ஆழ்வார்களின் அமுதமொழிகள்

amirthababu

Moderator
Staff member
வாமனன்

கண்ணனே! தேவர்கள் பலரும் உனக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை கொண்டு வந்து காத்து நிற்கிறார்கள்.நீ கண்ணுறங்கு என்று கண்ணனை தொட்டிலில் இட்டு யசோதை தாலாட்டுப் பாடும் அற்புதப் பாசுரங்கள் தான் இவை பத்தும்.

பெரியாழ்வார் திருமொழி -பாசுரம் 44: (1-3-1) முதல் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி (44-53)
(க்ருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல்-தாலப்பருவம்)

பாசுரம் 44:
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி * ஆணிப் பொன்னால் செய்த*
வண்ணச் சிறுத்தொட்டில்* பேணி உனக்குப் * பிரமன் விடுதந்தான் ** மாணிக் குறளனே! தாலேலோ!*
வையம் அளந்தானே! தாலேலோ!

--கலித்தாழிசை
பொருள்:
மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி - மாணிக்கங்கள் பதித்து, நடு,நடுவே மின்னல் போல் ஒளிரும் வயிர மணிகளைப் பதித்து; மாணிக்கம் என்பது நவமணிகளில் ஒன்று. ஆங்கிலத்தில் ரூபி என்று அழைப்பார்கள். அது சிவந்த நிறத்தில் இருக்கும். அத்தகைய மாணிக்கக் கற்களைப் பதித்து, அவற்றிற்கிடையில் வைரக்கற்களைப்பதித்து...
மாணிக்கம் என்பது சிவப்பு வண்ணம்; வைரம் வெண்மையான அதாவது, ஒரு வகையில் கண்ணாடி போல் இருக்கும். செந்நிற மாணிக்கக் கற்களை எங்கும் விரவிப் பதித்து, அவற்றிற்கிடையில், மாணிக்கக் கற்களை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்றவாறு வெண்ணிற வைரக் கற்களையும் பதித்து

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் - பொன்னிற் சிறந்தது ஆணிப்பொன். அதாவது சிறிதளவும் கலப்படமில்லாத தூய்மையான பசும்பொன். அத்தகைய தூயத் தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய, உனக்குப் பொருத்தமான சிறிய தொட்டில்

பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - அது உனக்குப் பொருந்துமா எனச் சோதித்து அனுப்பி வைத்தான்; நானிலத்தில் உனக்கு நிகரான நன்தொட்டில் கிடைத்திராதென்று எண்ணி, தூய பசும்பொன்னால் செய்யப்பட்ட அழகிய சிறிய தொட்டிலில், பொலிவான மாணிக்கக் கற்களும், அவற்றிற்கிடையில் எடுப்பான வைரக்கற்களையும் பதித்த அழகிய தொட்டிலை உனக்காகவேப் பாதுகாத்து வைத்திருந்து பிரமன் அனுப்பி வைத்திருக்கின்றான்.

மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகனே! குள்ளமான வடிவில் வந்த எங்கள் குருவே! உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்! மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியிலேயே உலகத்தை அளந்த உத்தமனே சத்தமின்றி கண்ணயற உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்.

கதைச்சுருக்கம்:

இறைவனின் பத்து அவதாரங்களில் ஐந்தாவதாக வருவது 'வாமன அவதாரம்'. மகாவிஷ்ணு, உலகம் உய்வடையவும், நீதி நிலைபெறவும், பத்து விதமான திருவவதாரங்கள் கொண்டு இவ்வுலகுக்கு வந்தாரென்று அறிந்திருக்கிறோம்..

