“ஆளை விடு சாமி, இனி உன் சங்காத்தமே வேணாம். தெரியாத்தனமா பேசிட்டேன். அதுக்குன்னு இப்படியாடா பழிக்கு பழி வாங்குவ?…” என அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.
அவரது வேகத்தை கண்டு இடியென சிரித்தவன் கதவை சாத்தி விட்டு அங்கிருந்த மலர்களை அகற்றி அறையை சுத்தம் செய்தவன்,
“இவங்ககிட்ட இப்படி பேசினதால தப்பிச்சோம் இல்லைனா இந்த பாட்டி சரியான சிஐடி. விஷயத்தை கண்டுபிடிச்சு காலி பண்ணியிருக்கும் நம்மை!…”
“இப்போ இருக்குற பிரச்சனையில இது வேற தேவையில்லாம மனுஷன் படர அவஸ்த்தை புரிஞ்சுக்காம!…”
“நல்லவேளை நந்தினி வரதுக்குள்ள எல்லாம் க்ளீன் பண்ணியாச்சு. இல்லைனா பார்த்து பயந்திருப்பா, வரட்டும் அவ கிட்ட பேசிட்டு மத்ததை அப்புறமா முடிவு பண்ணிப்போம்!…”என தீர்மானித்துவிட்டு,
முகம் கைகால் அலம்பி உடைமாற்றிவிட்டு வந்து அமர்ந்தவன் நந்தினியை அழைக்கவேணுமே என எண்ணியவாறே அறைக்கதவை திறந்து வெளியே வந்து விசிலடித்தான்.
“கிழவி இதுக்கெல்லாம் சேர்த்துவச்சு நம்மை ஆட்டும் இனி !…”என நகைத்துகொண்டான்.
சிறிது நேரத்தில் கதவை தட்டும் ஓசை கேட்டதும்,
“உள்ள வா, நந்தினி திறந்துதான் இருக்கு!…” என குரல் கொடுத்தான்.
அவனது எண்ணத்திற்கேற்ப உள்ளே வந்தவளோ வேர்வையில் குளித்தவாறு இருந்தாள் பயத்தில் வெடவெடவென நடுங்கியபடி.
இதுக்கேவா? ஹய்யோவென இருந்தது உதயாவிற்கு.
“இங்க வா ஏன் இப்டி நிக்கிற, வந்து இங்க உட்காரு?…”
அசையாமல் நின்றவளை பார்த்து, “என்னங்க மேடம், ஈவ்னிங் சொன்னது மறந்து போச்சா? அத்தனை பேர் முன்னாலையும் தூக்கிடுவேன்னு சொன்னவன் தான் நான், யாருமில்லாத இந்த ரூம்க்குள்ள தூக்க முடியாதா?…” என கூறியதுதான் தாமதம் ஓடி வந்து அமர்ந்துகொண்டாள்.
“அடேங்கப்பா என்னா ஒரு வேகம்?…”என சிலாகித்துவிட்டு சீரியஸான குரலில்,
“நந்தினி!…”
அவன் அழைப்பது தெரிந்தும் நிமிராமல் தரையில் புதையலை தேடியபடியே வேர்வையில் பிசுபிசுத்த கைவிரல்களை பிசைந்தபடி இருந்தவளிடம் மீண்டும் கடுமையாக,
“இங்க பாரு என்னால ஒவ்வொரு வார்த்தையும் ஒருதடவைக்கு மேல சொல்லமுடியாது என் பொறுமையை சோதிக்காம என்னை நிமிர்ந்து பார்த்து நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லணும் புரியுதா? திரும்ப என்னை சொல்லவைக்காத அவ்வளோதான்!…”
அவனது மிரட்டலில் அவள் மிரண்டதை பார்த்தவன் இதுதான் இப்போதைக்கு இவளுக்கு சரி என நினைத்தவாறே முறைத்தபடி இளக்கமில்லாமல் அமர்ந்திருந்தான் அய்யனார் சிலையாக.
