அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. தன் மனைவியின் இந்நிலைக்கு காரணம் தன் அத்தை வேணியா?
கைமுஷ்ட்டி இறுக அந்த வீடியோவில் பதிந்திருந்த சம்பாஷணையை உற்று கவனிக்கலானான்.
கேட்க கேட்க கொலைவெறியே உண்டாகிவிட்டது. இதை இப்படியே விடகூடாது என முடிவெடுத்தவன் மனமோ அமைதியிழந்து தவித்தது.
உதயாவின் பெற்றோர் வந்து பார்த்துவிட்டு பதறியே விட்டனர். வந்து இரு நாட்களுக்குள் இதென்ன அசம்பாவிதம் என மனம் பதை பதைத்தனர்.
சுதர்சனமும், விஷ்ணுவும் வந்து பார்த்துவிட்டு நந்தினியின் அருகில் இருந்து உதயாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கார்மண்ட்ஸ் மற்ற வேலைகளையும் தாங்கள் பார்த்துக்கொள்வதாக வாக்களித்துவிட்டு சென்றனர்.
கார்மெண்ட்ஸில் உடனடியாக முடித்துக்கொடுக்க வேண்டிய முக்கியமான ப்ராஜெக்ட் நடந்துகொண்டிருந்தது. விஷ்ணுவிற்கு உதவியாக சுதர்சனமும் சேர்ந்து பொறுப்பை பார்த்துக்கொள்வதாக சொல்லவும் உதயாவிற்கு பெரும் பாரம் இறங்கியது போல ஆகிற்று.
பாக்கியலட்சுமி மருமகளின் அருகில் இருந்து கவனித்து கொள்வதாக சொல்லியும் உதயா விடவில்லை. தானே பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டு ஒருவரையும் நெருங்க விடவில்லை.
நாச்சியும் இது நல்ல வாய்ப்பாகவே கருதினார். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இருவருக்குமான நெருக்கத்தை அவர்களே உருவாக்கிக்கொள்ளும் சரியான தருணமாக எண்ணினார். எனவே இருவரையும் தனித்துவிட பணித்துவிட்டார். அவருக்கு தெரியாததா? எந்த மனநிலையில் பேரன் திருமணம் நடந்தது என்று. தாம்பத்திய வாழ்வில் இருவரும் தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டாமல் தான் இருக்கின்றனர் என்று. அவரது எண்ணமும் வீண் போகவில்லை.
இருவருக்குமான தனிமை மனதளவில் ஒருவரை ஒருவர் தயக்கமின்றி அணுகும் அளவிற்கு பிணைத்தது. அவளுக்கு தேவையான ஒவ்வொன்றையும் தானே பார்த்து பார்த்து செய்தான். காதலை வார்த்தையால் சொல்லிக்கொள்ளவில்லை. பார்வையிலும், அழகான மௌனத்திலும் உணர்ந்தார்கள்.
கண்களின் வழியாக இதயத்திற்குள் ஊடுருவி ஒருவரை ஒருவர் தன் துணையிடத்தில் தன்னை நிலையாக இருத்திகொண்டார்கள். நிமிடங்கள் பரவசமான தங்களுக்கே உரித்தான தனி உலகில் சஞ்சரிக்கவே செய்தனர்.
திருமணத்திற்கு பின் ஏற்படும் புரிதலோடான காதல் அழகானது. அந்த காதல் அவர்களுள் அவசரமில்லாமல் மலர்ந்து இதயம் முழுவதும் மணம் பரப்பியது.
அதே நேரத்தில் உதயா மிக கவனமாக வேணியை நந்தினியிடம் நெருங்கவிடவில்லை. அதுவும் யாருக்கும் தான் வேணியை தவிர்ப்பதை தெரியபடுத்தாமல் யாரின் சந்தேகத்திற்கும் ஆற்படாமல் சாமர்த்தியமாக தள்ளி நிறுத்தினான்.
வேணி எவ்வளவோ முயன்றும் நந்தினியை பார்க்கும் வாய்ப்பு சாத்தியப்படவில்லை. கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பது போல இப்படி பொத்தி பொத்தி பொண்டாட்டியை காவல் காக்கிறானே என்ற ஆற்றாமை வேணிக்கு. எத்தனை நாளைக்குன்னு பார்த்துக்கறேன்? என தனக்குள் சூளுரைத்துகொண்டார். ஒரு வாரம் சடசடவென ஓடிவிட்டது.
…………………………………………
விடியலும் தினமும் நிகழ்கின்ற ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எதிர்பாராத திருப்பத்தை தரவல்லது.
அந்த நாள் அதிகாலை ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் அள்ளிக்கொண்டு விடிந்தது.
