"வேதனையின் வேகம்"

Crazy Queen

Active member
"ஆகட்டும்ப்பா பார்க்கலாம், 'அப்பா' கிட்டயிருந்து போன் வந்ததும் கேட்டு சொல்றேன்...!!"

என கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் சின்னத்துரையிடம் கூறிவிட்டு கைபேசியை அணைத்து மேசையில் கிடத்தினாள் லலிதா..

கணவன் ராமதுரை'யைக் கரம்பிடித்து இந்த ஆண்டோடு சுமார் '23' ஆண்டுகள் ஆகிவிட்டது..

சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர், மாமியார் 'ரமாமணி' உதிர்த்த வார்த்தைகள் இப்போது லலிதாவின் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது..

"ஹூம்... ஒன்னா மணவறை ஏறுனவ எல்லாம் இப்போ புள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்பிக்கிட்டு இருக்காளுவோ! இங்கயும்தான் ஒன்னு வாய்ச்சுருக்கே! அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் வயித்துல புழு, பூச்சி உண்டாவாம பட்ட மரமா நிக்கிது.".

என லலிதா காதுபடவே முனகினாள்..

அவ்வப்போது விழும் இந்த குத்தல் வார்த்தைகள் அவளது காதுகளை கிழித்து நெஞ்சுக்குள் இறங்கி இதயத்தை தைத்து பக்குவப்படுத்தி இருந்தது..

அவளது பொறுமைக்கு பகரமாக அடுத்த ஓரிரு மாதங்களில் கணவன் ராமதுரை வெளிநாட்டிலிருந்து வந்ததும் அவளது வயிறறைகளில் சின்னத்துரை கருவாகி பின்னர் உருவாகி வளர ஆரம்பித்தான்.

அவளது பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இறைவனின் பரிசாக கொணரப்பட்ட சின்னத்துரை அடுத்த பத்து மாதங்களில் பிறந்ததும் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உலகமானான்..

அவனது கரங்களும், வாயும், வயிறும் விரும்பியது அனைத்தும் அவனுக்கு தாராளமாக கிடைத்தன.

அவனது மனம் என்னவெல்லாம் விரும்பியதோ! அவை அனைத்தையும் அவன் வாய்திறந்து கேட்காமலேயே! அவனது கரங்களில் திணித்து அவனது கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக்கினான் தந்தை ராமதுரை.

அப்படிப்பட்ட சின்னத்துரை இன்று கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும், தனது நண்பர்களில் சிலர் வைத்திருக்கும் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்பட்டு அப்பாவிடம் சொல்லத் தயக்கப்பட்டு தற்போது அம்மா லலிதாவின் காதில் போட்டு வைக்கிறான்.

மகன் ஆசைப்பட்டு விரும்பி கேட்டது, கேட்காதது அனைத்தும் அவனது வாய் திறந்து கேட்கும் முன்பே அவனது கரங்களில் திணித்து அவனை திக்குமுக்காடச் செய்த லலிதாவுக்கு இன்று அவன் வாய் திறந்து கேட்ட ஒன்றை வாங்கிக் கொடுப்பதில் தயக்கம் வந்து முன்நின்றது..

அவ்வப்போது ஆங்காங்கு கேட்கும் பைக்கில் பறந்த சிறுவர்களின் விபத்துச் செய்திகள் அவளது உள்ளத்தைக் கவ்வி படர்ந்து பயம் பற்றிக் கொண்டது..

இருப்பினும் இதுவரையில் செல்லமாக வளர்ந்த ஒரே பிள்ளை வாங்கிக் கேட்டதை கொடுக்காமல் இருந்ததில்லை இப்போது அவன் ஆசைப்பட்டு கேட்கும் ஒன்றை வாங்கித்தர தயங்குவது அவளது மனதைப் பிசைந்தது..

அப்போது தலையணையில் கிடந்த செல்போன் சிணுங்கியது.. எடுத்து காதில் வைத்தாள் ..

"என்னப்பா, மிஸ்டு கால் கொடுத்திருந்தே! ஏதாச்சும் செய்தி இருக்கா?"

