நட்சத்திர விழிகளிலே வானவில் – 8 (2)

“இன்னைக்கு நாம ரெண்டு பெரும் மாத்தி மாத்தி வழிஞ்சிட்டு இருக்கோம்ல? என்ன ஒரு வேவ்லென்த்?…”என சில்லாகித்தபடி விஜியின் எண்ணை அழுத்திவிட்டு நந்தினியிடம் கொடுத்தான்.

ரிங் போய்க்கொண்டே இருந்தது.

மீண்டும் அழைக்கவும் அழைப்பு எடுக்கப்பட்டது.

மறுபறம் பேசிய குரலை கேட்டவள் கேவி கேவி அழ ஆரம்பித்தாள்.

உதயாவோ, “போச்சுடா…” என்றபடி கையில் வைத்திருந்த டவலை தலையில் போட்டு ஓரமாக அமர்ந்துவிட்டான்.

உதயாவிற்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கிவிட்டது.

“இவளுக்கு ஒண்ணு நல்லா தலையாட்ட தெரியுது, இன்னொண்ணு நல்லா அழ தெரியுது. இவளை சொல்லி என்ன செய்ய? பெத்து வளர்ந்திருக்காங்களே?…” என அவர்கள் மீது கோவப்பட்டான்.

“பின்னே கொஞ்சமாவது பொண்ணோட மனசை புரிஞ்சுக்காம அவளை கண்டிப்பா வளர்க்கிறேன்னு இப்டி ஒரு பொம்மையாட்டம் வளர்த்து வச்சிருகாங்களே?….”

“தலையாட்டியே பழகிருச்சுன்னு சொல்றாளே? அப்போ எல்லாத்துக்கும் இப்படிதானே செய்திருப்பாங்க?…” என மனையாளை எண்ணி மனம் வெதும்பினான்.

“அத்தை, அப்பா எப்டி இருக்காங்க?… அவங்க கிட்ட பேசணுமே, குடுங்க அத்தை ப்ளீஸ்…” என கெஞ்சியவளை பார்த்து இரக்கம் சுரந்தது.

அவளின் அழுகுரலில் தன்னை மீட்டுகொண்டு அவளது பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.

“அன்னைக்கும் சரி, நேற்றும் சரி நடந்த சம்பவத்துல இவளோட தவறு என்ன இருக்கு? ஏன் தான் கடவுள் இவளை சோதிக்கிறாரோ?…” என பெருமூச்சை வெளியேற்றியபடியே அவளை மீண்டும் கவனிக்கலானான்.

“என்னாச்சு அத்தை?…”

“ஒண்ணுமில்லைடா மித்து. அண்ணன் நாளைக்கு கண்டிப்பா பேசுவாங்கடா. நீ வருத்தப்படாத…” என்றார் நந்தினியின் அத்தையான பூரணி.

“அம்மாகிட்டையாச்சும் பேசட்டுமா அத்தை?..” என்றாள் அனுமதி கேட்கும் தொனியில்.

பதில் சொல்ல திணறிய பூரணியிடமிருந்து போனை வாங்கி,

“மித்து..” என்றான் விஜி.

பூரணி, நேசமணி தம்பதிகளின் புதல்வனான விஜயேஷ்வர். B.com  முதல் வருடம் படிக்கும் விஜி நந்தினியின் வெல்விஷர் மட்டுமல்லாது உயிர்த்தோழனும் கூட.

சிறுவனானாலும் சிந்தனைகள் அனைத்தும் சிறந்தவையாகவே இருக்கும்.

நந்தினியை விட வயதில் குறைந்தவனானாலும் வயதிற்கு மீறிய பக்குவமும் நிறைந்தவன்.

“இப்போ எதுக்கு போன்ல இவ்வளோ அழுகை?…” என்றான் அதட்டலான குரலில்.

“விஜி அப்பாம்மாகிட்ட பேசணுமே?…” இறைஞ்சும் குரலில் கேட்டவளிடம் பதில் சொல்லாமல் தன பின்னால் திரும்பி பார்த்தான்.

ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தனர் நந்தினி வீட்டினர். பின்பக்க வாசலில் அமர்ந்திருந்தார் நந்தினியின் தந்தை ஏழுமலை. அவரின் சிந்தனை முழுவதும் நந்தினியை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.