எப்போதும் போல் பரபரப்பான அந்த காலைப்பொழுது. காலை உணவிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
விஷ்ணுவின் பெற்றோர் இன்றைக்கு வீட்டிற்கு வரபோவதாக சொன்னதும் பாக்கியம் அவர்களுக்கும் சேர்த்து காலை பலகாரங்கள் தயாராகின. மருமகள் வேறு விடியற்காலையிலேயே உடன் வந்து வேலைகளை பகிர்ந்துகொண்டதும் சந்தோஷம் தாளவில்லை. நாச்சியோடு சேர்ந்து நந்தினியும் தன் பங்கிற்கு தனக்கு தெரிந்தவற்றை செய்துகொண்டிருந்தாள்.
வேணிக்கு ஏனோ படபடப்பாகவே இருந்தது. என்னவென அறியமுடியாமலும், நந்தினியிடம் நெருங்கமுடியாமலும் தவித்துகொண்டிருந்தார். விஷ்ணுவின் பெற்றோர் உதயா நந்தினியை பார்க்க மட்டுமல்ல வேறொரு முக்கிய காரணத்திற்காகவும் வரபோவது வேணி உட்பட யாருமே அறியாத ஓன்று.
அவர்கள் வந்ததற்கான காரணத்தை அறியும் போதும், அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வில் தான் கையாலகாதவளாக இருக்க போவதையும் அறியாதவராக குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.
விஷ்ணுவும் அவனது பெற்றோரான சங்கரனும் தேவகியும் வந்துவிட்டனர். அனைவரும் ஆவலோடு வரவேற்கவும் உள்ளே வந்தமர்ந்தனர். உதயா சங்கரன் இருவரும் நொடிப்பொழுதில் ஒரு அர்த்தப்பார்வையை பரிமாறிகொண்டனர்.
“நந்தினி உனக்கு தெரியாதில்ல, இவங்கதான் விஷ்ணுவின் அப்பாவும் அம்மாவும்…” என நாச்சி நந்தினிக்கு அறிமுகபடுத்தவும் புன்னகையோடு ஆசிர்வாதம் வாங்க முற்பட்டவளை நிறுத்திய தேவகி,
“கொஞ்சம் இருமா…” என்றுவிட்டு,
கொண்டுவந்த பொருட்களை தாம்பூலதட்டில் நிரப்பிவிட்டு உதயாவையும் நந்தினியையும் அழைத்து இருவருக்கும் சங்கரனும் தேவகியும் சேர்ந்து கொடுத்தனர்.
இருவரும் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு பரிசை பெற்றுகொண்டனர்.
“நந்தினி இவங்க எனக்கு மட்டுமில்லை உனக்கும் அப்பா அம்மா போலதான். இனிமே அப்டிதான் கூப்பிடனும். புரிஞ்சதா?..” என விஷ்ணு கேட்கவும் சந்தோஷமாக,
“அதற்கென்ன அண்ணா, கண்டிப்பா அப்டிதான் கூப்பிடுவேன். நீங்க சண்டை போடாம இருந்தா போதும்…” என்றாள் சிரிப்போடு.
“அடேங்கப்பா!! ம்ம் தேறிட்ட. அதுக்குள்ளே பேச கத்துக்கொடுத்துட்டானா?…” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
“எல்லோரும் இருக்கீங்க. எங்க அந்த குள்ள கத்தரிக்கா சவுரியை காணும்?…” என்று பார்வையால் வீட்டை அலசியபடி கேட்டவனை பார்த்த நாச்சி,
“எப்போ பாரு அவளை வம்பிளுக்கிறது, உனக்கு வேற வேலையே இல்லையா? அவ மாடில தான் இருக்கா, இப்போ வருவா, நீங்க பேசிட்டு இருங்க நாங்க போய் ஆகிற வேலையை பார்க்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடனுமில்ல…” என்று சொல்லிவிட்டு வேலையை கவனிக்க உள்ளே சென்று விட்டார்.
வந்தவர்களுக்கு காபியும் சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு தேவகியிடத்தில் சிறிதுநேரம் அமர்ந்து பேசிவிட்டு தானும் அடுக்களைக்குள் புகவும் தேவகியும் பின்தொடர்ந்து சென்றுவிட்டார்.
அவ்விடத்தில் பொருந்தமுடியாமல் மரியாதைக்கு சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு தன் அறைநோக்கி சென்றுவிட்டார் வேணி.
காலையிலிருந்தே தேனியின் சுறுசுறுப்போடு துறுதுறுவென வளையவருபவளை பார்வையாலே இதயத்திற்குள் நிரப்பியபடி வந்தவர்களிடம் பேசிகொண்டிருந்தான்.
