நட்சத்திர விழிகளிலே வானவில் – 10 (2)

சட்டென எழுந்த உதயா விஷ்ணுவையும் சேர்த்து எழுப்பி, “ இதோ வந்திடறோம், நீங்க பேசிட்டு இருங்க,…” என்று சொல்லிவிட்டு பின்னால் தோட்டத்தின் பக்கம் இழுத்துசென்றான்.

“என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறதுல உனக்கு என்ன கஷ்டம்?….என்றவன் ஒரு கணம் கழித்து,

“சரி, நீ துக்கப்பட்டு, துயரப்பட்டு ஒண்ணும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். அந்த அளவுக்கு என் தங்கச்சி குறைந்துவிடவில்லை….” என வேதனை கலந்த குரலில் நேரடியாக பேசவும் விஷ்ணுவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

“இல்லைடா பிரபா நான் அந்த அர்த்ததுல சொல்லலை, அவ உன் தங்கச்சிடா, நான் அப்படி நினைச்சுகூட பார்க்கலை. நான் எப்டிடா அவளை?…” என தன்னை புரியவைக்க முயன்றான்.

“சரிப்பா, இதுக்கு பதில் சொல்லு நீயும் அவளை உன் தங்கையாக நினைத்தாயா?…” என்று கேட்கவும் விஷ்ணுவோ தன்னையும் அறியாமல் சட்டென வேகமாக இல்லை என தலையசைத்தான்.

அந்த பதில் உதயாவிற்கு பெருத்த நிம்மதியை அளித்தது. அவனுக்கு தெரியும் விஷ்ணுவை பற்றி.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை? ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?..” எனவும்,

“அப்டிலாம் இல்லை, இப்போ எதுக்கு அவசர அவசரமாகன்னு தோனுச்சு அதான்….” என இழுத்தவனை உற்று நோக்கிய உதயா,

“சரிடா, உனக்கே விருப்பம் இல்லாதப்போ நான் உன்னை வற்புறுத்தலை, பெரியவங்க கிட்ட நான் பேசிக்கறேன்…” என வேகமாக திரும்பியவனின் கையை பிடித்து இழுத்து நிறுத்தி,

“ஓங்கி ஒன்னு விட்டேனா பார். எப்போ பாரு யோசிக்காம உடனுக்குடனே நீயாவே முடிவு பண்றது. நான் இப்போ கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னேனா?…. கௌரியோட சம்மதம் கேட்காம எப்டின்னு யோசிச்சேன்!…” என்றதோடு விடாமல்,

“இப்போதான் பேசி முடிச்சிருக்காங்க அதுக்குள்ளே அபசகுனமா நிறுத்தபோறேன்னு அறிவில்லாம உளறிட்டு இருக்க?…”என்று படபடவென பட்டாசாய்  பொரிந்தவனை இழுத்து இறுக்க அணைத்துக்கொண்டான் உதயா.

விஷ்ணுவிற்கு இந்த திருமணத்தை நிறுத்த தனக்கே விருப்பமில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. திடீரென்று என்ன மாற்றம் தனக்குள் ஏற்பட்டது என்ற சிந்தனைவயபட்டான்.

விஷ்ணுவின் இந்த பேச்சு எந்த அளவிற்கு உதயாவின் மனதிற்கு உவகை அளித்துள்ளது என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

யாரிடமும் கலந்துகொள்ளாமல் தன்னிச்சையாக தானே யோசித்து இந்த முடிவை எடுத்துவிட்டு அது நல்லவிதமாக முடியவேண்டுமென உதயா வேண்டாத தெய்வமில்லை. விஷ்ணுவின் பேச்சில் ஒரு நிமிடம் துணுக்குற்றவன் தான் செய்தது தவறோ என நொடிந்துபோனான். இப்போது விஷ்ணுவின் வார்த்தை கொடுத்த உறுதியில் எல்லையில்லா சந்தோஷத்தில் திளைத்தான்.

