நவராத்திரி

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் மூல தெய்வங்களின் சக்தி முடிவுக்கு வருகின்றது, அடுத்த யுகம் படைக்கப்படும் போது புது பிரம்மா வருவார் என்பது புராண செய்தி.
அன்னை தொடக்கமும் முடிவும் இல்லாதவளாக இருக்கின்றாள். இந்த பிரபஞ்சம் அவள் முன் அவளால் படைக்கப்பட்டு அவள் முன்பே மறைந்து மீண்டும் தோன்றுகின்றது.

அதாவது, அன்னையும் படைப்பும் இரு கோடுகளாக தொடர்ந்து வருகின்றது. அன்னை நிலையானவள் படைப்புகள் மாறிக்கொண்டே இருக்கும்.

அந்த அன்னை, எப்போதெல்லாம் இந்த உலகமும் உலக மக்களும் துன்பத்துக்கு உள்ளாவார்களோ, எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குமோ அப்போதெல்லாம் அவதரிப்பாள்.

அப்படித்தான் அவள் பல வடிவெடுத்தாள் துர்க்கை, சாமுண்டி என எல்லா வகை வடிவங்களும் அவளே, ஆக்ரோஷமான நிலையில் துர்க்கையாக நிற்கும் அன்னை, அமைதி நிலையில் மஹாலெஷ்மியாக, சரஸ்வதியாக அமர்ந்திருப்பாள்.

இதனை சிந்திக்கும் நவராத்திரி பண்டிகையில் துர்கைக்கான மூன்றாம் நாள் இது.

உலகில் வாழ தைரியமும் தெளிவும் அவசியம். தர்ம நெறியில் வாழ வைராக்கியம் அவசியம். மன உறுதி இல்லாமல் எடுத்த செயலை முடிக்க முடியாது.

ஒவ்வொருவர் வாழ்வும் போராட்டம் மிகுந்தது. போராட்டம் என்றால் கொடியவரோடும் அதர்மக்காரரோடும் ஆயுதம் ஏந்தி போராடுவது அல்ல, வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போராட்டம் மிக்கதே.
 
அந்த போராட்டத்தில் மனவுறுதியும், வைராக்கியமும், தைரியமும் அவசியம். இந்த தைரியம்தான் தெளிவினை தரும், தெளிவுதான் வெற்றியினை தரும்.

இந்த தெளிவினை, தைரியத்தை தருபவள் காளி. பிரபஞ்சம் தொடங்கும் போது நீரின் மேல் மயக்கத்தில் இருந்த விஷ்ணுவுக்கே அவள்தான் தெளிவும், தைரியமும் கொடுத்து போராடச் சொன்னாள்.

அச்சமும், பயமும், கோழைத்தனமும் தெளிவற்ற மனதால் வருவது, தெளிந்த மனமே தைரியத்தையும் எதையும் சந்திக்கும் துணிச்சலையும் கொடுக்கும்.

அந்த துணிச்சலை, தெளிவை, அறிவை தருபவள் அன்னை காளி. அவளே துர்க்கை.

துர்க்கை வழிபாடு இல்லாமல் இந்துக்கள வாழ்வே இல்லை அவர்கள் புராணம், இதிகாசம் என எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது துர்க்கை வழிபாடு

ராமாயணத்தில் தனக்கு குழந்தைகள் இல்லை என வருந்தும் தசரதன், காஞ்சி காமாட்சியினை வழிபட்டு யாகம் செய்து புத்திரபாக்கியம் அடைந்ததாக புராணம் சொல்கின்றது

காமாட்சி துர்க்கையின் ஒரு அம்சம், ஆக ராமாயணத்தை அவளே தொடங்கி வைத்திருக்கின்றாள்

மகாபாரதத்தில் யசோதை தனக்கு தெய்வாம்சமாக ஒரு பெண் குழந்தை பிறக்க துர்க்கையினை வழிபடும் காட்சி உண்டு, அப்படியே அவளுக்கு முதலில் பெண்குழந்தையே பிறக்கின்றது, ஆனால் வசுதேவர் தேவகிக்கு பிறந்த கண்ணனை யசோதையிடம் விட்டுவிட்டு, யசோதை பெற்ற பெண்குழந்தையினை சிறைக்கு கொண்டு சென்றார்

அக்குழந்தையினை கம்சன் கொல்ல முயன்றபோது, தான் யார் என்பதை சொல்லி கம்சனை எச்சரித்துவிட்டு சென்றாள் துர்க்கை

அவளே கிருஷ்ணாவதாரத்தையும் தொடங்கி வைத்திருக்கின்றாள்

இதை இன்னும் பெரும் உதாரணமாக ருக்மணி விரதமிருந்து கண்ணனை அடைந்த கதை சொல்லபடுகின்றது அந்த‌ விதர்ப தேசத்து ராஜ வம்சத்திற்கு துர்கையம்மனே குலதெய்வம். அந்நாட்டு இளவரசி ருக்மணி தேவி தன் திருமணநாள் அன்று காலை தன் குலதெய்வமான தேவி துர்க்கை ஆலயம் சென்று வழிபட்டாள் என்பதை தெளிவாக சொல்கின்றது புராணம்

இன்னும் பல இடங்களில் இதனை தொன்று தொட்டு காணலாம், ஸ்ரீமத் பாகவதம் அதை தெளிவாக சொல்கின்றது
 
காத்யாயனி என அழைக்கபடுபவள் அவளே, அந்த வழிபாடு அக்காலமே இருந்திருக்கின்றது

கோகுலத்தில் மணமாகாத கோபிகைகள் பகவான் கிருஷ்ணனை கணவனாக அடைய மார்கழி மாதம் காத்யாயனி / துர்கை அம்மனை குறித்து விரதம் இருந்தனர். தினமும் அதிகாலை துயிலெழுந்து யமுனையில் நீராடி, அங்கு கரையில் மண்ணினால் காத்யாயினி பிம்பம் செய்து, தூப தீப ஆராதனை செய்து, வேண்டினர் என்கின்றது

பாகவதத்தின் 10ம் பாகம், 22 அத்யாயத்தில் வரும் வரிகள் அதை சொல்கின்றன

"காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீ⁴ஶ்வரி .
நந்தகோபஸுதம்ʼ தேவி பதிம் மே குரு தே நம"

