“என்னாச்சு டார்லிங்? இவன் ஏன் இப்டி கத்துறான்?…” என வினவிய விஷ்ணுவை பார்த்து,
“ஒண்ணுமில்லையா நீ போய் தூங்கு. அவனுக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்கணும். அதான்!…” என அவனை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பியவரை மீண்டும் அழைத்தவன்,
“டார்லிங் அவல்கேசரி இருக்குதானே?…” என்றான் முக்கியமான சந்தேகத்தை கேட்க, நாச்சி திரும்பி முறைத்த முறைப்பில் அசடுவழிந்தபடி வந்த வழியே திரும்பினான்.
திரும்பவும், “நாச்சி!…” என வீடே அதிரும்படி கத்தினான் உதயா.
அலறலை கேட்ட அனைவரும் இவனுக்கு வேற வேலையில்லை எப்போபாரு பாட்டியும் பேரனும் சண்டைக்கு நிக்கிறது.
பஞ்சாயத்து பண்ண போனா ரெண்டும் செட்டு சேர்ந்து நமக்கே ரிவிட் அடிக்கும்ங்க தேவையா என முணுமுணுத்தபடி கலைந்து சென்ற அனைவருக்கும் முன் அனுபவம் இருப்பது தெள்ள தெளிவாகியது.
உதயாவின் அலறலில் காரணத்தை யூகித்த நாச்சி, “இவன!!….இன்னும் என்னலாம் ஆர்ப்பாட்டம் பண்ண போறானோ தெரியலையே?…” என மனதிற்குள் வசைபாடியபடி மாடிக்கு சென்றார்.
““என்ன கிழவி இதெல்லாம்?..”
“எப்போ பாரு மொட்டையாவே கேட்டுட்டே இருக்க?…” என்றார் அவனது கூச்சலுக்கான காரணத்தை தெரிந்துகொண்டே,
“அதுக்குன்னு ஆறடி கூந்தலை வளர்த்து வச்சுகிட்டா கேட்கணும்?…”
“இப்போ என்னதான் சொல்ல வர நீ?..”
“உன்னை யாரு இதையெல்லாம் ஏற்பாடு பண்ண சொன்னா?…” என்றான் உள் அறையில் கட்டிலில் செய்திருந்த அலங்காரத்தை பார்த்து கடுப்பாக.
“ம்க்கும். இதுக்குத்தான் இந்த சவுண்டா?…..ஏன் எல்லா வீட்லயும் நடக்கிறது தான?…” என்றார் அலட்சியமாக,
“அது எனக்கு தெரியாதா?, உன் கிட்ட இதை செய்ன்னு நான் வந்து கேட்டேனா?…”
“நீ கேட்டாதான் பண்ணனுமா? ரொம்பத்தான் பிகு பண்ற?….”
“பாட்டி கொலைவெறியை கிளப்பாத சொல்லிட்டேன்?..இப்போ இது ரொம்ப முக்கியமா?….” என கேட்டுவிட்டு இப்போது உள்ள சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் பேசுகிறாரே என்ற ஆற்றாமையோடு அவரை பார்க்க அவரோ எதற்கும் சளைக்காமல்,
“இங்க பாரு ராசா நீ இதுக்கு சம்மதிச்சுத்தான் ஆகணும், மாட்டேன்னு அடம்பிடிச்ச உன் அப்பனை கூப்பிட்டு பஞ்சாயத்து வைப்பேன் சொல்லிட்டேன்!…” என்றார் கட்டளையான குரலில்.
“கூப்பிடு, நானும் என்ன விஷயம்னு சொல்லுறேன், நீ சொல்றது செல்லுதா, இல்லை நான் சொல்றது செல்லுதான்னு பார்க்கலாமா?….” என்று மல்லுக்கு நின்றான்.
“என்னங்கடா இது இப்படி சொல்றான்?….” என்று யோசிக்க, “என்ன கிழவி நான் கூப்பிடவா?….”