நந்தினி சென்றதிலிருந்து வீட்டை விட்டு வெளியிலும் செல்லாமல் வீட்டிலும் யாரின் முகத்தையும் பாராமல் யார் பேசினாலும் பேசாமல் மௌனத்தையே பதிலளித்து வாழணுமே என்பதற்காக ஏதோ சாப்பிட்டு தனக்குள்ளே முடங்கி போயிருந்தார். இப்போது நந்தினி பேசுவதை அறிந்து அவள் எப்படி இருக்கிறாள் என தெரிந்துகொள்ள உள்ளம் துடித்தார். 

என்னதான் மற்றவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாக காட்டிகொண்டாலும் பூரணி நந்தினியிடம் தான் பேசுகிறார் என உணர்ந்தவர் உடனே தன் காதை மட்டும் கூர்மையாக்கி விஜி நந்தினி உரையாடல்களை கவனித்துகொண்டிருகிறார் என்பதை அவரது உடல்மொழியே உரைத்துவிட்டது.

தாய் தகப்பனிடம் பேசமுடியாமல் தவிப்பவளிடம் அவளது தந்தையின் மனவருத்ததை எவ்வாறு சொல்லவென பேச்சை மாற்ற முயன்றான்.

“இன்னொரு நாள் பேசலாம். அவங்களால இப்போ பேச முடியாது மித்து…”

“நான் என்னடா பண்ணினேன்?…” என்றவள்,

“இவங்க தானே தேடி வந்து அப்பாகிட்ட சண்டை போட்டு என்னை கூட்டிட்டு வந்தாங்க. அவங்க பண்ணின தப்புக்கு என் கிட்ட பேசமாட்டாங்களா?…” என்றாள் கோவமாக.

அவள் நியாயம் கேட்ட விதத்தில் உதயா, விஜி இருவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது.

உதயாவோ கொதிநிலைக்கே சென்றுவிட்டான்.

“என்னாது??? நான் தப்பு பண்ணினேனா?…”

“எங்க பண்ணினேன்? எப்போ பண்ணினேன்?…”

“இவ என்ன நினச்சிட்டு இருக்கா?…” என கொந்தளித்த உள்ளத்தோடு பார்த்துகொண்டிருந்தான்.

“மவளே பேசி முடி அப்புறம் வச்சிருக்கேன் உனக்கு கச்சேரியை….” என கடிகாரத்தை கண்டுவிட்டு அவளை பார்த்தவாறே பேச்சுவார்த்தையை முடிக்கட்டுமென காத்துகொண்டிருந்தான்.

இவன் இப்படியென்றால் விஜியின் நிலையோ வேறு.

கோவத்தில் ஆத்திரத்தில் யோசிக்காமல் சிதறவிடும் வார்த்தைகள் இருபுறமும் தீட்டிய கூரிய கத்தியை போன்றது. எப்போது வேண்டுமானாலும் பேசுபவரை தாக்கும். கேட்பவரையும் சாய்க்கும் வல்லமை படைத்தது.

கொட்டிவிட்டால் அள்ளமுடியாத வார்த்தைகளின் வீரியம் பேசுபவர்களுக்கு அப்போது தெரிவதில்லை. ஒன்றுமற்ற பிரச்சனைகளை கூட தெரியாமல் பேசும் வார்த்தைகளானது பெரிதாக்கிவிடகூடிய அபாயமும் உண்டே.

நந்தினி பேசிய வார்த்தைகள் அவ்வாறு எந்த விதமான விளைவுகளையும் ஏற்படுத்தி விடக்கூடாதே என எண்ணி அஞ்சினான் விஜி.

நேத்துதான் அந்த வீட்டுக்கு மருமகளா போயிருக்கா. இப்போ இப்டி பேசிவைக்கிறாளே? பக்கத்துல யாரும் கேட்டுட்டா என்ன நினைப்பாங்க? என நொந்துகொண்டே…

“ஏய் லூஸு மாதிரி பேசாத…” என கத்திவிட்டான் விஜி.

“என்னை லூசுன்னு சொல்லாதடா….” என மிச்சமிருந்த அழுகையோடு மூக்கை உறிஞ்சினாள்.

