டு கிணத்தில் தள்ளிவிட காத்திருந்தார்.

அவரை பொருத்தவரைக்கும் வெளியூர் மாப்பிள்ளை, மகளுக்கு முன்பு நடந்த திருமணம் யாரின் மூலமும் குணாவிற்கு தெரிய வாய்ப்பில்லை என முழுமையாக நம்பினார்.

குணம் என்றால் என்னவென கேட்கும் குணாவை சேர்ந்தவர்களுக்கு அது சாதகமாகவும் சூழ்ச்சியில் சிக்கவிருந்த நந்தினிக்கு பாதகமாகவும் அமைந்தது.

அனைத்து கெட்ட பழக்கங்களை நிரந்தர உரிமையாக கொண்டிருந்தவனுக்கு தன்னை சேர்ந்தவர்கள் யாரும் பெண் தராத சூழ்நிலையில் பிரசாத்தின் அழைப்பால் தன் எண்ணங்கள் நிறைவேற போகிறதே என்ற இறுமாப்பில் பகல்கனவில் மிதந்துகொண்டிருந்த குணாவிற்கு உதயாவின் திடீர் வரவு அவனது கனவுக்கோட்டையை சுக்குநூறாக தகர்த்தெறிந்தது.

வரதட்சணை போனதுமில்லாமல் கூட வந்தவர்களின் முன் ஏற்பட்ட அவமானம் வேறு, இங்கே பிரசாத்தின் அலட்சியம் என அனைத்தும் சேர்ந்து குணாவின் தந்தையை கோபத்தில் கொந்தளிக்க செய்தது.

ஆனால் எந்த வித முகமாறுதலும் இல்லாமல் அவர்கள் பேசியதை கவனித்துகொண்டிருந்த பிரசாத் எழுந்து குணாவின் அருகில் வந்து கத்தை பணக்கட்டை அவனது கைகளில் திணித்து கேட்டை நோக்கி வெளியே செல்லுமாறு சைகை காமித்தான். 

“என்னங்க இது ? நீங்க தான பொண்ணு பத்தி சொல்லி எங்களை இங்க வரவச்சீங்க? இப்போ இப்டி செய்யறதுல என்னங்க நியாயம்?…” என அநியாயத்துக்கு நியாயம் கேட்டவரை பார்த்து கேலி சிரிப்பொன்றை உதிர்த்தவன்,

“நியாயம் அநியாயத்தை பத்தி நீங்க பேசறீங்களா?….” என கேட்டதும் குணாவின் தகப்பனார் குதிகுதியென குதித்தார்.

“கல்யாணம்னு சொல்லி வரவழச்சு கேவலபடுத்திட்டீங்க, இதை சும்மா விடமாட்டேன், நாங்க யாரு எங்க கௌரவம் என்னனு தெரியுமா?…” என சகட்டுமேனிக்கு அளந்தவரை பார்த்த பிரசாத் நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டா என்பது போல பார்த்துவிட்டு அவரை கண்டுகொள்ளாமல்,

“இதோ பாரு குணா, நீ ஒண்ணும் பொண்ணு மேல ஆசைப்பட்டோ, இல்லை பரிதாபபட்டோ ஒண்ணும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. உன்னைபத்தி எனக்கு நல்லாவே ரொம்ப நல்லாவே தெரியும். உனக்கு ரெட்டை வருமானம்னு நினச்ச? அதனால நான் சொன்ன டீலுக்கு நீ ஒத்துவந்த. அவ்வளோதான்….”

“சார்!…” என இழுத்தவனிடம், “இன்னும் கொஞ்ச நேரத்தில பொண்ணும்  மாப்பிள்ளையும் இங்க வந்திருவாங்க, உங்க நியாயத்தை நீங்க அவன் கிட்டே கேளுங்க, நல்ல பதிலா சொல்லுவான்!…” என்றான் எச்சரிக்கை செய்யும் குரலில்.