“எதுக்கு இல்ல எதுக்குங்கறேன், நான் ஒருத்தி போதாதா உன்னை சமாளிக்க?…”
“நீ கூப்பிடாட்டி போ நானே கூப்பிட்டுக்கறேன்!…” என தந்தையை அழைக்க விழைந்தவனை இழுத்து பிடித்த நாச்சி,
“நான் சொல்றதை கேளுயா!…” கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில்.
“அதெல்லாம் முடியாது கேட்கமாட்டேன்!…” என்றான் சற்றும் மனமிரங்காமல்.
“அடடா, என்னப்பா பிரச்சனை உனக்கு ஏன் அத்தையை இப்படி படுத்தி வைக்கிற?…” என கேட்டபடியே ஆஜரானார் சுதர்சனன்.
“வாங்க மாமா அந்த சக்கரம் மாதிரியே வந்துட்டீங்க என்னை காப்பாத்த!…” எனவும்,
“எந்த சக்கரம்?…” என்றார் புரியாமல்.
“அதான் க்ருஷ்ணபரமாத்மா கையில இருக்கும்ல அந்த சக்கரம்!…” என்றான் குறும்பாக.
“தேவைதான் எனக்கு, இப்போ எதுக்கு இந்த நேரத்துல இப்படி சத்தம் போடறீங்க ரெண்டு பேரும்?…” என வினவவும்,
“நீயே சொல்லு…” என்பது போல முறைத்தபடியே நின்றான் நாச்சியை பார்த்தவாறே.
“அது ஒண்ணுமில்லைப்பா சாந்திகல்யாணம் வேண்டாம்னு சொல்லுறான் இந்த படுவா, நீ சொல்லி புரிய வைய்யேன்!…” என்றவுடன்,
உதயா, சுதர்சனன் இருவருமே அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.
“ஏனப்பா பிரபா எதுக்காக அப்டி சொன்ன?…” என கேட்டுவைத்ததில் கடுப்பானவன்,
“ஏய் கிழவி நான் எப்போ உன் கிட்ட அப்படி சொன்னேன்?…” என்று வெடித்தான்.
இப்போ, “ங்கே…” என விழித்தது நாச்சியும், சுதர்சனமும்.
“இவனுக்கு என்னாச்சு?…” என பார்த்தபடி.
“பின்ன எதுக்காக நீ அப்படி கத்தின?…” – நாச்சி.
“மாமா நீங்களே கொஞ்சம் எட்டி என்னோட பெட் டை பாருங்க மாமா!…” என்றான் அழாத குறையாக.
எட்டிபார்த்தவரது விழியில் ஒன்றும் தவறாக படவில்லை. புரியாமல் பார்த்தவரை கண்டு தலையில் அடித்துகொண்டான்.
“உங்க ரெண்டு பேர் கிட்ட வந்து கேட்டேன் பாருங்க என்னை சொல்லணும்?…”
“என்னனு தெளிவா சொல்லு ராசா, அப்போதானே எங்களுக்கும் விளங்கும்!…” என்றார் கவனமாக ‘மொட்டையா’ என்ற வார்த்தையை தவிர்த்து.
“பின்ன என்ன மாமா?…அங்க பாருங்க!…”
“அதான் பார்த்துட்டேனே?..”
“அது பெட் மாதிரியா தெரியுது?…”
“எனக்கு அப்படிதானப்பா தெரியுது!…”
“என்ன சொல்ல வரான் என்று புரியலையே? இதுக்குத்தான் இந்த வீட்டாளுங்க எல்லாம் அப்படி ஓடிட்டாங்க?…” என்று மனதிற்குள் நொந்தபடி என்ன சொல்லபோகிறான் என கவனிக்கலானார்.
