நட்சத்திர விழிகளிலே வானவில் – 8 (3)

“அப்படி யோசிக்காம நீ பண்ணின காரியத்தால உன்னோட அவசரபுத்தியால அநியாயமா பாதிக்கப்பட்டது அண்ணாதான். அவரையே குற்றம் சொல்லுவியா நீ?…” என்று வார்த்தைகளால் வாட்டியெடுத்தான்.

எப்போதுமே ஆதரவாய் ஆறுதலாய் பேசுபவன் அவளின் சிறு சுணக்கத்தை கூட பொறுக்காதவன் பொருமித்தள்ளியத்தில் இடிந்துபோனாள். 

“ஏண்டா விஜி சின்னபுள்ளைகிட்ட இப்படி பேசி வைக்கிற?… அவளை  அழ வைக்காதே… போனை என் கிட்ட குடுடா…” என மறுமுனையில் பூரணி விஜியிடம் சத்தம் போடுவது தெளிவாக கேட்டது.

“போங்கம்மா உங்க வேலையை நீங்க பாருங்க…இப்டியே சொல்லி சொல்லியே அவளை யோசிக்கவே விடாம கைக்குள்ள வைச்சு பொத்தி பொத்தி பாதுகாக்க போய் தானே இவ்வளோ ப்ராப்ளமும்? என்னையும் சேர்த்துதான் சொல்றேன்… நீங்க இதுல தலையிடாதீங்க…” என மிரட்டிவிட்டு மீண்டும் நந்தினியிடம்,

“உனக்கு நல்லது பண்ணத்தானே அண்ணா உன்னை தேடி வந்தாங்க… எல்லாமே நீ நல்லா இருக்கணும்னு தானே?… ஆனா இப்போ உன்னை பெத்தவங்க உன் கிட்ட பேசலைனதும் உனக்கு இவ்வளோ கோவம் வருதோ?…”

“ப்ளீஸ் விஜி நான் தெரியாம சொல்லிட்டேன். இனிமே சொல்லமாட்டேன்.  இதுக்கு மேல பேசாத விஜி என்னால தாங்க முடியலை…” என கதறியே விட்டாள்.

அவளது அழுகுரலில் தன்னையே சாடிகொண்டான்.

“தைரியமாய் இருக்க சொல்லி ஆறுதலாய் பேசவந்தவனை அவள்  வாய்தவறி சொன்ன வார்த்தையால் வாட்டிவதைக்கும் படி செய்துவிட்டாளே?..” என தனக்குள் கசந்துபோனான்.

உதயாவிற்கோ விஜியிடம் தன்னால்தான் எல்லாம் என தன்னை சுட்டிகாட்டியவளின் மீது முதலில் கனன்ற கோவம் அவளின் அறியாமையினால் அவள் விட்ட கண்ணீரோடு கரைந்துவிட்டது. கோவத்தோடு வேகமாக போனை பிடுங்கியவன்,

“என்ன விஜி நீ? எப்போ என்ன பேசறதுன்னு ஒரு நேரம் காலம் வேண்டாமா?…” என எரிந்துவிளுந்தான்.

“அண்ணா???…” அதற்கு மேல பேச விஜிக்கு நா எழும்பவில்லை. உதியாவையும் வைத்துக்கொண்டா தான் பேசிவிட்டோம் என்று குன்றினான்.

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா…”

“மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா? உன்கிட்ட எவ்வளோ ஆர்வமா ஆசையா பேச வந்தா?…”

“தெரியும் அண்ணா, ஆனாலும் அவ சொன்னது தப்புதானே?…”

“யாரு இப்போ இல்லைனது?…. அப்பாகிட்ட பேசனும்ன்ற அவசரத்துல பேசிட்டா?…. அவ தெரிஞ்சு செய்யாதப்போ நீ எப்படி அவளை திட்டலாம்?…” என மனைவிக்கு வக்காலத்து வாங்கினான்.

விஜிக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலையும் நிம்மதியையும் தந்ததென உதயாவிற்கு தெரிய வாய்ப்பில்லை. விஜியோ வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவிற்கு அளப்பறியா சந்தோஷத்தால் உணர்ச்சிவசபட்டிருந்தான்.

“இன்னொரு தடவை நீ அவளை எதாச்சும் சொல்லி அவ அழட்டும் அப்றமா உன்னை கவனிச்சுக்கறேன்…” என எச்சரித்தவனை இடைமறித்து கலகலவென சிரித்தான் விஜி.

