“கொஞ்சம் சத்தமா சொல்லுடா, எனக்கே டவுட்டா இருக்கு. எவனும் நம்பினா மாதிரி தெரியலை!…” என்றான் சலிப்போடு,
“இப்படியாடா நீ இங்க வரது?….”
“அடிச்சு மூஞ்சியை உடைக்க போறேன் பாரு, மறுபடியும் மறுபடியும் இப்படியே சொல்லிட்டு இருக்க?, எப்படிடா வந்தேன்?…”என பசியில் தீயாய் காய்ந்தான்.
“இல்லைடா மாப்ள, இங்க ஹீரோவே நீதாண்டா. இன்னைக்கு ராஜ மரியாதை கிடைக்கும் டா உனக்கு. அதை நீ மிஸ் பண்ணிடகூடாதேன்னுதான் இப்படி சொன்னேன்!…”
“என்ன மரியாதை ராசா? கொஞ்சம் கோனார் நோட்ஸ் குடேன்?…”
“அதாவது நாங்க எல்லோரும் மேடைக்கு வந்து உன்னை கூட்டிட்டு வரணும். அதை விட்டுட்டு சாப்பாட்டு அறைக்கு, நீ பாட்டுக்கு இப்படி பொசுக்குன்னு எந்திரிச்சு வந்துட்டே?…” என்றான் வகையாக சிக்கிகொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல்.
“என்னை கூட்டிட்டு வந்தா என் பொண்டாட்டியை யார் கூட்டிட்டு வருவா?…”
“அடடா ஒரு பேச்சுக்கு தங்கச்சியை விட்டுட்டேன். இனிமே விடலை. போதுமா? …” என உதயாவை நோக்கி சமாதான புறாவை பறக்கவிட அதை பிடித்து சிறைவைத்தவனாக,
“விட்ரு!…” என்றான் மொட்டையாக.
“எதை?…” என புரியாமல் அழாத குறையாக கேட்ட விஷ்ணுவை பார்த்த நந்தினி சிரிப்பை கட்டுபடுத்த பெரும்பாடுபட்டாள்.
“ப்ச், உன் தங்கச்சியை என் கிட்ட விட்ருன்னு சொன்னேன்!…”என்று கடுப்பேத்தினான்.
“உன்னைய பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்கலாடா?…” என்றான் விஷ்ணு நொந்துபோய்.
“அந்தா அங்க உட்கார்ந்து பையனும் மருமகளும் இன்னும் சாப்பிடாலையேன்னு கவலைபடாம கட்டு கட்டுன்னு பாத்தி கட்டி அடிக்காத குறையா சாப்பிடறாங்களே அவங்களை போய் கேட்டுதான் பாரேன்!…” என்று தன் குடும்பத்தினரை காட்டி,
“ஊருக்குள்ள சொன்னாங்கடா நீ ரொம்ப நல்லவன்னு, அப்பப்போ நிரூபிக்கிற!…” இவன் இப்டி சொன்னான்னு சொன்னாக்கூட அதை அங்க யாருமே நம்பமாட்டாங்களே? என காது இரண்டிலும் புகைவர நின்றவனிடம் மேலும்,
“பெத்தவங்ககிட்ட கேட்க கஷ்டம்னா என் பாட்டிகிட்ட கேட்டுக்கோ, அவங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது. சந்தேகம்னு வந்துட்டா வச்சுக்காம உடனே தீத்துடனும் தம்பி!…” கோர்த்துவிட்டே ஆகவேண்டுமென்ற முடிவில்.
“நீ என்னை தீர்த்துக்கட்ட ப்ளான் பண்ணிட்டன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு!….” என விஷ்ணு உஷார் ஆக,
உதயா “பய எஸ்ஸ்ஸ் ஆகிட்டானே?…” என முணுமுணுத்தான்.
“ரொம்ப பீல் பண்ணாத, கிராதகா யார் கிட்ட சிக்கவைக்க பார்க்கற? இன்னும் வாழ்க்கையில நான் எதையுமே பார்க்கலை. எனக்கு இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகலை தெரியும்ல!…” என்று புலம்பியவனை கண்டு மனதிற்குள் குத்தாட்டம் போட்டான் அவனது ஆருயிர் நண்பன்.
“நீ ஒண்ணு பார்த்த, அதை நான் பார்த்துட்டேன்!…” என்றான் மீண்டும் தூண்டிலோடு மாட்டுவானா என அவனையே பார்த்தபடி தேவுடுகாக்க.
“நானே பார்க்காததை என்னத்தை பார்த்த? என்னை கிளம்புன்னு நேர சொல்லவேண்டியதுதானே?…”
“அதை என் வாயால நான் எப்டிடா சொல்லுவேன்?….”
“ஏன்? சொல்லித்தான் பாரேன்?…”
“நீ என் நண்பேன்டா!…” எனவும்
“போதும்டா இதுக்குமேல எதையும் சொல்லிடாத, அழுதுபோடுவேன் அழுது!…”
இருவரது வாக்குவாதத்தையும் ஆச்சர்யமாக வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவள் விஷ்ணுவின் கடைசி வார்த்தையில் அடக்கமாட்டாமல் வாய்விட்டு சிரித்துவிட்டாள்.
அவள் சிரித்ததை பார்த்த விஷ்ணு, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிரபாகரா?..” என்று விஷ்ணு முறைத்த முறைப்பில் பக்கத்தில் வைத்திருந்த வாழை இலைக்கட்டு பற்றி எரிந்திருக்கும்.