கணவன் ராமதுரையின் குரல் காதில் கேட்டதும்..

மகன் தனது காதில் கக்கி இருந்த பைக் விண்ணப்பத்தை அவனது காதுகளுக்கு கடத்திவிட்டு காத்திருந்தாள்..

மறுமுனையில் சிறிது மௌனம்..பின்னர்..

"சரிப்பா! யோசித்துவிட்டு சொல்கிறேன்" என்றான் ராமதுரை..

ஒரு சில மணி நேரம் கழிந்து..

மீண்டும் லலிதாவின் செல்பேசி அவளை சிணுங்கி அழைத்தது..

"ஹலோ!"

"இதப்பாரு லலிதா! இங்க என்னோட நண்பர்கள்கிட்ட விசாரிச்சேன் ! எல்லோரும் காலம் ரொம்ப மோசமா இருக்குப்பா! இத மாதிரி விலையுயர்ந்த ரேஸ் பைக்குகள பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்குறது தப்பு அப்டின்னுதான் சொல்றாங்க!"

"எனக்கென்னெமோ! ரொம்ப பயமா இருக்குப்பா!"..

ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் ராமதுரை..

"எனக்கும் அதுதாங்க! காலையில இருந்து மனசு என்னமோ கலங்குது!"

"நம்ம உசுருக்குசுரான புள்ள! நாளைக்கி ஏதாச்சும் ..அப்பப்பா நெனைக்கவே ரொம்ப பயமா இருக்குங்க.."

தனது மனதில் உள்ளதையும் போட்டுடைத்தாள் லலிதா..

இருவரும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக ..

"சரிங்க! இன்னக்கி சாயங்காலம் அவன் காலேஜ் முடிஞ்சி வர்ரதா சொல்லி இருக்கான் அவன்கிட்ட நீங்க சொன்னதா சொல்லிடறேன்"..

அன்று மாலை!

வீட்டின் படியேறி உள்ளே நுழைந்ததுமே!

"அம்மா! என்னாச்சு நான் கேட்டது, அப்பா ஒத்துக்கிட்டாங்களா!"..

படாரென, வந்து விழுந்தன வார்த்தைகள் சின்னத்துரை வாயிலிருந்து..

"அது வந்து"...என இழுத்தாள் லலிதா...

மகனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே..

கேள்விக்குறிகளை அள்ளித் தெளித்தது சின்னத்துரையின் புருவங்கள்..

"இல்லப்பா! படிச்சி நல்லபடியாக முடிச்சதும் வாங்கிக்கலாமேப்பா!..இப்போ! என்ன அவசரம்!. உனக்கு இன்னும் நெறைய வயசு இருக்கே!"

"அங்கொன்னு இங்கொன்னு நடக்குறத பாத்தா! பயமா இருக்குப்பா!"

"ஒரு ரெண்டு வருஷம் பொறுத்துக்கோயேன்."

மகனின் தலைகோதி கெஞ்சும் குரலில் கொஞ்சினாள் லலிதா..

சின்னத்துரை முகம் ஏமாற்றக் குறியீட்டில் திளைக்க கண்கள் சினத்தில் சிவந்தது..

இதுவரை கேட்காமலேயே அவன் பெற்றுக் கொண்ட அனைத்தையும் அவனது உள்ளம் மறந்தது..

"ஏம்மா! என்னோட பிரண்ட்ஸுக்கும் என் வயசுதான் ஆகுது, அவங்க அப்பா, அம்மா அவங்களுக்கு வாங்கிக் கொடுக்கல, நீங்க மட்டும் ஏம்மா இப்டி படுத்துறீங்க!"..

"இனிமே! நீங்க எனக்கு எதுவும் வாங்கித்தர வேணாம்".

தமது கோபக் கணைகளை அம்மாவின் முகத்திற்கு நேரே எறிந்துவிட்டு கட்டிலில் போய் குப்புறப் படுத்துக் கொண்டான்..

முதன்முதலில் மகனுக்கு ஏமாற்றத்தை அளித்ததை பொறுக்க முடியாமல் தாயின் உள்ளம் தத்தளித்தது..

