நட்சத்திர விழிகளிலே வானவில் – 7 (1)

“இங்க வாம்மா நந்தினி!…” அழைத்த பாக்கியம் அங்கே கர்ப்பகிரகத்தின் பக்கத்தில் இருந்த மூவரின் முன் நிறுத்தியவர்,

“இவங்க தான் நம்ம குலதெய்வத்தை இங்க கவனிக்கிறவங்க, நம்ம கோயிலுக்கு தலைமுறை தலைமுறையா காவலுக்கு இருக்கிறவங்க தாயி. இந்த மலைகிராமத்துக்கு மக்களுக்கு ஊர் பெரியவங்கம்மா!…” என சொல்லிவிட்டு,

அங்கே விஷ்ணுவோடு வாயாடிகொண்டிருந்தவனை,

“பிரபா, இங்க வாப்பா!…” என அழைத்தவர் உதயா வந்ததும் அறிமுகப் படுத்தி விட்டு நாச்சியிடம் அழைத்து வந்தவர்,

நீங்க சொல்லுங்க அத்தை நான் அங்க படையலுக்கு எல்லாம் தயாரா இருக்கான்னு பார்த்திட்டு வரேன், மரியாதை சடங்குகள் முடியவும் எல்லோரும் சாப்பிடனுமே?…” என்றவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

“மரியாதை சடங்குனா என்ன பாட்டி?…” என்றவளிடம் விளக்க ஆரம்பித்தார்.

“நம்ம கோவிலுக்குன்னு சில கட்டு இருக்கும்மா, அதை தெரிஞ்சிக்கோ!…” என்றவர்,

“இன்னைக்கு நீ வச்ச பொங்கல் மட்டுமில்லை சமைக்கிற சாப்பாடு கூட ருசி பார்க்கமாட்டாங்க. ஏனா அதையும் சாமிக்கு படைப்பாங்க, அதுக்காகத்தான். நாம வீட்ல விரத சாப்பாடு செய்யுறது போலதான் இங்க செய்யணும். ஆனாலும் எல்லாமே சரியா தான் இருக்கும்!…” 

“இப்போ சாமிக்கு படையல் முடிஞ்சதும் இவங்க மூணு பேருக்கும் தான் முதல்ல சாப்பாடு பரிமாறனும். அதுதான் காலங்காலமா நடந்துட்டு வர முறை!….”

“அவங்களுக்கு இந்த குடும்பத்துல வாழவந்த மருமகறதால நீதான்  உன் கையால எல்லாமே பரிமாறனும்!…”

“அவங்க சாப்பிட்டு முடிஞ்சதும் நீயும் உன் புருஷனும் சேர்ந்து அவங்களுக்கு மரியாதை செய்யணும். அவங்க அதை ஏத்துகிட்டு உங்க ரெண்டு பேரையும் ஆசிர்வாதம் செய்யணும்!..”

“அதுக்கு பின்னாலதான் நாம எல்லோருமே சாப்பிடனும்!…” என சொல்லி முடித்தவர்,

“அதுமில்லாம இங்க இருந்து சமைச்சது எதையுமே எடுத்திட்டும் போக கூடாது, இது நமக்கு மட்டுமில்லை இந்த கோவிலை குலதெய்வமா வழிபடும் எல்லோருக்குமேதான்!.. என்ன ஆத்தா புரிஞ்சதா?…” என்றார் சிரித்தபடி.

“புரியுது பாட்டி!…”

“அண்ணி பாக்கியம்மா கூப்பிடறாங்க, படையல் நீங்கதான் வைக்கணுமாம், வாங்க!…”

“ஏன் முழிக்கிற? இங்க எல்லாமே நீதான் செய்யணும்!…” என அழைத்து சென்ற உதயா அவளுக்கு உதவி செய்தான்.

அனைத்து பதார்த்தங்களும் சிறு சிறு குண்டாக்களில் இருக்க பெரிய தலைவாழையிலை விரித்துவிட்டு அதில் ஒவ்வொன்றாய் வைக்க ஆரம்பித்தாள்.