இதுதான் ஆண்டாள் காலத்திலும் தொடர்ந்தது, மார்கழி மாதம் ஆண்டாள் நோற்ற நோன்பு கார்த்தியாயினி எனும் துர்க்கைக்கானது

ஆண்டாள் எப்படி அழியா இடம் பெற்றாள் என்றாள் இந்த துர்க்கையினை வழிபட்டுத்தான் பெரும் இடம் பெற்றாள்

"கார்த்தியாயினி வித்மஹே கன்னியாகுமரி தீமஹி
தந்நோ துர்க்கையே பிரசோத‌யாத்"

எனும் மந்திரம் அங்கிருந்துதான் வந்தது

மகாபாரதத்தில் அஞ்ஞான வாசத்தில் அதாவது ஒருவருடம் மறைந்திருக்க வேண்டிய கால கட்டத்தில் துர்க்கையினை வேண்டித்தான் பெரும் சவாலை எதிர்கொண்டார்கள் , அப்போது அவர்கள் ஆயுதங்களை மரபொந்தில் வைத்துவிட்டு இனி தங்களை காக்கவேண்டியது துர்க்கையின் பொறுப்பு என சரணடைந்தார்கள்

அதை மகாபாரதம் தெளிவாக சொல்கின்றது

உச்சமாக போர் தொடங்கும் போது துர்க்கையினை துதிக்க சொல்கின்றான் கண்ணன், அதாவது தர்மத்துக்கான போர் என்பதால் அவளை அழைக்க சொல்கின்றான்

தர்மத்தினை மீட்க நடக்கும் போரினை அவளே நடத்துவாள், தர்மம் எங்கெல்லாம் போராடுகின்றதோ அங்கெல்லாம் அவள் வந்து சண்டையிட்டு தர்மத்தை மீட்பாள் என்பது இந்து தர்ம போதனை

அதனாலே அவளைநோக்கி அர்ஜூனனை வேண்ட சொன்னான் கண்ணன், அவனும் வேண்டி போரில் வென்றான்

இந்த தத்துவம்தான், அவள் தர்மத்துக்கான போரில் தானே வருவாள் என்பதற்கு அடையாளமாக அவளின் வாகனமாக சிம்மத்தை சொன்னார்கள், புலியினையும் சொன்னார்கள்

ஆம், அவள் எப்படிப்பட்டவள் என்பதை சொல்லவே சிம்மவாஹினி என்றும், புலிமேல் வருபவள் என்றும் குறிப்பால் சொன்னார்கள் இந்துக்கள்.

சிம்மம் என்பது பலமானது, எதற்கும் அஞ்சாதது, ஒரு உறுமலிலே காட்டை அதிரவைப்பது, காட்டுக்கே காவலானது.

ஆனால் அறத்துக்குக் கட்டுபட்டது, தன் தேவை தவிர மற்ற நேரம் எதையும் தொடுவதில்லை, அது தனக்கென சேர்த்து வைப்பதுமில்லை, பேராசை கொள்வதுமில்லை.

அது கர்ப்பிணி மிருகங்களை வேட்டையாடாது. குட்டிகளைத் தொடாது, பசியில்லா நேரம் எதையும் ஏறெடுத்தும் பார்க்காது.

தன் பலத்தை தேவையற்ற இடங்களில் காட்டாது, வம்புக்கு செல்லாது ஆனால் தொட்டுவிட்டால் விடாது.
புலி என்பதும் இந்த சாயலே, அதற்கு இன்னொரு பெரும் குணம் உண்டு. அது குட்டிகள் மேலான அன்பு, எக்காரணம் கொண்டும் மூன்று வருட காலத்துக்கு குட்டிகளை பிரியாது. அவை பருவமடையும் வரை தன் எல்லையில், தன் காவலிலே வைத்துக்கொள்ளும்.

இப்படி சில தர்மங்களுக்கு உட்பட்ட விலங்குகளைத்தான் அவள் வாகனம் என வைத்தார்கள். அன்னை அப்படியான குணங்களைக் கொண்டவள், அந்த குணத்தினை அதாவது தர்மத்துக்கு உட்பட்ட வகையில் போராடும் தைரியம் தருவாள் என ஞானக்குறிப்பால் போதித்தார்கள்.

காஞ்சி மகாபெரியவர் ஒரு அவதாரம். அந்த அவதாரம் கலியுகத்தில் தவறாமல் வழிபட வேண்டிய, அதே நேரம் மிக எளிமையான வழிபாடுகளில் வணங்கி அருள்பெறக்கூடிய இரு தெய்வங்களைக் காட்டினார்.

ஒன்று கணேசர், இன்னொன்று துர்க்கா தேவி.

அந்த துர்க்கைக்கு அவர் ஒரு பாடலும் எழுதிக் கொடுத்தார். இந்த துர்க்கைக்கான மூன்றாம் நாளில் அப்பாடலை பாடுவதும், பாடி வழிபடுவதும் குறைந்தபட்சம் வாசித்து வழிபடுவதும் மிக மிக சிறப்பானது.

ஶ்ரீ துர்கா பஞ்சரத்னம்

தே த்யான யோகானுகதா அபஶ்யன்
த்வாமேவ தேவீம் ஸ்வகுணைர் நிகூடாம்
த்வமேவ சக்தி꞉ பரமேஶ்வரஸ்ய
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதாத்ரி

தேவாத்மசக்தி꞉ ச்ருதிவாக்யகீதா
மஹர்ஷி லோகஸ்ய புர꞉ ப்ரஸன்னா
குஹா பரம் வ்யோம ஸத꞉ ப்ரதிஷ்டா
மாம் பாஹி ஸர்வேஸ்வரி மோக்ஷதாத்ரி

பராஸ்ய சக்தி꞉ விவிதைவ ச்ரூயஸே
ச்வேதாஸ்வ வாக்யோதித தேவி துர்கே
ஸ்வாபாவிகீ ஜ்ஞானபல க்ரியா தே
மாம் பாஹி ஸர்வேஸ்வரி மோக்ஷதாத்ரி |

தேவாத்ம சப்தேன சிவாத்ம பூதா
யத்கூர்ம வாயவ்ய வசோ விவ்ருத்யா
த்வம் பாசவிச்சேதகரீ ப்ரஸித்தா
மாம் பாஹி ஸர்வேஸ்வரி மோக்ஷதாத்ரி

த்வம் ப்ரஹ்மபுச்சா விவிதா மயூரீ
ப்ரஹ்ம ப்ரதிஷ்டாஸ் யுபதிஷ்ட கீதா
ஜ்ஞான ஸ்வரூபாத்ம தயா கிலானாம்
மாம் பாஹி ஸர்வேஸ்வரி மோக்ஷதாத்ரி |

இதன் தமிழ் வடிவம்.

