இவன் தன்னை இந்த பாடு படுத்துறானே, தான் வாங்கி வந்த வரம் என்னவாயிருக்கும் என உள்ளுக்குள் புகைந்தபடி உதயாவை துவம்சம் செய்துவிடும் வெறியோடு நோக்கினான்.
“ஒரு கிண்ணம் க்லோப்ஜாமூனை குடுத்துட்டு இவனுக்கு எம்மா ஏத்தம் பாரேன்,” என அவனது மனம் முரண்டியது.
“நான் உள்ள போய் ஸ்வீட் வாங்கிக்கறேன். அதுவரைக்கும் யாரும் அடுப்படிக்குள்ள வராம பார்த்துக்கணும். மவனே மீறி யாராச்சும் வந்தாங்க உன்னை கொன்னுடுவேன். ஜாக்கிரதை….” என எச்சரித்தவனை வாயில் வைத்த ஜாமூனோடு பரிதாபமாக பார்த்தான். அவனை கண்டுகொள்ளாமல் எழுந்து மடமடவென அடுக்களைக்குள் சென்றுவிட்டான்.
“அடப்பாவி நீ இதுக்காகவா அம்பூட்டு பாசமா எனக்கு இதை குடுத்த? முதல்லையே தெரிஞ்சிருந்தா நான் ஜாமூன் பக்கமே திரும்பியிருக்க மாட்டேனே? சிக்கவச்சுட்டானே பாவிப்பய…” என மனதிற்குள் அர்ச்சித்தபடி அமர்ந்திருந்தான்.
“இதை எடுத்திட்டுவர இவ்வளவு நேரமா?..” என அருகில் மிக அருகில் கேட்ட குரலில் தூக்கிவாரி போட பதட்டத்துடன் திரும்பினாள்.
“நீங்க எதுக்கு இங்க. போங்க நானே எடுத்துட்டு வரேன்…” என்று திக்கி திணறியபடி பேசியவளை விட்டு அகலாது இன்னும் நெருக்கமாக நின்றான். அதுவரை இவ்வளவு அருகில் அவனது அருகாமையை அவள் உணர்ந்ததில்லை.
“பரவாயில்லை, நானே எடுத்துக்கறேன். ஆமா எல்லோருக்கும் செய்ததுதானா எனக்கு? புருஷனுக்கு ஸ்பெஷல் ஸ்வீட் இல்லையா?…” என அவளது தவிப்பை ரசித்தபடி கேட்கவும்,
“உங்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்னு சொல்லுங்க. செஞ்சு தறேன்….” என்று அவனிடம் இருந்து விலகிக்கொள்ள முடிந்த மட்டும் முயன்றாள். ம்ஹூம். அவன் விட்டால் தானே. கிடைத்த வாய்ப்பை விட மனமில்லாதவனாய் வாகாய் பற்றிகொண்டான்.
அவனது பார்வை முழுவதும் அவளின் இதழ்களில் நிலைத்து நிற்க அவனது எண்ணம் பிடிபட அதற்குமேல் தாளமுடியாமல், “தள்ளிபோங்க. என்ன இது சின்னபிள்ளை மாதிரி. யாராச்சும் வந்திடுவாங்க. ப்ளீஸ்….” என பதட்டத்துடன் கெஞ்சவும் இனிமேல் பேசினால் வேலைக்காகாது என்று எண்ணியவன்,
“ஹ்ம், சரி. அந்த ஸ்வீட் கிண்ணத்தை எடுத்துத்தா, நான் போறேன்…” என்று சொல்லவும் தான் ஆசுவாசம் அடைந்தாள்.
கிண்ணத்தை எடுத்துவிட்டு திரும்பவும் மின்னல் வேகத்தில் அழுத்தமான முத்தமொன்றை அவளிழதில் பதித்துவிட்டு நந்தினி கையில் வைத்திருந்த கிண்ணத்தை கீழே போடும் முன் வாங்கிகொண்டு விலகி நடந்தவன்,
“ஹே பொண்டாட்டி, ஜாமூன் செம டேஸ்ட்….” என்று கண்ணடித்து உரைத்துவிட்டு முகம் நிறைய புன்னகையோடு நகர்ந்துவிட்டான்.
பெரிதாக சாதித்தது போல வந்து அமர்ந்தவனை கண்ட விஷ்ணு, “டேய், என்னத்தைடா பண்ணிதொலைச்ச?…” என பீதியோடு கேட்கவும்,
“உன் வேலையை பாரு, நான் புது அவதாரம் எடுத்திருக்கேன். அதோட ஆரம்பம் தான் இன்னைக்கு. நீ பாப்பா உனக்கெல்லாம் புரியாது, பேசாம நீ பப்பு மம்மம் சாப்பிடு. கெளரி அந்த பருப்பை எடுத்து இவனுக்கு ஊத்து…” என்று விஷ்ணுவை வாரிவிட்டு ஒரு மந்தகாச புன்னகையோடு தானும் சாப்பிட ஆரம்பித்தான்.