முதலாவதாக மச்சாவதாரம் - கடல்நடுவே வீழ்ந்த சதுர் வேதம் தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் - மச்ச அவதாரம்; மச்சம் - மீன்

இரண்டாவதாக கூர்மாவதாரம் - அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம் - கூர்ம அவதாரம்; கூர்மம் - ஆமை

மூன்றாவதாக வராகாவதாரம் - பூமியைக் காத்திட ஒருகாலம் நீ புனைந்தது மற்றொரு அவதாரம் - வராக அவதாரம்; வராகம் - பன்றி

நான்காவதாக நரசிம்மாவதாரம் - நாராயணா என்னும் திருநாமம் நிலைநாட்டிட இன்னும் ஒரு அவதாரம் - நரசிம்ம அவதாரம்; சிம்மம் - சிங்கம்

ஐந்தாவதாக வருவதுதான் வாமனாவதாரம் - மாபலி சிரம் தன்னில் கால்வைத்து இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்!- வாமன அவதாரம்! வாமனன் - குள்ளன்
அப்படினு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 'திருமால் பெருமை' என்னும் திரைப்படத்தில் பாடிருப்பார். மேற்கண்ட இந்த அவதார வரிசைகளைப் பாருங்கள் ஒருவிதமான பரிணாம வளர்ச்சியை ஒத்துஇருப்பதை அறியலாம். பூமியில் முதன் முதலில் உயிரினங்கள் உருவானது கடலில்தான். அதிலும் குறிப்பாக அமீபா. அவதாரம் என்னும் சொல்லுக்கு 'இறங்கிவருதல்' என்று பொருள் ஆகும். சரி பொதுவான சங்கதிகள் போதும்! கதைக்கு வருவோம்!

வாமனாவதாரம்:

கேரள நன்னாட்டில் திருவோணம் என்னும் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதை நாம அறிவோம். அதற்கும் வாமனாவதாரத்துக்கும் என்ன தொடர்பு?? மகாபலி என்று மன்னன் ஒருவன் இருந்தான். அவன் இரண்யகசிபுவின் புதல்வனான 'பக்த பிரகலாதன்' னின் பேரனாவான். ஆ! அச்சோ! அப்போ அசுரனா?? ஏன், அசுரக் குலத்துல தோன்றினா அசுரனாத்தான் இருக்க வேண்டுமா?? பிரகலாதன் என்ன அசுரனா?? பக்தன் பிரகலாதாழ்வான் என்று தானே சொல்கிறோம்! பிரகலாதாசுரன் என்று சொல்வதில்லையே. பயங்கரமான நாராயண பக்தியும், அவன் பால் பேரன்பும் கொண்ட பிரகலாதனின் மடியில் தவழ்ந்து விளையாடி, பக்திமயமான கதைகளைக் கேட்டு, அன்பும் அறனும் குழந்தைவயது முதலே ஊட்டப்பெற்று வளர்ந்த இந்த மகாபலிச்சக்கரவர்த்தியும் ர்ர்ர்ரொம்ப ர்ர்ர்ரொம்ப நல்லவராத்தான் இருந்தார். அவர், தன் தவ வலிமையால் தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டான். மகாபலியின் திறைமையைக் கண்டு அச்சமுற்று, வருத்தமுற்ற தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனராம். அதேசமயம், உலக மக்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது, உலக உயிர்கள் அனைத்தும் இவனின் வெண்கொற்றங்குடைகீழ் மிகுந்த சுகபோகமாக வாழ்ந்தனவாம். ஆனால், ஒரு குட்டியோன்டு அளவுள்ள ஆணவம் மட்டும் மாவலிச் சக்கரவர்த்தியின் தலைக்குள்ள இருந்துச்சாம். தான் தான் இந்த உலகத்துலேயே ரொம்ப நல்லவரு. வல்லவரு. யாரு என்னா கேட்டாலும் கொடுத்துடுறவரு; தானம் செய்வதில் தன்னைவிட தலைசிறந்தவர் எவருமில்லை என்ற எண்ணம் ரொம்பவே இருந்துச்சாம். தான்தான் தானத்தின் தலைவன் என்கிற அளவுக்கு இருந்ததாம். இந்த எண்ணத்துடனேயே அவர் ஆட்சி புரிந்து, விண்ணுலகம், மண்ணுலகம் எல்லாத்துலயும் ஒரு கலக்கு கலக்கினார் மாவலி சக்கரவர்த்தி. மகாபலியும் முக்திபெறுகின்ற காலம் வந்தாயிற்று! மகாவிஷ்ணு, காசியப முனிவருக்கு மகனாக வந்து, வாமனனாகத் திருவவதாரம் புரிந்தார்.

