நட்சத்திர விழிகள் 1
“என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த நீ யார்?…..” என்று கேட்டுவிட்டு அவசரப்பட்டு சீண்டிட்டோமே என்ன சொல்ல போறானோ? என்று அவனையே பார்த்தபடி பரிதவித்து நின்றார் ஏழுமலை.
“சாரி மிஸ்டர் ஏழுமலை உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதை நான் தவறென்று சொல்லவே மாட்டேன். ஆனா என்னோட பொண்டாட்டிக்கு நீங்க எப்படி கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவெடுத்தீங்க?”
“தம்பி நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்!” என்ற சந்திராவின் குரல் அவனிடம் இறைஞ்சியது. அவனோ மணக்கோலத்தில் நிற்பவளை விழிகளில் நிரப்பிக்கொண்டே தீவிரமான தலையசைப்போடு முடியாதென்றான்.
அவளோ “இவனா?..இவன் ச்சே ச்சே இவர் எப்படி இங்கே?..” திடீரென உருவான உணர்வு என்னவென்று அறிவதற்கு, ஆராய்ச்சி நடத்த ஆயத்தமானாள்.
அவசரமாக ஆராய்ந்ததின் விடையோ, விடுதலை உணர்வென்று சொல்லியது. ஆனாலும் வெளிக்காட்டமுடியாத துயரத்தில் கண் முன் நடக்கும் விவாதத்தை ஜீரணிக்க முடியாமல் நின்றாள். வார்த்தைகள் தடித்ததில் செய்வதறியாது திகைத்தாள். இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? என்று அஞ்சியபடி உடல் நடுங்க நின்றாள்.
“இதுக்கு நான் ஒத்துக்க முடியாது, என் பொண்ணுக்கு நான் நினச்சது போலதான் கல்யாணம் செய்து வைப்பேன்!” என்றார் ஏழுமலை.
“நீங்க ஒத்துக்கறதுக்கும், ஒத்துக்காம போறதுக்கும் நான் ஒன்னும் உங்க கிட்ட பொண்ணு கேட்டு வரலை மிஸ்டர், என் பொண்டாட்டியை நான் எல்லோர் முன்னாடியும் தொட்டு தாலிகட்டின என் பொண்டாட்டியை தான் கேட்டு வந்திருக்கேன்!”…. என் என்பதில் இன்னும் அதிகளவு அவனால் முடிந்த அளவுக்கு அழுத்தத்தை ஏற்றி.
“அதுக்கு உங்களோட அனுமதி எனக்கு தேவையில்லை, மைன்ட் இட். இதுக்கு மேலயும் என்னை பேச வைக்காதீங்க, நல்லதுக்கில்லை!”…. என்றான் எரிச்சலோடு.
ஆதாரங்களோடு அக்கினி பிழம்பாய் நின்றவனின் முன்னால் தன் வாதம் எடுபடாதது மட்டுமில்லாமல் அதை விட தான் அத்தனை தூரம் மன்றாடியும் அதை மறுத்து மணமேடையின் அருகில் நிற்பவனை என்ன செய்வதென்று தெரியாமல் வெறுப்பை உமிழும் கண்களோடும் கலக்கத்தோடும் சுற்றி குழுமி நின்ற உற்றார் உறவினரை காண முடியாமல் இயலாமையோடு தலை கவிழ்ந்தார்.
கூட்டத்தில் குழுமியிருந்தவர்களில் ஒருவர் எழுந்து, “தம்பி என்ன சொல்றீங்க மணமேடை வந்த பொண்ணை பொண்டாட்டின்னு சொல்றீங்களே?” என்றார்.
“வேற எப்டி சார் சொல்ல சொல்றீங்க?” என்று அவரையே திருப்பி கேட்டுவைத்தான்.
“இவ்வளோ பேர் இருக்குற கூட்டத்துல வந்து அபாண்டமா பேசறியே, உனக்கு எவ்வளோ துணிச்சல் இருக்கணும்” என்றான் இன்னொருவன்.
“என்னங்கய்யா இது? என் பொண்டாட்டியை என் பொண்டாட்டின்னுதானே நான் சொல்ல முடியும், வேற எப்படி சொல்ல?” என்றான் கடுப்பாக.
“வார்த்தையை அடக்கி பேசுங்க. என்ன சொன்னாலும் நாங்க நம்பிருவோமா? மரியாதையா போய்டுங்க, தேவையில்லாம கலாட்டா வேண்டாம்!” என்றார் ஊர் தலைவர்.
