நட்சத்திர விழிகளிலே வானவில் – 8 (1)

வேணி என்னதான் அரும்பெரும்பாடுபட்டு கோவத்தை அடக்கிய குரலில் சொன்னாலும் அனைவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது அவரது செய்கை.

பாக்கியம் உடனே சுதாரித்து கோவமாக ஏதோ சொல்ல வாயெடுத்த உதயாவை ஒரே பார்வையில் அடக்கிவிட்டு நாச்சியை பார்க்க அவரது  இறுகிய முகமே கடுமையாக ஏதோ பேசப்போகிறார் என்பதை காட்டியது.

அவரை அமைதியாக இருக்கும் படி இறைஞ்சியது பாக்கியத்தின் கண்கள். அவருக்காக பொறுமையை இழுத்துப்பிடித்த நாச்சி அமைதியாக அதன் பின் பாக்கியம் நந்தினியின் புறம் திரும்பினார்.

“நந்தினி, தப்பா நினைக்காதம்மா. நீ பேசாம சித்தினே கூப்பிடு. எல்லோரையும் அம்மான்னு கூப்பிட்டா குழப்பம் தான் உண்டாகும். என்னையும் அம்மான்னு சொல்றல?…”என எடுத்து கூறவும்,

“சரிங்கம்மா, சித்தி சரியா சாப்பிடாம எழுந்துட்டாங்க. அதான் கூப்பிட்டேன்….” என்றாள் கம்மிய குரலில்.

பாக்கியம் அவளை தாங்குவதை தாங்கமாட்டாமல் அவ்விடம் நிற்காமல் நகர எத்தனித்தவரை, 

“என்னாச்சு வேணி? சரியா சாப்பிடாம எழுந்துட்ட…” என்ற பாக்கியத்திடம், “தனக்கு போதும் அசதியாக இருக்கிறது…” என சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி விடுவிடுவென சென்று விட்டார்.

அவர் செல்வதையே யோசனையோடு மனம் வலிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார் சுதர்சனன். அதற்கு மேல் அவருக்கு சாப்பாடு இறங்கவில்லை. சாப்பிட்டேன் என்று பேர் பண்ணிகொண்டார்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அமர்ந்து அன்றைய விருந்தை பற்றி பேசிவிட்டு உறங்க சென்றனர்.

கெளரி, “அண்ணி இன்னைக்கெல்லாம் நீங்களாதான் உங்க ரூமுக்கு போகணும், யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க….” என சொல்லி சிட்டாக பறந்துவிட்டாள்.

திகைத்து நின்றவளை நெருங்கிய உதயா, “என்ன மேடம் இங்கயே தூங்க போறீங்கள? இல்லை மேலே நான் தூக்கிட்டு போகனுமா?…” என்று கேட்டதும் அவனை முறைத்துவிட்டு படியேற ஆரம்பிக்கவும் அவளை பின் தொடர்ந்து சென்றான்.

அறைக்குள் நுழைந்ததும் நேராக போய் படுத்துவிட்டவளை கண்டு,

“யாரோ யாருக்கோ போன் பண்ணனும்னு சொன்னாங்க. ம்ம் நமக்கென்ன…” என சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று மறைந்தான்.

சட்டென எழுந்தமர்ந்தவள், “ஐயோ இதை எப்படி மறந்தேன்?…”என அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

நேரம் செல்ல செல்ல பொறுமை பறக்க அங்குமிங்கும் நடை பயிலளானாள்.

அவளோ பாத்ரூம் கதவையே பார்த்துகொண்டிருக்க அவனோ வந்தபாடுதான் இல்லை.

இதுக்கு மேலயும் தாங்க முடியாது என்று துணிந்து பாத்ரூம் கதவை தட்டினாள்.

“எஸ் கமின்…” என அலட்டலாக குரல் கொடுத்தவனை என்ன செய்தால் தகும் என பொருமியபடி,

“என்னங்க வெளில வாங்க ப்ளீஸ்…”

“ஏன்?…”

“போன், போன் பண்ணனும்ங்க…”

“பண்ணு…” என்றான்.

“என் கிட்டதான் போன் இல்லையே?…” என்றவளிடம்,

“நான் கூப்பிட்டப்போ நீ வரலையே?…” என திருப்பி கேட்டுவைத்தான்.

“அது, அது நீங்க அப்படி கூப்பிட்டா நான் எப்படி வர?…”

“வேற, வேற எப்படி கூப்பிடனும்னு சொல்லு. நானும் அப்படியே கூப்பிடறேன்….” என்று அவளை போல பேசிக்காட்ட.

“இதுக்கு என்ன சொல்லவென?…” கடுப்போடு அமைதியாகிவிட்டாள்.

“என்ன சத்தத்தையே காணோம்?…” என சீண்டவும்,

“உள்ள என்னதான் செய்யறீங்க? போய் எவ்வளோ நேரமாச்சு?…” என கடுகடுத்தவளிடம்,

“கேம்ஸ் விளையாடுறேன்…” என்றான் கூலாக.

