கைதியின் கதை ஒன்று

Crazy Queen

Active member
மருத்துவனாக சிறைச்சாலைக்கு வாரம் இரண்டு மூன்று முறை சென்று அங்கிருக்கும் கைதிகளின் உடல்நிலையை பரிசோதித்து மருந்து கொடுத்து வருவது பவித்ரனின் வழக்கம்.
ஒரு அரசாங்க ஊழியனாய் இந்த பணியை செய்தாலும் சில நேரங்களில் இவனுக்கு இந்த பணி சிரமமாகத்தான் தெரிந்தது. காரணம் சுற்றியிருக்கும் நண்பர்கள் கூட்டம், உறவுகள் கூட்டம் இதை வெளியிடங்களில் கிண்டல் அடித்து பேசிக்கொண்டிருந்ததை மற்றவர்கள் மூலமாக அரசல் புரசலாக இவனது காதுக்கு வரத்தான் செய்தது.
என்றாலும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். மனித வாழ்க்கையில் எல்லா துன்பங்களும் எப்படி அவர்களை அலைக்கழிக்கின்றன, எங்கு கொண்டு போய் சேர்க்கின்றன என்பதை அவனிடம் பரிசோதனைக்கு வரும் ஒவ்வொரு கைதியிடமும் அறிந்து கொண்டிருந்தான். இதனால் மற்றவர்களின் கேலி கிண்டல் இவைகளை மனதளவில் இவனால் தள்ளி வைக்க முடிந்தது.
அப்படி வரும் கைதிகளில் அதிக வயதான ‘ராக்கியண்ணனை’ பார்க்க இவனுக்கு மனதுக்குள் வருத்தம்தான் அதிகமாக இருக்கும். அவரிடமே இவன் பல முறை கேட்டிருக்கிறான், என்ன தவறு செய்து விட்டு இப்படி துன்பபடுகிறீர்கள்?
ராக்கியண்ணன் ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்து வைப்பார்.
நான் வேண்டுமானால் உங்களுக்காக வக்கீல் வைத்து வெளியே வர ஏற்பாடு செய்யட்டுமா?
ராக்கிய்ண்ணன் மறுதலிப்பாய் தலையசைத்தார், இந்த எழுபத்தி மூணு வயசுல நான் வெளிய போயி என்ன பண்ணப்போறேன்?
உங்க குடும்பம், பசங்க பொண்ணுங்க? இவனின் கேள்விக்கு ராக்கியண்ணன் அவங்க எல்லாம் உயிரோட இருக்கறாங்களா இல்லையாண்ணே தெரியாது.
ஒருத்தர் கூடவா உங்களை பாக்க வரலை? இல்லை என்று தலையசைத்தார். அடுத்து அவரே அதுக்காக அவங்களை நான் குறை சொல்லலை, ஏண்ணா நான் அவங்களை இதுவரைக்கும் பக்கத்துல வச்சுகிட்டதே இல்லை.
பவித்ரனுக்கு அவரின் கதையை கேட்க வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிற்று. உங்க கதையை ஒரு நாள் கேக்கணும், அடுத்தவாரம் சனிக்கிழமை மதியம் மேல் கூட்டம் இருக்காது, அப்ப வர்றீங்களா? அவரிடம் கேட்டான்.
என் கதைய கேட்டு இப்ப என்ன பண்ணப்போறீங்க? நான் என்ன இந்த உலகத்துல பெரிய காரியம் எல்லாம் பண்ணிட்டு வந்தவனா? அப்பொழுது அப்படி பதில் சொல்லிவிட்டு சென்றாலும் இவன் கேட்டிருந்த சனிக்கிழமை மதியம் அங்கு வந்திருந்தார்.
நான் அத்திப்பட்டு ஊரை சேர்ந்தவன், எங்க குடும்பம் விவசாய குடும்பம், அப்பனும் ஆத்தாளும் விவசாய கூலிங்கதான். இருந்தும் அந்த ஊருல என்னை எட்டாவது வரைக்கும் கஷ்டப்பட்டு படிக்கத்தான் வச்சாங்க., அதுக்கு பின்னாலதான்..!
நான் படிக்கறதை விட மத்த எல்லா வேலைகளையும் செஞ்சுட்டு இருந்தேன். இதனால ஸ்கூல்ல என்னை போக்கிரின்னே முடிவு செஞ்சு எங்க அப்பனையும் ஆத்தாளையும் கூப்பிட்டு இவனை ஸ்கூல்ல வச்சிருக்கமுடியாதுன்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க.