“தேங்க்ஸ் டா மச்சான்…” என உணர்ச்சிப்பெருக்கில் கூறியவனிடம்,

“என்னத்துக்கு தேங்க்ஸ் டா? என்னையும் நம்பி பொண்ணை கொடுக்க நினச்ச உன்னை நினச்சா ரொம்ப பெருமையா இருக்குடா… ஹேய்ய் எனக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்…” என துள்ளிக்குதிக்க அதை பார்த்து வாய்விட்டு சிரித்தவன் அவனோடு உள்ளே சென்றான்.

அவனுக்காகவே காத்திருந்த நாச்சி, “ராசா, கல்யாணம் முடிஞ்சு வந்து நம்ம ஊர் கோவிலுக்கு நீங்க போகவே இல்லைல. அடுத்தடுத்து போகமுடியாத சூழ்நிலை ஆகிபோச்சு. இப்போ சுபகாரியம் வேற நடந்திருக்கு எல்லோரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வரணும்ய்யா, நீயும் போய் புறப்பட்டு வா…” எனவும் உதயாவும் தன் அறைக்கு சென்று கிளம்பி வந்ததும் இனி கௌரியிடம் தான் பேசவேண்டும் என முடிவெடுத்தவன், அவளது அறைக்கு சென்றான்.

தங்கையை இதுவரை சிறுபெண்ணாக மனதில் வரித்திருந்தவனின் கண்களுக்கு இன்று புடவையில் பெரியபெண்ணாக காட்சியளிக்க உதடுகளில் குடியேறிய குறுஞ்சிரிப்போடு அவளையே பார்த்திருந்தான். 

“அண்ணா பாருங்க அண்ணியை எனக்கு மேக்கப் பண்ணிவிட்டு படுத்துறாங்க…” என நந்தினியை காமித்து புகார் வாசித்தவள் அதே பழைய சிறுபெண்ணின் செய்கையில் சிணுங்கினாள்.

தொண்டையை கனைத்துகொண்டு, “கெளரி, உனக்கு அண்ணா செய்ததுல ஏதாவது வருத்தமாடா?….” என்றான் உதயா.

“அதெல்லாம் இல்லை அண்ணா. நீங்க யோசிக்காம எதையும் செய்யமாட்டீங்க, எனக்கு உங்களை தெரியாதா?, இப்டி திடீர்னு முடிவெடுத்ததுக்கு ஏதும் காரணம் இருக்கும். இல்லையா அண்ணா?…” என்றவளை பார்த்து பெருமிதம் கொள்ள, நந்தினி ஆச்சர்யம் கொண்டாள்.

“எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம் அண்ணா, விஷ்ணு அவங்களை… ம்ம்ம். கொஞ்ச நாள்ல சரியாகிடும்…..” என தன்னம்பிக்கையோடு கூறிய கௌரியை அழைத்துகொண்டு நந்தினியோடு அனைவரும் அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றான்.

அவைக்கு வந்து அனைவருக்கும் நமஸ்காரம் தெரிவித்தவள் குனிந்த தலை நிமிராமலே இருக்க விஷ்ணுவோ கௌரிக்கு தன்னை பிடித்திருக்கிறதா என தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது. அவளோ அவன் புறம் ஏறிட்டும் பார்க்கவில்லை.

பூவை எடுத்து வந்து கெளரி தலையில் சூடிய தேவகி அவளுக்கு திருஷ்ட்டி கழித்தார்.

நடந்ததும் நடப்பதும் இந்த வீட்டில் தன்னை மூன்றாம் மனுஷியாக நிற்க வைத்துவிட்டதே உள்ளுக்குள் சபித்துக்கொண்டும் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவும் காட்சியளித்தார்.

அனைவரும் தயாராகி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றடைந்தனர். பூஜைக்கான தட்டுகள் வரிசையாக அடுக்கி வைத்திருந்ததை பார்த்த உதயா, ஏன் நாச்சி முன்னேற்பாடுகள் பலமா இருக்கே?…” எனவும்,

“ம்க்கும், ஏன்? எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டு தான் செய்யணுமோ?…” என்று வாரவும் பூசாரி வரவும் சரியாக இருந்தது.

