நட்சத்திர விழிகளிலே வானவில் – 6 (2)

உதயா தலை தெரியவுமே பாக்கியம், “இன்னைக்கு காலையிலேயே ஆரம்பிச்சுட்டாங்க. அவன் வந்தது கூட தெரியாம தேவையில்லாம மாட்டிகிட்டாங்க….” என்று சிரித்தபடி உள்ளே சென்று மறைந்தார்.

தயாராகி கீழே இறங்கி வந்துகொண்டிருந்த நந்தினி உதயா, பாட்டியின் ஆட்டத்தை வாய்விட்டு சிரிக்கவும் உதயா அவளை பார்த்து முறைக்கவும் பாட்டி அந்த சமயத்தை பயன்படுத்தி எஸ்ஸ்ஸ் ஆகவும் சரியாக இருந்தது.

“உனக்கு சிரிப்பா இருக்கோ என் நிலைமை!…” என கேட்டு முறைக்க முயன்று அவளது சிரிப்பில் தானும் பங்கெடுத்து கொண்டான்.

“அம்மா!…” என அழைக்க பாக்கியம் வந்துவிட்டார். அவரது காலில் இருவரும் விழுந்து வணங்கி எழவும் நந்தினியின் சிகையை கோதியபடியே,

“நல்லா தூங்கினையா?…” என கேட்கவும் வேகமாக தலையசைத்தாள்.

அவளின் செய்கையில் ஒரு நிமிடம் திகைத்தாலும் சட்டென சிரித்துவிட்டார் பாக்கியம்.

“போய் பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பூஜையறைக்கு வாங்க சாமிகும்பிடனும்!…” என சொல்லி சென்றார்.

நாச்சியோ கௌரியின் அறையில் அவளை தாளித்துகொண்டிருந்தார்.

“வயசான காலத்துல என்னால ஓடமுடியுதா?…இந்த பையன் என்னை அந்த விரட்டு விரட்டுறான், நீயும் என்னை விட்டுட்டு ஓடிவந்துட்ட? நல்ல வேலை என் பேத்தி வந்த்தால் நான் தப்பிச்சேன்!…” கெளரி அறையில் உரையாடிகொண்டிருந்தவரின் காதை பின்னாலிருந்து இழுத்து பிடித்தவன்,

“ஏன் கிழவி இந்த சேட்டை செய்யற?… முதல்ல எங்களை ஆசிர்வாதம் பண்ணு…..” என்றான் புன்னகையோடு.

இருவரும் ஆசிர்வாதம் வாங்கவும் சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது நாச்சிக்கு.

“என்ற சாமிகளா, நல்லா இருக்கணும்ய்யா நீங்க ரெண்டு பேரும்!…” என்றார் அளவில்லா பூரிப்பில்.

“வா அம்மா பூஜையறைக்கு கூப்பிட்டாங்க!…”

அனைவரும் பூஜையறைக்கு செல்லவும்,

“நீ விளக்கேத்துமா சாமிகும்பிட்டு சாப்பிடனும் மண்டபத்துல இருந்து அப்போவே டிபன் வந்திருச்சு!…” என்றார் பாக்கியம்.

சாமிகும்பிட்டு முடிக்கவும்,

“அம்மா அப்பா, அத்தை, மாமா எங்க காணோம்?…” என உட்புறம் பார்த்து கண்களை சுழற்றியபடி கேட்கவும்,

“மண்டபத்துல நம்ம சொந்தபந்தம் எல்லோரும் இருக்காங்கல்ல அவங்களை கவனிக்க நம்ம வீட்டாளுங்க யாராச்சு இருக்கிறதுதானே பிரபா மரியாதை!…” என்றார் பாக்கியம்.

“ஓ அப்போ கோவிலுக்கு அவங்களாம் அப்படியே வந்திருவாங்களா?…” என்றான்.