பெத்தவங்களுக்கு ஒரே கவலை, என்னை தோட்ட வேலைக்கெல்லாம் கூட்டிட்டு போனாங்க, ஆனா நான் தோட்டத்து முதலாளி வீட்டுல எதை சுருட்டலாமுன்னு யோசனையிலயே இருந்தேன்.
இதனால அப்பனையும் ஆத்தாளையுமெ வேலைக்கு வச்சுக்கறதுக்கு தோட்டத்துக்காரங்க பயந்தாங்க. இதனால் அவங்க என்னை திட்டிட்டு இருந்தாங்க. அப்படி இருக்கறப்ப நானே ஒரு நாள் சொல்லாம கொள்ளாம ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன்.
சிறிது நேரம் மெளனமானார். அதோட சரி தம்பி என்னோட ஊரோட தொடர்பே இந்த வயசு வரைக்கும் கிடைக்காம போயிடுச்சு.
சட்டென விழிப்பு வந்தது போல சென்னையில நான் படாதபாடு பட்டேன் தம்பி, தெருத்தெருவா அலைஞ்சேன். சின்ன சின்ன திருட்டு வேலை எல்லாம் செஞ்சேன், அதனால அடிக்கடி போலீஸ் ஸ்டேசனுக்கு போகவேண்டியதாயிடுச்சு. இப்படியே காலம் ஓடிட்டு இருக்கறப்ப எனக்கு ஒரு பொண்ணு பழக்கமாச்சு. அது ரோட்டோரத்துல ஆப்பம் சுட்டு கொடுத்துட்டிருந்த ஆயாவோட பொண்ணு.
அவளுக்காகவே நான் தினைக்கும் அங்க சாப்பிட போவேன். அது கூட நல்லா பழக்கம் வச்சுகிட்டேன். அந்த ஆயாவுக்கும் அரசல் புரசலா விசயம் தெரிஞ்சு அந்த பொண்ணை எனக்கு கட்டி வச்சாங்க..
மீண்டும் மெளனமானார்.
அவரை தொந்தரவு செய்ய விரும்பாத பவித்ரன் அமைதியாக அவர் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
அந்த பொண்ணை கட்டிகிட்டது எனக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்துச்சு தம்பி, அதையும் உதறி எறிஞ்சுகிட்டு ஓடுனவன் தான்..அதுக்கப்புறம்..!
அந்த பொண்ணு பேரு “குயிலி” என் கூட அருமையா குடும்பம் நடத்துனா, அவளே தனியா வந்து நான் தங்கியிருந்த வீதி ஓரத்துல ஒரு ஆப்ப கடை போட்டு உழைச்சு எனக்காக கொட்டுனா. நீ எந்த தப்பு தண்டாவுக்கு போகாம இருந்தியின்னா போதும் அப்படீனு மட்டும் சொல்லுவா. ஆனா நானு..?
அவ கூட ஒரு வருசம் கூட குடித்தனம் பண்ணலை, அடுத்த தெருவுல இருக்கற கல்யாணமாகி புருசனை விட்டு தனியா வந்துட்ட பொண்ணோட குடித்தனம் பண்ண போயிட்டேன். அவளோட ஒரு வருசமோ இரண்டு வருசமோ..? அப்பத்தான் கொஞ்சம் பெரிய பெரிய திருட்டு எல்லாம் செஞ்சு பழகினேன். அந்த பொண்ணே எனக்கு சொல்லியும் கொடுத்தா, அவ புருசன் இந்த வேலைதான் செஞ்சுகிட்டிருந் தானாம். வேணும்னா அவனையும் கூட்டளியாக்கிக்கறயான்னு கேட்டா?
‘போடி சர்தான்னு’ அவகிட்ட இருந்தும் பிச்சுகிட்டு ஓடிட்டேன். அப்பத்தான் எனக்கு பெரிய கூட்டத்துல வேலை செய்யற ஒருத்தன் சகவாசம் கிடைச்சுது, அவங்க கூட்டம் பொதுமக்கள் கிட்ட இருந்து காசை எப்படி கொள்ளையடிக்கறதுன்னு எனக்கு கத்து கொடுத்து அந்த கூட்டத்துல என்னையும் ஒருத்தனா சேர்த்துட்டாங்க.
அங்க நாலஞ்சு வருசம் இருந்து கொஞ்சம் கொஞ்சமா தொழில் கத்து பெரிய மனுசனாக ஆரம்பிச்சேன். காசு பணம் எல்லாம் சேர்ந்து பங்களாவுல இருக்கற அளவுக்கு பணம் வர ஆரம்பிச்சுது.