“பாக்கியம்…” என நாச்சி அழைப்பிலேயே பாக்கியம் புரிந்துகொண்டவராக அந்த நகைபெட்டியை நீட்டினார். அதை பூசாரியிடம் கொடுத்த நாச்சி அர்ச்சனை பண்ணி எடுத்துவருமாறு சொல்லியதை கண்கள் தெறிக்க பார்த்தார் வேணி.

அது அவர்களின் பரம்பரை நகை. பாரம்பரிய கௌரவம். வீட்டிற்கு வரும் மருமகளிற்கென்றே தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வரும் மரகதக்கல் பதித்த மாலை. அந்த மாலையின் மேல் வேணிக்கு தீராமோகம், வெறி என்று கூட சொல்லலாம். அதை எத்தனை முறை போட்டுப்பார்க்க கேட்டும் தரமறுத்த நாச்சி அதை பாக்கியத்தின் கைகளில் ஒப்படைத்தார். நிதர்சனம் அறிந்து தன் எண்ணம் தவறு என்று தன்னை நிதானபடுத்திக்கொண்டார் வேணி.

ஆனாலும் அவரால் உள்ளத்தின் ஆழத்தில் அமிழ்த்தி வைக்கபட்டிருந்த ஆசை பேராசையாக காலநேரமின்றி விஸ்வரூபம் எடுத்தது. தனக்கு கிடைக்காமல் போனது தன் மகள் கௌரிக்காவது கிடைக்கவேண்டும் என நினைக்க அதுவும் நடக்க வாய்ப்பற்று போனதை எண்ணி வெதும்பினார். அந்த கௌரவத்தை அடைய ஆனதை செய்ய முயன்று மிஞ்சியது அனைத்தும் தோல்வியே.

அர்ச்சனை அபிஷேகம் அனைத்தும் முடிந்து நகைப்பெட்டி நாச்சி கைக்கு வந்தது. வேணிக்கு மனதின் ஓரத்தில் ஒரு நட்பாசை. தான் நினைப்பது அபத்தம் தான். நடக்காதுதான், ஆனால் நடந்தால் நன்றாக இருக்குமென எண்ணினார்.

திருமணம் கைகூடிவந்த சந்தோஷத்தில் அதை கௌரிக்கு பரிசாக கொடுப்பார்களா என ஆவலோடு எதிர்பார்த்தவரது எண்ணத்தில் மண் விழுந்தது.

அனைவரின் முன்னிலையில் பாக்கியம் கைகளால் அம்மாலை நந்தினியின் கழுத்தை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்றது.

அதை வெறிக்க வெறிக்க பார்த்தவர் அதற்குமேல் தாங்கமுடியாமல் பாக்கியத்தை தனியே அழைத்து, “எனக்கு தலைவலிக்குது அண்ணி, நான் வீட்டுக்கு போயிட்டு கார் அனுப்பறேன், மதியத்துக்குள்ள வந்திடுவீங்கதானே?…” என்று சொல்லி பாக்கியத்தின் பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென சென்றுவிட்டார்.

அவர் செல்வதை அறிந்த சுதர்சனம் பாக்கியத்திடம் கேட்க அனைவருக்கும் வேணி சொன்ன தகவலை சொல்லிவிட்டு மேற்பட்ட வேலைகளை கவனிக்க சென்றார்.

வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் நுழைந்த வேணிக்கோ ஓ வென கத்தி அழவேண்டும் போல தோன்றியது. அழுகையை தன்னுள்ளே அடக்கி துக்கத்தை வெளிபடுத்தாமல் அதை உரமாக்கி தன் வைராக்கியத்திற்கும், பழிவாங்கும் உணர்ச்சிக்கும் உரித்தாக்கினார்.

அவரது மனம் அமைதியிழந்து துடித்து. உதயாவிடம் வகையாக சிக்கிக்கொண்ட தருணத்தை எண்ணி சில்லுசில்லாய் நொறுங்கியது. எவ்வளவு மரியாதையும், பாசமும் வைத்திருந்தவன் எப்படியெல்லாம் பேசிவிட்டானே என அந்நாளை நோக்கி பயணப்பட்டது.

நந்தினிக்கு கையில் அடிபட்ட மறுநாள் வீட்டில் யாருமில்லா நேரத்தில் உதயா தனது அறைக்கு வந்தபோது அதை சாதாரணமாகத்தான் எடுத்துகொண்டார்.