“அப்பா இப்போ வந்திருவாங்க, அண்ணனும் வேணியும் மத்தவங்களை கூட்டிட்டு கோவிலுக்கு வந்திருவாங்க!…”

“ஓ இந்த விஷ்ணுவையும் காணுமே?…”

“தோப்புக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனான். அப்பாதான் அனுப்பினாரு. சாப்பிட வந்திருவான்!…” என உதயா கேட்க கேட்க அவனுக்கான தகவலை சொல்லியபடியே சாப்பாட்டு மேஜையில் பதார்த்தங்களை எடுத்து எடுக்கினார் கெளரி, நந்தினி உதவியுடன்.

“முதல்லையே சொல்லியிருந்தா நானும் போயிருப்பேனே?…. அங்க ஒரு முக்கியமான வேலை இருக்குது!…” என்றான்.

“என்ன வேலை பிரபா?…” என அனைவருக்கும் பரிமாற்ற போன  பாக்கியத்தை,

“அம்மாடி பாக்கியம் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம். அவங்கவங்களுக்கு தேவையானதை நாமே எடுத்துவச்சுப்போம், வெரசா கிளம்பனுமில்ல?….” என்றார் நாச்சி.

“அதுவும் சரிதான் நீங்க உட்காருங்கம்மா!..” என அவரையும் அமரவைத்துவிட்டு,

“இன்னைக்கு தேங்காய் லோடு ஒன்னு போகுதும்மா, நீலகண்டன் கிட்ட விஷயத்தை சொல்லிட்டா அவன் பார்த்துப்பான்!…”

“விஷ்ணுக்கு போன் பண்ணி சொல்லிடு!…” எனவும் விஷ்ணு உள்ளே நுழைந்தான்.

“வாடா, வந்து கொட்டிக்கோ கோவிலுக்கு கிளம்பனும்!…” என்றபடி “இப்போ நீலகண்டனை இங்க வரசொல்லணுமே?…”என யோசித்தவாறே இருக்கவும்,

“அதெல்லாம் நான் சொல்லிட்டேன், லோடு எங்க போகணும், எப்போ அனுப்பனும், எவ்வளோ எண்ணிக்கை எல்லாத்தையும்!..” என உதயாவின் வயிற்றில் ஐஸ் வாட்டரை வார்த்தான் விஷ்ணு.

“ம்ம் அதுசரி, அம்மா நரேஷ்கிட்ட பேசணும், இங்க நடந்ததை சொல்லணுமே!…” எனவும்,

“அதெல்லாம் நாங்க சொல்லியாச்சு, சொல்லியாச்சு!…” என்றார் நாச்சி மிதப்பாக.

“கிழவி எப்போ? எப்படி?..” என ஆச்சர்யமாக கேட்க,

“அதுவா ஈஸ்காயூப்பூல சொன்னேன்!…” என்றார் குதூகலமாக.

அனைவரும் கோரஸாக, “என்னது..” என்றனர் புரியாமல் விழித்தபடியே.

“என்னாத்துக்கு இப்படி முழிக்கீங்க? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?…” என விஷ்ணுவை பார்க்க,

அவனோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சாப்பாட்டை வெறி வெறியாக ஒரு கை பார்த்துகொண்டிருந்தான்.

“அதான்ய்யா லப்புட்டப்புல கூட பார்த்துட்டே பேசுவாங்களே? இதுகூட தெரியலை நீயெல்லாம் என்னத்தை படிச்சி கிழிச்சியோ?…” என்று தன்போக்கில் பேசிவிட்டு சாப்பிட்டு முடித்தார்.

“பாட்டி அதுக்கு பேரு லேப்டாப், ஸ்கைப்!…” என்ற கெளரியிடம்,

ஒரு நிமிடமே அசடு வழிந்தாலும் “அதைதானே நானும் சொன்னேன், காதும் கேட்காது ஒன்னும் புரியாது என்ன புள்ளைங்களோ?…” என பல்ப் குடுத்துவிட்டு இடத்தை காலி செய்தார்.

அவரது சமாளிப்பில் அனைவருக்கும் சிரித்து முடியவில்லை.

இதையெல்லாம் இந்த கிழவிக்கு சொல்லி குடுத்தவனை கண்டமாக்கிடும் கடுப்போடு பார்த்தால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் கருமமே கண்ணாக இருந்தான்.

