நந்தினியிடம் பேசிவிட்டு போனை வைத்த விஜி வந்து நின்றதோ ஏழுமலையின் முன்னால் தான்.
“என்ன மாமா? நான் பேசினதை கேட்டேங்க தானே? மித்து அங்க அழுதுட்டு இருக்கா, உங்களை நினச்சு. நீங்க பேசாம இருக்கிறதால….” என குற்றம் சாட்டவும் பதிலின்றி அவனது முகம் காண்பதை தவிர்த்தவாறே துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு அவ்விடத்தை விட்டு நகர முயல,
“நில்லுங்க மாமா, எப்படி உங்களால இப்படி இருக்க முடியுது?, மித்ரா வாழ போயிருக்கிற ஊர்ல தான் அந்த பிரசாத் இருக்கான். அவன் நம்ம மித்ரா மேல இருக்கிற கோவத்தால பழிவாங்க முயற்சி பண்ணினானா என்ன செய்வீங்க? அது பத்தின கவலை இல்லையா?. அவகிட்ட தைரியமா இருக்க சொல்லி ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசலாமே?…” என அப்படியாவது நந்தினியிடம் பேசமாட்டாரா என்றெண்ணி கேட்கவும் முதலில் பதறத்தான் செய்தார்.
“உதயா அண்ணா சொன்னதை மறந்துட்டீங்களா? அந்த பிரசாத் நம்ம வீட்டு பொண்ணை பழிவாங்க ஒரு பொறுக்கியை மாப்பிள்ளையா ஏற்பாடு பண்ணி அனுப்புற அளவுக்கு யோசிச்சு இருக்கான். இன்னும் என்னலாம் செய்வான்…” என்று உதயாவின் பேரை சொல்லவும் ஏழுமலையின் கலக்கம் சற்று மட்டுப்பட்டது.
விஜியை திரும்பி பார்த்தவர், “அவளை காப்பாத்த அவளோட புருஷன் இருக்கும் போது அதை பத்தி நாம ஏன் கவலை படனும். நம்மகிட்ட இருந்து பிரச்சனை பண்ணி கூட்டிட்டு போக தெரிஞ்சவருக்கு அவளை காப்பாத்தவும் தெரியும். அவ புருஷனை மீறி மித்ராவுக்கு எதுவும் நடக்காது…” எனவும் அனைவருமே வாயடைத்துத்தான் போயினர்.
உதயாவின் மீது ஏழுமலைக்கு இப்படி ஒரு நம்பிக்கையும் அபிமானமும் இருக்குமென்பது அனைவருக்கும் திகைப்பை தந்தது. அதையும் தாண்டி உதயாவை அவர் என்று மரியாதையாக விழித்ததும் அனைவரின் கருத்திலும் பட்டது.
அனைவரையும் ஒரு முறை பார்த்தவர் நந்தினி பற்றி அதற்கு மேல் பேசுவதை தவிர்த்துவிட்டு கணத்த உள்ளத்தோடு நகர்ந்துவிட்டார்.
அவர் செல்லும்போதே அவரது கண்ணீர் கசியும் விழிகளை கவனித்தவன் நந்தினியிடம் பேச சொல்ல வாய் வரை வந்த வார்த்தையை மென்று முழுங்கிவிட்டு இனி தான் செய்ய ஒன்றும் இல்லையென நொந்தவாறே தன் அறைக்குள் சென்று விட்டான்.
இதற்கு என்றுதான் விடிவுகாலமோ? ஏழுமலையில் வீம்பு எப்போது மாறுமோ? என தங்களின் பாரத்தை கடவுளின் கையில் ஒப்படைத்துவிட்டு சந்திராவும்,பூரணியும் கண்ணீரோடு கலங்கி நின்றனர்.
…………
விடியலின் பின் முன் இரவில் நடந்ததனைத்தையும் மறந்தவாறு எதுவுமே நடவாதது போல இருவருமே நடந்துகொண்டனர்.