வாமனனாக வந்த இறைவன், ஒரு கையில் கமண்டலம், மறுகையில் ஒரு குடையும் கொண்டு, உடலை மறைக்க மேற்போர்வையாக உத்தரீகமும் அணிந்து கொண்டு, குள்ளமான உருவத்துடன், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்றான். சிறுவனாக வந்த வாமனனிடம், மகாபலிச் சக்கரவர்த்தி 'சிறுவனே! உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும்?' என்று கேட்டார். வாமனன், தன் காலடியால் அளக்கப்பெற்ற மூன்றடி அளவுடைய நிலம் வேண்டும் என்று யாசித்தார். மகாபலிச்சக்கரவர்த்தியும் தருவதாக ஒப்புக் கொண்டு, சிறுவனுக்குக் கொடுக்க எத்தனிக்கும் வேளையில் அரசவையில் இருந்த அவரது குருவான சுக்கிராச்சாரியர், வந்திருப்பது யாரென்று, தன் ஞானத்தால் அறிந்தார். மகாவிஷ்ணுவே இப்படி உருமாறி வந்தால், இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறதென்பதை உணர்ந்து, அவர் சக்கரவர்த்தியிடம் 'வேண்டாம்!' என்று இடைமறித்தார். மாவலிச் சக்கரவர்த்தியோ, ஒரு சிறுவனின் தேவையைக் கூட நிறைவேற்ற இயலாத தான் ஒரு மன்னனா?? இப்பாலகனுக்குத் தராவிட்டால், தான் இதுவரை செய்த தர்மங்களால் என்ன பயன்?? எல்லாவற்றிற்கும் மேல், கொடுத்த வாக்கை எப்படி மீறுவது?? என்று சிந்தித்துவிட்டு, தன் குருவின் சொல்லையும் மீறி தானம் அளித்தார். வாமனனும் அளக்க ஆரம்பித்தான். அதற்கு முன் அவன், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பேருருவம் பெற்றார். மாவலியும் இறைவனின் திருவுருவைத் தரிசித்தான். வாமனனாய் வந்தவன், வானமளவு நெடிதுயர்ந்து, முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டார். மூன்றடியில், இரண்டடியிலேயே அனைத்தையும் அளந்துவிட்டதும், மூன்றாம் அடிக்கு இடம் இல்லாது திகைக்கவே.... மாவலித் தலைகுனிந்து, இறைவனிடம் வணங்கி நின்று, மூன்றாமடிக்குத் தன்னையே ஏற்றுக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார். இறைவனின் திருவடி பட்டதால், மாவலியின் ஆணவம் அழிந்து, முக்தி பெற்றான். வாமன அவதாரம் வதத்திற்காக அல்ல! முக்திக்காக(வீடுபேற்றிற்காக)!! முன்னமே, இரண்யகசிபு வதத்தின் பொழுது, பிரகலாதனுக்கு இறைவன் கொடுத்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? இனி, பிரகலாதனின் வம்சத்தில் எவரையும் வதம் செய்வதில்லை என்று இறைவன் சொன்ன சொல்லையும் மீறவில்லை. ஆனாலும், இறைவனிடம், ஆண்டிற்கொரு முறைத் தான், தன் மக்களை வந்து காண அனுமதி வழங்கியருள வேண்டினான். இறைவனின் ஒப்புக் கொள்ளவே, ஒவ்வொரு ஆண்டும் திருவோணத் திருவிழா அன்று மகாபலிச் சக்கரவர்த்தி தன் மக்களை வந்து காண்பதாக கேரளம் மற்றும் கேரளத்தை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் மக்கள் நம்பி, தங்கள் மன்னனை வரவேற்க ஊரே திருவிழாக்கோலம் பூண்டு, அத்தப்பூ கோலமிட்டுத் தங்கள் சக்கரவர்த்தியை வரவேற்கின்றனர். முதன் முதலாக மனித உருவில் இறைவன் எடுத்தத் திருவவதாரம்- 'வாமன அவதாரம்'!