நந்தினிக்கோ அந்த நொடியில் நடந்தது என்னவென்று உணர்ந்த போது மேனி முழுவதும் மெல்லிய நடுக்கம் பரவியது. புதுவிதமான உணர்வுகள் தோன்றி மறைந்தன. அந்த உணர்வுகளின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வழியின்றி கால்கள் இரண்டும் தொய்ந்து போக நின்ற இடத்திலேயே அமர்ந்து விட்டாள்.
அதற்குள் கெளரி அழைக்கவும் படபடவென வியர்த்துக்கொட்ட முகத்தை அலம்பி விட்டு அங்கே சென்றவள் உதயாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வெட்கம் பிடுங்கி தின்றது.
உதயாவின் இன்றைய நடவடிக்கைகளையும், உள்ளே சாதாரணமாக சென்ற நந்தினி திரும்ப வெளியில் வரும் போது வெட்கம் பூசிய முகத்தோடு வந்ததையும் கண்ட மற்றவர்கள் மனம் மகிழ்ச்சி அலையில் தத்தளித்தது.
விஷ்ணுவோ, “அய்யா செயல்புயலா மாறிட்டாரு, இன்னும் நம்மை வச்சு என்னென்ன குரங்கு வித்தை காட்டபோறானோ?…” என இப்போவே கவலை கொள்ள ஆரம்பித்தான்.
“அம்மா இன்னைக்கு நந்தினி செஞ்ச ஜாமூன் சூப்பர்ல?…” என தன் தாயை துணைக்கழைத்தவன் நந்தினியின் பார்வையை தன் புறம் திருப்ப எவ்வளவோ முயன்றான். அவள் திரும்பினால் தானே.
“நந்தினி…” என அவளை அழைக்கவும் வேறுவழியின்றி நிமிர்ந்து பார்த்து, “என்னங்க?…” என்றவளிடம்,
“இனிமே அடிக்கடி எனக்கு ஜாமூன் வேணும் தருவ தானே?…” என நமுட்டுசிரிப்போடு கேட்கவும் என்ன பதிலை சொல்வது என தெரியாமல் திருதிருவென முழிக்க அதற்குமேல் நிற்காமல் அவனின் சிரிப்போசை பின் தொடர உள்ளே ஓடிவிட்டாள்.
சாப்பிட்டு முடித்து அனைவரும் வரவேற்பறையில் வந்து அமரவும் சிறிது நேரம் பொதுவான விஷயங்களை பேசி கழிக்க உதயா கண்ணசைவில் சங்கரன் பேச்சை ஆரம்பிக்க ஆயத்தமானார்.
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் மூர்த்தி. நாங்க உதயா, நந்தினியை பார்க்க மட்டும் வரவில்லை, இன்னொரு விஷயத்திற்காகவும் தான் வந்தோம்…” என்று பீடிகை போடவும் அனைவரும் புரியாமல் விழித்தனர்.
சுதர்சனமும் வேணியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். மூர்த்தியும் பாக்கியமும் உதயாவை பார்க்க அவனது தோரணையே அவனுக்கு எல்லாம் தெரியும் என்பது போல இருந்தது. நாச்சிக்கும் அதே தான் தோன்றியது. கௌரியும் நந்தினியும் சாப்பிட்டு விட்டு அப்போதுதான் வந்து அமர்ந்தனர்.
“சொல்லு சங்கரா, என்ன விஷயம்?….” என கேட்கவும்,
தனது ட்ரைவரை அழைத்து காரில் இன்னொரு பையை எடுத்துவர பணித்துவிட்டு அதை வாங்கி நந்தினியிடம் கொடுத்து அதில் உள்ள பொருட்களை பெரிய தாம்பூலதட்டில் நிரப்பி எடுத்துவர சொன்னார்.
புரியாமல் வாங்கியவள் அதில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு உதயாவை காண அவனோ போய் எடுத்துவா என கண்ஜாடையில் சொல்ல சம்மதமாய் உள்ளே சென்றாள்.