அனைத்தையும் வைத்து முடித்ததும் தேங்காய், பழம், பூ தட்டையும்  எடுத்து காணிக்கையோடு இருவரும் இணைந்தவாறு பூசாரியிடம் கொடுத்தனர்.

மேளசத்தம் முழங்க பூஜை அமர்க்களமாக நடந்தது.

பூஜை முடியவும் அம்மூவருக்கும் மட்டும் முதலில் பந்தி பரிமாற பட்டது.

நந்தினி ஒவொன்றையும் பார்த்து பார்த்து பயத்துடனும் பணிவுடனும் உணவினை வைக்க சாப்பிட்டு முடித்தவர்கள் நிறைவாக  மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன் இருவரையும் மனமிஞ்சிய மகிழ்வுடன் ஆசிர்வதித்து சென்றனர்.

அதன் பின்பு வந்திருந்தவர்கள் ஊர்க்காரர்கள் என அனைவரும் வந்தமர பந்தி அமர்க்களப்பட்டது. இனிப்பை மட்டும் நந்தினியையும் உதயாவையும் சேர்ந்து வைக்க சொல்லிவிட்டு மற்றதை மற்றவர்கள் பரிமாறி அனைவரும் உண்டு முடித்தனர்.

இதற்கே அசந்து போய்விட்ட நந்தினியை ஆளாளுக்கு தாங்குவதை கண்ட வேணிக்கோ கொதிக்கும் உலையில் நந்தினியை தூக்கி போடுமளவிற்கு வேகம் எழுந்தது.

வேணியிடம் இப்படியான ஒரு மாற்றத்தை யாரும் கவனிக்க வில்லை. ம்ஹூம், தன் சாமர்த்தியத்தால் வேணி கவனிக்க விடவில்லை. அத்தையம்மாவை தவிர.

அத்தையம்மாவின் பார்வையிலிருந்து வேணியால் தப்ப முடியவில்லை. அவரும் வந்ததிலிருந்தே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். வேணியை கண்டிக்கவேண்டும் என்ற எண்ணத்தை குழுமியிருந்த சொந்தங்களை முன்னிட்டு பின்பு பார்த்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

அனைவரும் உண்டு முடித்து முக்கால்வாசி பேர் கிளம்பிவிட்டதும் மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் கிளம்ப ஆயத்தமான நேரம் லேசான தூறல் விழ கோவிலுக்குள் ஒதுங்கி நின்றனர்.

“என்ன எப்டி எங்க குலதெய்வம்?…” என்றான் உதயா காலரை தூக்கிவிட்டபடி.

“எனக்கு எல்லாமே புதுசா இருக்குதுங்க, எங்களுக்கெல்லாம் இந்தமாதிரி கட்டு கிடையாது!…” என்றாள் இயல்பாக.

“நீ விஜிக்கு போன் பண்ணனும்னு சொன்னேல?..” என்றான் ஞாபகம் வந்தவனாக.

விஜியின் பேரை கேட்டதும் அவ்வளோ சோர்வையும் மீறி ஸ்விட்ச் போட்டதுபோல பளிச்சென்று ஆகிவிட்டது நந்தினிக்கு.

“ஆமாமில்ல?…” என குழந்தை போல குதூகலித்தவளை கண்டு சிரித்தவன்,

“ம்ம் சொல்லு எப்போ பேசலாம்?”

“இப்போவே பேசலாமா?..” என்றாள் கண்கள் மின்ன,

“ம்ம் ம்ஹூம் இப்போ இங்க வச்சு வேண்டாம், வீட்டுக்கு போய்டலாம். சரியா?…” எனவும்,

“ம்ம் சரிங்க!…”

“வா தூறல் நின்னுருச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல மழை கொட்ட ஆரம்பிச்சுடும்!…”

“மழை வரும்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?…”

“இது மலை மேல இருக்கு. சுத்திலும் காடு அதனால அடிக்கடி மழையும் உண்டு. இன்னொரு நம்பிக்கை என்னனா இங்க பூஜை செய்தா கண்டிப்பா மழை பெய்யும் அப்டின்னும் சொல்லுவாங்க. சாமி நம்மோட பூஜையை ஏத்துக்கிச்சுன்னும் சொல்லுவாங்க!…” என விளக்கம் சொல்லிகொண்டிருக்க,

“பிரபா வா போகலாம், எல்லோருமே வண்டில ஏறியாச்சு, நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வரியா? இல்லை இங்கயே இருக்கிறாயா?…” என்றான் விஷ்ணு.