பணம் சேர சேர இன்னும் மத்த பழக்கங்களெல்லாம் வந்து சுத்திகிடிச்சு. பணம் வந்துகிட்டேயிருந்ததுனால எல்லாமே அனுபவிக்க முடிஞ்சது. அதுவெல்லாம் நாலஞ்சு வருசம்தாம், அப்புறம்…?
மீண்டும் மெளனமானார்.. இரண்டு நிமிடம் கழித்து “ஒரு நா” ஒரு குடும்பத்த கடற்கரையில பார்த்தேன். அவங்க எல்லாம் பார்த்தாலே பரம்பரை பணக்காரங்களா தெரிஞ்சாங்க, நல்ல டிரெஸ்,போட்டிருந்தாங்க இரண்டு மூணு பசங்க, அவங்களோட பொண்டாட்டிங்க, குழந்தைங்கன்னு, இருந்தாங்க. அந்த கூட்டத்தை பார்த்ததும் முதல்ல எனக்கு ஒண்ணும் பெரிசா தோணலை, ஆனா மூத்தவனா தெரிஞ்சவன் பக்கத்துல இருந்த அவனோட சம்சாரமாத்தான் இருக்கணும் அவளை பார்த்த உடனே எனக்கு ‘பகீர்னு’ ஆயிடுச்சு, அவ குயிலி.
நல்ல குடும்ப பொண்ணா நெத்தியில பொட்டு வச்சு, கழுத்துல தாலியோட பார்க்கவே மங்களகரமா இருந்தா, அது மட்டுமில்லை, அவ பக்கத்துல இரண்டு குழந்தைங்க அவ கையை பிடிச்சுகிட்டு நின்னுச்சுங்க.
எனக்குள்ள ஒரு ‘பொறாமை’ உணர்ச்சி அப்படி வந்துச்சு, அது மட்டுமில்லை, அந்த குடும்பமே ‘குயிலிகிட்ட’ அன்பா பேசறதும், அவளும் அவங்களோட சிரிச்சு பேசறதையும் பார்க்க எப்பேர்பட்ட தேவைதைய கைவிட்டு ஓடி வந்திருக்கோமுன்னு புரிஞ்சுகிட்டேன்.
அவங்க என்னைய தாண்டி பெரிய பெரிய விலை உசத்தியான காருல எறி போறதை பார்த்துட்டே நிக்கமட்டும்தான் என்னால முடிஞ்சது.
அதோட சரிஞ்சது தம்பி என்னோட வாழ்க்கை, நிறைய திருட்டு, ஏமாத்தற துன்னு போயி போயி..கடைசியில அம்பது வயசுல ஒரு கொலை கேசுல கையும் களவுமா மாட்டிகிட்டேன்.
நான் அத்தனை வயசுல இரண்டு மூணு பொண்ணுகளோட வாழ்ந்து இரண்டு மூணு குழந்தைகளுக்கும் அப்பாவாயிட்டேன். ஆனா ஒரு இடத்துல கூட என்னால இருக்க முடியலை, இரண்டு மூணு வருசம் அவ கூட வாழ்ந்துட்டு அந்த பொண்ணை விட்டு ஓடிடறது, இப்படியே நான் கேசுல நல்லா மாட்டறவரைக்கும் போயிட்டிருந்துச்சு.
அதுக்கப்புறம் என்னோட ஓடற கால் இங்க வந்து நின்னு, முடக்கி இத்தனை வருசம் இங்கயே போட்டுடுச்சு. இனி எத்தனை வருசம் என் வாழ்க்கை ஓடும்னு எனக்கு தெரியாது. ஆனா இரண்டு இடத்துல என் வாழ்க்கையை தொலைச் சுட்டேன்னு இப்பவும் வருத்தப்படறேன், ஒண்ணு எங்க அப்பா அம்மாவோட என்னோட பிறந்த ஊருல வாழ்ந்திருக்கறது, இரண்டு குயிலியோடவாவது நல்ல குடும்பத்தவனா, இந்த நகரத்துக்குள்ள வாழ்ந்திருக்கலாம். இதுக இரண்டும்தான் எனக்கு தெய்வமா கொடுத்த வாய்ப்பு.
மத்ததெல்லாம் என் பணத்தால வந்தது, அதனால நான் அதை பத்தி கவலைப்படலை…பெருமூச்சுடன்…இருக்கட்டும் அவங்க நினைப்போடவே என் காலம் இங்கனயெ போயிடட்டுமே..என்ன சொல்றீங்க? புன்னகையுடன் கேட்டவாறு அங்கிருந்து கிளம்பினார்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya