“இவங்களுக்கு நம்மளை பிடிக்கலையோ?…” என்ற சிந்தனையோடு நின்றவளை நெருங்கிய கெளரி,
“ஏன் அண்ணி உங்களுக்கு பொங்கல் வைக்க தெரியுமா?… ஏன்னா? இன்னைக்கு இங்க நீங்கதான் பொங்கல் வைக்கணும்!…” என்ற தகவலை கூற,
“ஓ நல்லா வைப்பேனே, ஏன்?…”
“இல்லை தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். வைங்க வைங்க…” என்றாள் நமுட்டு சிரிப்போடு.
“எங்க ஊர்லயும் திருவிழா நேரத்துல கோவில் வாசல்ல பொங்கல் வைப்பாங்க, எங்க வீட்டு சார்பா நான்தான் வைப்பேன்…” என்றாள் பெருமையும் சந்தோஷமுமாக.
“ஆமாம் இங்கயும் ரங்க ஊர்லயும் உண்டு அதை போல!…”என பேசியபடியே கோவில் வாசலை அடைந்தனர் இருவரும்.
“வாம்மா நல்லநேரம் முடியுறதுக்குள்ள சாமிக்கு விளக்கேத்தி ஆரத்தி காட்டி வணங்கிட்டு அதை எடுத்துட்டு போய் பொங்கல் பானைக்கு நெருப்பு மூட்டு தாயி!…” என்றார் பூசாரி.
அவர் சொன்னபடி ஆரத்தி காட்டியதும் பொங்கல் பானையருகே சென்றவளுக்கு மயக்கம் வராத குறைதான்.
அவ்வளோ பெரிய பொங்கல் பானையை இல்லை இல்லை பாத்திரத்தை அங்கே தான் பார்க்கிறாள்.
அரண்டு போய் கண்ணில் பீதியுடன் நின்றவளை பார்த்து வயிற்றை பிடித்துகொண்டு சிரித்தனர் உதயாவும், விஷ்ணுவும்.
“பயப்படாதமா, நீதான் உன் கைப்பட இதை செய்யணும். நாங்க தான் இருக்கோமே. உனக்கு உதவி செய்யறோம்!…” என தைரியமூட்டிய பாக்கியம்,
“நேரமாகுதும்மா சூடம் அணையிறதுக்குள்ள பத்தவச்சிடு !…” எனவும் அம்மனை வேண்டியபடியே புடவையை இழுத்து சொருகிக்கொண்டு மாமியாரின் சொல்படி செய்தாள்.
உலை கொதிக்க ஆரம்பித்ததும் எட்டிப்பார்க்க முடியாதபடிக்கு நெருப்பும் அனலும் பாத்திரத்தை நெருங்க விடாமல் செய்தது.
தீயை குறைத்து விட்டு உலையரிசியை போட சொன்ன பாக்கியம் அரிசியையும் பாசி பருப்பையும் அளவாக எடுத்துகொடுத்தார்.
அரிசியை நீரில் களைந்தவாறே கெளரியிடம், “ஏன் கெளரி இவ்வளோ பொங்கல் செய்யறாங்க?…” என தன் சந்தேகத்தை கேட்க,
“அண்ணி நம்ம சொந்தபந்தம் மட்டுமில்லை இன்னும் கொஞ்ச நேரத்துல ஊர்காரங்க மொத்தமும் பஸ்ல வந்திருவாங்க. எல்லோருக்குமே மதியம் இங்கதான் விருந்து. அதுக்கான சமையல் பின்னால நடக்குது….” என பின் பக்கத்தை காட்டியவள்,
“அதுமட்டுமில்லை இங்க பக்கத்துல மலைக்காட்டு மக்கள் நிறைய இருக்காங்க. அவங்களுக்கு எப்பவாவதுதான் நல்ல சாப்பாடு கிடைக்கும், அவங்களுக்காகவும் சேர்த்து செய்வாங்க!…”
“நாம மட்டுமில்லை இந்த கோவில் யாருக்கெல்லாம் குலதெய்வமா இருக்கோ அவங்க எல்லோருமேதான். நம்ம முன்னோர்கள் ஆரம்பிச்சுவச்ச பழக்கமிது. இது வம்சாவழியா தொடருது. அதனால சாப்பாடு இங்க எப்பவுமே அதிகமாகத்தான் செய்வாங்க!…” என்று முழுமூச்சாக சொல்லியவளை பிரமிப்புடன் பார்த்தாள் நந்தினி.