தட்டை ஏந்தி வந்தவளிடமிருந்து வாங்கிய சங்கரன் தம்பதியர் சுதர்சனனையும் வேணியையும் பார்த்துவிட்டு,
“மூர்த்தி இந்த வீட்டு பொண்ணான கௌரியை என் பையன் விஷ்ணுவின் மனைவியாய், எங்க வீட்டு மருமகளாக கூட்டிட்டு போக ஆசைப்படறோம், உனக்கும் உங்க குடும்பத்தில் உள்ளவங்களுக்கும் சம்மதமா?..” என புன்னகையோடு கேட்கவும் என்ன பதில் சொல்லவென திகைத்தனர்.
விஷ்ணுவும் கௌரியும் அதிர்ச்சியின் எல்லையை தாண்டிவிட்டனர். என்ன இதெல்லாம் என்பதுபோல கெளரி விஷ்ணுவை முறைக்க, அவனோ தன் தந்தையையும் தாயையும் மாறி மாறி பார்த்தபடி நின்றான்.
ஒருவருக்கும் ஒரு நிமிடம் ஒன்றுமே பிடிபடவில்லை. ஆனாலும் அனைவரும் முகத்திலும் சம்மதத்திற்கு அறிகுறியாய் சந்தோஷமே.
கௌரிக்கு எப்படியும் இன்னும் நான்கைந்து மாதங்களில் படிப்பு முடிந்து விடும். உடனடியாக மாப்பிள்ளை தேட, தேடிய மாப்பிள்ளை மற்றும் அவர்களது குடும்பம் பற்றி விசாரிக்க என தொட்டுத்தொட்டு பல காரியங்கள் இருக்க, தேடாமலேயே ஒரு நல்ல சம்பந்தம், அதுவும் கல்யாண மாப்பிள்ளை விஷ்ணுவாக இருந்தது அவர்கள் அனைவருக்குமே அளப்பறியா ஆனந்தத்தை தந்தது.
வேணிக்கோ உலகமே தட்டாமலை சுற்றியது. “இங்கே நடந்துகொண்டிருப்பது என்ன?…” என்று உதயாவை அக்னிப்பார்வை பார்க்க அவனோ அழுத்தமான பார்வையையுடன் அஞ்சாமல் எதிர்கொண்டான்.
மூர்த்திக்கோ, வேணிக்கு இதில் சம்மதமா என தெரியவேண்டி இருந்தது.
நாச்சி, “எங்க எல்லோருக்கும் விருப்பம் தான் மூர்த்தி, ரொம்ப சந்தோஷம் கூட. ஆனா வேணியிடம் கேட்கணும் இல்லையா?…” எனவும் அனைவரும் வேணியை நோக்கி திரும்பினர்.
வேணியின் முகத்திலிருந்து எதையுமே கண்டுகொள்ள இயலவில்லை. அவருக்கு நன்றாக புரிந்து விட்டது இவை அனைத்திற்கும் சூத்திரதாரி சாட்சாத் உதய் பிராபகரனே. அவன் எதை நினைத்து இந்த ஏற்பாட்டை செய்திருப்பான் என தெரியாத அளவிற்கு வேணி ஒன்றும் முட்டாள் அல்லவே.
வலையில் மாட்டியாகிற்று. தப்பிக்க வேறு வழியில்லை என சிறிது நேரம் கழிச்சு நிமிர்ந்து அனைவரையும் கண்டவர், “எனக்கு சம்மதம்…” என உரைத்துவிட்டு உதயாவை காண அவன் முகம் வெற்றிக்களிப்பில் மின்னிகொண்டிருந்தது.
அனைவரின் சம்மதத்துடன் உடனடியாக தட்டு மாற்றபட்டு நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாம் ஐயர் வைத்து முகூர்த்தநாளை குறித்துகொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. நந்தினியிடம் கௌரியை உள்ளே அழைத்துசென்று புடவை மாற்றி அழைத்து வருமாறு பணித்த நாச்சி பாக்கியத்தையும் துணைக்கனுப்பினார்.
வேணியின் மனமோ உலைகளமாக கொதித்தது. இனி தன் ஆசை நிறைவேறவே போவதில்லை என்பது அவருக்கு தெளிவாக தெரிந்ததுதான். ஆனாலும் ஏமாற்றம் அவரை ஆட்டிப்படைத்தது. தன் உணர்வுகளை யாரும் மதிக்கவில்லை என்று அவராகவே தவறான தீர்மானத்திற்கு வந்து அது உண்டாக்கிய ஆத்திரத்தில் தன் அறிவை ஆவேசத்தின் ஆளுமைக்கு கொடுத்துவிட்டார்.