அதன் பின்னர் பலமணி நேரமாகியும் அறையிலிருந்து அவன் வெளியில் வரவே இல்லை, தாயிடமும் பேசவில்லை..

அடுப்பங்கரையில் மகனுக்கு மிகவும் பிடித்த பொறித்த கோழித்துண்டுகளை தட்டில் ஏந்தியவாறு வந்த லலிதா..

குப்புறப் படுத்திருக்கும் மகனின் தோளைப்பற்றி, தாடையை திருப்பி ..

"ராஜா! சாப்பிடுப்பா.. அப்பாவிடம் சொல்லி நீ கேட்ட பைக்க வாங்கிக்கலாம் இப்போதைக்கு இந்தா ஆசையா கேப்பியே அந்த பொறிச்ச கோழி எடுத்து சாப்பிடுப்பா..."

"ராப்பட்டு பட்டினியா படுக்க கூடாதுப்பா"...

ம்ஹூம்..

முரண்டு பிடித்தவன் அம்மாவை திரும்பி பார்க்கவே இல்லை..

இரவு முழுதும் எதுவும் சாப்பிடவும் இல்லை..

அவனது காலருகே கெஞ்சிக் கொண்டிருந்த லலிதா..

அவளும் சாப்பிடாமல் உறங்கிப்போனாள்..

விடிந்தது..

"போதுமா! அப்பா சரின்னு சொல்லியாச்சு"..

"இப்பவாவது சாப்பிடுறியா". என்றாள் மகனிடம் செல்லமாக..

ஒகேம்மா" ...எனக் கூறியவாறே!.. வழக்கத்திற்கு மாறாக இரண்டு தோசையை சேர்த்தே உண்டு முடித்தான் சந்தோஷமாக..

சொன்னபடி அப்பா 'ராமதுரையிடமிருந்து மறுநாள் அழைப்பு வந்தது..

எடுத்து காதில் வைத்த லலிதா..

"அப்படியா" ... என்றாள்... இரட்டிப்பு சந்தோஷத்தில்.,

ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தமர்ந்து,

"தம்பி... அப்பா உனக்கு பைக் வாங்க ஒன்றரை லட்சம் அனுப்பி இருக்காங்களாம், அதோடு இன்னொரு செய்தி நாளைக்கு அப்பா ஊருக்கும் வர்றாங்களாம்."

இரண்டாவது செய்தியை அவன் காதில் வாங்கிக்கொண்டானோ இல்லையோ! ஆனால் முதல் செய்தியைக் கேட்டதும் அவன் முகம் பிரகாசத்தில் மின்னியது..

சற்று நேரத்திற்கெல்லாம் லலிதா ' வங்கி கணக்கில் பணம் வந்து விழுந்த செய்தியை அவளது செல்பேசி 'கினிங்' என்ற ஒலியுடன் கக்கியது..

மறுநாள்..

அப்பா ராமதுரை ' அனுப்பிய ஒன்றரை லட்ச ரூபாயில் புத்தம் புதிய அதிவேகமாகச் செல்லும் 'X' பைக் அவனது வீட்டு வாசலில் வந்திறங்கியது..

அதைக் கண்டதும் அளவிலா சந்தோஷம் அவனது உள்ளத்தில் கொப்புளித்தது..

அம்மாவை அழைத்துவந்து காண்பித்து அதில் உள்ள ஒவ்வொன்றையும் விளக்கி பெருமை பேசினான்..

இரண்டு நாட்களாக சோம்பியிருந்த மகனின் முகத்தில் படர்ந்திருக்கும் பரவசத்தைக் கண்டு தாய் ' லலிதா ' உள்ளம் குளிர்ந்தாள்..

உடனடியாக அப்போதே பைக்'கை பல பரிமாணங்களில் படமெடுத்து தனது ப்ரொபைலில் அப்டேட் செய்தான். அப்பாவுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பினான்.

சில மணித்துளிகளில் லைக்குகளும், வாழ்த்துகளும் வந்து கொட்டிக் கொண்டிருந்தன..

சிறிது நேரத்தில் ...