“என்ன?…. கேம்ஸா?… அதுவும் பாத்ரூம்க்குள்ள ச்சீ ச்சீ….” என்றவள்,

“இப்போ வெளிய வரபோறீங்களா? இல்லையா?…”

“என்னால வரமுடியாது, நீ வேணும்னா உள்ள வாயேன். சேர்ந்தே விளையாடுவோம்….” என வார்த்தைகளில் கேலிச்சாயத்தை பூசி அழைக்கவும் வாயடைத்துவிட்டாள். சத்தமே வராமல் இருக்கவும்,

“மேடம் பயந்துட்டீங்களோ?.. கேம்ஸ் விளையாடுவோம்னு சொன்னேன், மொபைல்ல. நீ என்ன நினைச்ச?…” என விடாமல் வம்பு செய்ய,

“ஒரு போனுக்கு என்ன ஆட்டம் காட்டுறான். இதுக்கு மேல எதுவும் கேட்கவேண்டாம். இனி அவனா வந்து போனை குடுத்தாலும் பேசக்கூடாது…” என தனக்குள் சொல்லிகொண்டே வந்து படுத்துவிட்டாள்.

அதன் பின் சத்தமில்லாமல் போகவும் மெதுவாக வெளியே வந்தவன் நந்தினி படுத்துவிட்டதை கண்டு சிரிப்போடு நெருங்கினான். அவளது முதுகு அழுகையில் குலுங்குவதை கண்டு,

“ஹேய்ய். ஆரம்பிச்சுட்டியா?… எதுக்கு இப்போ அழற?….” என கை பிடித்து எழுப்பி அமரவைத்தான்.

“விடுங்க என்னை தொடாதீங்க…” என்றாள் ரோஷமாக.

“ஓ மேடம்க்கு கோவம்லாம் வருமோ?…” என்றவனை கண்டு மூக்கை உறிஞ்சியபடி,

“என் கிட்ட போன் இல்லைன்னு தானே உங்களை நான் கெஞ்சனும்னு தானே இப்படி என்னை அழவச்சீங்க?….” என சிலிர்த்துக்கொண்டு பேச,

“என்னாது????????நான் உன்னை அழவச்சேனா?…”

“ஆமாம், பின்ன இல்லையா?….”

“நீ அங்க எல்லோர் முன்னாலையும் வரமாட்டேன்னு சொன்னல்ல அதான் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்னு நினச்சேன். நீ இப்படி அழுவன்னு எனக்கெப்படி தெரியும்?…”

“நீங்க ஏன் அப்டி கூப்ட்டீங்க? அதான் எனக்கு பயமாகிருச்சு…” என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமல்.

“இங்க என்னை பாரு நந்து. உன்னை நான் என்ன செஞ்சிடுவேன்னு நீ பயப்படற?…”

தலையை குனிந்தவாறே பதிலில்லாமல் அமர்ந்திருந்தவளை கண்டு, “இங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் இவ இப்படி செஞ்சு வச்ச சிலையாட்டம் அப்படியே இருக்கா…..” கோவம் சுறுசுறுவென ஏற அவளது நாடியை பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,

“இங்க பாரு நீயும், நானும் புருஷன் பொண்டாட்டி. அப்படியே நான் உன்னை ஏதும் செஞ்சா, எதாச்சும் நடந்தா என்ன தப்பு?…” என்றவனை விழியே தெறித்துவிடும் அளவிற்கு பார்த்தாள்.

“சும்மா இப்படி முழிக்காத, இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு கொஞ்சம் சீண்டலும் விளையாட்டும் நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்க உதவும் அதோடு உன்னை என் கிட்டயும் என்னை உன் கிட்டயும் நெருங்க வைக்கும். நம்மோட எதிர்கால வாழ்க்கைக்கு நமக்குள்ள கொஞ்சமாச்சும் புரிதல் அவசியம்னு நான் நினைக்கிறேன்….”

“சும்மா தொட்டதுக்கெல்லாம் இதை ஏன் செய்யறீங்க அதை ஏன் செய்யறீங்கன்னு சொன்னன்னு வச்சிக்கோ? ம்ஹூம் சொல்ல மாட்டேன் செய்வேன்….” என்றவன் அவளது அதிர்ந்த முகத்தை கண்டு தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன்,

“நீ இப்படியே என்னை விட்டு தள்ளியே இருந்தா ஒன்னொண்ணுக்கும் விளக்கம் சொல்லியே லைப் போய்டும்டா…” என சொல்லிவிட்டு அவளது கையை தன கையினுள் அடக்கி,

“நான் நினைக்கிறதை நீயும் நீ நினைக்கிறதை நானும் புரிஞ்சுக்கணும்னு நினைக்கேன். நாம மனசால வாழணும்னு ஆசைப்படறேன்….”

“நான் சொல்றது உனக்கு புரியுதா?…” அவள் புரிந்துகொள்ள வேண்டுமே என்ற பிராயாசையோடு.

சிறிது நேரம் மௌனத்தை குத்தகைக்கு எடுத்தவள் அதை விடுத்து வாய்மொழியால் உறுதியளித்தாள்.

“புரியுதுங்க, இனிமே நீங்க சொல்றதை கேட்கறேன்….” என்றதும்,

“என் மேல கோவமில்லையே…”

“ம்ஹூம் இல்லை…” என்றாள் புன்னகையோடு, அவனும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு,

“ஹப்பா நல்ல வேலை புரிஞ்சுடுச்சு. ம்ம் இப்போ பேசலாமா?…” என கேட்கவும் வேகமாக தலையாட்டினாள்.

அவளை முறைத்து, “நான் உன் கிட்ட என்ன சொன்னேன்?….”

“என்ன சொன்னீங்க?…”

“சுத்தம் உன் கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும், எப்போவும் தலையாட்ட கூடாது வாயை திறந்து பதில் சொல்லனும்னு சொல்லியிருக்கேன்ல?…”

அதற்கும் தலையசைக்க போனவள், “ஆமா ஆமா இனிமே பதில் சொல்றேன், தலையாட்டி பழகிருச்சு….”என்றாள் அசடுவழிய.

error: Content is protected !!