“போதும்டா மதியத்துக்கும் கொஞ்சம் இடம் வை!…” என்றவனை,

“உன் வேலையை நீ பாரு!..” என திருப்பியடித்தான்.

“எல்லோரும் கிளம்பிட்டீங்களா?…” என்றபடி வந்த கிருஷ்ணமூர்த்தியிடம்,

“எல்லாம் கிளம்பிட்டோம் நீங்க சாப்ட்டீங்களாப்பா?..” என்ற கெளரியிடம், “எல்லாம் ஆச்சுடா, கோவிலுக்கு போகனுமில நீ தயாராகு போ!…” அவளை அனுப்பிவிட்டு உதயாவிடம்,

“பிரபா கோவிலுக்கு தேவையானதெல்லாம் அங்க போய் சேர்ந்திருச்சான்னு மாமாகிட்ட போன்ல கேட்டுக்கோப்பா!…”

“சரிங்கப்பா!…” என்று நகந்ததும்,

“என்னம்மா மருமகளே, வீடு பிடிச்சிருக்கா?….” என அன்போடு வினவியரிடம்,

“ம்ம் பிடிச்சிருக்குப்பா!..” என சொல்லிவிட்டு நாக்கை கடித்துகொண்டாள்.

யாரும் ஏதும் சொல்லிவிடுவாரோ என திருதிருவென விழித்தவளை கண்ட பாக்கியம், “நீ அப்பான்னே கூப்பிடு ஒன்னும் தப்பில்லை!…”

“அப்போ உங்களையும் அம்மான்னு கூப்பிடட்டுமா?…” ஆசையோடு கேட்க,

“ஓ, தாராளமா கூப்பிடேன்!…” என்றார் பாக்கியம் சந்தோஷமாக.

“அவ இன்னும் வீட்டை சுத்தியே பார்க்கலை, ஆனா பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டா?..” என பாக்கியம் சிரிக்கவும்,

“இல்லைங்கம்மா வீடு நல்லாத்தான் இருக்கு!…” என சர்டிபிகேட் குடுத்தவளிடம்,

“சரி சரி. சாயங்காலம் வந்து பார்ப்பியாம், என்ன?…” என கன்னத்தை வருடியவாறு சொல்லவும் நந்தினியும் ஆமோதிப்பாக தலையாட்டவும் அனைவரும் புன்னகைத்தனர்.

போன் பேசிவிட்டு வந்தவன் கண்ட இந்த காட்சியில் முறுவலுடன், “டேய் என்னடா நடக்குது இங்க?…” என்று விஷ்ணுவிடம் வினவினான்.

“ம்ம், உன்னை பெத்தவங்க உன் பொண்டாட்டியை மகளா தத்தெடுத்திட்டு இருக்காங்க. உன் டெப்பாஸிட் காலாவதியாகி நீ டம்மியாக்கபட்டாய். அதுதான் இங்க நடக்குது!…” என தான் சொல்வதை கேட்ட உதயா நொந்து நூடுல்ஸ் ஆவதை காண ஆவலோடு அவனை கடுப்பாக்கினான்.

உதயாவோ, “டெப்பாஸிட்டா?… அது எனக்கு இருந்ததுன்னா நீ நினைக்க?…” என்று விஷ்ணுவின் எண்ணத்தில் கல்லை போட்டான்.

நாச்சி, “கண்ணு பாக்கியத்தோட சேர்ந்து நின்னு புள்ளைகளை ஆசிர்வாதம் பண்ணுய்யா!…” எனவும் ஆசி பெற்றுவிட்டு அனைவரும் கிளம்பி கோவிலை வந்தடைந்தனர். குலதெய்வம் கோவில் ஊரைவிட்டு தள்ளி அந்த சிறு மலையின் மேல் இருந்தது.

இவர்களின் வருகையினை கண்டு சுதர்சனமும் மற்ற உறவினர்களும் வாயிலுக்கு வந்து அழைத்துசென்றனர்.

வேணியை கண்ட நந்தினி, “அம்மா..” என அழைத்தவாறே அருகில் செல்ல, சட்டென அவரோ விலகி சென்றுவிட்டார்.

error: Content is protected !!