“நான் சொல்றதை நல்லா உள் வாங்கிக்கணும். வாயை திறந்து பதில் சொல்லணும்.புரியுதா?…”
“சரிங்க!…”
“இங்க பாரு இனி இதுதான் உன் லைப். நான் தான் உன் ஹஸ்பண்ட். இது உன்னோட குடும்பம்!…” என்று அடுக்கியபடி பேசிக்கொண்டிருந்தவனை தடுக்க புயல் போல வேகமாக வந்த மனசாட்சியை உருட்டுக்கட்டையை கொண்டு தலையில் ஒரேபோடாக போட்டு மயங்கிய நிலையில் தூக்கி ஓரமாக உள்ளே தள்ளினான்.
“என்ன சரிங்க?…” என்றான் அவள் கேட்டதையே அவளிடம் திருப்பி கேட்டு,
“இல்ல நீங்க சொன்னீங்க அதுக்குதான் சரிங்கன்னு சொன்னேன்!…” என மெதுவான குரலில் கூறவும்,
“நான் என்ன சொன்னேன் சொல்லு பார்ப்போம்?..” கண்ணில் குறும்போடு.
“இது என் குடும்பம், இதுதான் என் வாழ்க்கைன்னு சொன்னீங்க!..”
“அவ்வளோதானா?…” என்றான் இதழ்கள் சிரிப்பில் துடிக்க,
“நீங்க, நீங்க தான் என்னோட ஹஸ்பண்ட்!….” என்றாள் திக்கியவாறு.
“உனக்கு திக்குவாயா? இது எனக்கு தெரியாம போச்சே?…” என வேண்டுமென்றே அதிர்ச்சியை வரவழைத்த குரலில்.
“ஹய்யோ இல்லைங்க!…” என தவித்தவளிடம் போதும் விளையாட்டு என நினைத்துகொண்டே,
“இங்க பாரு நந்தினி நீ பயப்படாம இயல்பா இரு. முதல்ல உங்க வீட்ல சமாதானமாகி வரட்டும்!…” எனவும் பெற்றோரின் நினைவில் அமைதியாகியவளை கண்டு,
“நமக்கு தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்குமா, உனக்கு ஓரளவு புரிஞ்சிருக்கும்னு தான் நினைக்கேன்!..” என்றவனை புரியாமல் பார்த்தவளிடம்,
“பழைய விஷயங்களை அவ்வளோ சீக்கிரம் ஒதுக்கிடவும், அதை விட்டு ஒதுங்கிடவும் நம்மால முடியாது!…” ஒரு விதமான வேதனையோடு,
அவன் சொல்லவுமே கலவரத்தோடு பார்த்தவளை கண்டு மென்மையாக புன்னகைத்து,
“ஏன் இப்டி பயப்படற? நான் தான் இருக்கேன்ல?அப்புறம் என்ன?…”
“சாரிங்க என்னாலதான எல்லா பிரச்சனையுமே?…” என்றாள் கழிவிரக்கத்தில்,
“ச்சே! ச்சே! அப்படிலாம் பேசப்படாது, இதுக்கு நானும் ஒரு காரணம் தானே?” என்றான்.
“இல்லைங்க என்னோட முட்டாள்தனம் தான் இதுக்கு காரணம், நான் மட்டும் அன்னைக்கு கொஞ்சம் யோசிச்சு நடந்திருந்தா இன்னைக்கு உங்களுக்கு இந்த கஷ்டமே வந்திருக்காதுல!…” என கேட்டதுமே எங்கிருந்துதான் வந்ததோ கோவம் உதயாவிற்கு,
“ஜஸ்ட் ஷட்டாப் நந்தினி!…” என இரைந்தவன் அவளது மிரட்சியை கண்டு கோவத்தை விற்று சான்றும் இறங்காமல்,
“நான் தான் சொல்றேன்ல? நாம காரணமில்லை சூழ்நிலைன்னு… மறுபடியும் அதையே சொல்ற? என் கையால தாலி வாங்கினது அவ்வளோ கஷ்டமாவா இருக்கு உனக்கு?…” என சற்று நிறுத்தி,
“அப்படி ஒரு நினைப்பு இருந்தா அதை அப்படியே நெஞ்சுக்குள்ளேயே போட்டு புதைச்சிடனும் சொல்லிட்டேன், இந்த ஜென்மத்துல நீயும் நானும் தான் புருஷன் பொண்டாட்டி!…” பொரிந்து தள்ளிவிட்டான்.