வந்து இரண்டு நாள் ஆகியும் நந்தினி வீட்டை இன்னும் முழுமையாக பார்க்கவில்லையே என நினைத்தவாறே அவளை கிளப்பி கீழே அழைத்து சென்றவன் முன் வந்து நின்ற கௌரியை கண்டு புன்னகைத்தவன்,
“என்னடா இன்னைக்கு இவ்வளோ சீக்கிரமா எழுந்துட்ட?…” என வினவியபடியே அவளோடு சோபாவில் அமர்ந்தான்.
“அண்ணி, அண்ணா உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அதுல இன்னைக்கு யாரெல்லாம் சிக்க போறீங்களோ?…” அதில் சிக்கபோவது யாரென தெரியாமலேயே குதூகலமாக கூறியவளை கண்டு,
“ஹே வாலு என்ன பண்ணிவைக்கபோற?… எங்க கிட்ட முதல்லையே சொல்லிடு. சஸ்பென்ஸ் வைக்காதடா….” என்றான்.
“ம்ஹூம், சொல்லமாட்டேனே….” என்று சொல்லிவிட்டு, “ ப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வரேன் அண்ணா. இன்னைக்கு அவளுக்கு பர்த்டே. அதனால் ஈவ்னிங் லேட்டாதான் வருவேன். மதியண்ணா கூப்பிட வருவாங்க. சோ ஈவ்னிங் வந்து தான் அது என்னன்னு சொல்லுவேன்…” என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டாள்.
“இவளை இனி பிடிக்கமுடியதே. சரி நீ வா முதல்ல உனக்கு வீட்டையெல்லாம் சுத்திகாமிக்கறேன்…” எனவும் அதை ஆமோதித்தவாறே தன் துணைவனை பின்பற்றி சென்றாள்.
ஒவ்வொரு பெண்ணிற்குமே புகுந்த வீடென்பது பரவசத்தையும் பயத்தினையும் ஒரே நேரத்தில் தரவல்லது. பிறந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி புகுந்த வீட்டில் நடப்படும் செடியாக முதலில் தடுமாறினாலும் பின் நிலையாகி வேரூன்றி அவ்வீட்டின் அங்கத்தினருக்கே விருச்சமாகிறாள்.
நந்தினி புகுந்த வீட்டிற்கு தான் வந்த சூழ்நிலையையும், அவர்கள் புரிதலுடன் தன்னை ஏற்றுகொண்டதையும் நினைத்து பூரிப்போடு அசைபோட்டவாறே உதயா சொல்ல சொல்ல கேட்டுகொண்டே தன் வீட்டினை வலம் வந்தாள்.
தான் வாழ்ந்த வீட்டையும் வளர்ந்த இடத்தினையும் தான் செய்த குறும்புகளையும், சுட்டித்தனங்களையும் மனைவியிடம் பகிரும் போது உண்டாகும் சுகமே அலாதியானது.
உதயா ஒவ்வொன்றையும் விளக்கி விரிவாக நகைச்சுவையோடு சொல்லும் விதத்தை சுவாரஸ்யத்தோடு ரசித்து கவனிக்கலானாள் நந்தினி. தன் கணவன் தன்னோடு பகிர்ந்துகொண்ட பால்யகாலத்தை தன் மனதின் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமித்துக்கொண்டவாறே வந்தாள்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டே வந்தவள் கடைசியில் ஒரு அங்கே ஒரு மூலையில் திரைபோட்டு மறைத்திருந்த இடத்தை உதயா தடுப்பதற்குள் விலக்கி பார்த்தாள். சிறிய அளவிலான கதவில் பழமையான வேலைப்பாடுகள் செய்திருந்ததை கண்டு,
“இது என்னங்க ரொம்ப வித்யாசமான கதவா இருக்கு, குட்டியா?…” என வினவினாள்.
சட்டென இருள் படிந்துவிட்டது உதயாவின் முகத்தில். மனமுழுவதும் ரணமாக பற்றி எரிய தொடங்கியது. அவனது முகமாற்றத்தை கண்டுகொண்டவள் எதனால் என குழம்பிவிட்டாள்.