“என்னங்க மிரட்டறீங்களா?…” என மீண்டும் குணாவின் தந்தை எகிறிய எகிறளில் பிரசாத்தின் பொறுமை புஸ்வாணமானது. ஓங்கி ஒரே ஒரு அறை விட்டான். குணாவை சேர்ந்த அனைவருக்கும் சப்தநாடியும் அடங்கியது.

“பணத்துக்காக வீட்டுக்கு வாழ வரப்போற பொண்ணை வியாபாரமா வருமானமா பார்க்கிற உனக்கெல்லாம் என் கிட்ட பேச தகுதி இல்லை. என் முன்னாலேயே சத்தமா வேற பேசற? சுத்தமா அழிச்சிடுவேன் ஜாக்கிரதை!…” என ஆக்ரோஷமாக கர்ஜித்தவன்,

“இங்க பாரு குணா நீ இதுக்குமேல என் பொறுமையை சோதிக்கிறது நல்லதில்லை. கிடச்ச பணத்தோட எல்லோரையும் கூட்டிட்டு ஊரு போய் சேரு. அந்த பிரபாகரன் கண்ணுல மாட்டினீங்க உசுரு தப்பாது. பாத்துகோங்க!…” என்றவன் அவர்களின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக,

“என்ன உனக்கும் அதே நிலைமைன்னு நினைக்கிறீங்க போல?…. அவனால என்னை ஒண்ணுமே பண்ணமுடியாது, அவனுக்கு நல்லாவே தெரியும் இதுக்கு நான்தான் காரணம்னு, அதனால நீங்க எல்லோருமே யோசிக்கிறது வேஸ்ட். வேணும்னா இருந்து பார்த்துட்டு போங்க, சேதாரம் எனக்கா உங்களுக்கான்னு!…” என சொல்லிய நிமிடம் கிடைத்தவரைக்கும் லாபம் என அங்கிருந்து அகன்றனர்.

சோர்வாக அமர்ந்தவனின் அருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவன் தன் தாய் தனம் நிற்பதை கண்டு அவசரமாக எழுந்து நின்றான்.

“நீயெல்லாம் மனுஷனாடா?…” என கண்ணில் மிதக்கும் நீரோடு கேள்வி கேட்டவரிடம் மௌனத்தையே பதிலாக தந்தான்.

நீ உன் ஆட்டத்தை பிரபாவோட நிறுத்திக்க வேண்டியது தானே? அவன் நீ என்னதான் இடஞ்சல் குடுத்தாலும் எதிர்க்காம அமைதியா போறான்னு  உனக்கு திமிரு, எல்லா நாளும் அப்டியே போகாது பிரசாத். உன் கிட்ட இருந்து அந்த பிள்ளையை யாரு காப்பாத்த போறாங்களோ?…” என்றவரை பார்த்து,

“அவனை காப்பாத்ததான் நீங்க இருக்கீங்களே?…” என சூடாக பதில் கொடுத்தான் பிரசாத்.

“நான் அவனை மட்டும் காப்பாத்துறதுதான் உன் கண்ணுக்கு தெரியுதா? என் பிள்ளையை அவன் செய்ய இருக்கும் பாவத்திலிருந்தும் காப்பத்த போராடிட்டு இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியாம போச்சே?…”

“பொண்ணுங்க வாழ்க்கைனா உனக்கு இளக்காரமா போச்சா? நீ விளையாட, பழிவாங்க அந்த பொண்ணு எதிர்காலம் தான் கிடச்சதா? இன்னும் பிரபாகரனை என்னெல்லாம் பாடு படுத்த போற?…” என அவர் கேள்விகளை அடுக்கிகொண்டே போக இது பழகிப்போன ஒன்றுதானென இறுகிப்போய் கல்லாய் நின்றிருந்தான்.