“டேய் என்னை பார்த்தா எப்படி தெரியுது?…”

“இல்லைங்கண்ணா, எங்க வீட்லயும் இப்படிதான் உங்க மாமனார் கோவப்பட்டு மித்து வாண்டை எதுவும் திட்ட நினச்சா கூட மத்தவங்க ஒண்ணுமே சொல்லவிடமாட்டாங்க….”

“ஆனா தனியா சிக்கிட்டானா அவ்வளோதான்….. இவ பயப்படற ஒரே ஆளு எங்க மாமாதான். அதான் உங்க மாமனாரு…” என அந்த ‘ரு’ வை  கிண்டலாக அழுத்தி சொன்னான்.

“ம்ம் அதுசரி, அவ இன்னும் அழுதுட்டே இருக்கா, அவக்கிட்ட குடுக்குறேன் ஒழுங்கா திட்டாம சமாதானமா பேசு….” என கட்டளையிட்டவாறே போனை நந்தினியிடம் தந்தவன் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு,

“அழாம பேசணும், அவன் திட்டினா நீயும் நல்லா திட்டு. இல்லைனா என் கிட்ட சொல்லு நான் சொல்லித்தாரேன். என்ன?…” என அவளுக்கும் சொல்லிகொடுத்து அவளை தேற்றினான்.

நடுக்கத்தோடு போனை வாங்கியவள், “சாரி விஜி…” என்றாள் மெலிதான விசும்பலோடு.

“நானும் சாரிடா, நீ இனிமே இப்படி யோசிக்காம பேசகூடாது சரியா?…” என்றான் தன்மையாக.

“ம்ம்… நீயும் இனிமே என்னை இப்டிலாம் திட்டக்கூடாது…சரியா?…” என கறாராக மொழிந்தவளை  கண்டு விஜி, உதயா இருவருக்குமே சிரிப்பு  பொங்கியது.

நந்தினி உதயாவை காரணமாக காட்டியதை அவன் தவறாக புரிந்துகொள்வானோ என்ற விஜியின் பயத்தினை அவளது கணவன் அதற்கு அவசியமே இல்லையென தகர்த்தான்.

இனியும் நந்தினியின் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடகூடாதென விஜி நினைத்தான்.

தனது குடும்பமோ இனி எதையும் தாங்கும் நிலையில் இல்லை. அதை அவள் புரிந்து நடந்துகொள்ள வேண்டுமென விரும்பினான்.

உதயாவை பற்றி தான் பார்த்தது மட்டுமில்லாமல், தனது தந்தையும்  சொல்லி அறிந்தவனாயிற்றே. அவன் பார்த்துகொள்வான் என நம்பினான்.

அதுமட்டுமன்றி பிரசாத்?????????

அவனை நினைத்தாலே நடுங்கியது. இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ? அவனை சந்திச்சதால தானே இத்தனை பிரச்சனையும் என தோன்றினாலும் அவனால் தானே நந்தினிக்கு உதயா கிடைத்தான் என்ற எண்ணமும்  தோன்றாமலில்லை.

பிரசாத்தால் எப்படி உதயாவின் வரவு நிகழ்ந்ததோ, அதேபோல அதே பிரசாத்தால் மூலமாக தான் உதயாவின் உறவும் நந்தினியோடு ஏற்பட சூழ்நிலை நிர்பந்தித்தது. அனைத்தும் பிரசாத்தால்.

இனி நந்தினியை பிரசாத் நெருங்காமல் இருந்தாலே போதும். என அவனின் நினைப்பிலிருந்து வெளியே வந்த விஜி நந்தினியின் குரலுக்கு செவிமடுத்து பதில் கொடுத்தான்.

“அதுசரி எதுவுமே நீ நடந்துக்கிறதை பொறுத்துதான் இருக்கு மித்து. எப்போவும் ஒரு வார்த்தை பேசும்போது ஒருமுறைக்கு நாலுமுறை யோசிச்சு பேசணும். சரியா?….” என அறிவுரையோடு இன்னும் சில விஷயங்களை பேசிவிட்டு தன் தாயிடம் தந்தான்.

“அம்மாடி மித்ரா, நீ வருத்தபடாதடா… அவன் ஒரு லூஸு… நீ மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத…” என்றார் நந்தினி வருந்துவது பிடிக்காத பூரணி.

“இல்லைங்கத்தை ஒன்னும் நினைக்கலை, நீங்க விஜியை எதுவும் திட்டிடாதீங்க…” என்றாள் சுரத்தே இல்லாத குரலில்.