“என்னாச்சுங்க?..” என கேட்கவும் தன்னை உடனடியாக சமாளித்துக்கொண்டு முகத்தில் இயல்பை பூசியபடி,
“இதுவா?… இதுக்கு பேர் அரங்கு அறை. இது எங்க தாத்தாக்கு தாத்தா காலத்திலிருந்து இருக்கு. இங்க யாராச்சும் ஒளிஞ்சா கூட தெரியாது. ஜன்னல் எதுவுமே இருக்காது. உள்ள யாராவது மாட்டிக்கிட்டு வெளில கூப்பிட்டா கூட யாருக்குமே கேட்காது. உள்ள யாராச்சும் போய் தெரியாத்தனமா கதவு பூட்டிகிட்டா மூச்சு கூட விடமுடியாம போய்டும். அதனால இந்த அறை எப்போவுமே பூட்டியே இருக்கும்…” என மனதில் இன்னும் தீயாய் தகித்துக்கொண்டிருந்த வெம்மையை மறைத்து குரலில் சாதாரணத்தை வரவழைத்து கொண்டு ஒருவழியாக சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு விலகிவிட்டான்.
அனைத்தையும் காண்பித்துவிட்டு மாடிப்படியின் கீழே பெரிதும் இல்லாமல் மிக சிறிதுமில்லாமல் இருக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட மீன்தொட்டியினை கண்டு அதனருகில் அழைத்து சென்றான்.
அழகான வண்ணங்களில் மீன்கள் துள்ளி விளையாண்டபடி நீந்திகொண்டிருந்த தொட்டியை பார்த்ததுமே நந்தினிக்கும் உற்சாகம் தாளவில்லை. அதை தொட்டு பார்த்தவள் அதை தூக்கும் ஆவல் கொண்டாள்.
“ஹைய்யோ!!! எவ்வளோ அழகா இருக்குதுங்க?..” என்றவளின் குரலில் குற்றால ஊற்று.
அவளின் சந்தோஷத்தை காண காண தெவிட்டவில்லை உதயாவிற்கு. புன்னைகையோடே, “இது என் ப்ரெண்ட் என்னோட பிறந்தநாள் பரிசா குடுத்தது. ரொம்ப ஸ்பெஷல் கிப்ட்….” என்றான் பெருமையாக.
“ஓ விஷ்ணு அண்ணாவா?…”
“அவன் இல்லை நந்தும்மா. இவன் இன்னொரு ப்ரெண்ட் நரேஷ். எனக்கு மட்டுமில்லை விஷ்ணுக்கும் தான். இப்போ ஒரு முக்கியமான வேலையா வெளிநாடு போயிருக்கான். சீக்கிரமே வருவான்…. அப்போ உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்…” எனவும்,
“ம்ம். சரி. என்னங்க கொஞ்ச நேரம் கைல வச்சுபார்க்கனும்னு ஆசையா இருக்கு…” கெஞ்சலாக கேட்கவும்,
“என்னது கைலயா?..” என்று சிரித்தவன், “இல்லைடா. பார்க்கத்தான் சிறியது. ஆனா கண்ணாடி ரொம்ப வெய்ட்டா இருக்கும், உன்னால தூக்க முடியாது. கீழே போட்ருவ…” மறுக்கும் குரலில்,
“அப்போ தூக்க வேணாமா?…”
“ம்ஹூம், வேண்டாம். நான் வேணும்னா உனக்கு சின்னதா ஒரு கண்ணாடி பவுல் வாங்கி அதுல மீன் போட்டு தரேன் நீ கைலையே வச்சுப்பியாம். இதை விட்ருமா…” அப்போதும் விடாமல் மீன்தொட்டியையே பார்த்தவாறு நின்றவளிடம்,
“அம்மா தாயே, நான் இல்லாத நேரம் இதை தூக்கறேன்னு எதாச்சும் பண்ணிடாத. இது ரொம்பவே முக்கியமான கிப்ட். முதல்ல சாப்பிடலாம். அப்றமா உன்னை நம்ம தோட்டத்துக்கும், கார்மண்ட்ஸ்க்கும் அழைச்சுட்டு போறேன். சரியா?…”என்று சின்ன சிரிப்போடே சமாளித்து அவளையும் நகர்த்தி அழைத்து வந்துவிட்டான்.