தான் என்னதான் கோவமாக பேசினாலும் அவனிடமிருந்து எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என்பதை உணர்ந்தவர் தன்மையான குரலில்,

“பிரசாத் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழசையே நினச்சிட்டு இருப்ப, அதையெல்லாம் கெட்ட கனவா நினச்சு மறந்திட்டு உன் எதிர்காலத்தை பத்தி கொஞ்சம் யோசியேன்!…” என மன்றாடும் குரலில் கேட்டவரை பார்த்தவன்,

“என்னை மட்டும் சொல்றீங்களே, நீங்க மறந்துடீங்களா? அப்போ சரிங்கம்மா வாங்க ஊருக்குள்ள இருக்கிற நம்ம வீட்டுக்கு போவோம், வருஷக்கணக்கா எதுக்காக நாம பண்ணை வீட்டில் வந்து தங்கியிருக்கணும்?…” என எதிர்கேள்வி கேட்கவும் வாயடைத்து போனார் தனம்.

இத்தனை வருடங்களில் கேட்காத ஒன்றை இன்று கேட்கவும் துக்கபந்து நெஞ்சடைக்க தன மகனின் வாழ்வு முழுமைக்கும் இப்படியே கழிந்துவிடுமோ என அஞ்சியவர்,

“பிரசாத் நீ கிருஷ்ணமூர்த்தி அண்ணனை புரிஞ்சிக்காததால வெறுக்கிறாயா? இல்லை வெறுக்கிறதால புரிஞ்சிக்காம இருக்கிறயான்னு எனக்கு தெரியலை, முதல்ல கோவத்தை ஒதுக்கிவச்சிட்டு யோசி. உனக்கு நான் சொல்றது புரியும். எனக்கு என் மகன் நல்லபடியா வாழனும் அதை தவிர உன் கிட்ட வேற எதையுமே கேட்கலை….” என்று உரைத்துவிட்டு தளர்ந்த நடையோடு வீட்டினுள் சென்றுவிட்டார்.

அவர் செல்லவும் நாற்காலியில் அமர்ந்தவன் சிந்தனை முழுவதும் தான் அடுத்து என்ன செய்யவேண்டுமென்பதில் தான் சுழன்றது. உதயா நந்தினியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்க ஆயத்தமானான்.

———————————————————

ஒருமணிநேரம் கடந்திருக்கும் விழிகளை மெல்ல திறந்து பார்த்தவனது பார்வையில் உஷ்ணம் உச்சகட்டத்திற்கு எகிறியது. வரும் வழியெல்லாம் விழியிலிருந்து கண்ணீரை வாரி வழங்கிகொண்டிருப்பவளை என்ன செய்தால் தகும் என்பதுபோல முறைத்து முறைத்து பார்த்தான்.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன் ன்னு இப்டி அழுவுறா? கழுத்துல கத்தியை வச்சா தாலி கட்டினேன்!” என்று நினைத்தவனை அவனது மனசாட்சி, “பின்ன நீ எப்படி தாலி கட்டினன்னு நினச்சு பாரு. அதை விட்டுட்டு மத்ததை நினைப்ப!” என்றுரைத்தது.

கோபம் கரையுடைக்க, “இப்போ என்ன நடந்துபோச்சுன்னு நீ இப்படி ஒப்பாரி வைக்காத குறையா ஊரை கூட்டுற?” என்றான்.

அவன் கோபத்தை பார்த்து மிரண்டவள் அவனது குற்றச்சாட்டில் மேலும் அழுது கரைந்தாள்.

“நான் ஒன்னும் சத்தமா அழுவலை!” என்று நியாயம் பேசியவளை சலனமில்லாமல் பார்த்து அடுத்த கேள்வியையும் கேட்டான்.

“செய்றதெல்லாம் செஞ்சுட்டு அழுகுறது, கேட்டா அதுக்கு வியாக்யானமா பதில் வேற சொல்றது?” என்று சாடினான்.

error: Content is protected !!