“இப்போவும் நீ அவனுக்கு ஏந்துக்கிட்டு பேசாத… அவனுக்கு உன் மாமா வரட்டும் அப்பறம் இருக்கு…” என அவனை தாளித்தவாறே,

“நீ நல்லா இருக்கியா? உன் வீட்ல உன் கிட்ட நல்லா பழகுதாகளா?…” என்றார் அது அவளது வீடு என அவளுக்கு புரியும்படி உரைத்தவாறே.

“எல்லோருமே என்னை நல்லா பார்த்துக்கறாங்க அத்தை… இங்க எந்த குறையுமே இல்லை…. நீங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லிடுங்க…. என்னை நினச்சு வருத்தப்பட்டுட்டே இருப்பாங்க… என்னாலதான் இப்போ பேச முடியலையே…” என்று அவர்களிடம் பேசமுடியாத ஏக்கத்தை குரலில் காட்டியபடி.

“நீ விசனபடாத மித்துமா… இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே சரியாகிடும்… உன்னை பார்க்க எல்லோரும் வருவோம்…”என்று அவளிடம் உறுதியளித்துவிட்டு,

“அப்பப்போ நீ பேசு. அங்க உன் வீட்ல அனுசரிச்சு நடக்கனும்… பொறுமையோடு எதையுமே பேசனும்… மாப்பிள்ளை தம்பி ரொம்ப நல்லமாதிரி… நீ அவர்கிட்ட நல்லவிதமா பழகனும்….” என்றவர் மேலும்,

“பொண்ணை நல்லா வளர்த்திருக்காங்கன்ற நல்லபேரை நீதான் உன் வீட்ல எங்களுக்கு வாங்கி தரனும்… நீ நடந்துக்கிற முறையில்தான் நாங்க பெருமைப்பட்டுக்க முடியும்டா தங்கம்…” என பல பல அறிவுரைகளை வழங்கிவிட்டு பேச்சை முடித்துகொண்டார்.

அவரிடம் பேசிவிட்டு போனை வெறித்தவாறே அமர்ந்திருந்தவளை கண்டவன், “இனி இவளை புடிச்சு உண்டியலை குலுக்கிறது போல குலுக்கனுமே?… சத்திய சோதனைடா உதயா உனக்கு…” என புலம்பியபடி நந்தினியை உலுக்கினான்.

உணர்வில்லாமல் அமர்ந்திருந்தவள் அவனின் ஸ்பரிசம் பட்டதுமே, “என்னால தானே உங்களுக்கு இவ்வளோ கஷ்டம்…” என கேட்டுகொண்டே அணையுடந்த வெள்ளமென கண்ணீரை பாயவிட்டாள்.

இப்போது அவளது அழுகையில் ஆயாசம் ஏற்படவில்லை. மாறாக ஆறுதலளித்து அவளை தேற்றத்தான் தோன்றியது.

இப்போதைக்கு எது சொன்னாலும் அவளுக்கு மூளையில ஒன்னும் பதியபோறது இல்லை என முடிவுக்கு வந்தான்.

அருகில் நெருங்கி அமர்ந்தவன், “அழுகாதே…” என்ற வார்த்தையை சொல்லவே இல்லை.

பதில் சொல்லாமல் தனது மடியில் சாய்த்துக்கொண்டு, “இன்னையோட அழுது முடிச்சிடனும். இனி உன் கண்ணுல இருந்து கண்ணீரை நான் பார்க்ககூடாது. புரியுதா?…தூங்கு…” என்றவன் ஒரு கையால் தலையை கோதிவிட்டு மறு கையால் முதுகை தட்டிக்கொடுத்தவாறே தானும் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

அழுகை குறைந்து உறக்கத்தின் பிடிக்குள் தன்னை கொடுத்தவளை விட்டு விசும்பல் மட்டும் விலகவே இல்லை.

இந்த வேதனையில் இருந்து சீக்கிரம் தங்களுக்கு ஒரு விடிவு வராதா என்று எண்ணி தன் மடியில் துஞ்சியிருந்தவளை கண்களுக்குள் நிரப்பியவாறே அமர்ந்திருந்தவன் தன்னை மறந்து துயிலுலகம் சென்றான் தன் மனையாளோடு.

மறுநாள் விடியும் விடியல் அவளை துடிக்க வைக்க காத்திருப்பதை அறியாமலேயே…..

error: Content is protected !!