சாப்பாட்டு அறையில் அமர்ந்திருந்த “என்ன ஆத்தா, உன்ற வீடு எப்டி இருக்கு? உனக்கு புடிச்சிருக்கா?…” என இருவருக்கும் பரிமாரியவாறே வினவவும்,
“ஏன் கிழவி பிடிக்கலைனா தனிக்குடித்தனமா வைக்க போற? பேசாம சாப்பிடு….” என்றான் கிண்டலாக.
“ராசா உனக்கு போவணும்னு எண்ணம் இருந்தா என்னட்ட சொல்லு, நான் உன்ற அப்பாட்ட பேசறேன். அதுக்கேன் என் தலையை உருட்டுற?…” என்று ஒரே போடாக போட்டார்.
சட்டென நந்தினி சிரித்துவிடவும் கடுப்பான உதயா, “இந்த கிழவி எந்தப்பக்கம் போனாலும் கேட் போடுதே? இதை வச்சுகிட்டு என்னனுதான் காலத்தை தள்ளபோறேனோ? பொண்டாட்டி முன்னால மண்ணை கவ்வ வைக்குதே?…” என மனதிற்குள் புலம்பியவாறே,
“நாச்சி எங்க அப்பாவும் அம்மாவும் காணோமே??…” என்று பேச்சை மாற்றினான்.
“தப்பிக்க பார்க்கறான் பாரேன்….” என நந்தினியிடம் உதயாவை வாரிவிட்டு அவனது முறைப்பை கண்டு அஞ்சாமல்,
“அவங்க பக்கத்து ஊர்ல ஒரு விசேஷ வீட்டுக்கு போயிருக்காங்க. வர சாயங்காலம் ஆவும். விடியக்காலையிலேயே போனதால உங்ககிட்ட சொல்லிட்டு போவ முடியல. அதான் என் கிட்ட மட்டும் சொன்னாவ….” இந்த தகவல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல பார்த்தவரை கண்டு பல்லை கடித்தவன்,
“மாமாவும் அத்தையும் எங்க?…” என அடுத்த கேள்வியை தொடுத்தான்.
“உன்னோட மாமா பருத்திக்காட்டுக்கு போயிருக்காப்ள, உனக்கு போன் பண்ணுறேன்னு சொல்லியிருக்காங்க. வேணி பின்பக்கமா போனதை பார்த்தேன். உன் தங்கச்சி இப்போதானே தவ்விக்கிட்டு ஓடினா? நீயே பார்த்திருப்ப…..” என அனைத்து தகவலையும் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்தவர் தன்னையே வாய் பார்த்தவாறு அமர்ந்திருந்த நந்தினியை,
“சாப்ட்டாச்சுல. நீ வா தாயி…” என்று அழைத்தார்.
நந்தினி போகட்டுமா என்பது போல உதயாவை பார்க்க அவனோ நாச்சியை முறைத்தான்.
“இப்போ எதுக்கு அவ, என் கூட இருக்கட்டும். நாங்க வெளியில போகணும்…” என நாச்சியிடம் மல்லுக்கு நின்றான்.
“இப்போவேவா கிளம்புவ?… போற வரைக்கும் என் கூட இருக்கட்டும்…” என்று இழுத்துகொண்டு உள்ளே செல்ல,
அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தவனை திரும்பி பார்த்து கண்ணை சுருக்கிய கெஞ்சும் பாவத்தில் லேசாக தலையசைத்து விட்டு பாட்டியின் பின்னே சென்று விட்டாள்.
ஒரு நொடிதான் உதயாவை அசைத்து பார்த்த அந்த பார்வை ஒரு நொடிதான்.