அம்மாவிடம் பக்கத்து தெருவில் இருக்கும் நண்பர்களிடத்தில் தமது பைக்கை காண்பித்து விட்டு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும்போது..

தாய் ' லலிதா ' ஏதோ கூற வருகையில்..

கொல்லைப் புறத்திலிருந்து அடைகாத்து குஞ்சு பொறித்திருந்த கோழி சத்தத்துடன் கூக்குரலிட்டது..

அவனை சிறிது நிற்குமாறு சைகை செய்துவிட்டு கொல்லைப்புறம் நோக்கி ஓடினாள் லலிதா..

ஆர்வ மிகுதியில் அம்மாவிடமிருந்து வந்த சமிக்ஞைக்கு கட்டுப்படாத ஆசை அவனை வெளியேற்றியது..

பைக்கை ஸ்டார்ட் செய்து பக்கத்து தெருவுக்கு ஓட்டினான்..

அங்கு ஏற்கனவே தெரு முக்கூட்டில் நின்று காத்திருந்த நண்பர்கள் அருணும், பிரகாஷும் இவன் வண்டியில் ஏறி ஊரை வலம்வர காத்திருந்தனர்..

அதே நேரம்!

தந்தை ' ராமதுரை' ஊர்வருவதற்கு கிளம்பி ஏர்போர்ட் வந்தடைந்திருந்தான்..

கொல்லைப்புறம் வந்து பார்த்த லலிதா ' தமது கோழி குஞ்சுகளை அரவணைத்தபடி அங்குமிங்கும் அரற்றிக் கொண்டிருந்த தாய் கோழியைக் கண்டு திகைத்தாள்..

தமது நண்பர்களை பைக்கில் ஏற்றிக் கொண்டு ஊர் எல்லைக்கு வந்த சின்னத்துரை வளைவில் எந்த திசைக்கு செல்வதென திகைத்திருக்க..

தங்களை கிராஸ் செய்து சென்று கொண்டிருந்த மகளிர் கல்லூரி பேருந்தை முந்திச் செல்லுமாறு தமக்கு பின்னால் இருந்த ' பிரகாஷ்' கூற..

தமது பைக்கின் முன் சக்கரத்தை ஓரடிக்கு தூக்கி சாகசித்து ஆக்சிலேட்டரை பலம் கொண்டு முறுக்கினான் சின்னத்துரை..

தம்மைவிட சிறிதே முன் சென்ற பேருந்தின் பக்கவாட்டில் சென்று அனாயாசமாக அதை முந்த முயல்கையில்...

எதிரே வந்தது ஒரு சரக்கு லாரி..

டமால்...

என பயங்கர சத்தத்தோடு..

அவனது பெற்றோர் பயந்த ஒன்று இதோ! நிகழ்ந்தே விட்டது..

அந்தரத்தில் பறக்கும் சின்னத்துரையின் ..இன்னும் சில மணித்துளிகளே! இயங்க இருக்கும் இதயத்திற்குள் ..

அம்மாவும், அப்பாவும்.. வந்து..வந்து மறைந்து சென்றனர்..

அதேவேளையில் அவனது வீட்டின் கொல்லைப்புறம் குஞ்சுகளுடன் தவித்த கோழியிடமிருந்து ஒரு குஞ்சைப் பறித்துக் கொண்டு அதன் கத்தலை கடந்து வானத்தில் வட்டமடித்த பருந்தினை கையைப் பிசைந்தவாறு பார்த்து பதறினாள் ' லலிதா '.

அதே நேரம்..

மேகத்தை கிழித்தவாறே! மிதந்து செல்லும் விமானத்தின் உள்ளே! கண்ணயர்ந்து உறங்கும் ' ராமதுரையின் கனவில் தனது மகன் சின்னத்துரை கோட்டு சூட்டுடன் கையில் பட்டத்தை ஏந்தி நிற்கும் காட்சி..

விமான பணிப்பெண்ணின் "எக்ஸ் கியூஸ் மீ சார்"...

என்ற அழைப்பை கேட்டு புகையாய் மறைந்து போனது...
 
Back
Top
Developed and maintained by – Akeshya