“ஏனப்பா பார்க்க படிச்சவனா பதவிசா இருக்க, நீ ஏன் இப்படி பேசற? தப்புப்பா பொம்பள புள்ள மேல பழி போடாத, பெரிய பாவம்யா. வாழவேண்டிய பொண்ணுப்பா அது, உனக்கு புண்ணியமா போவும் கிளம்பிரு, இல்லைனா ஊர்க்காரங்கலாம் உன்னை உண்டில்லைன்னு ஆக்கிபுடுவாங்கயா!” என்று அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த பெண்களில் சிலரும் முயன்றனர்.
அனைவருக்கும் விளக்கம் சொல்லவேண்டி இருக்கிறதே என்று ஆயாசமடைந்தவன் முகத்தை இரு கையாலும் அழுந்த துடைத்தபடி அனைவரையும் நோக்கி,
“சரிங்க நீங்க சொல்றது போல நான் கிளம்பறேன்!” என்று தனது பதிலில் அனைவரின் முகத்திலும் பிரகாசத்தை வரவழைத்து வம்பர்களின் முகத்தில் மண்ணை வாரி கொட்டினான்.
அனைவரும் ஆசுவாசமடைந்து அரைநொடியாகும் முன்னரே அடுத்த அம்பை அனாயசமாக எறிந்தான்.
“இதோ இவங்க கிட்ட கேளுங்க. அந்த ஊர் மக்கள் அத்தனை பேர் மத்தியில நான் என் பொண்டாட்டி கழுத்தில தாலி காட்டினப்போ அந்த இடத்துல விஷயம் தெரிந்து அடுத்த நிமிஷம் அங்க வந்தவங்க ஏன் அதை தடுக்கலைன்னு. ஏன் மறுத்து பேசாம அமைதியா இருந்தாங்கன்னு கேளுங்க. நான் சொல்றது உண்மையா இல்லையான்னு” என்றான்.
அப்போதும் அவள் என் மனைவிதான் என்று உரிமையை வார்த்தையிலேயே அழுத்தமாக சொல்லிவிட்டு கேள்விக்கனையிலிருந்து தப்பி அவர்களை சிக்கவைத்து விட்டு பார்வையாளனாக மாறி அவர்களின் பதிலை அறிய ஒதுங்கி (ஒதுங்குவது போல ஒதுங்காமல்) நின்றான்.
அவன் கை காட்டியது வேறு யாருக்காயிருக்கும்? எல்லாம் ஏழுமலைக்கும், சந்திராவிற்கும் தான்.
என்னவென்று பதிலை சொல்வார்கள்? அவனும் விடாமல் கேட்டான் விடாகண்டனாக.
“சொல்லுங்க மிஸ்டர் ஏழுமலை. ஏன் அமைதியா இருக்கீங்க?”
“தடுத்து பேசினீங்களா அதை? இல்லைதானே!”
“இப்போ சொல்லுங்க, இல்லை இன்னும் அங்க யார் வந்திருந்தாங்கன்ற விவரத்தை சொல்லனுமா?” என்று எள்ளலாக சொன்னவனை பார்த்து அடிக்குரலில் “அங்க அந்த சம்பவத்தப்போ நீங்க என்ன சொன்னீங்க? இப்போ என்ன செய்றீங்க? உன்னை போய் மலைபோல நம்பினேன்ல என்னை சொல்லனும்யா!” என்று சீறிய ஏழுமலையை அமைதியாக பார்த்தான்.
“இப்போவும் ஒன்னும் பெருசா நடக்கலை மிஸ்டர் ஏழுமலை, நான் சொன்னதை செய்ங்க நான் பேசினது தப்புன்னு சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பிடறேன்!” என்றான் குரலிலும் அந்த அமைதியை கொண்டுவந்து.
“நீங்க அதை செய்யாத வரைக்கும் என்னாலையும் பின்வாங்க முடியாது, அப்படி செஞ்சா எனக்கு நானே தினம் தினம் மரணதண்டனை கொடுத்துகிட்டதுக்கு சமம்!” என்றான் வார்த்தைகளில் வலியோடு.
ஊர் தலைவர் ஏழுமலை அருகில், “என்னப்பா இதெல்லாம்? அந்த புள்ள என்னனமோ சொல்லுதே? உண்மை என்னனு சொல்லுப்பா? நாங்க இருக்கோம்ல!” என்று ஊக்கினார்.