பொறுக்காதே இவனுக்கு என நினைத்தபடியே, “வரேண்டா, இவனோட பெரிய தொல்லை!…”

காரை நெருங்கி “நீங்க கார்ல வாங்கப்பா நானும் நந்தினியும் வேன்ல அவங்க எல்லோரோடும் வரோம்!…” என பதில் கொடுத்துவிட்டு வேனிற்கு நந்தினியோடு சென்று ஏறியதும்,

அவர்களின் பின்னாலேயே, “அண்ணியோடு வரேன்!…” என தொத்திகொண்டாள் கெளரி.

விஷ்ணு “மச்சான் மைண்ட் வாய்ஸ் ல வால்யூம் கம்மி பண்ணுடா, எனக்கே கேட்குது!…” என்றான்.

“கேட்கனும்னுதான் கூட்டி வச்சேன் அப்போவும் அடங்கமாட்ட நீ?…”என திருப்பி கொடுக்கவும்,

கீழே குனிந்து எதையோ தேடினான். மற்றவர்கள் என்னவென முழிக்க உதயாவோ அவனது அட்டகாசத்தை பொறுக்கமுடியாமல்,

“ஏண்டா இந்த தேடு தேடுற? கிடச்சதா?…” நறநறவென பல்லை கடித்தவாறே,

“எங்கடா கிடைக்க? இருக்கிற மாதிரி இருக்கு ஆனா இல்லையே?…” என்றான் சலிப்போடு.

“தேடறது வேஸ்ட், விட்ரு!…”

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி மச்சி!…”

“ம்ம், என்னத்தை தேடினாலும் திரும்ப உடஞ்சு விழத்தான் போகுது, எதுக்கு அது கீழேயே கிடக்கட்டும்!…” என்றான் உதயா.

வேனில் இருந்த பலருக்கும் இவர்களது பேச்சு புரியாமல்,

“என்னப்பா தம்பி மோதிரம் கீழே விழுந்திருச்சா? அதைதான் தேடுறியா?…” என உதயாவின் உறவினர்  வினவவும்,

கெளரி, நந்தினி, உதயா மூவருமே நகைத்துவிட்டனர்.

“இந்த ராஸ்கல் என் மூக்கை உடச்சுட்டான் அங்கிள், அதான் எங்க இருக்குன்னு தேடறேன்!…” என்று பதில் சொல்லிவிட்டு மீண்டும் தன் தேடலை ஆரம்பித்தவனை லூசா இவன் என்பது போல பார்த்தார்.

“சவுரி சிரிக்கவா செய்யுற? உனக்கு இருக்கு ஒரு நாளைக்கு!..” என மிரட்டியவனை முறைத்தவள,

“அண்ணா இவங்களை இங்க இருந்து உருட்டி விடுங்க அண்ணா, சரியான இம்சை!….” என தன் அண்ணனிடம் கோள் மூட்ட,

“அப்டினா சொல்ற?…” என உடனே அவனது இருக்கையை விட்டு எழுந்தவன் அதை செய்ய ஆயத்தமாக அதனை கண்டு,

“டேய், வேண்டாம், அந்த சவுரி பேச்சை கேட்டு கிட்ட வராதே? ஸ்டீல் பாடிடா, டச் பண்ணவே முடியாது!..” என்று ஜம்பமாக சொன்னவன் சீட் கம்பியை இருக்க பிடித்துகொண்டான்.

error: Content is protected !!