"குருயோகத் தியான வழி கண்டா ருட் கண்டார்
குணமேவு அருவுரு நீ கொண்டா ருட் கொண்டார்
பெருவான சக்தி பர மேஸ் வரிநீ ஏற்பாய்
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்|

இறை யான்ம மறையா யுட் சாரம் ஆனாய்!
இயலுமுனி வுலகின் அருட் தீரம் ஆனாய்!
நிறை யான்ம நிலையா யுட் போதம் ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய் |

வேதா கமம் புகழும் விரி சக்தி மாயே!
ஸ்வேதாஷ் வரம் மகிழும் ஶ்ரீ துர்க்கே மாதே!
வேராகி விதையா யுலகை வேதித்து நூற் றாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்

பரசத்து அநா கத்துப் பிரவாக மென ஆனாய்!
பரிவாயு கூர்ம வயப் பிராண மய மானாய்!
பரமித்து வமாயமழிப் பிரகாச மென ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்!

பிரம்மநிலை அருள வருந் தேவி யுமை மயிலே!
பிரம்மநிலைப் பொருள முதம் கீதை புகல் ஒயிலே!
பிரம்மமதித் திரு வுருவே பேருலகாய்ப் பூப் பாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! "

இன்று துர்க்கைக்கான பூஜையின் முக்கிய நாள் என்பதால் இதனை சொல்லி வழிபடுதல் நலம்.
இந்தப் பாடல்களை பாடலாம், இன்னும் பாரதியின் மிக பிரசித்தியான வரிகளை பாடித் தொழலாம். பாரதி எனும் சித்தன் நாட்டுக்கும், இந்து மதத்துக்கும் பெரும் பாடல்களைத் தந்தான்.

காளிக்கு அவன் சொன்ன பாடல்கள் முழு அர்த்தமிக்கவை, சக்திமிக்கவை. அதனையும் பாடலாம்.

"யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே

கர்ம யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.

என்த னுள்ள வெளியில்-ஞானத்-திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம் வேண்டா.

வான கத்தி னொளியைக்-கண்டே-மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும் வாழ்வேன்;
ஞான மொத்த தம்மா!-உவமை-நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின்-அழகை-வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை-எவரே-தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால்-ஆங்கே-நெஞ்சி ளக்க மெய்தும்.

காளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும், பாரில்-வேந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!வாழ்க நின்தன் அருளே"

எனப் பாடி வணங்கலாம்.

அன்னை மகா காளி எல்லோருக்கும் தெளிவும், தைரியமும், அச்சமற்ற மனமும், தூய சிந்தனையும் அருளி எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கொடுக்க பிரார்த்திப்போம்.

அன்னையின் அருளில் ஒவ்வொரு இந்துவும் தெளிவும் தைரியமும் அடையும் நிலையில், ஒரு வைராக்கியமிக்க மனம் பெறும் நிலையில் வீடும் நாடும் பலமாகும் வளமாகும்.
 
நவ துர்கா 04 : கூஷ்மாண்டா.

நவ துர்கா எனும் ஒன்பது சக்தி நிலைகளில் கூஷ்மாண்டா என்பது நான்காம் படிநிலை. "கூ" என்றால் சிறிய எனப் பொருள், "உஷ்மா" என்றால் வெப்பம், "அண்டா" என்றால் பெரிய அகண்ட வட்டமான எனப் (அண்டா பாத்திரம் என்பது) பொருள்.

இநத அண்ட சராசரத்தை படைத்தவள் அன்னை என்பது பொருள். அவளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் வெப்பமாக ஒளியாக இருக்கின்றாள் என்பது அந்தப் பெயரின் பொருள்.

அதாவது வாலை, குமரி, மணமான பெண் என்பதை தாண்டி இப்போது கர்ப்பம்தாங்கும் பெண் எனும் நிலையினைச் சொல்லி தேவி தத்துவத்தைவிளக்கும் நான்காம் நிலை கூஷ்மண்டா தேவி.

"கூஷ்மா" என்றால் புன்னகை என்றொரு பொருளும் உண்டு. அவ்வகையில் தன் புன்னகையால் இந்த உலகை சிருஷ்டித்தவள் என்பதும் அவளுக்குப் பொருந்தும்.

அதாவது, அவளே ஆதிபராசக்தி, அவளில் இருந்தே எல்லாமும் தோன்றுகின்றன, அவளே மூலம். அன்னையில் இருந்தே எல்லாமும் வருகின்றது, இந்த அண்டவெளி எல்லாமே அவளில் இருந்து அவளால் உருவாக்கப்பட்டது.

அகிலாண்டேஸ்வரி என்றும் ஜெகன்மாதா என்றும் அவள் ஏன் அழைக்கப்படுகின்றாள் என்றால் இந்தப் பெரும் தனி தன்மைக்காகததான்.

அவள் தனியே இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைக்கும் அளவு சக்தி மிக்கவள், அந்த மகா சக்தியினைத்தான் நான்காம் நாள் தியானிக்கின்றோம்.

அன்னை எல்லா உலகங்களுக்கு மட்டுமல்ல எல்லா அண்டங்களுக்கும் தாய், எல்லா அண்டங்களும் அவற்றின் உயிர்களும் அன்னையிடம் இருந்தே தோன்றியதால் அவள் லோகநாயகி மட்டுமல்ல அகிலாண்டேஸ்வரி .