“இப்டி அமைதியா ஏழுமலை நிக்கிறதா பார்த்தா தம்பி சொல்றதுதான் உண்மை போலயே?” என்றார் மற்றொருவர்.
“யாரை நம்பறதுன்னே தெரியாலையே இந்த காலத்துல?” என்று அவரவர் இஷ்டத்திற்கு பேச ஆரம்பித்து விட்டனர்.
அந்த திருமண மண்டபத்தின் உள்ள அனைவரும் வாய்க்கு வந்தபடி தங்களின் கற்பனை குதிரைக்கு தீவனமிட்டு கொண்டிருந்தனர்.
ஏழுமலையின் முகத்திலிருந்த அப்பட்டமான வேதனையை கண்டவன் “போதும் தயவு செய்து இதுக்கு மேலயும் யாரும் அவங்கவங்க வாய்க்கு வந்தபடி பேசாதீங்க?” இது எங்க குடும்ப விஷயம் தவிர்க்கமுடியாமதான் சபைக்கு வந்துச்சு!” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டான்.
மணமகளாய் நடந்து கொண்டிருக்கும் மோசமான சூழலை அறிந்து அதிர்ந்து நின்றவளை உறுத்து விழித்தபடி நெருங்கியவன் கைபிடித்து அழைத்து சென்று மணமேடையில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தான்.
“அய்யரே மந்திரத்தை சொல்லுங்க!”
“இல்லை பெண்ணோட தோப்பனார்?…” என்று இழுத்தவர் அவனது முறைப்பிற்கு அஞ்சி மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார்.
அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்த பார்வையாளர்களை நோக்கி “ முதல்ல நடந்த எங்களோட கல்யாணம் நீங்க யாருமில்லாம நடந்துச்சு, இப்போ எல்லோரோட ஆசிர்வாதத்தோட நடக்கனும்னு விரும்பறேன். சோ ப்ளீஸ் எல்லோரும் எங்களை முழுமனசோட வாழ்த்திட்டுதான் போகனும்!” என்று அழுத்தமான வேண்டுகோளை விடுத்தபடி காரியத்தில் கண்ணாகினான்.
சலசலத்த கூட்டத்தார் அனைவரும் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தனர்.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்!”
திருமாங்கல்யத்தை வாங்கியவன் அதை அவளது கழுத்தில் அணிவிக்கும் முன் அவள் முகத்தை ஆராய்ந்தான். கலங்கிய கண்களோடு ஏறிட்டு பார்த்தவள் பார்வை கேட்கும் கேள்வியறியாது அவள் கண்களை பார்த்தது பார்த்தபடி மூன்று முடிச்சிட்டு வகிட்டில் திலகமிட்டு அனைவரின் முன்னிலையில் மனைவியாக்கி ஏழுமலையை நோக்கி பார்வையொன்றை வீசினான்.
மகளது திருமணம் அனைவரும் மெச்சும் படி நடத்த நினைத்தவர் அவளது வாழ்வு அனைவரின் வாய்க்கும் அவலாகியதை கண்டு, “எல்லாம் உன்னால்தான்!” என்று உக்கிரமாய் பார்த்தார்.
சற்றும் சளைக்காமல் பார்த்தவன் பார்வையில் “நான் அப்போவே சொன்னேனே கேட்டீங்களா?” என்ற செய்தியோடு.
“கிளம்பறோம்!” ஒருவார்த்தையோடு முடித்துகொண்டான்
பதில் பேசாமல் நின்ற தகப்பனை நோக்கி
“அப்பா நான் என்ன செய்யனும்?” என்று வினவிய மகளை பெரும் துயரத்துடன் “கிளம்புமா நீ கிளம்பு எல்லாம் கை மீறி நடக்கும் போது நம்மால ஒன்னும் செய்ய முடியாது நீ கிளம்பு!” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
“நீ மாறவே இல்லை என்ன? அப்பவும் உங்கப்பா பின்னாடியே ஆட்டுக்குட்டி மாதிரி போன, இப்பவும் உங்கப்பா கிட்ட என்ன செய்யணும் என்று கேட்டுட்டு இருக்க? நீயா சுயமா யோசிக்கவே மாட்டியா?” என்றவனை அயர்ச்சியோடு பார்த்து அவள் கேட்க நினைத்த கேள்வியை அவனது மனசாட்சி கேட்டது.