கோவமாக செல்ல போனவனை தடுத்து,
“அவ்வளோ சீக்கிரம் உன்னை விட்டுடுவேனா? இவ்வளோ நாளா என்னலாம் சொல்லி படுத்தி வச்ச?…” என மனதிற்குள் கருவியபடி அவனை
“வாடா வந்து பரிமாறு!…” என இழுத்துவந்தான்.
“வந்து வச்சு தொலையிறேன்!…” என்றான் கடுப்போடு சாம்பார் பாத்திரத்தை எடுத்தவனை தடுத்து,
“என் பக்கத்துல உட்கார்ந்து என் கூட சாப்பிடு!…” என பாசமாக தன அருகில் அமரவைத்துகொண்டான்.
அனைவரையும் பெருமையாக பார்த்தவாறு சட்டை காலரை தூக்கி விட்டு ஸ்டைலா அமர்ந்தவனை கண்டு, “என்ன ஒரு எகத்தாளம் இவனுக்கு!…” என எண்ணியபடி எதிர் இருக்கையில் அமர்ந்தவாறே பார்த்தனர் நாச்சியும், கெளரியும்.
நடுவில் உதயாவும் அவனது இருபுறமும் நந்தினியும் விஷ்ணுவும் அமர்ந்திருந்தனர்.
ஏற்கனவே பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ஆராய்ந்து நந்தினிக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என அவளிடம் கேட்டுகொண்டிருந்தான்.
விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த அவல்கேசரியை இலையில் முதல் கிண்ணத்தில் கண்டதும் அவனுக்கு ஒரே குஷியாகிவிட்டது.
அவன் குதூகலத்தில் வானத்தில் ஒருநிமிஷம் பறந்து விட்டு கீழே இறங்கும் முன் அவனது இலையில் இருந்த பிடித்தமான பதார்த்தங்கள் அனைத்துமே காணாமல் போயிந்தது.
“எங்க இங்க இருந்த கிண்ணம்?…” என தேடவும்,
“என்னடா? சாப்பிடலையா?..” – உதயா.
“இல்லடா மச்சான். இங்கதான் வச்சதுப்போல இருந்துச்சு மச்சான்!…”
“எது? ஓ அதுவா? அது நந்தினிக்கு பிடிக்குமாம் அதான் எடுத்துகொடுத்துட்டேன்!….” என்றான் சாவகாசமாக சாப்பிட்ட படி.
“அவதான் வேண்டாம்னு சொல்றாளே அப்புறமும் ஏண்டா கம்பல் பன்ற?…”
“பாருடா உன் தங்கச்சியை!…” எனவும் அவளை எட்டிப்பார்க்க அவளோ அவனை கண்டு மீண்டும் மீண்டும் சிரித்தால் ஏதும் நினைத்துவிடுவானோ என வேறு திக்கில் பார்த்துகொண்டிருந்தாள்.
“பார்த்துட்டேன், ஏண்டா?…”
“சரியா சாப்பிடாம இருக்கா எப்டி ஒல்லியா இருக்கா பாரு? அதான் எடுத்துகொடுத்துட்டேன்!…” அதற்குமேல் அவனை கவனிக்காமல் சாப்பாட்டில் கவனமானான்.
“ஒருவேளை சாப்பாட்டிலையா அவ பூசணிக்காய் சைஸுக்கு ஆகிடுவா? இதெல்லாம் ஓவர்டா, நல்லா இல்ல சொல்லிட்டேன்….” என உதயா காதில் புலம்ப அவனோ இந்த காதி வாங்கி அந்த காது வழியாக பறக்கவிட்டான்.
நந்தினிக்கோ விஷ்ணுவை பார்க்க பாவமாக இருந்தது.
“இவங்க ரொம்பத்தான் அண்ணாவை படுத்திவைக்கிறாங்க!…” நினைத்துக்கொண்டே சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தவளை பார்த்து,
“சாப்பிடாம என்ன செய்ற? வீட்டுக்கு கிளம்பனும் சீக்கிரம்!….”என அவளை விரட்டினான்.
“என்னது? இதுக்காடா பக்கத்துல உட்காரவச்ச?…” என கொதித்துபோனான்.
அதெல்லாம் உதயா கண்டுகொண்டால்தானே?
ஆனால் பார்க்ககூடாதவர்கள் பார்த்துவிட்டனர். எதிரே அமர்ந்திருந்த கெளரியும், நாச்சியும் சிரித்த படியே…
அதனால் கடுப்பானவன் சமாளித்துகொண்டு தெனாவெட்டாக “இந்தாப்பா கேசரி கொண்டு வா!…” என பரிமாறியவனை அழைத்து கேட்கவும்,
அவனோ “சார் தீர்ந்துபோச்சு!…” என்று அசால்ட்டாக அரைவண்டி கரியை அள்ளி அப்பிவிட்டு போய்விட்டான்.
இப்போது நாச்சியும் கெளரியும் மட்டுமல்லாது இவர்களை கவனித்துகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி பாக்கியமும் கூட இடியென சிரித்துவிட்டனர்.
“இங்க நண்பனுக்கு இவ்வளோ அவமானம் நடந்து போச்சு. இவன் என்னடான்னா எதுவுமே நடக்காதது போல ஒரு எபெக்ட் குடுக்குறானே?…”
“நான் மட்டும் அப்போவே சாப்ட்டு இருந்தா?..” என அண்ணாந்து பார்த்தபடி அவசரமாக பாதி எரிந்து அணைந்திருந்த இருந்த கொசுவத்தி சுருளை கொளுத்திவிட்டான்.