பேச ஆரம்பித்ததும் வாயை இரு கைகளாலும் இறுக பொத்திகொண்டவளை கண்டு கோவத்தை விடுத்து முகத்தை அழுந்த துடைத்தவன் அவளை நெருங்கி அமர்ந்து வாயடைத்து இருந்த கைகளை எடுத்துவிட்டு,
“நான் சொல்றதை கேளுமா, நம்மால ஒதுங்கவும் ஒதுக்கவும் முடியாதுன்னுதான் சொன்னேனே தவிர சரிபண்ண முடியாதுன்னு சொல்லலை புரியுதா?…” என்றபடி அவளது தலையை ஆதரவாக தடவியபடி கூறினான்.
சரியென தலையாட்டியவளை கண்டு, “கொஞ்சம் சிரிக்கலாம்ல. இப்படியா அழுது வடிஞ்சிட்டு இருப்ப?…”
புன்னகைக்க முயன்றவளை பார்த்து கேலியாக, “அழுததுல மேக்கப் எல்லாம் போச்சு பாரேன் பார்க்கவே பயங்கரமா இருக்கே? இப்படியா சின்னப்பையனை பயங்காட்டுவ?…” என கலாயிக்கவும்,
ரோஷமாக, “நான் ஒன்னும் இப்போ மேக்கப் போட்டுக்கலை!…” என்றாள்.
“சரி சரி நீ தூங்கு. காலையில இருந்து ஒரே அலைச்சல், எனக்கும் டயர்டா இருக்கு. நானும் தூங்கனும். நீ போய் பாத்ரூம்ல ப்ரெஷ் ஆகிட்டு வா போ!…” என்றான்.
“எனக்கு ட்ரெஸ் எதுவுமே இல்லியே நான் என்ன செய்ய?….” யோசனையாக.
“அட அறிவுகொளுந்தே? இப்போ நீ போட்ருக்கிற ட்ரெஸ் கூடதான் நீ எடுத்துட்டு வரலை. ஆனா உனக்கு எப்படி செட் ஆச்சு?…”
“ஆமாம்ல? எப்படி?…” என்றாள்.
“அம்மா தாயே, பதில் சொல்ல தெம்பில்லை எனக்கு!…”
“அந்த வார்ட்ரோப்ல சில கவர்ஸ் இருக்கும் பாரு. இப்போ நீ மாத்திக்க நைட்டி இருக்கும். மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம் இப்போ போ!…” என அனுப்பிவைத்துவிட்டு அவள் சென்றதும் படுக்க எத்தனித்தவனின் முன்பு ஆக்ரோஷமாக வீறுகொண்டு எழுந்து நின்றது அவனது மனசாட்சி.
“இங்க என்னடா நடக்குது? நான் எழுந்திருச்சிட்டேண்டா!…..” என கொந்தளித்தவாறு.
“பெருசா என்ன நடக்கும்?… புருஷனும் பொண்டாட்டியும் எங்களோட எதிர்கால வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருந்தோம்…. அவ்வளோதான்!…” என்றான் தெனாவெட்டாக மனசாட்சியிடம்.
“அதுசரி. இந்த முடிவு எப்போயிருந்து எசமான்?…”
“ம்ம். என்னனே தெரியலை அவ அழுதது மனசை ரொம்ப நொறுக்கிருச்சு!… என்னை விட யாருமே அவளுக்கு நல்ல வாழ்க்கை துணையா இருக்க முடியாது!…” என்றான் கனவில் மிதந்தவாறே சொன்னவன்,
“அவ இன்னும் இந்த வாழ்க்கையை முழுமனசா ஏத்துக்கலை, உடனேவா எல்லாம் சரியாகும்?….”
“இதைத்தானடா நானும் ஆரம்பத்திலிருந்தே சொல்லிட்டு இருக்கேன், அப்போலாம் சரிவராது சரிவராதுன்னு தட்டிகழிச்ச?…” என்ற மனசாட்சி நாம சொன்னதை கூட இவன் கேட்காம இவனா முடிவெடுக்கிறதா என்ற ஆற்றாமையோடு.