நட்சத்திர விழிகளிலே வானவில் – 9 (2)

“என்ன பார்வைடா சாமி?….”என சமைந்துவிட்டான். இதைத்தான் சொல்லுவாங்களோ ஒரே பார்வை வீச்சில் ஆளை சாய்க்கிறதுன்னு?  “

“என்னை சாய்ச்சுட்டாளே?… இந்த தடிமாடு தாண்டவராயன் இருந்திருந்தா கூட மச்சான் சாச்சுப்புட்டா மச்சான்னு சொல்லி ஒரு வழி பண்ணியிருக்கலாமே?…” என்று அந்த நேரத்திலும் விஷ்ணுவை வம்பிழுக்க தேடினான்.

“ஆளே இல்லாத நேரத்துல இப்டி புலம்ப வச்சுட்டாளே?…” என தனக்குள் பேசியபடி இருந்தவன் மொபைலின் அழைப்பு மணியோசையில் தன்னை மீட்டுகொண்டு அதற்கு காது கொடுத்தான்.

சுதர்சனம் தான் அழைத்திருந்தது. அவரிடம் பேசியவாறே வீட்டிற்கு வெளியே சென்றுவிட்டான்.

சமையலறையில் உதவ முயன்றவளை, “நந்தினி கண்ணு நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். பேசாமல் பார்த்துட்டே மட்டும் இரு, இதை எல்லாம் செய்ய இன்னும் நாள் இருக்கு…” என சொல்லி அமைதியாக உட்கார சொல்லிவிட்டார் நாச்சி.

சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் நாச்சியை திருப்பி, “ப்ளீஸ் பாட்டி நானும் ஏதாச்சும் செய்யறேனே? ஒரு சின்ன வேலையாச்சும் குடுங்களேன்?…” என்றாள் கெஞ்சலான குரலில் கொஞ்சியபடி.

அந்நேரம் உதவிப்பெண் ஒருத்தி கை நிறைய பூக்களுடன் வந்துகொண்டிருந்தாள்.

“வேலைதானே? தரேன். அதுக்கு பின்னால கேட்ககூடாது…” என்ற  கட்டளையோடு நந்தினியின் கைகளில் பூக்களை கொடுத்து,

“இதை மாடிப்படி கீழ, சோபா பக்கத்துலன்னு எல்லாத்தையும் சுத்தி சின்ன சின்னதா பூஜாடிகள் இருக்கும் அதுல இந்த பூக்களையெல்லாம் அடுக்கி வை….” என அனுப்பிவைத்தார்.

மணம் பரப்பும் மலர்கொத்தோடு சென்றவள் அனைத்தையும் பிரித்தெடுத்து பொருத்தமான வண்ணங்களை ஒன்றாக்கி பூஜாடிகளில் அழகாக அடுக்கி வைத்துவிட்டாள்.

வெளியே போனில் பேசிக்கொண்டிருந்தவன் சிலீரென சப்தம் கேட்டு என்னவோ ஏதோவென உள்ளே ஓடி வர அவனது கண்களில் விழுந்தது உடைந்து கிடந்த மீன்தொட்டியும் அதனருகில் கைகளை கீறும் கண்ணாடி சில்களையும் பொருட்படுத்தாமல் சுவாசத்திற்காக துள்ளி துடித்துகொண்டிருந்த மீன்களை அள்ளி பதட்டத்தோடு தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போட்டுகொண்டிருந்த தன் மனைவியும் மட்டுமே.

செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் அவளிடம் விரைந்தான். பாட்டியும் அதற்குள் வந்து சேர கோவத்தோடு பாத்திரத்தை பிடுங்கி வைத்துவிட்டு அவளை தூக்கி நிறுத்தினான்.

கண்கள் சொருக தள்ளாடியவாறே நின்றவளை தாங்கி கொண்டவன், “ஏய்,… என்ன நந்து இதெல்லாம்?…” என பதட்டத்துடன்            கேட்டவனிடத்தில்,

“மீன் எல்லாமே நல்லா இருக்குங்க. எல்லாத்தையும் தண்ணில போட்டுட்டேன்…” என்றவள் அவன் மீதே மயங்கி சரிந்தாள்.