லலிதா சஹஸ்ரநாமம் அன்னையினை "உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலீ" என்கின்றது.
அதாவது கண் சிமிட்டுவதால் பேரண்டங்களைத் தோன்றி மறையச் செய்பவள் என அவள் ஆற்றலைச் சொல்கின்றது.
உந்மேஷம் என்றால் கண்களைத் திறத்தல், நிமிஷம் என்றால் கண்களை மூடுதல்.

அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது பொருள்.

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் செய்பவள் அன்னை.

மொத்தம் 1008 அண்டங்கள் உண்டு என்பது புராண செய்தி, அந்த ஆயிரத்து எட்டு அண்டங்களும் அவள் கண் மூடித் திறப்பதால் தோன்றி மறைகின்றன. அதனால் அவள் அகிலத்தின் தாய், அவளில் இருந்தே எல்லாம் தோன்றி மறைவதால் அவளே அகில அண்ட ஈஸ்வரி, அகிலாண்டேஸ்வரி என வணங்கபடுகின்றாள்.

1000019477.webp
 
அன்னை "சஹஸ்ர சீர்ஷ வதனா", ""சஹஸ்ராக்ஷீ" "சஹஸ்ர பாத்" என்கின்றது, அதாவது அன்னை ஆயிரக்கணக்கான (எண்ணற்ற) தலைகளும்/ முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், பாதங்களும் கொண்டு எங்கும் வியாபித்திருக்கின்றாள்.

அவள் “லீலா-க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா” அதாவது பிரம்மாண்ட மண்டலங்களை விளையாட்டாகச் சிருஷ்டிப்பவள்.

அன்னை பஞ்சபூதம் மட்டுமல்ல, சூரியன் சந்திரன் உயிர் என எட்டு வகை சக்தியாய் நிற்பவள், அதனால் அவள் "அஷ்டமூர்த்தி" என்றானாள்.

இந்த அன்னை வானத்தில் சுடராக நிற்கின்றாள். அதனால் அவளுக்கு "பானுமண்டல மத்தியஸ்தா" "சந்திர மண்டல மத்தியஸ்தா" என அவளுக்கு நாமம் லலிதாசஹஸ்ர நாமத்தில் உண்டு.

புவனத்தைப் படைத்து ஆள்வதால் அவள் புவனேஸ்வரி.

அதனை அபிராமி பட்டர் பாடுவார்.

"பூத்தவளே புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே"

"பூத்தவளே புவனம் பதினான் கையும்" அதாவது பூத்தல் என்றால் மலர்தல். ஒரு மலர் ஆகாயம் நோக்கி விரிவதைப் போல இந்த உலகினை அபிராமி படைத்தாள்.
புவி வேறு, புவனம் வேறா என்றால் வேறுதான். ஏழு புவிகளும் 12 உலகங்களும் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன‌.

புவி ஏழு என்று கூறக்கூடிய ஸப்ததீபங்கள் ஜம்பு, பிலக்ஷ, குந, கிரளெஞ்ச, சாக, சான்மல மற்றும் புஷ்கர எனும் ஏழு தீவுகளாகும்.

(இன்றைய பூமியின் கண்டங்கள் 7 என்பதும் குறிப்பிடத்தக்கது.)

புவனம் பதினான்கு யாதெனில் கீழ் ஏழு லோகங்களாகிய அதலம், விதலம், சுதலம், தாராதலம், மஹாதலம், ரசாதலம் மற்றும் பாதாளம் ஆகியவையும், மேல் ஏழு லோகங்களாகிய பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனலோகம், தபோலோகம், மஹர்லோகம் மற்றும் சத்திய லோகம் ஆகியன ஆகும்.

திருமூலரும் திருமந்திரத்தில் "தானே தலைவியென நின்ற தற்பரை" என்ற பாடலில் அன்னையே பதினான்கு உலகங்களையும் படைத்தவள் என்பார்.

புவியினையும் புவனத்தையும் படைப்பதால் அவள் "பிரம்மஹ்ரூபா” , “ஸ்ருஷ்டி கர்த்ரி" என்கின்றது லலிதா சகஸ்ரநாமம்.

புவியும் புவனமும் மட்டுமன்றி அதன் உயிர்களையும் அவளே ஜனிக்க வைப்பதால் "ஜனனி" என்றும் அவள் போற்றப்படுகின்றாள்.

லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும், அவள் “மூலப்ரக்ருதி” பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள்; தோற்ற-நிலையின் சாரம்.

அவள் “வியாபினீ”, அனைத்திலும் வியாபித்திருப்பவள் எங்கும் நிறைந்தவள்.

அவள் “விவிதாகாரா”, பல்வேறு தோற்ற-நிலைகள், வடிவங்கள் தாங்கியிருப்பவள்.

அவள் “வேத ஜனனி” வேதங்களைப் படைத்தவள்.

அவள் "சிருஷ்டி கர்த்ரீ" அதாவது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்.

அவள் "ஆபிரம்ம கீட ஜனனீ" பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா என்கின்றது.

இந்த பெயர்கள்தான், இப்படி லலிதா சகஸ்ரநாமமும், அகிலாண்டேஸ்வரி, ஜெகன்மாதா எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அன்னைதான் கூஷ்மாண்டா என்றும் அழைக்கப்படுகின்றாள்.

யோக தத்துவத்தில் இந்த அன்னை "அனாகதம்" சக்கரத்தினைத் துலக்குவாள் .

அனாகதம் என்றால் உருவமற்ற அல்லது உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும், அதாவது காற்று தத்துவம் இந்த சக்கரத்தின் அம்சமாகும், இதன் அமைவிடம் நுரையீரல் பக்கம் அமைந்திருப்பது அதனைச் சரியாகச் சொல்கின்றது.

மூலாதாரம் நில தத்துவம், அடுத்த இரு சக்கரங்கள் நீர் தத்துவம் எனும் வகையில் நான்காம் சக்கரமான அனாகதம் காற்று தத்துவம்

இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கினால் பிரபஞ்சத்தின் அதிர்வுகளை அலைகளைச் சரியாக ஈர்க்கலாம், வேதங்கள் ஒலிவடிவானவை, உலகம் ஒரு சப்தத்தில் இயங்குகின்றது என்பதால் பல உலக இயக்கங்களைப் பிரபஞ்ச இரகசியங்களை இந்தச் சக்கரத்தால் உணரமுடியும்.