“பின்ன நீ பேசறதுக்கு உன்னை லூஸுன்னு சொல்லாம பாராட்டுவாங்களா?…”

“எப்போ பாரு தேவையில்லாம எதையாவது பண்ணி சிக்கல்ல மாட்டிக்கிறதே உன் வேலையா போச்சு….”

“விஜி, நீயா இப்படி சொல்ற?…” என கண்ணீரோடு கேட்டவளை பார்த்ததும் அவன் அந்த பக்கம் என்ன பேசியிருப்பானென யோசனைக்குள்ளானான் உதயா.

“நான் தான் பேசறேன். நீதான் என்னை பேச வைக்கிற…” என பொரிந்தவனிடம் அவன் எதை சொல்கிறான் என தெரிந்து இறுகிவிட்டாள்.

நந்தினியின் வேதனையான முகமும் அமைதியும் உதயாவிற்கு எதையோ உணர்த்தியது.

அவன் எண்ணமோ மறுபுறம் விஜி பேசுவது அதை பற்றி இருக்கக்கூடாதென மனம் பதை பதைத்தது. அந்த நிகழ்வை சொல்லிகாட்டினால் இவளால் நிச்சயம் தாங்கமாட்டாள் என பதறினான்.

“நந்து, போனை என் கிட்ட தா, நான் விஜிகிட்ட பேசறேன்…” என்றவனிடம் போனை தராமல் கற்ச்சிலையென சமைந்திருந்தாள்.

போனை பறிக்க நினைத்தவனால் அதை செயல்படுத்த முடியவில்லை. காரணம் அதை இறுக்கமாக பற்றியிருந்த அவளது கரங்களை மீறி வாங்க இயலவில்லை.

விஜியோ நந்தினியின் அமைதியை கவனியாமலும், அதை பொருட்படுத்தாமலும் மடைதிறந்த வெள்ளமென வார்த்தைகளை கொட்டித்தீர்த்தான்.

“யார் என்ன பேசினாலும் அவங்க பேசறதுக்கான அர்த்தத்தை முழுசா புரிஞ்சுக்கிறதும் இல்லை…., பேசறதையும் பேசிட்டு நடந்த எதுக்குமே நீ காரணமில்லைன்ற மாதிரி நீ பேசறதுமில்லாம அண்ணா மேல வேற நீ பழி சொல்றியா?…”

“நான் வேணுமின்னே சொல்லலைடா விஜி….” என மன்றாடினாள்.

“இந்த பிரச்சனைகேல்லாம் மூலக்காரணம் யாருன்னு உனக்கு தெரியாதா?….., அன்னைக்கு நடந்ததை அவ்வளோ சீக்கிரமா நீ மறந்திருக்க மாட்ட. எனக்கு நல்லா தெரியும்….”

“அன்றைய சம்பவம் மறக்ககூடியதா?…” அவன் சொல்லிக்காட்டியதும் விக்கித்து போனாள்.

“உங்கப்பா உன்னை என் பொண்ணை நான் கண்டிப்பா கட்டுகோப்பா வளர்த்திருக்கேன்னு பெருமை பட்டுக்குவாறே? அவர் உன்னை யோசிக்கத்தெரியாம வளர்த்திருக்கோம்னு என்னைக்கும் நினச்சதில்லை. வளர்க்க தெரியாம வளர்த்துட்டு அடுத்தவங்க மேல கோபப்பட அவருக்கு என்ன உரிமை இருக்கு….” அவனது கோவம் இப்போது ஏழுமலையையும் தாக்கியது.

விஜியின் பேச்சில் திருமணமாகி புகுந்த வீட்டில் வாழ போகும் பெண்கள் எதையும் ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து பேசி சிந்தித்து செயல்படவேண்டுமென்ற ஆதங்கம் மட்டுமே. 

நந்தினியின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும் மற்றவர்களை எவ்விதத்திலும் பாதிக்காமல், மதிப்பிழக்காமல் இருக்கவேண்டுமென்று புரியவைக்கவே பேசினான்.

அவன் பேச பேச கண்ணீர் மட்டும் நிற்காமல் நந்தினியின் கண்களில் வற்றாத நதியாய் கரைபுரண்டோடியது.

error: Content is protected !!