“ஐயோ ராசா கையெல்லாம் ரத்தமா கொட்டுதே…” என அலறிய நாச்சியிடம் மதியிடம் விவரம் சொல்லி டாக்டருக்கு அழைக்குமாறு சொல்லிவிட்டு தனது அறை நோக்கி நந்தினியை தூக்கி சென்றான்.

மதியை அழைத்து டாக்டரை கூட்டிவர விவரம் சொல்லிவிட்டு முதலுதவி பெட்டியையும் எடுத்துகொண்டு மாடியை நோக்கி பதட்டத்தோடு சென்ற நாச்சிக்கு உள்ளமெல்லாம் கலக்கம் வியாப்பித்திருந்தது.

சற்று முன்னாள் தானே தன்னிடம் பேசிவிட்டு சென்றாள். அதற்குள் எப்படி இந்த அசம்பாவிதம் நடந்தேறியது? என யோசித்தவர் உதயாவின் அறையை அடைந்து அவனிடம் பெட்டியை கொடுத்துவிட்டு நந்தினியின் அருகிலேயே அமர்ந்துவிட்டார்.

முகம் களையிழந்து வாடிவதங்கிய கொடியாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவளை கவலையோடு பார்த்தவரை கண்டவன்,

“எப்படி ஆச்சு பாட்டி. நீ பக்கத்தில இல்லையா? உன் கூடத்தானே வந்தா?…” என்றவாறே அவளது இரு கைகளிலும் இரக்கமின்றி இறங்கியிருந்த கண்ணாடி துண்டுகளை ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல வலிக்கும் இதயத்தோடு வெளியே எடுத்து எறிந்தான்.

மயக்கத்திலும் அவளது முகம் வலியில் சுருங்குவதை பொறுக்கமாட்டாமல் இப்படி ஆகிவிட்டதே என மீண்டும் புலம்ப  ஆரம்பித்தான்.

“நான் காய்கறி பறிக்க பின்னால தோட்டத்து பக்கம் போயிருந்தேன்ய்யா, நானும் சத்தம் கேட்டுதான் ஓடிவந்தேன்….” என்றவருக்கோ இருவரது நிலையையும் பார்க்க சகிக்க வில்லை. கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தானே ஆகியிருக்கு. கடவுளே அதுக்குள்ளே இப்படி ஒரு அசம்பாவிதம் என மனம் குமைந்தார். 

முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாமல் இருக்க பயம் தொற்றிகொண்டது இருவருக்குமே.

ஹாஸ்பிட்டல் போய்விடலாமென நினைக்கையில் டாக்டரோடு வந்து சேர்ந்தான் மதிவாணன்.

“என்னாச்சு பிரபா? ஏன் இப்படி ரெண்டு கைளையும் கண்ணாடி சில் குத்தியிருக்கு?…” என கேட்டவாறே நந்தினியின் கைகளை  சுத்தபடுத்தினார் டாக்டர் பெருமாள்சாமி.

“மீன்தொட்டி உடஞ்சிடுச்சு அங்கிள், அந்த மீனையெல்லாம் காப்பாத்துறேன்னு அப்டியே அள்ளி அள்ளி பாத்திரத்துல போட்டுட்டா. அது கையெல்லாம் கிழிச்சிருச்சு…” என்றவனது குரலோ கோவத்திலும் ஆதங்கத்திலும் உடைந்து போயிருந்தது..

அவனது முகத்தை பார்த்தவர் மெலிதாக புன்னகைத்து விட்டு நந்தினியின் கைகளில் ஆயின்மெண்டை தடவி கட்டுப்போட்டுவிட்டார்.