இந்தச் சக்கரம் இருதயம் மற்றும் நுரையீரலுக்கு அருகில் அமைந்திருக்கும் சக்தி மையம், சுழுமுனை நாடி இங்கிருந்துதான் உருவாகும்.

இந்தச் சக்கரம் சரியாக இல்லாவிட்டால் உடல் ரீதியாக இருதய கோளாறு, நுரையீரல் கோளாறு போன்றவை ஏற்படும். இதனால் மேல் முதுகு வலிகள் உள்ளிட்ட பல சிக்கல்களைப் பிணியினை ஏற்படுத்தும், இன்னும் இரத்த ஓட்டத்தில் சிக்கல் வரும், அப்படி வரும்போது சிந்தை குழப்பம், சோர்வு எனப் பலவகையான முடக்கங்களைக் கொடுக்கும்.

கண்களும் இந்த சக்கரமும் சூட்சுமத்தால் தொடர்புபட்டவை. இது சிக்கலானால் கண்பார்வையும் மங்கும்.
இப்படியான சக்கரம் சரியாகச் செயல்படாவிட்டால் பிறர்நலம், அன்பு , கருணை, இரக்கம் இன்னும் பல குணங்கள் இராது.

மாறாக வஞ்சகம், கோபம், ஆத்திரம்,பேராசை, சுயநலம், பழிவாங்கும், குணம், கவலை, ஆத்திரம் குழப்பம் ஆகியன எழுந்து ஆட்சி செய்யும்.

அதாவது கவலையும், பொறாமையும், வஞ்சகமும் அவர்களை அந்த நிலையில் ஆழ்த்தும்.

இந்தச் சக்கரம் துலங்கினால் அது எல்லையற்ற வகையில் அதன் சக்தியினை வெளிப்படுத்தும், அது பிரபஞ்சம் போல் எல்லையே இல்லாத அளவு நல்ல சக்தியினை வீசும்.

ஆம். இந்தச் சக்கரம் துலங்கினால் அன்பு, கருணை, தெய்வீகம் என எல்லாமும் எல்லை கடந்து பரவும், நிபந்தனை அற்ற அன்பும் கருணையும் யாரையும் வசப்படுத்தும் பெரும் கருணையும் சாத்வீகமும் தெய்வீகமும் அங்கே குடியேறும்.

எல்லையற்ற மகிழ்ச்சி, நித்திய சந்தோஷம் அவர்களிடத்தில் பெருகிக் கொண்டே இருக்கும், முடிவில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

அப்படியான மகா சக்தியினை இந்தச் சக்கரம் வழங்கும்.

பெரும் கவலை பெரும் சோகம், தீரா வேதனை என்றால் இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கவில்லை எனப் பொருள். எப்போதும் மகிழ்ச்சி, எல்லையற்ற அன்பு, முழு தெய்வீக திருநிலை என்றால் இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கி ஒளிவிசுகின்றது எனப் பொருள்.

பொதுவாக மனமகிழ்ச்சி, மனக்கவலை, மனவேதனை, மன நிறைவு என மனம் பற்றி சொல்வதெல்லாம் இந்தச் சக்கரத்தின் தன்மையன்றி வேறல்ல.

இந்தச் சக்கரத்தின் தன்மைதான் பிரபஞ்சத்திலும் உண்டு, எல்லாமே அதன் அதன் கடமையினை உற்சாகமாகக் கொஞ்சமும் தவறாமல் செய்கின்றன‌.

இந்தப் பிரபஞ்சம் ஓசைபடாத ஒரு ஆனந்தத்தில் இயங்குகின்றது, அந்த ஆனந்தம் பூலோகப் பிறப்பில் ஒவ்வொரு உயிரிலும் தேடலாக உண்டு.

எல்லா மானுடர்க்கும் தேவை ஒரு ஆனந்தமே, ஒரு மகிழ்ச்சியான நிறைவான ஆனந்தமே.

அதனைப் பெற்றோர் ஞானியர், அவர்கள் நித்திய ஆனந்தத்தில் இருப்பதை அவதானிக்கலாம். அது அனாகத சக்கரம் துலங்கியதால் ஏற்பட்ட ஆனந்தம்.

அந்த ஆனந்ததை தருபவள் அந்த "ஆனந்தி"

ஸ்ரீ சக்ரத்தில் இவள் நான்காம் ஆவர‌ணத்தில் இருப்பவள், அது பதினான்கு (14) சிறு முக்கோணங்களால் சூழப்பட்ட தளம், இந்தத் தளத்தில் உள்ள சக்கரேஸ்வரியின் பெயர் திரிபுரவாஸினி.
 
பதினான்கு நாடி தேவதைகளான வாசனா, ஹஸ்தி, விஸ்வோதாரி, பயஸ்வினி, பசோதி, காந்தாரி, ப்யூஷா, சங்கினி, சரஸ்வதி (மூன்று பிரதான தேவிகளின் ஒருவரான தேவி அல்ல) , இடை, பிங்கலை மற்றும் ஸுஷும்னை என்பவர்கள் இந்த ஆவரணத்தில் உண்டு.

இவர்களைத் தவிர ரஞ்சனி, வசங்கரி, சம்மோஹினி, வித்ராவினி, தர்ஷினி, வாஃஹ்லாதினி, ஸ்தம்பினி, ஜம்பிரீணி, மந்ரமயி, சம்பத்திபூரணி , ஷயங்கரி, மாதினி , சாதினி மற்றும் ஷம்ஷோபினி எனும் வேறு பதினான்கு கோண தேவதைகளும் உண்டு.

இந்த ஆவரணத்தை ‘ச்ர்வ சௌபாக்ய தாயக சக்ரம்’ என்பார்கள். இந்த ஆவரண யோகினியின் பெயர் ச‌ம்ப்ரதாய யோகினீ என்பதாகும். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

ஆம். ஸ்ரீ சக்ரத்திலும் இவள் எல்லாப் படைப்பின் தாயாக நிற்கின்றாள், எல்லாச் சௌபாக்கியமும் அருள்பவளாக அருள் புரிகின்றாள்.