“என்ன அண்ணி இதுக்கே இப்டியா, அங்க அரிசி கொண்டுபோலாம் வாங்க!…” என்றாள் அரிசி களைந்த பாத்திரத்தை தானும் ஒரு கைபிடித்து அவளுக்கு உதவியவாறே.
“தீயை குறைச்சிட்டு அரிசியை உன் கையாள எடுத்து பாத்திரத்துல போடுமா!…” என்றார் பாக்கியம்.
பெரிய அடுப்பாகையால் தன் பக்கம் இருந்த தீயை குறைத்தாலும் மளமளவென தீ இன்னும் கொழுந்துவிட்டு எறிந்தவாறே இருந்தது.
“அம்மா நானும் நீங்க சொன்னதுபோல செய்தேன். ஆனாலும் தீ குறையவே இல்லையே?…” என தவறு செய்துவிட்ட குழந்தையென நின்றவளை பார்த்து கனிவோடு,
“இரு நான் பார்க்கறேன்!…” என எதிர்பக்கம் வந்தவர் வேணியின் செயலை பார்த்து அதிர்ந்தார்.
“வேணி என்ன பண்ணிட்டு இருக்க?…” என்றவரது குரலில் சிறிது கடுமை எட்டிபார்த்ததோ?
“என்னங்கண்ணி, அடுப்பை பார்த்திட்டு இருக்கேன்!…” என்றார் ஒன்றும் அறியாதவர் போல.
“உலை கொதிச்சிருச்சு, அரிசியை போடனும். அதனால தீயை குறைக்கணும்னு அப்போவே உன் கிட்ட சொன்னேன்ல, இன்னமும் இப்டி தீ போட்டுட்டே இருந்தா என்ன அர்த்தம்?….” என்றார் பாக்கியம் லேசாக எரிச்சல் எட்டிபார்க்கும் குரலில்,
வேண்டுமென்றே பதறுவது போல நடித்தவர், “ஐயோ நீங்க சொன்னதை நான் சரியா கவனிக்கலையே? இதோ குறைக்கிறேன்!…” என்றவரை தடுத்து,
“நான் பார்த்துக்கறேன், நீ போய் சாமிக்கு எலுமிச்சை மாலை கோர்த்தாச்சான்னு பாரு!…” என அங்கிருந்து அனுப்பிவிட்டு தீயை குறைத்தார்.
நெருப்பு ஜ்வாலை பாத்திரத்தை நெருங்கும் அளவிற்கு மட்டுபட்டாலும் அனல் இருக்கத்தான் செய்தது.
அதை நெருங்க முடியாமல் இருந்தாலும் சமாளித்து அம்மனை வேண்டியபடி இரு கைகளாலும் அரிசியை அள்ளி பாத்திரத்தில் மூன்றுமுறை போட்டதும்,
“போதும் நீ வாம்மா!..” என நந்தினியை அழைத்து விட்டு,
“பிரபா இந்த பாத்திரத்தில் மிச்சம் இருக்கிற அரிசியை நீயும் விஷ்ணுவும் சேர்ந்து மொத்தமா போட்டு அடிபிடிக்காம பார்த்துகோங்க!…” என சொல்லிவிட்டு,
அங்கிருந்த பெரிய பெண்மணியிடம், “நீங்க சொன்னது போலவே செய்துட்டேன் அத்தம்மா. வேற என்ன செய்யனும்?..” என ஆலோசனை கேட்டார்.
அவர்தான் வேணியின் வேலையை பாக்கியத்திடம் சுட்டிக்காட்டி அதோடு வேணியை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறியது. வேணியின் மேல் எதற்கும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் என பாக்கியத்திடம் எச்சரிக்கையும் செய்தவர்.
அத்தையம்மாவோ, “வேறென்ன பாக்கியா, அரிசி வேகவும் நெருப்பை ஏற்றாமல் அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே செதுக்கிய வெல்லம், தேங்காய்ப்பூ, பொடித்த ஏலக்காய்த்தூள், வறுத்த பழம், முந்திரி எல்லாம் சேர்த்து அந்த பாத்திரத்தில போட்டு உன் மருமவ கையால லேசா கிளற சொல்லிட்டு அந்த கரண்டியை வாங்கி பசங்க கிட்ட குடுத்து நல்லா கிளறிவிட்டா போதும் கீழே இறக்கினதும் நெய்யை விடவேண்டியதுதான்!…” என்றார்.