எதற்கும் இருக்கட்டும் என ஒரு டிடி இன்ஜெக்ஷனையும் போட்டுவிட்டு நிமிர்ந்தவர்,

உதயாவின் தோளை தட்டிகொடுத்து, “ஒன்னும் பயப்படாத பிரபா, சரியாகிடும். நாளைக்கு கட்டை அவிழ்த்து விட்டு இந்த மருந்தை காயம் ஆறும் வரை போட்டுவிடு. தூக்கத்துக்கும், செப்டிக் ஆகாமல் இருக்கவும் இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். வலி அதிகமா இருந்தா இந்த டேப்லெட் குடு. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்….” என்றவர் தொடர்ந்து,

“பயத்துல தான் மயக்கம். கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும். எதுனாலும் எனக்கு உடனே கால் பண்ணு….” என்று தைரியம் சொல்லிவிட்டு வெளியேறியவரை பின்தொடர்ந்த நாச்சி,

“பெருமாளு…” என டாக்டரை அழைத்தவர், “ என் பேத்திக்கு ஒண்ணுமில்லையே. நிறைய ரத்தம் போயிருச்சுய்யா…” என கண் கலங்கி கேட்கவும்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க அத்தையம்மா.  இதுக்கெல்லாமா பதறுவாங்க?… ரெண்டு நாள்ல சரியாகிடும். நான் வரேன்….” என்று விடைபெற்று சென்று விட்டார்.

நாச்சியோ வேலைக்கார பெண்ணை வரவழைத்து உடைந்த இடத்தினை சுத்தம் செய்ய சொல்லிவிட்டு மீன்களை எடுத்து வேறு பக்கெட்டில் மாற்றி வைக்குமாறு பணித்துவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டார்.

நந்தினிக்கு குடிக்க ஏதாவது எடுத்து வரலாமென கீழே வந்தவனை வழிமறித்த வேணி,

“என்னப்பா பிரபா? உன் நண்பன் ஆசையா வாங்கி தந்த பரிசை உன் பொண்டாட்டி இப்படி கூறு இல்லாம கீழே தள்ளி உடச்சுட்டாளே? கொஞ்சமாச்சு கவனம் வேண்டாமா?…” என அவனுக்கு தூபம் போட்டு ஏற்றி விட பார்க்க அவனோ,

“அவ உடச்சதை நீங்க பார்த்தீங்களா அத்தை? அது தவறுதலா கூட கீழே விழுந்திருக்கலாம். ஏன் இப்படி பேசறீங்க? விடுங்க இந்த பிரச்சனையை….” என விலகி சென்றுவிட்டான்.

நாச்சி இருவருக்கும்  சேர்த்து கொடுக்க மறுக்காமல் தனக்கும் நந்தினிக்குமாக பழச்சாறை வாங்கிகொண்டு மேலே சென்றவனை எரிச்சலோடு பார்த்துகொண்டிருந்தார் வேணி.

“வந்தே ரெண்டே நாள்ல எப்படி மயக்கிவச்சிருக்கா?. என்னைக்கு இவ கழுத்துல தாலிக்கட்டிட்டு வந்தானோ அப்போதிருந்தே இப்டிதானே இருக்கான்… எவ்வளோ சொன்னாலும் நம்புதானா?…” என பொருமியபடி நின்றவரை கண்ட நாச்சி,

“வேணி, இவ்வளோ நேரம் எங்க போயிருந்த? நம்ம நந்துக்கு என்னாச்சு தெரியுமா?…” என்றவாறே வரவும்,

“ம்ம் ம்ம் எல்லாம் தெரியும். செய்யுற வேலையை ஒழுங்கா செய்ய துப்பில்லை அவளுக்கு. இதுல நீங்க அவளுக்கு அடிபட்டு போச்சுன்னு வருத்தப்படறீங்க?…. பேசாம வேலையை பாருங்கம்மா…” என்று நாச்சி எதுவும் சொல்லும் முன் அவரை தவிர்த்துவிட்டு விருட்டென வெளியே பாய்ந்துவிட்டார்.

வேணி நந்தினியை ஏசியத்தில் கோவமான நாச்சி, “இவளுக்கு என்ன திமிரு?. வரட்டும் பார்த்துக்கறேன்…” என்று உள்ளே சென்றுவிட்டார்.

நந்தினியிடம் அசைவு தெரியவும் அருகே சென்றவன், “நந்து, குட்டிம்மா. இங்க பாருடா, ஒண்ணுமில்லை பயப்படாத, ப்ளீஸ்டா முழிச்சு பாரு…” என புலம்பியவாறே இருந்தவனை கண்மலர்ந்து கண்டவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

எதையோ சொல்ல நினைத்தவளால் சொல்லமுடியாமல் தொண்டை அடைத்தது கைகள் இரண்டும் வின்னுவின்னென வலியில் எரிந்தது.

அவளை தூக்கி சாய்ந்தவாறு அமரவைத்தவன் பழச்சாறை பருக கொடுத்தான். கொஞ்சம் கொஞ்சமாக குடித்தவள் வலியின் தாக்கமோ, மருந்தின் வீரியமோ மீண்டும் துயில் கொள்ள தொடங்கினாள்.

அவளின் அருகிலேயே அமர்ந்தவாறு அவளது கைகளை  நீவிவிட்டுக்கொண்டே இருந்தான். மதிய உணவையும் அறைக்கே எடுத்துவந்து கொடுத்த நாச்சி அப்போதும் உறக்கத்தில் இருந்த நந்தினியை பார்த்துவிட்டு உதயாவை சாப்பிட வைத்த பின் தான் அங்கிருந்து அகன்றார்.

நந்தினியை எழுப்பி சிறிது ரசம் சாதம் கொடுத்து மாத்திரையையும் கொடுத்து தூங்க வைத்தவன் தானும் உறங்கிவிட்டான். மூன்று மணியளவில் கௌரியின் சத்தம் மேலே வரைக்கும் கேட்டது.

தடதடவென மாடியேறி வந்தவள்,” அண்ணா, என்னங்கண்ணா ஆச்சு அண்ணிக்கு?…” என கரிசனமாக கேட்டவள் நந்தினியை பார்த்து, “ஐயோ எவ்வளோ பெரிய காயம்?… ஏன் அண்ணா, எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல?…” என்று பதட்டமாக விசாரித்தவளிடம்,

“ஒண்ணுமில்லைடா, சரியாகிடும், நீ என்ன சீக்கிரமே வந்துட்ட?…” என்றான்.

“நீங்க எனக்கு கிப்ட் வாங்கி குடுத்ததை என் ப்ரெண்ட் கிட்ட சொன்னேன். அவ பிறந்தநாள் பங்க்ஷனை ரெக்கார்ட் பண்ணலாம்னு கேமரா எடுத்து வர சொன்னா. அதான் உங்க கிட்ட கேட்டுட்டு எடுத்து போக வந்தேன் அண்ணா…..” என்றவளின் கைகளில் இருந்த கேமராவை பார்த்துவிட்டு,

“பத்திரமா போயிட்டு வா, கேமராவும் தான்…” என்றவனின் கைகளில் கேமராவில் இருந்த மெமரியை திணித்து,

“இதத்தான் சர்ப்ரைஸ்ன்னு சொன்னேன். இந்த மெமரி உங்ககிட்ட இருக்கட்டும். நான் வேற எடுத்துக்கறேன். நீங்க அண்ணி எழுந்ததும் இதை பாருங்க. நான் போய்ட்டு வரேன்….” என்றவளை நிறுத்தி,

“அதான் நான் இருக்கேன்ல, நீ போயிட்டு வாடா, அண்ணி எழுந்துக்க நேரமாகும்…” என்று அவளை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தான்.

“ஓகே அண்ணா. நான் சீக்கிரமா வந்திடறேன்….” என்று சொல்லிவிட்டு சென்றதும் சிறிது நேரம் கழித்து அந்த மெமரியை லேப்டாப்பில் போட்டு அப்படி என்னதான் சர்ப்ரைஸ் இருக்கு என்று பார்க்க ஆரம்பித்தான்.  

அதில் ரெக்கார்ட் ஆகியிருந்த வீடியோ ஓட ஆரம்பித்தது. அன்றைய நாள் நடந்த அனைத்தும் அதில் பதிவாகியிருந்தது.

“இதுதான் வாலு சொன்ன சப்ரைஸாக்கும்…  இவளுக்கு வேற வேலையே இல்லை…” என நினைத்தபடியே அதை வேக வேகமா சலிப்போடு பார்வேர்ட் செய்தவனது விழிகள் நிலைகுத்தி நின்றன.

error: Content is protected !!