“ஆட்டுக்கு சாப்பிட குலை கட்டிவிட்டது போல ஊர்ல இருக்கிற பூவையெல்லாம் இங்க கொண்டு வந்து கொட்டிவச்சா எப்படி?…”
“என் கட்டிலோட லுக்கே போச்சு!…டெக்கரேட் பண்ண தெரியலைனா என் கிட்ட சொல்லவேண்டியதுதானே? நான் ஹெல்ப் பண்ணி இருப்பேன்ல?…” என்றவனை கண்டு நாச்சி திருதிருவென முழிக்க சுதர்சனத்துக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.
“முதல் முதல்ல என் பொண்டாட்டி என்னோட ரூம்க்கு வரபோறா, இப்டியா கோழி குப்பையை கிளறினது போல பண்ணி வச்சிருப்ப?…”
“ஐயோ!!!! இதை மட்டும் பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பா?…” என தன் போக்கில் புலம்பிகொண்டிருந்தவன் தன்னையே இருவரும் வாயை பிளந்தபடியே பார்த்துகொண்டிருப்பதை கண்டவன்,
“கிழவி, வா வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு, இதையெல்லாம் அவ வரதுக்குள்ள க்ளீன் பண்ணனும். மாமா அங்க என்ன மசமசன்னு நின்னுட்டு? வாங்க இங்க!…” என ஒரு அரட்டுபோடவும்,
“அடப்பாவி!….” என பார்த்துவைத்தனர் இருவரும்.
“இதுக்காடா இந்த ஆட்டம் ஆடின?…” என்று குமைந்தபடியே அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு உதவி செய்ய முன்வந்தனர்.
செய்யணுமே. உதவி செஞ்சே ஆகணுமே? இல்லைனா சும்மா விட்டுவிடுவானா?
உள்ளே நுழைந்த இருவரையும் யோசனையாக பார்த்து,
“கிழவி நீ போய் நந்து வரதுக்கு கொஞ்சம் லேட் பண்ணு!…” என கூறவும்,
பெருமூச்சோடு வெளியேற போனவரை தடுத்தவனை கலவரமாக பார்த்தார் நாச்சி.
“நான் விசில் அடிச்ச பின்னாலதான் அழைச்சிட்டு வரணும், புரியுதா!….” என உத்தரவிட்டவனை ‘மவனே நாளைக்கு வா உன்னை வச்சிக்கறேன்’ என கருவியபடியே நகர்ந்தார்.
சுதர்சனன் நொந்தே போனார். “நான் ஊருக்குள்ள எவ்வளோ பெரியமனுஷன்? என்னை போய் இவன் இப்படி படுத்துறானே? வெளில எவனுக்காச்சும் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? மதிப்பானா எவனாச்சும்?…” என புலம்பினார்.
“அங்கதான் தப்பு பண்ணிடீங்க மிஸ்டர் சுதர்சனம் அவர்களே?….”
“என்ன தப்பு? என்ன தப்பு?…” என்றார் பதட்டமாக.
“நல்ல பெரியமனுஷன் தான் நீங்க. மைண்ட்வாய்ஸ் ல கூட பேச தெரியாம வாயவிட்டு புலம்பிவைக்கிற உங்களையெல்லாம் பெரியமனுஷனு எவனாச்சும் இனிமே என் முன்னால சொல்லட்டும் அப்புறம் வச்சிக்கறேன் கச்சேரியை!….” என சூளுரைத்தவனை கண்டு,
“மாப்ள ஏண்டா இந்த அட்டகாசம் பன்ற?…”
“பின்ன எனக்கெதிரா நந்துகிட்ட கூட்டணியா போடறீங்க?…என்னை பத்தி அவ உங்க கிட்ட சொல்லனுமாக்கும்?…நீங்க பஞ்சாயத்து பண்ண வரிஞ்சுகட்டிகிட்டு வருவீங்கலாக்கும்?…அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமாக்கும்?…’ என வரிசையாக தாக்கவும்,
“டேய் எப்பயிருந்துடா நீ இப்படியான?…”என அரண்டுவிட்டார்.