இவள் எட்டுக்கரம் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து இயக்கும் அஷ்டபுஜ சக்தி என்றும் அழைக்கப்படுவாள்.

இவரின் வாகனம் புலி ஆகும். இந்தப் புலியின் தாத்பரியம் அவள் தர்மத்தின் படி மட்டும் வருவாள் என்பது.

இவரின் எட்டுக்கரங்களில் முறையே பாசம், அங்குசம், வில், சூலம் இருக்கும். இவரின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு. இக்கலசம் அஷ்ட சித்தியையும், நவ நிதியையும் பக்தர்களுக்குத் தர வல்லது.

(கூஷ்மாண்டம் எனும் அந்தப் பெரிய அண்ட உருளையின் சிறிய வடிவம் அந்தக் கைகளில் கலசமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்)

இந்தக் கூஷ்மாண்டா தமிழகத்தில் அகிலாண்டேஸ்வரி, ஜனனி என அறியப்படுபவள். இவள் எல்லா உயிர்களின் தாயாக நிற்கின்றாள்.

இன்று இந்த அன்னையினை நினைத்து வழிபடுதல் அவசியம், இந்த அன்னைக்கான தியான மந்திரம் மந்திரம் இதோ.

"வந்தே வாஞ்சித் காமர்தேசந்த்ரார்ககிருதசேகரராம்ண்
சிங்கரூடா அஷ்டபூஜா குஷ்மாண்டயசஸ்வநீம்॥
சூரசம்பூர்ணகலசம் ருதிராப்லுதமேவ சண்
ததானா ஹஸ்தபத்மாப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து நான் வந்தே வாஞ்சித் காமர்தே चन्द्रागकृत சேகரம்

சிங்கரூடா அஷ்டபூஜா கூஷ்மாண்டா யசஸ்வநீம்॥ த்ரி துர்கதிநாசினி त्वंहि தாரித்ராதி வினாசினிம்ண்
ஜெயந்தா தனதாம் கூஷ்மாண்டே ப்ரணமாம்யஹம்॥ த்ரி ஜகன்மாதா ஜகத்கத்ரி ஜகதாதார் ரூபாணிம்ண்
சராசரேஸ்வரி கூஷ்மாண்டே ப்ரணமாம்யஹம்॥"

அவளுக்கான துதி ஒன்று உண்டு அதை கொண்டும் பிரார்த்திக்கலாம்.
 
கூஷ்மாண்டா தத்துவம் இன்றைய விஞ்ஞானத்தோடு மிக அழகாக பொருந்தும், அதாவது இந்த பிரபஞ்சம் பெரு வெடிப்பில் தொடங்கியிருக்கலாம் என்பதும், எல்லாமே ஒரே சக்தியில் இருந்து உருவானது என்பதும், அதுவும் ஒரு வெப்ப சக்தியால் இயங்குகின்றது, ஒருவித சக்தி லயத்தால் இயங்குகின்றது என்பதையும் விஞ்ஞானம் சொல்கின்றது.

மானுட உடலிலும் இது உண்டு, வெப்பம் இருக்கும் வரைதான் உடல், அப்படி ஒளிதான் வெப்பம்தான் இந்த உலகை பிரபஞ்சத்தை இயக்குகின்றது என்பதைச் சொல்கின்றது.

அன்னை நவக்கிரகங்களில் ஒளியாய் இருக்கின்றாள் என்கின்றது புராணம், அவ்வகையில் அன்னை சூரியனின் மூல ஒளி என்பதும் சரியாகின்றது.

இந்த அன்னை தாய்மையின் வடிவம், இந்தப் பிரபஞ்சத்தின் அதன் எல்லா உயிர்களின் தாயாக‌ இருப்பவள் அன்னை என்பதை இந்த கூஷ்மாண்டா வடிவம் சொல்கின்றது.

அப்படியே அவள் ஒளிவடிவமானவள், ஒளியால் பிரபஞ்சத்தைக் காப்பவள். அந்த ஒளியாக மானுடர்க்கு ஆத்ம தெளிவு ஆத்ம மகிழ்ச்சி தருபவள் என்பதையும் சொல்கின்றது.

குலப்பெண்கள் இவளிடம் வேண்டி பெறவேண்டிய வரங்கள் உண்டு. நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியின் அருள் ஒவ்வொரு குலப்பெண்களுக்கும் கிடைத்தல் வேண்டும்.

ஆம். ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை உணர்வு அவசியம், பெண்மையின் தனிப்பெரும் ஒரே அடையாளம் தாய்மை.

தாய்மை என்றால் அன்பு, நிபந்தனையில்லாத கட்டற்ற அன்பு, அதுவும் ஆனந்தம் கொடுக்கும் அன்பு.

ஒரு குழந்தை தன் தாயிடம் மட்டும்தான் முழு ஆனந்தம் பெறமுடியும், அப்படி எல்லாருக்கும் ஆனந்தமான அன்பைக் கொடுக்க வேண்டியது குலப் பெண்களின் கடமை.

நல்ல குலப்பெண் சக மனிதர்களைத் தாய்போல் நேசிக்கவேண்டும். தாய்மை உணர்வில் அவள் எல்லா உயிர்க்கும் தாயாக நிற்றல் வேண்டும், அந்த வரத்தை அன்னை அருள்வாள்.

ஒரு இல்லத்தில் தாய்மை உணர்வு கொண்ட பெண் அவசியம், அவள் தன்னை மறந்து தன் குடும்பத்தாரை இன்னும் தன்னைச் சார்ந்தவரை அடுத்திருப்பவரையெல்லாம் தன்னைச் சுற்றிய உயிர்களை எல்லாம் தாயாக நின்று காத்தல் வேண்டும்.

அப்படி ஒரு பெண் இருக்கும் வீடு பெருவாழ்வு வாழும், தெய்வம் அங்கே இறங்கிவந்து அருளும்.

அந்த வரத்தை ஒவ்வொரு குலப்பெண்களும் கேட்டுப் பெற வேண்டிய நாள் இது.
 
இந்த நாள் அந்த அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி என வணங்கபடுபவளின் நாள், எல்லாக் குலப்பெண்களுக்கும் அவள் தாய்மை, தாய் எனும் பெரும் அன்பும் கருணையுமிக்க மனதை வழங்கி வீடும் நாடும் செழிக்க வரம் அருளட்டும்.