“ஹப்பா!…” என தன்னையறியாமல் பெருமூச்சொன்றை வெளியேற்றியவளை கண்டு அங்கிருந்த பெண்மணிகள் அனைவரும் சிரித்தனர்.
வெட்கத்தோடு அந்த பெண்மணியின் பின்னால் ஒளிந்தபடி நின்றுகொண்டவளை பலமாக சிரித்தபடி இழுத்து முன்னால் நிறுத்திய அந்த ஆச்சி, “நீ எங்க வீட்டு குலசாமி தாயி உன்னை வெசனபட விட்டுடுவோமா?…” தன்னோடு அணைத்துகொண்டார்.
அனைவருமே அதை ஆமோதிக்கும் வகையில் உதட்டில் நிரந்தர புன்னகையோடு பார்த்தபடியே இருந்தனர்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறு இருந்த உதயா, விஷ்ணுவை அழைத்து பொறுப்பை ஒப்படைத்த அத்தையம்மா பாக்கியம், நந்தினியை அழைத்துக்கொண்டு நிழலில் போய் அமர்ந்துவிட்டார்.
“ஏண்டா விஷ்ணு, வீணா போனவனே?…” என பொங்கலை கிண்டியபடியே அழைத்தான் உதயா.
“சொல்லித்தொலைடா வீணா போகவச்சவனே?…” என்று இன்னொரு கரண்டியோடு கடுப்பாக ரிவிட் கொடுத்தபடி.
“இங்க நாம தானே மாங்கு மாங்குன்னு பொங்கலை கிண்டிட்டு இருக்கோம். ஆனா அங்க பொங்கல் வச்சது யாருன்னு கேட்டு அந்த பட்டதை நமக்கா குடுப்பாங்க?…” என்று உதயா இதை தன் முக்கிய சந்தேகமாக கேட்கவும்,
“ஏன் உனக்கு சமையல் சக்கரவர்த்தி என்ற பட்டம் வேணுமாக்கும்?….” அடிக்கும் அனலுக்கு சரியாக வார்த்தையிலும் அனலை கொட்டி,
“ஆமா குடுத்துட்டா மட்டும், பாரேன். எல்லோரும் நம்மை கண்டுக்காம கழட்டி விட்டுட்டாங்களே?…” வெயிலில் இப்படி காயவிட்டுட்டாங்களே என்ற சலிப்போடு.
“அதானே?…” என்றவன், “இப்போ என்னடா மச்சான் எல்லாம் நம்ம தங்கச்சிக்காக தானே?…” என்று பல்டியடிக்க,
“என்னது நம்ம தங்கச்சியா, கொல்லபோறேன் உன்னை? நான் தாலிகட்டினவன் தெரியுமில்ல?…”
“ப்ச். இதையே எத்தனைவாட்டி சொல்லுவா. சரியான இம்சைடா நீ, என் தங்கச்சி போதுமா?…”
“இவ்வளோ நேரமும் பொலம்பிட்டு இப்போ என்னத்துக்கு இப்படி தங்கச்சி பாசம் வருதாம், திடீர்னு தங்கச்சி பக்கம் தாவிட்ட?…” எனவும் லிட்டர் கணக்கில் வழிந்தவனை கண்டு கரண்டியாலே நாலு அப்பு அப்பினா என்னவென நினைத்தபடி பொங்கலை பதமாக கிளறி முடித்தான். வெல்லம் கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட்டாதா என சரிபார்த்தபடி.
ஒருவழியாக பொங்கல் வைத்து முடித்து படையலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின.
அனைவரின் மத்தியில் அமர்ந்து அளவளாவிகொண்டிருந்த நந்தினியையே பார்த்தபடியிருந்தார் வேணி. முதல்நாள் மாலை ரிஷப்ஷன் கிளம்புகையில் பார்த்த அதே அக்னிபார்வையோடு. பார்வையிலேயே நந்தினியை எரித்துவிட்டால் என்னவென்ற துவேஷமான பார்வை.