இறைவனின் திருமேனி சம்மந்தத்தை விட, திருவடி சம்மந்தம் கிடைப்பதே பெரும்பேறாகும்! நம் பாவங்கள் முழுமையையும் நீக்கி, நம் புண்ணியங்கள் அனைத்தையும் அவனே ஏற்றுக் கொண்டு, நமக்கு நித்திய வாழ்வு தந்து உய்விப்பது இறைவனின் திருவடியே ஆகும். திருவள்ளுவரும், இறைவனைத் திருவடியாய்த்தான் பார்க்கிறார். பெருமாள் கோயில்களில், கோயில் அர்ச்சகர் நம் தலையில் சடாரி என்று ஒன்றை சாற்றுவார். அது வேறு ஒன்றும் இல்லை, இறைவனின் திருவடியே ஆகும். சடாரி ன்னா என்னான்னு கேக்குறீங்களா?? கிரீடம் மாதிரி ஒன்றை பெருமாள் கோயில்களில் நம்தலையில வைப்பார், கோயில் அர்ச்சகர். அதற்குப் பெயர் தான் சடாரி!

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகிய சிறுவனே கண்ணுறங்காயோ! உலகமனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வாமனனே கண்ணுறங்காயோ.

பதவுரை:

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத் தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால் மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற் சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி இருக்கிறான். சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.

🌹 ஆழ்வார் திருவடிகளே சரணம் 🌹

#தமிழ்_உலகின்_தொன்மையான_பாரம்பரியம்_கலாச்சாரம்
 
WOW!! SUPERB Amirtha!!

இந்த பாட்டைப் கேட்டிருக்கிறேன் .. மிக அழகான விளக்கம். மனசுக்கு இதமா இருக்கு படிக்க!!! அருமை!! அருமை!!!:):):)

Expecting more songs with explanation like this. Thank you for making this morning as a pleasant morning. :):)🤝🤝
 
WOW!! SUPERB Amirtha!!

இந்த பாட்டைப் கேட்டிருக்கிறேன் .. மிக அழகான விளக்கம். மனசுக்கு இதமா இருக்கு படிக்க!!! அருமை!! அருமை!!!:):):)

Expecting more songs with explanation like this. Thank you for making this morning as a pleasant morning. :):)🤝🤝
Thanks
 
*ஏன் தாயாரை சேவித்த பிறகே பெருமாளை சேவிக்க வேண்டும்?*🌹

இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன் தான் ரக்ஷிக்கிறானே தவிர முதலில் தாயாரை சேவித்த பின் பெருமாளை சேவிக்க வேண்டும்...!!_ !

முதலில் சீதா பிராட்டியாரையும், தொடர்ந்து லட்சுமணனையும் குகனை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த பிறகே, குகனை கடாக்ஷிக்கிறாராம் ராமபிரான்.

ஸ்ரீரங்கநாதரிடம் பிரார்த்திக்கும்போது, ஸ்ரீரங்கநாச்சியாரை முன்னிட்டே பிரார்த்திக்கிறார் ஸ்ரீராமாநுஜர்.

ஏன் நாம் நேராக பெருமாளிடம் போய் கேட்டுக்கொள்ளக் கூடாதா? பெற வேண்டியவன் நானாகவும், கொடுக்க வேண்டியவன் பெருமாளாகவும் இருக்கும் போது, நேராக பெருமாளிடமே பெற்றுக்கொள்ளலாமே. இடையில் பிராட்டியார் எதற்கு?

இதற்கு, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் செய்யும்போது சொல்கிறார்:

கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?

அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள் தான் மஹாலக்ஷ்மி பிராட்டியார். மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டுவிட்ட பிறகு நடப்பது நடக்கட்டும் என்று கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம். இல்லையென்றால், தினமும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஒருவர் இருக்கிறார். அவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில் பகவான் கிருஷ்ணர் அருளிய,

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
- என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

'உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?' என்ற அர்த்தத்தில், கிருஷ்ணர் அருளிய இந்த சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே அவர் நாள்முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவருக்கு பகவானிடத்தில் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்று தான் பொருள். காரணம், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் அவருக்குக் கிடைக்கவில்லை.

நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் தான் நம் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த நினைப்பு தான் நம்மை எப்போதும் கவலையில் ஆழ்த்திவிடுகிறது. உண்மையில் நாமா எல்லோரையும் காப்பாற்றுகிறோம்?

கூரத்தாழ்வார் ஒரு சுலோகத்தில், 'நான் போன பிறகு, என் மனைவியை யார் காப்பாற்றுவார்கள் என்று இத்தனை நாள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒருநாள் நான் புரிந்து கொண்டேன். எனக்குப் பிறகு அவர்கள் இன்னும் நன்றாக இருப்பார்கள் என்று அப்போது தான் நான் புரிந்துகொண்டேன்.

இத்தனை நாளாக நான் தான் அவளை ரக்ஷித்துக் கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பகவான் தான் அவளை மட்டுமல்ல என்னையும் சேர்த்தே ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இதுவரை என்னையும் என் மனைவியையும் ரக்ஷித்து வந்த பகவான், என் மனைவியை நான் போன பிறகும் கூட ரக்ஷிக்கத் தான் போகிறான்' என்கிறார்.

இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன் தான் ரக்ஷிக்கிறானே தவிர, கணவன்
ரக்ஷிக்கிறான், மாதா பிதாக்கள் ரக்ஷிக்கிறார்கள், சொத்துக்கள் ரக்ஷிக்கும் என்றெல்லாம் நினைப்பது அபத்தம். பகவான் மட்டுமே ரக்ஷகர். ஆனால், அவர் அப்படி ரக்ஷிக்க வேண்டுமானால், அவர் திருமகளோடு சேர்ந்து இருக்க வேண்டும்.

அதனால் தான் ஆழ்வார் பாடுகிறார்:
'ஞாலத்தோடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப்பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ'

திருமகளோடு சேர்ந்திருந்து இந்த உலக உயிர்களை யுகங்கள் தோறும் காத்து ரக்ஷிக்கும் உன் திருவடிகளை அடையாமல் நான் இன்னும் எத்தனை நாள் தான் துன்பப்படுவது என்று கேட்கிறார்.

எனவே, முதலில் மஹாலக்ஷ்மியையும். பிறகு, பெருமாளையும் சேவிக்க வேண்டும்.

ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை சேவிக்காமல் இருக்கக் கூடாது. அதாவது, இருவருடைய திருவடிகளையும் ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும். இருவரிடமும் பற்றுக் கொள்ள வேண்டும்....🌹

ஓம் நமோ நாாயணாய நமஹா!!!.

FB_IMG_1748592880607.webp
 
பெருமாளை சேவிக்கர முறையை அழகா சொல்லி இருக்கீங்க சிஸ். அம்மாகிட்ட போய் குழந்தைங்க நின்னாலே அப்பா தன்னாலே நம்மளை திரும்பி பார்த்துருவார். அவங்க மேல நம்பிக்கை வைக்கனும். எல்லாம் அவங்க பார்த்துப்பாங்கன்னு மனசில் உறுதி வந்தாலே எந்த துன்பமும் கடுகாய் தான் தெரியும்.
 
108 ஸ்தல பாசுரங்கள்

திவ்ய பிரபந்தம் கீழ்கண்டவாறு வகைபடுத்தபடுகின்றது.

1. ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை.
திருப்பல்லாண்டு, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு

2. அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை.
முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி. மூன்றாம் திருவந்தாதி

3. ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித்தொடையாலும் பெயர் பெற்றது.
நான்முகன் திருவந்தாதி

4. பாடியவர்களால் பெயர் பெற்றவை.
பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி

5. அளவால் பெயர் பெற்றவை.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை

6. பாவால் பெயர் பெற்றவை.
திருவாசிரியம், திருச்சந்த விருத்தம், திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்

7. செயலால் பெயர் பெற்றவை.
திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி

8. தன்மையால் பெயர் பெற்றவை.
திருவிருத்தம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருமாலை

9. சிறப்பால் பெயர் பெற்றது.
திருவாய்மொழி
 
கேட்கவே திருப்தியாக இருக்கிறது. எம் குலதெய்வம் பிறந்த வீட்டில் வரதராஜப் பெருமாள், புகுந்தவீட்டில் மாயவப் பெருமாள். எங்க வீட்டில் எப்பவும் ராம நாமம் ஒலிக்கும். ஹனுமன் சாலிசா படிக்காம அன்றைய பொழுது எனக்கு நிம்மதியடையாது. ஹனுமன் சாலிசா பத்தி ஏதாவது பதிவு கொஞ்சம் விரிவா கொடுங்க தெரிஞ்சவங்க. 🙏
 
பூலோக வைகுந்தம்--ஸ்ரீரங்கம்

எல்லோருக்கும் ஆசை, தங்களுடைய வாழ்நாளில் கொஞ்ச நாட்களாவது ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனாதனைத் தரிசிக்க வேண்டும் என்பது.

ஸ்ரீரங்கத்து வீதிகளில், அது சித்திரை வீதியாகட்டும் அல்லது உத்தர வீதியாகட்டும் பல நாட்கள் பிரதக்ஷணம் வர வேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை.

இங்கு ஆசார்யர்கள் பண்ணும் உபன்யாசங்களில்கலந்துகொள்ளவேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை

நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனைஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை மகான்களை ஈர்த்துள்ளது?

அப்படி என்ன ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறேளா !!??

என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில் !!

ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டாவது அனுபவிப்போம்.

“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி"
'என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும் என்பதே.

வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நம் தகுதி நமக்கே தெரியும்) ஸ்ரீரங்கம் "பூலோக வைகுந்தம்" நமக்கு ப்ராப்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?

”இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”

என்று ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில் ஸ்ரீரங்கத்தில் வாழத் தன் ஆசைதனை வெளிப்படுத்துகிறார்.

ஆசைப்பட்டது அனைத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம். "இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை" என்கிறார் ஆதிசங்கரர்.

ஸ்ரீரங்கம் 108 திவ்விய ஸ்தலங்களில் முதலானது ஆகும். ஆழ்வார்கள் மங்களாசாசனம் (துதித்துப் போற்றிப் பாடி வழிபடுதல்) செய்த வைஷ்ணவ ஆலயங்களை திவ்விய ஸ்தலங்கள் என்பர்.

ஆழ்வார் பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.

"ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்

அம்புயத்தோன் அயோத்தி மன்னற்களித்த கோயில்.

தோலாத தனிவீரன் தொழுத கோயில்,

துணையான வீடணற்குத் துணையா சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்,

செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்,
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்

திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய "அதிகார ஸங்க்ரஹம்" என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.

"ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்"
அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் எட்டு

தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம், ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை.

வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.

பகவான் காடு ரூபமாக எழுந்தருளும் இடம்
நைமிசாரண்யம்

தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில்.

ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.

இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில், ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார்.

மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையிலோ காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக் கோலம்,.

ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும் சேர்ந்த இடம்
ஸ்ரீரங்கம்.

“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனை வாழ்த்தினார்கள்.

“இவ்வளவு நேரம் ஆயிடுத்தே, சயனம் கொள்ளுகிற நேரத்திலே எங்க கிளம்பிட்டீர்” என்று அடியவர் திருமாலிருஞ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.

“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகர் மலை அழகன்.

அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,
“எப்போது பொது சேவை முடியும்'
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறாராம்.

“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர். “பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறாராம் பெருமாள் திருவேங்கட முடையான்.விக்கித்து நிற்கிறார் அர்ச்சகர்.

இப்படி எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம்.

நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில், “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்ட கொள்ளு மாகில் நீ கூடிடு கூடலே"

என்று எல்லா திவ்விய தேசத்து
எம்பெருமான்களும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று பாசுரத்தில் கூறுகிறார்

எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!!
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்தை எங்கிருந்தாலும் மனதளவில் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டாவது ஸேவிக்கலாம் .

ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாதன் திருப்பாதாரவிந்தங்களே சரணம் 🙏🙏
 
Back
Top
Developed and maintained by – Akeshya