ஞானியரின் அன்பும் கருணையுமாக இருக்கும் அந்த அன்னை எல்லோருக்கும் தாய்மையின் மகத்துவத்தை தரட்டும், தாய் நாடு அவளால் சிறக்கட்டும்.

அந்தக் கூஷ்மாண்டா தேவியினை இந்த ஸ்லோகத்தால் போற்றி வணங்குவோம்.

“சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே”

“தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும், தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து , அதைப் பரிபாலனம் செய்பவராகிய தேவி கூஷ்மாண்டா என் மீது கருணைப் பொழிவாளாக”
 
நவதுர்கா 05 : ஸ்கந்த மாதா

நவராத்திரியின் ஐந்தாம் நாள் ஸ்கந்த மாதாவிற்கானது. 'ஸ்கந்த' என்றால் துடிப்புடன் வெளிப்படுவது எனப் பொருள், இந்த அன்னை தாய்மையின் பலனை வெளிபடுத்தும் நிலையினைச் சொல்பவள்.

வாலையாகி குமரியாகி மணக்கோலம் அடைந்து கருசுமந்து அடுத்து அதனைப் புறம்தருவித்து வளர்க்கும் ஐந்தாம் படிநிலை இது.

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு எனும்போது பிண்டத்திலும் அதன் வாழ்விலும் உள்ளதெல்லாம் அண்டத்திலும் உண்டு, அவ்வகையில் பிரபஞ்சத்தை சிவசக்தி தத்துவம் அல்லது நிலையான சக்தி இயக்கு சக்தி படைத்து காத்து வரும் தத்துவம் இது.

இங்கே ஸ்கந்தன் அன்னையில் இருந்து உதித்த நிலை, அதாவது முருகப்பெருமானை அன்னை பெற்றெடுத்து உலகை காத்த நிலையினைச் சொல்லும் நிலை.

இது கொஞ்சம் ஆழமாக நோக்க வேண்டிய படிநிலை.

ஸ்கந்தன் எனும் முருகனின் பிறப்பினைக் கந்தபுராணம் உள்ளிட்ட புராணங்கள் தெளிவாகச் சொல்கின்றன, காளிதாசன் அதனைக் "குமார சம்பவம்" எனக் காவியமாக்கினான்.

அதன்படி முருகப்பெருமானுக்குரிய ஆறு முகங்களில் ஒருமுகம் அன்னையின் முகம், முருகப்பெருமான் முழுக்க சிவனில் இருந்து உருவானவர் அல்ல, அவரில் அன்னையின் பங்கும் உண்டு, அவரைக் கார்த்திகை பெண்களாக வந்து வளர்த்தவள் அன்னையே.

அந்த ஆறுகுழந்தைகளைத் தன் சக்தியால் ஒரே குழந்தையாக்கி ஞானமும் அறிவும் ஊட்டி வளர்த்ததும் அன்னையே.

அன்னை கொடுத்த அந்த ஞானத்தில்தான் பிரம்மனுக்கே படைப்பின் தத்துவமும், சிவனுக்கே போதனையும் முருகப்பெருமான் செய்தார்.

அன்னை கொடுத்த ஞானவேல் கொண்டே, அன்னை கொடுத்த அந்த சக்திவேல் கொண்டே சூரபத்மன் எனும் பெரும் அசுரக் கூட்டத்தை முருகப் பெருமானால் சங்காரம் செய்யமுடிந்தது.

ஆம். அன்னை தன் சக்தியில் ஸ்கந்தனை உருவாக்கி அவனைத் தன் ஞானத்திலும் அறிவிலும் வளர்த்து தன் சக்தியினை அவனுக்கு அளித்து இந்த உலகில் தர்மம் நிலைபெற வழிசெய்தார்.

அபிராமி பட்டரின் 65ஆம் பாடல் இதனைச் சொல்லும்.

"ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே."

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும்

"ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே"

இந்தப் பாடலைப் புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலைக் காண வேண்டும், அப்பொழுது இப்பாடல் எளிதாகப் புரியும்.

கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு அது.

1000019610.webp
 
அந்த தட்சன் யாகம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் இமயவன் மகளாக பிறக்கின்றாள் அன்னை சக்தி, அவளுக்குப் பார்வதி எனப் பெயர்.

இங்கே இன்னொரு காட்சி நடந்து கொண்டிருந்தது, சிவன் மகனால் அன்றி தனக்கு மரணமில்லை என வரம் வாங்கிய சூரபத்மன் பெரும் இன்னலை விளைவித்துக் கொண்டிருந்தான், சிவனோ ஆழ்ந்த தவத்தில் இருந்தார், தவத்தில் இருக்கும் சிவன் எங்கிருந்து இல்லறம் நடத்தி குழந்தை பெறுவது?

இதனால் தேவர்களும் விஷ்ணுவும் மன்மதனை சிவனின் தவம் கலைக்க ஏவினார்கள், மன்மதனும் தன் மனைவி ரதியோடு சென்று தன் அஸ்திரங்களை ஏவினான்.

தன் தவம் லேசாக அசைவதை உணர்ந்த சிவன் கோபத்தில் கண்களைத் திறந்தபொழுது மன்மதன் சாம்பலானான், அவன் இல்லா உலகில் உயிர்கள் பெருகாது.

இதனால் உலகில் புதிய உயிர்கள் பிறக்காமல் பெரும் குழப்பம் ஏற்பட தேவர்கள் பார்வதியிடம் சரணடைந்தனர். பின், சிவன் பார்வதி திருமணத்தில் ரதியின் வேண்டுதலுக்கு இணங்க மன்மதனை உயிர்பித்த சிவன் அவன் ரதி கண்ணைத் தவிர யார் கண்ணுக்கும் தெரியமாட்டான் என நிபந்தனை விதித்தார்.

அதன் பின் முருகப்பெருமான் உருவாகி சூரபத்மன் வதம் நடந்தது எல்லோரும் அறிந்தது.

இந்தக் "காம தகனம்" அதாவது மன்மதனை சிவன் எரித்த விஷயத்தில் இருந்து பாடலைத் தொடங்குகின்றார் பட்டர்.