“என்னப்பா பிரபா? ஏதாவது வேணுமா?…” என பாசத்தோடு வினவியரிடம்,

“இல்லை அத்தை, உங்ககிட்ட ஒன்னு காமிக்கணும் அதான் வந்தேன்…” என பேசிக்கொண்டே அங்கே இருந்த டிவிடி ப்ளேயரில் தான் கொண்டுவந்திருந்த மெமரிக்கார்ட் அடங்கிய அடாப்ட்டரை சொருகினான்.  அவனது செய்கைகளை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தவர் அவனது குரலில் உள்ள பேதத்தை அப்போதுதான் உணர்ந்தார்.

என்னவென யோசிக்கும் முன்பே டிவியில் அந்த வீடியோ ஓடத்தொடங்கியது. சரியான இடத்தில் அதை நிறுத்தியவன் வேணியை காண அவரது முகமோ பயத்தில் வெளிறிப்போய் இருந்தது.

அதில் ஓரளவு தெளிவோடே பேச்சுவார்த்தைகள் கேட்கத்தான் செய்தது.

ஜாடிகளில் பூக்களை அடுக்கிகொண்டிருந்த நந்தினியை அழைத்தார் வேணி. அவரது குரல் கேட்ட அடுத்த நிமிடம் திரும்பிய நந்தினி தனக்கு பின்னால் நின்ற வேணியிடம், “என்ன சித்தி கூப்பிட்டீங்களே? ஏதாவது வேணுமா?…” என ஆவலோடு அவர் தன்னிடம் பேசிவிட்ட மகிழ்ச்சியில் கேட்க,

“சித்தின்னு கூப்பிடாதேன்னு உன்னை ஏற்கனவே எச்சரித்திருக்கேன்?… அப்டியும் நீ கூப்பிடுறான்னா உனக்கு எவ்வளோ திமிர் இருக்கணும்?…” என ஆங்காரமாய் பேசியவரிடம் என்ன பேசவென தெரியாமல் பயத்தில் கைகள் நடுங்க பின்னே சென்றாள், அவள் செல்ல செல்ல முன்னேறிய வேணி,

“உனக்கெல்லாம் இந்த வீட்டு மருமகளாக என்ன தகுதி இருக்கு?…” என்றவர், “முறையான வழியில வந்திருந்தா இந்த குடும்பத்தோட  அருமை பெருமை புரிஞ்சிருக்கும்…” என தன் வார்த்தைகளில் விஷம் தடவி நந்தினியை நோக்கி எறிந்தார்.

“என் மகளோட வாழ்க்கையை அழிச்சிட்டு நீ அந்த இடத்தில நிம்மதியா வாழ்ந்திடுவியா? நான் சும்மா இருப்பேன்னு நினைச்சிட்டியா?…” என்று கேட்கவும் குபுக்கென நந்தினியின் கண்கள் கண்ணீர் உகுக்க அதை ஒரு திருப்தியோடு பார்த்த வேணி,

“இல்லை சித்தி. அப்படி பேசாதீங்க. நான்…” என உதறலுடன் கூறியவளை, “போதும்?…” என்று எரித்துவிடுவது போல பார்த்தவறது பார்வையில் தானாக வாய் மூடிக்கொண்டது நந்தினிக்கு.

“நடந்ததை மாத்த முடியாது, ஆனா அதை நடக்கவிடாம பண்ணின  உன்னை என்னால துன்புறுத்த முடியுமே, ரணமான என் மனசுக்கு அதுதான் ஆறுதல். இனி தினம் தினம் உனக்கு போராட்டமான நாளாகத்தான் இருக்கும், இப்போதிருந்தே அனுபவி…” என்று பேசிக்கொண்டே நந்தினி எதிர்பாராத நேரத்தில் மீன்தொட்டியை பிடித்து இழுக்க அது நொடியில் கீழே விழுந்து சுக்கலாக நொறுங்கியது. அதிலிருந்த மீன்கள் அனைத்தும் சுவாசத்திற்கு புழுவாய் துடித்தன.

error: Content is protected !!