உதயாவின் பூரிப்பும் வென்றுவிட்ட இறுமாப்பும் அவனது முகத்தில் தாண்டவமாடியது. அதை பார்க்க பார்க்க வேணியின் கண்ணில் அண்ணன் மகன் என்னும் உறவு மறைந்து அவனை குதறி விடும் அளவிற்கு குரோதம் கொப்பளித்தது. வேணியின் துவேஷமான பார்வையை கண்ட உதயாவோ முதலில் அதிர்ந்தாலும் போக போக சரியாகிவிடும் என்று எண்ணி அதை அலட்சியபடுத்தி அவ்விடம் தான் மாபெரும் தவறு செய்துவிட்டான்.
தன் மீது இப்போது ஏற்பட்டுள்ள துவேஷம் பலமடங்காக வளர்ந்து தன்னவளை தாக்கபோவது அறியாமல் அந்நேர ஆனந்தத்தில் அகமகிழ்ந்திருந்தான்.
அதற்கான ஆயுள் சிறிதுகாலமே என அறிவானா?
அனைவருக்கும் சந்தோஷமென்றாலும் இன்னும் விஷ்ணுவும் கௌரியும் திகைப்பிலிருந்து வெளிவரவே இல்லை. சிறுவயதிலிருந்து பழகினாலும் அப்படி ஒரு எண்ணமே இருவர் மனதிலும் துளியும் தோன்றவில்லை.
அப்படி இருக்க, அவர்களது திருமணத்தை அவர்கள் சம்மதமே இல்லாமல் பேசி முடிவு செய்த பெற்றோர்களை வருத்தம் மேலிட பார்த்தனர். எங்கே அவர்கள் இருந்த சந்தோஷத்தில் இவர்கள் இருவரையும் கண்டுகொண்டால் தானே.
விஷ்ணு, கௌரியை பொறுத்தவரை இத்திருமணம் பிடிக்காமல் இல்லை. ஆனாலும் மனதில் ஏதோ ஒரு சுணக்கம். விஷ்ணுவிற்கு காதல் திருமணத்தில் நிரம்ப விருப்பம். கல்லூரி காலத்திலேயே உதயாவிடம் புலம்பியவாறே இருப்பான்.
“மச்சான் கல்யாணம்னா சும்மா இல்லடா, காதலிச்சு கல்யாணம் பண்ணனும், சும்மா பொம்மை போல போய் அப்பாம்மா காட்டுற பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்டு வீடியோ கிராபர் சொல்ற விதத்துல போட்டோக்கு போஸ் குடுத்து, ம்ஹூம். சரியில்ல மச்சி….” என்று அதோடு விடாமல்,
“லவ் பண்ணனும். அதுலயும் சாதாரணமா இல்லாம ரன்னிங், சேஸிங், ஃபைட்டிங்ன்னு சும்மா ரகளையா செம த்ரில்லா நடக்கணும் கல்யாணம். என்ன எனக்கு தான் பொண்ணே செட் ஆகமாட்டேங்குது, ம்ஹூம், நீ ஆகவிடமாட்டேங்கற….” என்பவனை கண்டுகொள்ளவே மாட்டான் உதயா.
“எல்லாம் தெரிந்தும் தனக்கு கல்யாணம் பேசறதை எப்டி வேடிக்கை பார்க்குது இந்த பக்கி!…” என உதயாவுக்கு வசைமழை பொழிந்தபடி கௌரியை பார்த்தான்.
அவளை எத்தனை விதமாக பார்த்தாலும் தனக்கு ஏன் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கலை என்ற தீவிர யோசனையோடு இருந்தவன் காதில் தன் தந்தையின் வாய்மொழியால் அசால்ட்டாக அடுத்த குண்டு வந்து விழுந்தது.
“நம்ம பிரபா வந்து சொல்லவும் எனக்கும் ஆச்சர்யம் தான் மூர்த்தி. விஷ்ணுவுக்கு கௌரியை பிடிச்சிருக்குன்னும், அதை என் கிட்ட சொல்ல கூச்சப்பட்டுகிட்டு இந்த பையன் நம்ம பிரபா உயிரை வாங்கியிருக்கான்….”என்று சொல்லிமுடிப்பதற்குள் விஷ்ணுவின் உலகமே தலைசுத்திப்போயிற்று.
“இது எப்போ நடந்தது? நான் எப்போ சொன்னேன் அந்த சவுரியை பிடிச்சிருக்குன்னு?…” என தனக்குள்ளே குழம்பியவன் அருகில் வந்தமர்ந்த உதயா,
“வெட்கமோ?…. நாணமோ?…” என கிண்டலாக பாட அதில் கொதிப்படைந்தவன்,
“துக்கமோ?.. துயரமோன்னு பாடித்தொலையேன். இப்டி என்னோட கனவுல கல்லை தூக்கி போட்டுட்டயே?…” என்றான் தன் நண்பனின் மேல் எரிந்துவிழுந்தபடி.