பாடலின் சுருக்கமான பொருள் இதுதான், "அண்டமும் வானமும் பூமியும் காணும் வண்ணம் கரும்பு வில் ஏந்திய மன்மதனை எரித்த‌ அந்த சிவபெருமானுக்கும் கூட அறிவில் சிறந்த, 12 கைகளும், 6 முகங்களும் கொண்ட அழகிய முருகனை மகனாகப் பெற சக்தியினை அம்பாள் கொடுத்தாள் அப்படியான வல்லமை கொண்டவள் அன்னை"

அதாவது, சிவன் மன்மதனை எரிக்கும் பொழுது அவர் தனிமையான நிலையில் இருந்தார், அதாவது அவர் அன்னையினை விட்டு பிரிந்திருந்தார், அன்னை பார்வதியாக அவதரித்திருந்தார்.

சிவன் மன்மதனை உயிர்ப்பித்தது, பார்வதியுடனான மணக்கோலத்தில் என்றாகும் பொழுது சிவன் பார்வதியினை மனைவியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வாகின்றது.

அவளை " காமதாயினி, காமரூபினி" என லலிதா சகஸ்ரநாமம் சொல்கின்றது.

அன்னை எல்லா உயிர்களின் தொடக்கமுமானவள், அதனால் ஆதிபரம்பொருளான சிவனைத் தன்னகத்தே இழுத்துக் கொண்டு எல்லா உயிர்களின் தொடக்கத்தையும் ஏற்படுத்தினாள்.

இதைச் சொல்லும் பட்டர் முருகப்பெருமான் அவதாரத்தை அன்னை ஸ்கந்தமாதா என்றானதை சொல்கின்றார்.

முருகப்பெருமான் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த நெருப்பு பொறிகளால் உருவானவர் என்பது புராணச் செய்தி. ஆனால், முழுக்கச் சிவன் எனச் சொல்லமுடியாதபடி அன்னை அவரில் பாதியாகின்றாள்.

அன்னையினை மணந்தபின்புதான் சிவனில் இருந்து முருகன் பிறந்தான். அன்னை சிவனில் பாதியாக உண்டு என்பதால் அது இருவரும் கலந்து பெற்ற குழந்தையாகின்றது.

அந்த முருகன் சிவனின் ஐந்துமுகமும் அன்னையின் ஒருமுகமும் கொண்டு ஆறுமுகமாகவும், சிவனின் பத்து கரங்கள் மற்றும் அன்னையின் இரு கரங்கள் சாயல் கொண்டு 12 கரங்களோடும் பிறந்தான் என்கின்றார் பட்டர்.

சிவனுக்கு ஐந்து முகமும் 10 கரமும் உண்டு என்கின்றது புராணம்.

முருகன் இந்தப் 10 கரம் கூடுதலாக அன்னையின் இரு கரம் கொண்டும், ஐந்து முகம் கூடுதலாக அன்னையின் முகமும் கொண்டு பிறந்தவன் எனும் பட்டர் இன்னும் சொல்கின்றாரர், புராணம் சொல்வதும் அதுதான்.

அதுவும் முருகன் எப்படியான குழந்தை?

அது ஞானக் குழந்தை, பிரம்மனுக்கே வேதமும் தகப்பனுக்கே ஞானமும் சொன்ன தெய்வம், யாராலும் அழிக்க முடியாத சூரனை வீழ்த்தி அவனுக்கும் அருள்பாலித்து அகந்தை அழித்து அந்தச் சூரனுக்கும் ஞானம் கொடுத்து வேலும் மயிலுமாக தன்னோடுச் சேர்த்துக் கொண்ட அதி உன்னத குழந்தை.

அப்படியான குழந்தையினை ஒரு சன்னியாச கோல யோகி பெற்றெடுக்க முடியுமா? ஆனால் அன்னையின் அருளால் அவளின் கடாட்சத்தால் மட்டுமே சிவனுக்கு அந்த ஞானபண்டிதனின் தகப்பன் எனும் தகுதி கிடைத்தது.

உலகறிய அண்டமும் லோகமும் அறிய மன்மதனை எரித்தவர் சிவன், அந்த சன்னியாச கோல சிவன் எப்படி தந்தையாகி ஞானமான அழகான குழந்தையினை பெற்றெடுக்க முடியும்?

அந்த அதிசயத்தை செய்தவள் அன்னை, அவள் அதிசயமான சக்தி கொண்ட நாயகி.

முருகன் எனும் குஹனுக்கு அன்னையானதால் அவள் குஹாம்பா குஹஜன்மபூ என்றெல்லாம் அழைக்கப்படுகின்றாள்.

சிவன் எனும் யோகிக்கு மகா சக்தியுள்ள மகனை உருவாக காரணமானவளும், உலகம் மறுபடி இயங்கவும் அசுரக்கூட்டம் ஒழியவும் தொடக்கமானவள் அன்னை.

லலிதா சஹஸ்ரநாமம் ஒரு ஸ்லோகத்தைச் சொல்லும்.

"ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா
கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி
ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ"

சிவன் நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த மன்மதனை உயிர்த்தெழுப்பியவள் என இதன் பொருள் அமையும், மேற்கொண்டு அன்னையின் புகழையெல்லாம் கூறும் ஸ்லோகம் இது.

"காம சஞ்சீவ நௌஷதி" என அன்னை புகழப்படுபவள், அந்த அன்னையின் பெருமை அப்படியானது, உலக உயிர்களின் தொடக்கமாகவும் அது தடைபடாமல் நடக்க அன்னை எல்லா வழியும் செய்து உலக உயிர்களின் தாயாக லோக மாதாவாக கனிந்த அன்போடு உலகை இயக்கி கொண்டிருக்கின்றாள் என்பதைச் ஸ்லோகம் சொல்லும்.

இப்படி அன்னை நல்ல மனைவியாக வாய்த்து நல்ல குழந்தையினைப் பெற்று வளர்த்து லோகம் காத்தாள் என லௌகீகமாகச் சொன்னாலும் இந்த நாளின் தாத்பரியம் அன்னை மானிட பெண்களுக்கு வழிகாட்டினாள் என்பது.
 
Back
Top
Developed and maintained by – Akeshya