உதயாவின் பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தாலும் தன் கணவனின் பார்வைக்கான அர்த்தம் மட்டும் விளங்கவே இல்லை நந்தினிக்கு. இத்தனை நாள் இல்லாமல் இன்று அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம்.
அந்த விழிகள் தனக்கு வசிய வலை விரிப்பதுபோல் ஒரு பிரம்மை. அந்த பார்வையில் மூச்சு முட்டுவதுபோல தோன்ற அவன் பார்வை வட்டத்திலிருந்து விலகி உள்ளே சென்றுவிட்டாள்.
சங்கரனிடம் தன் கல்யாணம் நடந்த சூழ்நிலையினை சொல்லிக்கொண்டிருந்தவனது பார்வை நந்தினியை தேடி அலைபாய்வதை கண்டுகொண்ட விஷ்ணு, “மச்சான் நான் வேணா எதாச்சும் உதவிசெய்யவா?…”
“ஒரு மண்ணும் வேண்டாம், பேசாம இரு. இல்லைனா கேவலமா எதாச்சும் சொல்லிட போறேன்…” என கடுப்படிக்கவும்,
“இன்னைக்கு என்ன ரொம்ப அனல் அடிக்குது?..” என்று கேட்டுவிட்டு உதயாவின் கண்டன பார்வைக்கு ஆளாகியதும் அவசர நிமித்தமாக அமைதியாகிவிட்டான்.
“பிரபா, அப்பாகிட்ட எப்போ ஆரம்பிக்கிறது?..” என்றார் சங்கரன் ரகசியகுரலில்.
“முதல்ல சாப்பிடுவோம்ப்பா, அப்பறமா பேச்சை ஆரம்பிக்கலாம்…” என்றான் அதே குரலில்.
“முதல்ல நீ வீட்ல கலந்து பேசிட்டு அப்றமா முடிவெடுத்திருக்கலாம். நான் விஷ்ணுகிட்டையும் எதுவுமே சொல்லலை. நாம நினைக்கிறது நடக்குமா?…”
“கண்டிப்பா நல்லபடியா நடக்கும்ப்பா. வீட்ல யாருமே தடை சொல்ல மாட்டாங்க…” என்று உறுதியான நம்பிக்கை கொடுக்கவும் சமாதானமாகிவிட்டார்.
“எல்லோரும் சாப்பிடலாம் வாங்க அண்ணா….” என சங்கரனை அழைத்துவிட்டு, “தம்பி பிரபா எல்லோரையும் கூட்டிட்டு வா, அத்தை எங்க அவங்களையும் வரசொல்லு…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் பாக்கியம்.
அனைவருக்கும் சேர்ந்து சாப்பிட அமர பரிமாறும் பொறுப்பை நந்தினி ஏற்கவும் அவளுக்கு துணையாக கௌரியும் வந்து சேர்ந்தாள்.
வேண்டா வெறுப்பாக வேணியும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறேன் என்று பேர்பண்ணிகொண்டிருந்தார். எரிச்சலோடு அமர்ந்திருந்தவரின் அருகில் நந்தினி செய்த க்லோப்ஜாமூன் கிண்ணங்களின் குதித்து விளையாடிகொண்டிருந்தது.
“இவ செய்ததை சாப்பிடனுமா…” என எண்ணினாலும் சிறிதுநேரம் தன் வீம்பை ஓரங்கட்டிவிட்டு ஒரு கிண்ணத்தை எடுத்து சுவைக்கலானார்.
உதயா தனக்கு வைத்த கிண்ணத்தை விஷ்ணுவிற்கு நகர்த்தவும்,
“மச்சான், நண்பேண்டா நீ…” என்று சில்லாகித்தபடி உண்டவனை கண்ட உதயா, “நீ சாப்பிடுடா நான் போய் வேற எடுத்துக்கறேன்….” என்று தோளில் தட்டிக்கொடுத்து அவனை ஜாமூன் ஜீராவிலேயே குளிப்பாட்டினான்.
முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, “நந்தினி எனக்கு வேற எடுத்திட்டு வாயேன்…” எனவும், “இதோ!…” என்று அடுக்களை நோக்கி நகர்ந்தவளை குறும்பு மின்ன கண்டவன் விஷ்ணுவிடம் குனிந்து,
“மச்சான், இப்போ என்னோட பங்கு க்லோப்ஜாமூன் சாப்ட்டியே. அதுக்கு உனக்கு ஒரு வேலை ஒப்படைக்க போறேன்….” என்று நோகாமல் தலையில் இடியை இறக்கினான்.
“அய்யய்யோ இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டானே?… என்ன சொல்லபோறானோ?…” என்ற அதிர்ச்சியில் க்லோப்ஜாமுன் விஷ்ணுவின் வயிற்றுக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்தது.